மலைவாழ் மக்களும் அவர்தம் நிர்வாகக் கட்டமைப்பும்

தகவல் தொழில்நுட்பம் மலர்ந்து கைப்பேசிக்குள் உலகம் சுருங்கிவிட்டபோதிலும் பழமைப் பண்பாடுகளை மறவாது, இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வருபவர்கள் தமிழ்நாட்டு மலைவாழ் மக்கள். இவர்கள் தமது பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், மருத்துவ முறைகள், கிராமியக் கலைகள், ஏட்டில் எழுதப்படாத தாலாட்டு, ஒப்பாரி போன்ற நாட்டுப்புற இலக்கியச் சிந்தனைகள் ஆகியவற்றை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மலை, விழுப்புரம் மாவட்டக் கல்வராயன் மலை, வேலூர் மாவட்டத்து ஜவ்வாது மலை, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, திருச்சி மாவட்டத்தின் பச்சைமலை ஆகிய பகுதிகளில் இவ்வின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அன்றாடப் பணிகளுக்கான கருவிகளை வடிவமைப்பதில் வல்லவர்களாக உள்ளனர். தங்கள் பூர்விக இருப்பிடமான மலைப்பகுதிகளிலும், மலையடிவாரச் சமவெளிப் பகுதிகளிலுமே இவர்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். பிற இனத்தவரோடு ஒன்றி வாழும் மனநிலையைத் தவிர்த்து தாங்களே முழுஅதிகாரமும் படைத்த வலுவான கிராமிய நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். ‘மலை ஆட்கள்’ என்பதால் ‘மலையாளிகள்’ என அழைக்கப்படும் இவர்களின் பூர்விகம் பற்றிய செய்திகள் ஆதாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும் வாய்வழிச் செய்தியாகச் சொல்லப்பட்டதாக தர்ஸ்டன் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நொச்சிக்குட்டை மலைகிராமம்

மேற்கண்ட மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூசாரி ஒருவரின் சந்ததியினர். அந்தப் பூசாரி அந்நாட்டு மன்னனின் உடன்பிறந்தவன். அவன் தன் உடன்பிறந்த அந்த மன்னனோடு சண்டையிட்டுத் தன் மூன்று பிள்ளைகளோடும் ஒரு மகளோடும் இந்த மலைப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். இப்பகுதியை ஆண்ட வேடர்களும் வேளாளர்களும் புதிதாக வந்த இவர்களைத் தடுக்க முற்பட்டனர். அவர்களோடு போரிட்டு வெற்றி பெற்ற பூசாரியின் பிள்ளைகள் அந்தந்த மலைப்பகுதிகளில் குடியேற ஆரம்பித்தனர்.

பெரியண்ணன் சேர்வராயன் மலையிலும், நடு அண்ணன் பச்சை மலையிலும், இளையவனான சின்னண்ணன் கொல்லிமலையிலும் தங்கினர். அவர்கள் அங்கிருந்த வேற்றினப் பெண்களையே திருமணம் செய்து கொண்டனர். பெரியண்ணன் கைக்கோளர் சாதியிலும், நடு அண்ணன் வேடர் சாதியிலும், சின்னண்ணன் பள்ளர் சாதியிலும் பெண்களைத் திருமணம் செய்து கொண்டனர். தன் உடன்பிறந்த சகோதரியை, போரிட்ட காலத்தில் உணவு தந்துதவிய தொட்டியன் ஒருவனுக்கு மணமுடித்து வைத்தனர். ஒரு கலயம் கஞ்சிக்காகத் தன் உடன் பிறந்தவளையே விற்றவர்கள் இவர்கள் என்பதாகவே தொட்டியர்கள் இவர்களை இன்னமும் நினைவு கூர்கின்றனர்.

இன்றைய உள்ளாட்சி முறைகள் இந்தப் பகுதியிலும் நடைமுறையில் இருந்தாலும் இவ்வின மக்களின் அடிப்படை கிராம நிர்வாகக் கட்டமைப்பு பலம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது. இம்மக்கள் ஊராரின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவது இல்லை. எனவே, அதிகாரமும் சிறந்த நிர்வாகமும் கொண்ட சமுதாய அமைப்பாக இயங்கி வருகிறார்கள்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். ஊர்க் கவுண்டர், கங்காணி, காரியக்காரர் ஆகிய மூவர் அடங்கிய குழுதான் நிர்வாகத்தின் தலைமையாகச் செயல்படுகிறது. மக்களிடையே நடைபெறும் சண்டை சச்சரவுகளை ஊர் கூடிப் பேசித் தீர்வு காண்பது இவர்களின் முக்கிய பணியாகும். ஊர் மக்கள் ஒன்று கூடித் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். மக்களாட்சி முறை தோன்றுவதற்கு முன்னரே இவர்கள் இப்படித் தங்களுக்குரிய தலைவர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைக் கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. விருப்பு வெறுப்பின்றிச் சிறப்பாகத் தொண்டாற்றும் எண்ணம் கொண்டவர்களை ஊர்க் கவுண்டராகவும், அவருக்கு உதவி புரிய கங்காணியையும், ஆலோசனை வழங்கக் காரியக்காரரையும் தேர்ந்தெடுக்கின்றனர்.

