பெண் பால் (4)

அவன் பார்வையிலிருந்து மறைந்த பின்னால் சிவகாமி உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பூப்போல தரையில் கிடத்தினாள், வாசலுக்கு வெளியே.

பிறகு ஓசையில்லாமல் வாசல் கதவைத் திறந்தாள். மங்கலான வெளிச்சத்தில் மாமியார் மல்லாக்கப் படுத்துக் கிடந்தது தெரிந்தது.

குறட்டையோடு கூடிய சுகமான உறக்கம்.

திறந்த வாயோடு உறங்கிக் கொண்டிருந்த மாமியார்க் காரியைப் பார்த்த போது சிவகாமி, அவள் எதிர் பாராமலேயே ஓர் அனுகூலமான சந்தர்ப்பம் அவளுக்கு அமைந்து விட்டதை உணர்ந்தாள்.

மிக நுட்பமான சாதுர்யத்தோடு இதை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

மாடாக்குழியில் பார்வையைச் செலுத்தினாள். நினைத்தது சரிதான்.

மாடாக்குழியில் ஒரு கிண்ணம். பழைய அட்டை கொண்டு மூடப்பட்டிருந்த கிண்ணம்.

அட்டையை விலக்கிப் பார்த்தாள்.

அரைக்கிண்ணத்துக்கு வெள்ளையாய் ஒரு திரவம். பால் மாதிரி.

பால் தான்.

கள்ளிப் பால்.

கவனமாய்க் கிண்ணத்தைக் கைகளிலேந்திக் கொண்டு படுத்திருந்த மாமியார்க்காரியை நோக்கி அடிமேலடி வைத்து முன்னேறினாள்.

மெல்ல மெல்ல மெல்ல மெல்ல.

பட படத்த நெஞ்சின் அதிர்வில் கிண்ணம் நடுங்கியது,

தோல்ப் பரப்பிலிருக்கிற வியர்வைச் சுரப்பிகளெல்லாம் படு சுறுசுறுப்பாய் இயங்க ஆரம்பித்திருந்தன.

கடவுளே, கடவுளே, கடவுளே, கடவுளே

பாதுகாப்பான அருகாமையில் மாமியார்க்காரியின் முகத்தை நோக்கிக் குனிந்தாள். சாராய நெடி மூச்சு முட்டியது.

நடுங்கும் கரங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, திறந்திருந்த வாய்க்குள்ளே கிண்ணத்தைக் கவிழ்த்தாள்.

க்ளக் களக் க்ளக்.

அந்த ஒட்டைக்குச்சி உடம்பு ரெண்டு முறை சிலிர்த்து அடங்கியது.

ஒரேயடியாய் அடங்கிப் போனது.

அந்தக் குரூரமான முகத்தை சலனமற்றுச் சில விநாடிகள் பார்த்தபடியிருந்தாள் சிவகாமி. மனசு சமனப்பட்டது.

காலிக் கிண்ணத்தை மாடாக்குழியில் வைத்து அட்டையால் மூடினாள்.

சீலைத்தலைப்பால் முகம், கழுத்து, கைகளையெல்லாம் அழுந்தத் துடைத்தபடி வாசலுக்கு வந்தாள்.

அப்போதுதான் கண்விழித்த குழந்தை தாயைப் பார்த்து முதன் முறையாய் சிரித்தது. அதை வாரியெடுத்து, ரெண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தங்களைக் பதித்தாள்.

:எம்புள்ளக்கி என்ன பேர் வக்யலாம்?"

"சூரி சம்ஹாரி!"

பின்விளைவுகளைப் புறக்கணித்துப் புன்னகை பூத்தாள் சிவகாமி.

சுவாசப் புன்னகை. வெற்றிப் புன்னகை.

பிறகு, திரும்பவும் அதை உச்சரித்தாள்.

"சூரி சம்ஹாரீ!"

ஓடைக்குப் போயிருந்த மாடசாமி திரும்பி வந்தான்.

"என்ன புள்ள வெளிய நிக்ய? ஆத்தா முழிச்சிரும்னு புள்ளய வச்சுக்கிட்டு வெளியவே நிக்கியாக்கும்?"

"ம்"

அவன், இவளைத் தாண்டிக்கொண்டு குடிசைக்குள் நுழையப் போனபோது அவனை நிறுத்தினாள்.

"மச்சான், கொஞ்சம் நில்லு"

"என்னத்துக்குப் புள்ள?"

"சங்சன்ல அந்தப் போட்டோக்கார ஆளு ஒரு கார்டு குடுத்தானே வச்சிர்க்கியா?"

"ஆமா, சட்டப்பையில இருக்கு. எதுக்குக் கேக்க?"

சிவகாமி அவனை ஊடுருவிப் பார்த்தாள். பிறகு பிசிறில்லாத குரலில் கணவனுக்குக் கட்டளையிட்டாள்:

"இப்படியே நட. அபிசேகப்பட்டிக்கிப் போயி அந்த ஆளுக்கு போன் போட்டுக் பேசு. எங்க கிராமத்துல ஒரு சமாசாரம் நடந்திருக்கு, வந்து போட்டோ புடிச்சிட்டுப் போன்னு சொல்லு."

(முடிந்தது)

(குமுதம், 15.10.2001)”

About The Author

4 Comments

 1. chinnaswamy

  கதை மிகவும் அருமை
  சின்னசாமி
  பெங்களூர்

 2. M.Chandrasekar

  மிக அருமையான முடிவு.
  சந்திரசேகர்,ஓசூர்.

 3. SATHISHKUMAR

  உண்மையிலேயே கதை நல்லாயிருக்கு சார்., பெண் உரிமைக்கான ஒர் உயரிய குரல்
  சதீஷ்குமார் வேதாசலம் – சென்னை

Comments are closed.