மனிதரில் எத்தனை நிறங்கள்! (60)

Whenever God prepares evil for a man, He first damages his mind.
– Sophocles ‘Antigone’

அடுத்த இரண்டு நாட்களில் அம்மாவின் டைரிகளை ஆர்த்தி முழுவதுமாகப் படித்து முடித்தாள். அம்மா ஒரு நிஜ மனுஷியாக அவள் மனதில் வடிவெடுத்து நின்றாள். எதிலும் எப்போதும் நியாய உணர்வு, எதற்கும் பயப்படாத தன்மை, சுய கௌரவம் ஆகியவை ஆனந்தியின் தனித் தன்மைகளாக இருந்தன.

ஆர்த்தியைப் பிரசவித்துக் கையில் எடுத்துக் கொண்ட அந்தக் கணத்தை ஆனந்தி மிகவும் பரவசமாக எழுதி இருந்தாள். அவள் அனுபவித்த அந்த சந்தோஷத்தை இரண்டு பக்கங்களில் எழுதி இருந்தாள். படிக்கையில் ஆர்த்திக்குக் கண்களில் நீர் நிரம்பியது. ‘இப்படிப்பட்ட அம்மா என்னை வளர்க்க எனக்குத் தான் கொடுத்து வைக்கலை’.

ஆனால் எங்குமே கொலை செய்யப்படுவதற்கான காரணங்கள் காணப்படவில்லை. சந்தோஷமான வாழ்க்கையைத் தான் அந்த டைரிகள் பிரதிபலித்தன. சிவகாமியைப் பற்றி எங்குமே தவறாக எழுதப்படவில்லை. ‘கணவன் ஆரம்பத்தில் அக்கா எதிர்த்தாலும் தன்னைத் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லாதது ஒரு மாதிரியாக இருந்தது’ என்று துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தாலும் திருமணமான பிறகு சிவகாமியின் அதிகாரத்தைப் பற்றி ஆனந்தி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை கிழிந்திருந்த டைரிப் பக்கங்களில் எழுதி இருந்தாளோ என்னவோ பிறகு எதிலும் இல்லை.

நாளை மாலை டாக்டர் ப்ரசன்னாவிடம் அப்பாயின்மென்ட். லேசாக வயிற்றைப் புரட்டியது. ஒருவித இனம் புரியாத பயம் வர ஆரம்பித்தது. அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்த போது தான் மூர்த்தி அவள் அறைக்கு வந்தான். "ஹாய் ஆர்த்தி"

"ஹாய்"

மூர்த்தி பாட்டி சொன்னதை மனதில் வைத்து மிக பவ்யமாக ஆனால் தோழமை உணர்வை முகத்திலும் நடவடிக்கையிலும் காட்டப் பழகி இருந்தான்.

புன்னகையுடன், ஒருவித புரிந்து கொண்ட தொனியில் கேட்டான். "என்ன ஆர்த்தி யோசிச்சிகிட்டு இருக்கிறாய். நாளைக்கு டாக்டர் கிட்ட போறதைப் பற்றியா?"

அவன் அதை நினைவு வைத்திருந்ததும், புரிந்து கொண்டு கேட்டதும் ஆர்த்திக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவள் ஆச்சரியத்தையும் புரிந்து கொண்டது போல் கரகரத்த குரலில் மூர்த்தி சொன்னான். "ஆர்த்தி நான் சொன்னால் நீ நம்புவாயா இல்லையான்னு எனக்குத் தெரியலை. ஆனா அந்தக் கனவு உன்னைப் படுத்தின பாட்டைப் பார்த்த பிறகு நீ அதுல இருந்து விடுபடணும்னு நான் கடவுளை வேண்டாத நாள் இல்லை. எனக்கே ஏன்னு தெரியலை. ஒருவேளை சின்ன வயதிலேயே அப்பா அம்மா இல்லாமல் ரெண்டு பேரும் வளர்ந்திருக்கோம்கிறதால இருக்கலாம். அதனால தானோ என்னவோ உன் கஷ்டம் என் கஷ்டமாய் எனக்குத் தோண ஆரம்பிச்சுடுச்சு…"

அவன் வார்த்தைகள் ஆர்த்தியின் மனதை நெகிழ வைத்தன. "தேங்க்ஸ்" என்றாள்.

"உன்னை டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு ஆகாஷ் போகட்டும்னு தீர்மானம் செஞ்சது யார் ஆர்த்தி?"

"பெரியத்தை தான்"

பதில் ஏதும் சொல்லாமல் மூர்த்தி அர்த்தமுள்ள மௌனம் சாதித்தான். அந்தத் தகவல் தன்னை சந்தேகப்பட வைப்பதை வாயால் சொல்லாமல் முகபாவனையால் அவளுக்குத் தெரிவித்தான்.

ஆர்த்தி ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்கு ஆகாஷூடன் செல்வதில் சந்தோஷமே தவிர எந்த வருத்தமும் இல்லை என்பதை அவளும் சொல்லவில்லை.