மக்கள் அனைவரும் மாமன் – மச்சான் முறை, அண்ணன் – தம்பி முறை என்ற இரு வகையில் அடங்குவர். பச்சை மலையாளி, பெருமலையாளி என்ற இரு உட்பிரிவுகள் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். முதன்மைத் தலைவரான ஊர்க் கவுண்டர் சொல்லும் வார்த்தைகளை மதிப்பவர்களாக இருக்கின்றனர். பிறர் துன்பம் செய்யும்போதும், உரிமை பறிக்கப்படும்போதும், குடும்ப விழா, இறப்பு போன்ற நிகழ்வுகளிலும் இவருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தகராறுகளை விசாரிக்கும் அதிகாரமும் இவரிடம் உண்டு. அனைத்து மக்களும் இவருக்குக் கட்டுப்படும் நிலை காணப்படுகிறது.
ஊர்க் கவுண்டருக்கு அடுத்த இடத்தை வகிக்கும் கங்காணியின் கடமைகள் மிக அதிகம் எனலாம். தலைவருக்கு அனைத்து நிலைகளிலும் உடனிருந்து உதவுபவராகவும் அனைத்துத் தகவல்களையும் கவுண்டரிடமிருந்து மக்களுக்கும், மக்களிடமிருந்து தலைமைக்கும் கொண்டு சேர்க்கும் இணைப்புப் பாலமாகவும் செயல்படுகிறார். மக்களை ஓரிடத்தில் சேர்க்கவும், ஊர்க்கூட்டம் (இதை ‘ஊர்நியாயம்’ என்றே இம்மக்கள் வழங்குகின்றனர்) கூட்டி மக்களின் குறைகளையும் தேவைகளையும் அறிந்து அதை நிறைவேற்றவும் உறுதுணையாக இருப்பது கங்காணியின் முக்கியப் பணியாகும்.
ஊரின் முக்கிய நிர்வாகப் பொறுப்புள்ளவர்களில் காரியக்காரரும் ஒருவர். ஊர்க் கவுண்டருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்குக் காரியக்காரரும், முன்னர் கவுண்டராக இருந்தவரும் ஆலோசனை வழங்குவர். பிற இனத்தவருடனான தொடர்பு, வெளி உலகத் தொடர்பு ஆகியவற்றை நிர்வகிப்பதும், முக்கிய பிரமுகர்களின் ஆலோசனைகளை அறிந்து நிர்வாகத்தைச் சீர்படுத்துவதும் இவரது முக்கிய கடமைகளாகும்.

மலையாளி இன மக்கள் தங்கள் இனக்குழு மட்டும் அமைந்த சமுதாயக் கட்டமைப்பிற்குள் வாழ்ந்து வருகின்றனர். வேறு இனத்தவர்களை மணப்பதோ, உறவு கொண்டாடுவதோ இல்லை. பிற இனத்தவரினும் உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதுகின்றனர். தங்களை ‘மலையாளக் கவுண்டர்கள்’ என அழைப்பதில் பெருமிதம் கொள்கின்றனர். இவர்கள் வசிக்கும் கிராமத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பத்தையும் ‘தலக்கட்டு’ எனப் பகுத்துக் கொள்கின்றனர். ஊரில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் குடும்ப எண்ணிக்கையின் அடிப்படையில் பங்கிடுகின்றனர்.

இவர்களுடைய சமுதாயக் கட்டமைப்பில் ஒற்றுமையான செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. ஒவ்வொரு குடும்பமும் ஊர்க் கவுண்டர் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஊர் நிர்வாகத்திற்குத் தெரியாமல் நடக்கும் நிகழ்வுகளுக்குத் தண்டம் (penalty) விதிப்பது வழக்கமாக உள்ளது.

•நிலம் சார்ந்த சிக்கல்கள், மணமுறிவுகள், குடும்பத் தகராறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை ஊர் கூடிக் கவுண்டர் தலைமையில் நியாயம் பேசித் தீர்த்து வைப்பர்.

•ஆண், பெண் வீடு பார்த்து, நிச்சயதார்த்தம் செய்து, மங்கலநாணைத் தம் கையால் மணமகனிடம் எடுத்துக் கொடுத்து, விருந்தினரைக் கவனிப்பது வரை ஊரார் அனைவரும் ஒன்றுகூடிச் செய்கின்றனர்.

•இறப்பு நிகழுமாயின் ஊர்க் கவுண்டர்தான் முதலில் வந்து நிற்பார். இறந்தவரின் உறவினர்களை அழைப்பது, பாடை அமைப்பது, புதைக்கக் குழி தோண்டுவது என அனைத்துச் சடங்குகளையும் நடத்துவது கவுண்டர் மற்றும் கங்காணி ஆகியோரின் கடமையாகும்.

•ஊரின் நுழைவில் மாரியம்மன் ஆலயம் அமைத்துக் காவல் தெய்வமாகப் போற்றி வருகின்றனர். மாரியம்மன் விழாவிற்கு மட்டும்தான் ‘தலக்கட்டு’ வாரியாக வரி வசூலிக்கப்படுகிறது. இக்கோயில் விழா கவுண்டர் தலைமையில் நடைபெறும். அனைத்துச் செலவுகளையும் மேற்கொண்டு, விழா முடிந்த பின்னர் செலவினத் தணிக்கை விவரம் ஊராரிடம் ஒப்படைக்கப்படும்.

அரசையோ, உலக சமுதாயத்தையோ சாராமல் இப்படித் தங்களுக்குள் ஒரு சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு உயர்வான சிந்தனைகளைக் கொண்டவர்களாக இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் கணினியுகத்திலும், மலைப்பகுதிகளையே வாழ்விடமாகக் கொண்டு, வேளாண்குடிகளாக இயற்கையோடு ஒன்றி வாழும் இம்மக்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவர்கள்தான்!

ஆதாரம்:

1.இராமன் த/பெ வெள்ளையன் – வயது 58, சித்தேரி மலை.
2.மாணிக்கம் த/பெ காளி – வயது 57, முள்ளிக்காடு.
3.எட்கர் தர்ஸ்டன் – தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – தொ 4.

About The Author