மலையிலே… மலையிலே (6)

"சுட்ருச்சி போல. இருங்க பாத்துட்டு வர்றேன்" என்றவாறே குடிசையை விட்டு வெளியேறினார் செல்லத்தின் தாய். அவரைத் தொடர்ந்து அவர்களும் நடந்தார்கள்.

அவர்கள் சென்ற இடத்தில் ஒரு பெரிய அடுப்பில் தொட்டி போன்ற மிகப் பெரிய பாத்திரத்தை வைத்து அதில் பதனீரைக் கொட்டி இரண்டு பேர் கிளறிக் கொண்டிருந்தார்கள். ஒரு கையை உதறிக் கொண்டே கிளறியவரைப் பார்த்து,

"உப்பு வச்சியா, முத்து?" என்றார் செல்லத்தின் தாய்.

"இல்ல மதினி, இதென்ன செய்யும். லேசாத் தெறிச்சிரிச்சி" என்றார்.

"கரண்டியக் குடுத்துட்டு மருந்து போட்டுட்டு வா" என்று கரண்டியை வாங்கி அவர் கிளற ஆரம்பித்தார். நன்றாக வாசம் வந்தது.

"கூப்பதனி குடிக்கிறியா, தாயி?" என்றவாறே சிறிய ஓலைக் கிண்ணத்தில் காய்ச்சிய பதனீரை ஆற வைத்து எடுத்து வந்தார் செல்லத்தின் அம்மா.

சிறிய ஓலைத் துண்டு ஸ்பூன் போல வைக்கப்பட்டிருந்தது. வெதுவெதுவென்றிருந்த கூழ்பதனீர் தித்திப்பாக கமகமவென்ற மணத்துடன் நாவில் சுவைத்தது. கிராமத்தில் கிடைக்கும் எல்லாப் பதார்த்தங்களுக்கும் விசேஷமான ருசி இருப்பதாக நினைத்தாள் அக்ஷயா.

இனி எல்லா விடுமுறைக்கும் கிராமத்துக்கு வந்துவிட வேண்டுமெனத் தன் தாயிடம் சொல்ல விரும்பினாள்.

சற்று நேரம் இளைப்பாறிய பின் தோப்பில் போய் ‘கல்லா மண்ணா’ விளையாடினார்கள். பின் செல்லம் புளிய மரத்திலேறிப் புளியங்காய் பறித்து வந்தாள். அவள் லாவகமாயும் வேகமாயும் ஏறிய விதம் அக்ஷயாவுக்கு வியப்பைத் தந்தது. புளியம் பிஞ்சுகளை உப்பில் தோய்த்து உண்டார்கள்.

கைகோர்த்துக் கொண்டு பாடல் ஒன்றைப் பாடியபடியே மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். பாடலை அக்ஷயாவுக்கும் சொல்லித்தர அவளும் அவர்களோடு சேர்ந்து பாட முயற்ச்சித்தாள்.

மலையிலே மலையிலே
தீப்பிடிக்குது மரத்திலே
சாமி வந்து
அமர்த்த வேணும்
மழை வந்து
நிறுத்த வேணும்
காத்து நின்னு
குளிர வேணும்
பாடி ஆடி
வரம் கேப்போம்

இப்படிப் பாடி ஆடி வரம் கேட்டுக் களைத்துப் போய் மரத்தடியில் அமர்ந்தார்கள். அருகிலிருந்த தொட்டாஞ்சிணுங்கியின் இலைகளைத் தொட்டு அது மூடிக் கொள்வதை அக்ஷயாவுக்குக் காட்டினாள் ரோகிணி. வெகு நேரம் அதனுடன் விளையாண்டு கொண்டிருந்தாள் அக்ஷயா. லட்சுமி மாமரத்தின் கிளைகளில் ஏறி அமர்ந்து உல்லாசமாய் மேலும் கீழுமாய் ஆடுவதைப் பார்த்த அக்ஷயாவுக்கும் அவள் போல் ஆட ஆசை வந்தது. அவளுடன் இணைந்து கொண்டாள். மற்றவர்கள் எல்லோரும் கிளையை ஆட்டிவிட்டார்கள். தீம் பார்க்கில் இருப்பது போல ஜாலியாக இருந்தது அக்ஷயாவுக்கு.

செல்லம், "இந்தக் கிணத்துச் சுவர்ல மைனாக் குஞ்சு பொறிச்சிருக்கு, பாக்கலாம், வர்றீங்களா?" என்றாள்.

மரக்கிளைகளிலிருந்து தொப்பெனக் கீழே குதித்து அவர்களுடன் கிணறு நோக்கிச் சென்றாள் அக்ஷயா. கிணற்றுக்குக் கைப்பிடிச் சுவரில்லை. பாதி வரைக்கும்தான் நீரிருந்தது. உள்ளே இறங்கப் படிகள் கூட இல்லை.

"அங்கே பாருங்க… மைனா குஞ்சுகளுக்கு இரை தருது" என்று சுட்டிக் காட்டினாள் செல்லம். அவள் காட்டிய திசையில் ஆரஞ்சு நிற வாயைத் திறந்து தன் தாயிடம் இரையை வாங்கிக் கொண்டிருந்த காட்சியை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷயா. அந்த அழகிய காட்ச்சியை வேறொரு கோணத்தில் பார்க்க விரும்பிப் பின்புறமாக இரண்டடி எடுத்து வைத்தவள், மண் சறுக்கி, "அம்மா.. ஆஆஆ" என்ற அலறலுடன் கிணற்றுக்குள் விழுந்தாள்.

(அடுத்த வாரம் பார்ப்போமா?)

About The Author