மடை திறந்து… (7)

என்னப்பா, எல்லாரும் எல்லாமும் நலம்தானே? இங்கே பரபரன்னு ஓடிட்டிருக்குப்பா. போன வாரம் பின்னூட்டங்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதமுடியலை. அதனால இங்கேதான் எழுதப் போறேன்.

க.தெ.தோ நாவலைப் படமாக்கினா முக்கிய பாத்திரங்களுக்கு யாரைப் போடலாம்னு கேட்டதுக்கு அசத்தலா பதில் சொல்லிருக்கீங்க. ரொம்ப ரசிச்சேன். உங்க தேர்வு என்னோட தேர்வு எல்லாத்தையும் பார்த்து ஒரு புது பட்டியல் தயாரிச்சிருக்கேன்: (தயாரிப்பாளர் பெயர்தான் மிஸ்ஸிங்

ரகு – பிரகாஷ்ராஜ் (ஏகோபித்த முடிவு போலிருக்கே!)
கங்கா – கீதா
அஞ்சலி – சிம்ரன்
யமுனா – தேர்வு கொஞ்சம் கஷ்டமா இருக்கு. அஞ்சலி தவிர நீங்க சொல்லிருக்கற எல்லாருமே கல்லூரி வயசை மீறினவங்களா தெரிவாங்க. (நம்ம கொஞ்சம் யதார்த்தமா படம் எடுப்போமே… அதனால வயசுக்கேத்த மாதிரி நானே நடிச்சிறவா? ஐயோ… அடிக்க வராதீங்கப்பா). அங்காடி தெரு பார்க்காததால அஞ்சலி பற்றி முடிவு பண்ண முடியலை. நீங்க என்ன சொல்றீங்க? பேசாம ஒரு நல்ல புதுமுகத்தைத் தேடலாமா? விருப்பமிருக்கறவங்க விண்ணப்பம் அனுப்புங்கப்பா (அப்படியே படம் எடுக்க பணமும் )

விக்ரம் – அட போங்கப்பா சீயானை எல்லாம் மருத்துவக் கல்லூரி மாணவரா போடச் சொல்றது ரொம்ப ரொம்ப ஓவர்… என்னோட முதல் சாய்ஸ் பிரசன்னா (கண்ட நாள் முதல்). அப்புறம் ஆர்யா.

விஜி – தீபா வெங்கட் நல்லா பொருந்திருப்பாங்க சில வருடங்கள் முன்னால. மைத்ரேயி சொல்லிருக்கற நடிகை எனக்கு யாருன்னு தெரியலை. வேற யாரைப் போடலாம்?!!! இதுக்கும் விண்ணப்பத்தை வரவேற்போமா? இது எனக்கு ரொம்பப் பிடிச்ச பாத்திரம். சமத்தா பண்ணணும்!

சுகு, கங்கா பாத்திரத்துக்கு என்னைப் பரிந்துரை செய்ததுக்கு நன்றி… ஆனா… நம்மளை டைட்டானிக் – 2 க்காக ஜேம்ஸ் காமரூன் கூப்பிட்டிருக்காக… ஷாருக்கானுக்கு ஜோடியா பாலிவுட்ல கூப்பிட்டிருக்காக… சூப்பர் ஸ்டார் படத்தில டான்ஸ் ஆட கூப்பிட்டிருக்காக…)… அதனால கால்ஷீட் இல்லைங்கோ…

சரி, உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் யாருக்கு என்னோட நாவல் பரிசா கிடைக்கும்னு. மினி, நீங்க இந்தியாவிலருந்தா அச்சு நாவல் அனுப்பறேன். இல்லைன்னா மின்னூல். மெயில் கொளுத்திப் போடுங்க. முகவரி கடைசியில்). அப்புறம் மினி… உங்களோட தொடர் பின்னூட்டங்களையும் ஆர்வத்தையும் பாராட்டி கொஞ்ச வருஷம் முன்னால பட்டுக்கோட்டை பாலுவுக்குக் கொடுத்த மாதிரி ‘வாசகர் திலகம்’னு பட்டம் கொடுக்கலாம்னு பார்த்தா ‘நிலாச்சாரலுக்கு இந்தப் பேர் எப்படி வந்திச்சு’ன்னு ஒரு அரதப் பழசான கேள்வியைக் கேட்டு சொதப்பிட்டீங்களே! இந்த மாவை எல்லா நேர்முகத்தைலேயும் அரை அரைன்னு அரைச்சுத் தள்ளிருக்கேனே!. அதை எல்லாம் மிஸ் பண்ணின பாவத்துக்குத் தண்டனையா என்னோட தொலைக்காட்சிப் பேட்டியைத் திரும்பப் பார்கற தண்டனையைத் தர்றேன்… பதில் அதிலேயே இருக்கு…: (மற்றவங்க தப்பிச்சுக்குங்க)