அந்த நேரத்தில் தோட்டத்தில் டேவிடும் மேரியும் சங்கரனிடம் பேசிக் கொண்டு இருந்ததை ஜன்னல் வழியாக பார்த்த மூர்த்தி இகழ்ச்சியுடன் புன்னகைத்தான். "இந்த ரெண்டு பேருக்கும் எத்தனை பட்டாலும் புத்தி வராது"

அவன் பார்வை போன இடத்தைப் பார்த்த ஆர்த்தி டேவிட் மேரியைப் பார்த்தவுடன் சந்தோஷமடைந்தாள். அவர்களை அவர்கள் வீட்டுக்குப் போய் விட்டு வந்த பிறகு பார்க்கவில்லை. ஆனால் மூர்த்தி ஏன் இப்படி சொல்கிறான் என்பது அவளுக்கு விளங்கவில்லை. "என்ன மூர்த்தி சொல்றீங்க?"

அவளிடம் சொல்வதா வேண்டாமா என்பது போல ஒரு நிமிடம் தர்மசங்கடமாக மௌனம் சாதித்து விட்டு பிறகு மூர்த்தி சொன்னான். "இவங்க பொண்ணு லிசாவும் ஆகாஷும் காதலிச்சுட்டு ஒண்ணா திரிஞ்சுகிட்டு இருந்தாங்க. கடைசில கல்யாணம்னு வந்தப்ப ஆகாஷ் கையை விரிச்சுட்டான். அந்தப் பொண்ணு கொஞ்ச நாள் பைத்தியம் மாதிரி சுத்திகிட்டு இருந்துது. அப்புறமா வேற ஏதோ பையனைப் பார்த்து கல்யாணம் செஞ்சு கொடுத்தாங்க. இத்தனை ஆனாலும் இதுங்க உங்க பெரியத்தைக்குக் கூஜா தூக்கறதை நிறுத்தலை. பணம் பாதாளம் வரைக்கும் பாயும்கிறதுக்கு உதாரணத்தை நீ வேற எங்கே போயும் பார்க்க வேண்டாம்….."

ஆர்த்திக்கு ஒரு கணம் மூச்சு விட முடியவில்லை. ஆகாஷைப் பற்றி இப்படி கேள்விப்பட்ட போது மனதை ஏதோ பலமாக அழுத்தியது. ஆகாஷ் அப்படி செய்யக்கூடியவன் என்பதை நம்ப முடியவில்லை. அவள் முகமாற்றத்தை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியே கவனிக்காதவன் போல காட்டிக் கொண்ட மூர்த்தி தொடர்ந்து சொன்னான். "இத்தனை ஆன பிறகும் ஆகாஷ்னா அப்படியே இன்னும் உருகறாங்க. காரணம் அவங்கம்மா. ஆனா நான் அவங்களுக்கு எந்தக் கெடுதலும் செஞ்சதில்லை. இருந்தாலும் என்னைக் கண்டா ஆகறதில்லை. காரணம் என் கிட்ட பணமோ, அதிகாரமோ இல்லை…"

அவன் சொல்லிக் கொண்டே போனான். ஆனால் ஆர்த்தி மனதில் எதுவும் பதியவில்லை. ஆகாஷை நம்பியதைப் போலவே அவள் டேவிட் மேரியையும் நம்பினாள். இவன் சொல்வதெல்லாம் அவர்களுக்குப் பொருந்துகிற மாதிரி தெரியவில்லை. ஆனாலும் ஒருவித கலவரம் மனதைக் கலக்க ஆரம்பித்தது. "எல்லாமே ஒருவித நாடகம் தானோ. சாமர்த்தியமாக நடிக்கிறார்களோ? அம்மாவும் இப்படித் தான் ஏமாந்து போனாளோ?"

மூர்த்தி அவள் அருகில் வந்து ரகசியமாக மெல்லச் சொன்னான். "இவங்க போடற டிராமாவை அவ்வளவு சுலபமாய் கண்டு பிடிச்சுட முடியாது. உங்க அப்பாவோட அப்பாவும் ஆரம்பத்துல ஏமாந்து தான் போனார், தன்னோட மூத்த பொண்ணு மேல உயிரையே வச்சிருந்தார். ஆனா கடைசியில் உங்க பெரியத்தையோட சுயரூபத்தைக் கண்டு பிடிச்சுட்டார். உங்கப்பா பேரில் சொத்து எழுதி வச்சா அதை அப்படியே உன் பெரியத்தை அபகரிச்சுடுவான்னு சந்தேகம் வந்தவுடனே சொத்தை மாத்தி எழுதினார். தன்னோட ரெண்டு பொண்ணுகளுக்கும் கொஞ்சம் எழுதி வச்சவர் பையன் பேர்ல மீதியை எழுதி வைக்கல. பையனோட வாரிசுக்குத் தான் எழுதி வச்சிருக்கார். இப்ப அத்தனை சொத்துக்கும் நீ தான் அதிபதி."

ஆர்த்திக்கு நிஜமாகவே தலை சுற்றியது.

(தொடரும்)

About The Author