தாண்டவம் – இசை விமர்சனம்

ஜீ.வி.பிரகாஷ்குமாரின் 25ஆவது படம். முந்தைய வெற்றிக் கூட்டணி இதிலும் கை கோர்த்துள்ளது! இப்படத்தில் விக்ரம் பார்வையற்றவராக நடித்திருக்கிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

இதில் தீம் இசையுடன் சேர்த்து மொத்தம் ஏழு பாடல்கள்.

யாரடி மோகினி!

ராகுல் நம்பியார் பாடியிருக்கும் இந்தப் பாடலில் அவரிடம் புதிதாக ஏதும் இல்லை. ஆனால் பாடல், அழகான பெண் ஒருத்தியை இப்படியும் வர்ணிக்கலாம் என நமக்கு விவரிக்கிறது! ஹம்மிங்கில் மட்டும் வரும் அந்தப் பெண் குரல் கவனம் பெறுகிறது.

"இவள் போகையில் மரம் யாவுமே குடை ஆகுமே!" உவமை அருமை.

ஒரு பாதிக் கதவு

வெகு நாட்களுக்குப் பின், பாடல் எழுதிவிட்டு மெட்டு போடப்பட்ட பாடல்! ஹரிச்சரணும் அறிமுகப் பாடகி வந்தனா என்பவரும் இந்த டூயட் பாடலைப் பாடியுள்ளனர். இதைப் பாடல் எனச் சொல்வதை விடக் கவிதை என்றே சொல்லலாம். இசை, வார்த்தைகளைப் பாதிக்காமல் இருப்பது பலம்.

அதிகாலைப் பூக்கள்

ஜீ.வி-யே பாடியிருக்கும் பாடல். பாடல், அதீதக் கவனம் ஈர்க்கும் விதமாய் அமைந்திருப்பதற்குக் குரலும் ஒரு காரணம். இன்னும் நீண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என நினைக்க வைக்கும் பாடல்!

உயிரின் உயிரே

இந்துஸ்தானி இசையைப் பிரதிபலிக்கும் இப்பாடலைப் பாடியுள்ளார் சைந்தவி. காதல் கனவுகளை அழகாகப் பாடலாக்கி இருக்கிறார்கள்.

"ஐந்து வயதுப் பிள்ளை போலே உன்னை நானும் நினைக்கவா?
அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா" – என வரிகள் கொஞ்சுகின்றன.

அனிச்சம் பூவழகி

சின்னப் பொண்ணும் ஜீ.வி-யும் இணைந்து பாடியுள்ள பாடல். கிளாஸ் ஆல்பத்தில், இது கிராமத் திருவிழா! ‘கிழக்குச் சீமை’ படப் பாடலை நினைவுபடுத்தினாலும் ரசிக்க வைக்கிறது.

சிவ தாண்டவம்

சிவனின் தாண்டவங்களை வகைப்படுத்தும் பாடல். அருமையாக எழுதப்பட்டுள்ளது! எஸ்.பி.பி-யின் குரலில் கம்பீரமாகவும் ஒலிக்கிறது. வெகு நாட்களுக்கு நினைவிலிருக்கப் போகும் பாடல்.

A poem for you

தீம் இசை, பியானோ இசையுடன் ஆரம்பித்து, பின் புல்லாங்குழலுடன் இணைந்து, காற்றில் கரைந்து செவி சேர்கிறது.

தாண்டவம்! கேட்போரை ஆட்டுவிக்கும்!!

About The Author