https://www.nilacharal.com/tamil/specials/nila_interview_312.asp

போன வாரம் பெரிய ஏமாற்றத்தையும் கோபத்தையும் தரக் கூடிய ரெண்டு நிகழ்ச்சிகள் எனக்கு நடந்துச்சு. முதல்ல அந்த உணர்ச்சிகள் கொஞ்சம் வரத்தான் செஞ்சது. ஆனா ஒரே ஒரு எண்ணம் அதை எல்லாம் சட்டுன்னு மாத்திடுச்சு – ‘ஜப்பான் மக்கள் படும்பாட்டை ஒப்பிடும்போது இதெல்லாம் ஒரு விஷயமா?’ ன்னு தோணினதும் சட்டுன்னு மனசில நன்றிதான் நிறைஞ்சது வாழ்க்கை இந்த அளவிலே இருக்கறதுக்காக. பாருங்க, வெளிலே எதுவுமே மாறலை. ஆனா ஒரு எண்ணம் என்னோட அதிர்வை எதிர்மறையிலேர்ந்து நேர்மறையா மாத்திடுச்சு. அதுதான் எண்ணங்களோட வலிமை!

நாம என்ன மாதிரியான அதிர்வை வெளிப்படுத்தறோமோ அதைத்தான் இந்தப் பிரபஞ்சம் நமக்குத் திருப்பித் தரும்னு சொல்லுது கவர்ச்சி விதி! (அட, உடனே நமீதாவுக்குத் தாவுதே உங்க எண்ணம்!). இந்த Law of Attraction அமெரிக்காவில மிகவும் பிரபலம்.

அடிப்படையில இந்த விதி என்ன சொல்லுதுன்னா, நம்மகிட்டே என்ன மாதிரியான உணர்ச்சிகள் அதிகம் இருக்கோ அதுக்கேத்த மாதிரிதான் நம்ம வாழ்க்கை அமையும். இந்த விதி பாஸிடிவ் திங்கிங்லர்ந்து கொஞ்சம் வேறு படுது. எப்படின்னா ‘எல்லாம் நன்மைக்கே’ன்னு நினைக்கறது பாஸிடிவ் திங்கிங். ஆனா அது பத்தாதுன்னு சொல்லுது கவர்ச்சி விதி. எல்லாம் நன்மைக்கேன்னு உணரணும்னு சொல்லுது அது.

நான் முழுமையா இந்தக் கணத்தை ஏற்றுக் கொள்றதைப் பற்றிப் பேசும்போது சிலபேர், "ஆமா வேற வழியில்லையே. ஏத்துக்கிட்டுதான் ஆகணும்"னு விசனத்தோட சொல்லிருக்காங்க. இது ஏற்றுக்கொள்ளுதல் இல்லைங்க. இது நம்மை நாமே ஏமாத்திக்கறது. ஒரு சூழலை நாம் முழுமையா ஏற்றுக் கொள்ளும் போது அதைப்பற்றி நமக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்காது. அதுக்காக அப்படிப்பட்ட சூழல்களை மாற்ற எதுவுமே செய்யக் கூடாதுங்கறதில்லை. மாற்று ஏற்பாடுகளைச் செய்ய ஏதுவான மனநிலை நமக்கு சூழலை முழுமையா ஏற்றுக் கொள்ளும்போதுதான் ஏற்படும்.

