பல்துறை சான்றோருக்கு விருதுகள்

சென்னையில் உள்ள மன்னை ஸ்ரீ பார்த்தசாரதி டிரஸ்ட் சார்பில் பல்துறை சான்றோருக்கு விருதுகள் வழங்கும் விழா செப்டம்பர் 18ம் தேதி மாலை மயிலை சீனிவாச சாஸ்திரி அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

மன்னை திரு ரா.பார்த்தசாரதி ஐயங்காரின் திரு உருவப்படத்தைத் திறந்து வைத்தும், பின்னர் கவிநயச் செல்வர் மன்னை பாசந்தியின் ‘பாசந்தி பாகவதம்’ நூலை வெளியிட்டும் திரு நாகை முகுந்தன் பேசினார். அவர் பேசுகையில் சிறந்த வாக்கேயகாரரான பார்த்தசாரதி அவர்களின் புதல்வரும் ஸ்ரீ பார்த்தசாரதி டிரஸ்ட் நிறுவனருமான ‘பாசந்தி’ முன்பு ராமாயணத்தை 108 வரிகளில் தந்தது போல இப்போது பாகவதத்தை எளிய இனிய தமிழில் 108 வரிகளில் வடித்துத் தந்துள்ளதைப் பாராட்டினார். மன்னை பாசந்தி அவர்கள், டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களால் ‘இன்னிசை கவிஞர்’ என்ற விருதைப் பெற்றவர். விழாவில் வந்திருந்த அனைவருக்கும் நூல் வழங்கப்பட்டது.

விழாவிற்குத் தலைமை வகித்த டாக்டர் சரஸ்வதி ராமநாதன்,அவர்கள் குழந்தை எழுத்தாளர் அழ.வள்ளியப்பா அவர்களுக்குச் சிலை அமைத்தோடு அவரது தபால்தலை வெளிவர பெரிதும் காரணமான குழந்தை எழுத்தாளர் திரு பி.வெங்கடராமனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அளித்து, ’75 வயதாகிய அறிவின் முதிர்ச்சியையும் இளைஞனின் துடிப்பையும்,குழந்தை மனத்தையும் ஒருங்கே அவரிடம் பார்ப்பதாகப்’ பாராட்டிப் பேசினார்.குழந்தைகளுக்கான சிறந்த இலக்கியங்களை அவர் படைத்திருப்பதைச் சுட்டிக் காட்டி அவரது சாதனைகளைக் கண்டு வியப்பதாகக் கூறி இப்படி ஒரு விழாவைத் தனது டிரஸ்ட் மூலம் நடத்தும் கவிஞர் பாசந்தியைத் தாம் பெரிதும் பாராட்டுவதாக கூறினார்.மேலும் திரு.எதிரொலி விஸ்வநாதன் அவர்கள், திரு பி.வெங்கடராமனின் சாதனைகளைப் பாடலாகப் புனைந்தார்.

இதனை அடுத்து, பல்துறைகளில் மேம்பட்டு விளங்கும் 24 சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி அவர்களின் சாதனைகள் விளக்கப்பட்டன.

கடந்த பல ஆண்டுகளாக நிலாச்சாரலில் எழுதி வரும் எழுத்தாளரான திரு ச.நாகராஜன் அவர்களுக்கு ‘அறிவியல் எழுத்துச் செம்மல்’ என்ற விருது வழங்கப்பட்டது. மூன்று வருடங்களாக பாக்யா இதழில் பிரசுரிக்கப்பட்டு வாசகர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றது இவரது ‘விண்வெளியில் மனித சாதனைகள்’ என்ற தொடர், இது விண்வெளி தொடர்பாக எழுதப்பட்ட ‘மிக நீண்டத்தொடர்’ என்ற பெருமையை இந்தியப் பத்திரிகளுக்குக் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைக்குப் பெற்றுத் தந்துள்ளது.
வாசகர்களின் அறிவியல் வினாக்களுக்கு விடை அளித்தமை, நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் மேம்பாட்டு விளக்கவுரைகளை வானொலியின் காலை ஒலிபரப்புக்கு அளித்தமை,அறிவியல் கலைச்சொற்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்தமை உள்ளிட்ட பல சாதனைகளுக்காக இவ் விருது வழங்கப்பட்டது. இவர் 18 தமிழ் நூல்களும் ஒரு ஆங்கில நூலும் எழுதியுள்ளார் என்பது குறிப்பித்தக்கதாகும்.

மேலும் www.ezinearticles.com என்ற அமெரிக்க இணைய தளத்தில் இவர் எழுதியுள்ள ஆங்கிலக் கட்டுரைகளை உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இயங்கும் ஆயிரத்து நானூற்றிற்கும் மேற்பட்ட மின்னிதழ்கள் மறுபிரசுரம் செய்துள்ளன.

இவரைத் தொடர்ந்து, பாரதிப் பணிக்காக எதிரொலி விசுவநாதன், நிறுவன இதழியலுக்காக திரு. ஒய்.கே.ராமமூர்த்தி, ஊடகவியலுக்காக திரு. பத்மன், குறுந்தகடுக்காக பாம்பே கண்ணன், குழந்தை இலக்கியத்திற்காக திருமதி. தேவி நாச்சியப்பன், பன்மொழி அகராதிக்காக மதுரை திரு. ஆர் ரங்கராஜன், சிறுகதைக்காக மூத்த பழம்பெரும் எழுத்தாளர் பூரம், இதழியலுக்காக புதுகை மு.தருமராசன்,வரலாற்று இலக்கியத்திற்காக திருமதி. ஜெயந்தி நாகராஜன் அச்சுக்கலைக்காக திரு. சேஷாத்திரி, நாவலுக்காக திரு. கண்ணன் மகேஷ், இலக்கியத் தொண்டிற்காக திரு.சுந்தர விநாயகம் உள்ளிட்டோர் விழாவில் விருதுகளை வாங்கிய சான்றோர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்..

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கவிஞர். நீரை. அத்திப்பூவின் கவிதை மழையில் அனைவரும் நனைந்து வியந்தனர்.
கவிஞர் மன்னை பாசந்தி, வாழ்நாள் சாதனையாளர் திரு வெங்கட்ராமன்,அறிவியல் எழுத்துச்செம்மலாகிய நிலாச்சாரல் எழுத்தாளர் திரு ச.நாகராஜன் உள்ளிட்ட விருது பெற்ற அனைத்து சான்றோர்களையும் நிலாச்சாரல் வாழ்த்துகிறது!!

About The Author

3 Comments

  1. P.Balakrishnan

    என்னுடைய வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  2. Mannai Pasanthy

    சித்ரா பாலு அவர்களுக்கு தாமதத்திற்கு மன்னிக்கவும்.மிக்க நன்றி.

Comments are closed.