இந்த ஏற்றுக்கொள்ளுதலை ஏற்படுத்த எண்ணங்களை நாம பயன்படுத்தலாம். அதாவது நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய எண்ணங்களை நாம தேர்ந்தெடுக்கலாம். அப்படி தேர்ந்தெடுக்க இந்தக் கேள்விகள் உதவலாம்:

1)இதுல இருக்கற நன்மைகள் என்னென்ன?
2)எந்த மாதிரி சூழல்கள்ல இந்த நிகழ்வு பயனுள்ளதா இருக்கும்?
3)இந்த சூழல் எப்படி மாறணும்னு விரும்பறேன்?
4)இந்த நொடில எப்படி உணர விரும்பறேன்? இதுக்கு முன்னால எப்போ அந்த மாதிரி உணர்ந்திருக்கேன்?

உதாரணத்துக்கு, நீங்க விரும்பற பொண்ணு உங்களை விரும்பலைன்னு வச்சுக்குவோம். அநேகமா எல்லாருக்கும் அந்த நிராகரிப்பு வருத்தத்தையோ, நம்பிக்கையின்மையையோ கோபத்தையோ அல்லது சுய பச்சாதாபத்தையோ ஏற்படுத்தும். கஷ்டமான சூழல்தான். ஆனா இந்த உணர்வுகள்ல உழல்றதுனால ஏதும் ஆகப்போறதில்லை. அதனால மேலே கண்ட கேள்விகளைக் கேட்டுப் பார்க்கலாம். உதாரணத்துக்கு பதில் இப்படி இருக்கலாம்:

1)’நல்ல வேளை, அந்தப் பொண்ணு பெரிய சீன் பண்ணலை;’ ‘அவளோட எதிர்ப்பார்ப்பு வேறயா இருக்கறதுனால எனக்கும் அவளுக்கும் ஒத்து வந்திருக்குமோ என்னவோ. இப்பவே தெரிஞ்சுதே!’, ‘அவ தனக்கு காதல்ல நம்பிக்கை இல்லைன்னுதானே சொன்னா, அது என்னை நிராகரிக்கறதில்லையே’
2)’எனக்கு சுத்தமா பிடிக்காத பொண்ணை கல்யாணம் பண்ணச் சொல்லி வீட்டில வற்புறுத்தி இருந்து இந்த மாதிரி நடந்திருந்தா அது நல்லதா இருந்திருக்கும்.’ ‘இதை விட பொருத்தமான பெண்ணா எனக்கு அமையணும்னு கடவுள் நினைச்சிருந்தா இது நல்லதுதான்’
3)’அந்தப் பொண்ணு மனம் மாறி என்னை லவ் பண்ணணும்’ ‘என்னை எனக்காக விரும்பற, எனக்குப் பிடிச்ச மாதிரியான ஒரு காதலி எனக்குக் கிடைக்கணும்’
4)’மகிழ்ச்சியா, உடம்பெல்லாம் லேசா, முகத்தில ஒரு புன்னகையோட, உதட்டுல ஒரு மெட்டோட இருக்கணும்னு விரும்பறேன். காலேஜ் கல்சுரல்ஸ்ல ‘பெஸ்ட் சிங்கரா’ தேர்ந்தெடுக்கப்பட்டப்போ இப்படி இருந்தது.’
இது எதுவுமே வேலைக்காகலைன்னு வச்சுக்கங்க, தள்ளி நின்னு கஷ்டப்படற அந்த ஜீவனைப்பாருங்க (உங்களைத்தாங்க சொல்றேன்!). பாவமா இல்லை? கட்டிப் புடிச்சு ஆறுதல் சொல்லணும் போல இருக்கில்லை? அது… அது… அந்தக் கருணை மற்ற எதிர்மறை உணர்ச்சிகளை விட பெட்டர்…

இந்தக் கேள்விகளும் பதில்களும் நம்மோட மனநிலையைக் கொஞ்சமே கொஞ்சம் மாற்றினாலும், கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே மாற்றினாலும் நன்மைதானே! என்னோட அனுபவம் என்னன்னா, இந்தக் கேள்விகள் முதல்ல பெரிய மாற்றத்தை உடனடியா ஏற்படுத்தாது. எரிச்சல் கூட வரும். ஆனா தொடர்ந்து இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டா, இந்தக் கேள்விகள் தன்னால எழும்; தன்னால நம்ம அதிர்வுகள் மாறும். நிசம்ம்ம்ம்மா… முயற்சி செய்யுங்க.

உலகத்தில நடக்கற பல இயற்கைச் சீரழிவுகள் நமக்குள்ள ‘என்னதான் நடக்குது?’ங்கற கேள்வியை ஏற்படுத்துதில்லையா? பயம் பிரதானமா எழலாம். ஆனா மனித இனத்தோட தலை எழுத்தை மாத்தற ஆற்றல் நம்ம எல்லார்கிட்டேயும்தான் இருக்குங்கறாங்க.

இந்த காலகட்டத்தில பயத்தின் அடிப்படையிலான அதிர்வுகளை நாம வெளிப்படுத்தினா பிரபஞ்சம் நமக்கு அதைத்தான் திரும்பத் தரும். அன்பின் அடிப்படையிலான அதிர்வுகளை வெளிப்படுத்தினா ஒரு புதிய ஆற்றல் மிக்க இனம் உருவாகும் அப்படிங்கறதுதான் தீர்க்கதரிசனம்! (என்னதில்லைங்கோ…)

அதாவது நம்ம ஒவ்வொருத்தரோட உணர்வுகளுமே இந்த காலகட்டத்தில முக்கியமான அங்கம் வகிக்குது. ‘எங்கே பார்த்தாலும் இப்படி அழிவும் நாசமும் நிறைஞ்சிருக்கும்போது எப்படி பயப்படாம இருக்க முடியும்?’னு நீங்க கேக்கறது புரியுது. மேலே நான் சொன்ன அதே உத்தியை பயன்படுத்திப் பார்த்தீங்கன்னா இந்தக் கணம் நல்லா இருக்கறதுக்கான நன்றி உணர்ச்சில வந்து நிப்பீங்க.

உண்மையாகவே நன்றியுணர்ச்சி எனக்கு நிறைய நல்லது செஞ்சிருக்கு. எங்கேயோ படிச்சிட்டு தினம் தூங்கறதுக்கு முன்னால நன்றி சொல்ற பழக்கத்தை ஏற்படுத்தினேன். அதாவது அன்றைக்கு எனக்குக் கிடைச்ச கொடைகளை நன்றியோட நினைச்சுப்பேன். முதல்ல அஞ்சே அஞ்சுன்னு ஆரம்பிச்சேன். இப்போ தினம் ஐம்பதுக்கும் மேலா நினைவில வருது. இதில இன்னொரு நன்மை என்னன்னா நாள் முழுசும் நம்மோட கவனம் கொடைகளை அடையாளம் கண்டுக்கறதில போகுது. சின்னச் சின்ன விஷயமா இருந்தாலும் ‘அட இது கூட ஒரு கொடைதானே’ன்னு மனசு நிறையுது. இதை நான் குழந்தைகளுக்குக் கூட பரிந்துரை செய்யறேன். நீங்களும் ஏன் முயற்சிக்கக் கூடாது? உங்களுக்கு ஊக்கம் தர்றதுக்காக எனக்கு இந்த வாரம் கிடைச்ச் அஞ்சு கொடைகளைப் பட்டியல் போடறேன்:

1)’உங்க முகத்தைப் பார்க்கணும் போல இருக்கு பெரீம்மா’ன்னு நாலு வயசு ஜெஸிகா தொலைபேசில சொன்னது.
2)நிலாச்சாரல்ல புது ப்ராஜக்ட் பண்றோம்னு சொன்னதும் ‘நான் உதவி செய்யறேன்’னு கவிதா தானா முன் வந்தது.
3)என் கூட வீட்டுக்கு வர்றேன்னு ஒன்றரை வயசு நித்தி அவங்கம்மாவுக்கு டாடா காட்டினது.
4)அமானுஷ்யன் கணேசன் மடைதிறந்து நல்லா இருக்குன்னு பாராட்டினது
5)பூவெல்லாம் மெல்ல எட்டிப் பார்த்து வசந்தம் வருதுன்னு சொல்றது

உங்களுக்குக் கிடைச்ச கொடைகளை இங்கே பகிர்ந்துக்குங்களேன்!

நிலாச்சாரலுக்கு எப்படி பணம் அனுப்பறதுன்னு சிலர் கேட்டிருந்தீங்க. நிலாச்சாரலை நிறுத்தலாம்னு முடிவு செய்ததுக்கு முக்கிய காரணம் வளர்ச்சியே இல்லைங்கறதுதான். நான் ஏற்கெனவே சொன்னது போல ஆடியோ வீடியோல்லாம் பண்ணணும்னு ஆசை இருந்தது. சில சிறுவர் கதைகள் கூட பதிவு செய்தேன். ஆனா அதுக்கு நிறைய ஆள்பலம், பண பலம் வேணும். அதெல்லாம் இல்லாம கையைக் கட்டிப் போட்டது போல ஆயிடுச்சு. நிதி திரட்டற ஐடியாவில இப்படி அறிவிச்சோம்:

https://www.nilacharal.com/ocms/log/promote.asp

ஆனா ஒண்ணும் நடக்கலை. அதனால சரி நிறுத்திடலாம்னு முடிவு செஞ்சேன். இப்போ நீங்க கேக்கறதைப் பார்க்கும்போது இன்னும் நிறைய செய்யலாம்னு நம்பிக்கை வருது. யாராவது நிலாச்சாரலுக்கு நன்கொடை கொடுக்கணும்னு விரும்பினா Paypal.com தளத்துக்குப் போய் கடன் அட்டை மூலமாக sales அட் நிலாச்சாரல்.காம் என்கிற முகவரிக்கு அனுப்பலாம். இல்லைன்னா மேலே இருக்கற சுட்டி மூலமா அனுப்பலாம்.

Nila Rajஇந்த வாரப் புடவை என்னோட மாமியார் இறந்த சமயம் சம்பிரதாயப்படி என்னோட பெற்றோர் வாங்கித் தந்தது. பாண்டிச்சேரில போய் நானும் என்னோட நாத்தனாரும் வாங்கினோம். நிறையப் பேருக்கு பிடிச்சிருந்தது.

சரிப்பா, நான் சொல்ற பயிற்சியெல்லாம் செய்யறீங்கதானே? ஏதாவது பலன் இருக்கா? ஏதாவது பகிர்ந்துக்கணும்னா எழுதுங்க: LLJ டாட் நிலா அட் ஜிமெயில் டாட் காம்

அடுத்தவாரம் சந்திக்கற வரைக்கும் நல்ல பிள்ளையா உங்களைப் பார்த்துக்கங்க. சரியா?

பாரதி, என்னாச்சு? நலம்தானே?

ம்ம்… அப்புறம் எழுத்தாளர் நட்சத்ரனையும் வலைபோட்டுத் தேடறோம். தொலைபேசி எண் வச்சிருந்தா அனுப்பிச்சி விடுங்க.

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

3 Comments

 1. Barathi

  Nila, I never thought you would remember me.. i really felt shocked when i you asked abt me here. I am Absolutely getting better just bcoz of Nilacharal. I feel some positive vibrations in your words, i feel it Nila. you are blessed.

 2. Mini

  hello Nila, eppadi irukinga? katha kathu kangal poothu poi vitathu Nila. in tha monday romba seekiramae elunthu vanthu partha update agama ayyonu irunthathu.

  very very happy about the prize. Thank you so much.I will send you the email.

  Nila,neenga Nimmyaa? parunga enaku theriyama pochu. naan unga interview parthathu illa. Chitra voda nerkanalla soli irukingalanu check panen. innum konjam googlela check panni irukalamo..oru patatha miss panni vitaenae. sari paravailla nilaku romba nalla manasu. kandipa veru oru pattam kudupanga.

  unga interview romba romba nalla irunthathu. very simple and straight. romba casuala panni irunthinga. Nila unga padaipugala enga parkalam? i mean unga writings list link iruka Nilacharalala?

 3. கலையரசி

  உங்கள் பேட்டியைப் பார்த்தேன். அழகு தமிழில் நீங்கள் பேட்டி கொடுத்த விதம் நன்றாயிருந்தது. எழுத்தாளர், இணைய இதழின் ஆசிரியர், இஞ்சீனியர், குறும்பட இயக்குநர் என்று நீண்டிடும் உங்களது பல்வேறு திறமைகள் பற்றியறிந்து வியப்புற்றேன். வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு! பாராட்டுக்கள் நிலா!

Comments are closed.