மாறியதா மனம்?

காட்டில் மரம் அறுக்கும் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தார் ராமுவின் அப்பா. ஒரு விடுமுறை தினத்தன்று அப்பாவுடன் ஆலைக்குச் சென்றிருந்தான் ராமு. மாலையில் வேலை முடிந்தவுடன் அப்பாவுடன் மலைக்காட்டின் அழகை, இதமான குளிர்ந்த காற்றினை ரசித்தவாறு நடந்து கொண்டிருந்தான். "அப்பா! நம் வீட்டை இங்கே கட்டிக்கொள்ளலாம்பா. எங்கு பார்த்தாலும் பசுமையான மரஞ் செடி கொடிகளும், பறவைகளின் இன்னிசையும் மிகவும் ரம்யமாக இருக்கிறது. இங்கேயே தங்கிவிடுவோம்பா" என்றான் அப்பாவின் முகத்தை ஆவலாக பார்த்தபடி.

அவனைக் கனிவோடு நோக்கிய தந்தை, "இல்லை, ராமு. காட்டில் எவ்வளவு அழகு இருக்கிறதோ அது போல் ஆபத்தும் உண்டு" என கூற, "ஆபத்தா? காட்டிலா?" என்று ராமு கேட்டுக் கொண்டிருக்கும் போதே காட்டு யானை ஒன்று பயங்கரமாக பிளிறிக் கொண்டு இவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தது.

மகனின் கையை இறுகப் பற்றி இழுத்தபடி அந்த கரடு முரடான பாதையில் வேக வேகமாக ஓடினார். இருந்த போதிலும் யானையின் வேகத்திற்கு அவரின் வேகம் ஈடு கொடுக்கவில்லை. யானை மிக அருகில் வந்து விட ராமுவை அருகிலிருந்த புதரினுள் வீசிவிட்டு ஓடினார் தந்தை. நான்கடி கூட ஓடியிருக்கமாட்டார் யானை அவரைத் தன் துதிக்கையால் வளைத்துப் பிடித்து சுழற்றித் தரையில் ஓங்கி அடித்து தூண் போன்ற கால்களால் அவர் கதறக் கதற நசுக்கிக் கொன்றுவிட்டு ஓடிவிட்டது.

உறைந்து போனான் ராமு. வாய்விட்டு அழக்கூட முடியவில்லை. யானை சென்ற திசையையே வெறித்துப் பார்த்து நின்றான். பின் பிரமை பிடித்தவனாகத் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். எப்படித்தான் வீடு வந்து சேர்ந்தானோ!

அம்மாவைப் பார்த்ததும் கேவிக் கேவி அழுத ராமு, திக்கித் திணறி நடந்ததைக் கூறினான்.

பக்கத்துவீட்டு ஆண்கள் காட்டிற்குள் ஓடிச்சென்று அப்பாவை ஓலைப்பாயில் சுருட்டிக் கொண்டு வந்தனர். அவர் மேல் விழுந்து புரண்டு அழுத ராமுவின் அம்மா எழுந்திருக்கவேயில்லை.

எட்டு வயது ராமு ஒரே நாளில் அனாதை ஆகிப்போனான். அதன் பின் ராமு மிகவும் மாறிப் போய்விட்டான். பள்ளிக்குச் செல்ல மறந்தேவிட்டான். பெரும்பாலான நேரம் அவன் தந்தை இறந்த இடத்திலேயே போய் அமர்ந்து கொள்வான். அவன் நண்பன் துரை மட்டும் அவனைத் தேடிப் பிடித்துப் போய்ப்பேசுவான். பதிலேதும் வராது ராமுவிடமிருந்து. அவ்வப்போது ‘அந்த யானையை விட மாட்டேன். விடவே மாட்டேன்’ என்று வெறி பிடித்தது போலக் கத்துவான்.

எது எப்படியிருந்தாலும் காலம் என்னவோ வேகமாக ஓடிக் கொண்டுதானிருந்தது. ஆண்டுகள் சில கடந்திருந்தன. ராமுவின் உடல் வளர்ந்திருந்தது போலவே அவன் மன வன்மமும் வளர்ந்துதானிருந்தது.

எத்தனை நாட்கள்தான் உறவினர் நிழலில் தங்குவது? துரை பெருமுயற்சி எடுத்து ராமுவின் தந்தை வேலை செய்த ஆலையில் வேலை வாங்கித் தந்தான். அவனுக்கும் அங்கேயே வேலை. அதனால் நண்பனை அருகிலிருந்து கண்காணிக்க வசதியாக இருந்தது துரைக்கு.

வேலைக்குச் செல்லும் போதும், வேலை முடிந்து வரும் போதும் தந்தை இறந்த இடத்தில் கல்லாகச் சமைந்து நிற்பான் ராமு. சிறிது நேரம் துரை பாதையை மாற்ற முயற்சித்தும் பலிக்கவில்லை.
ராமுவின் மனதை மாற்ற இதமான பல நிகழ்வுகளை எடுத்துச் சொல்வான் துரை. பொழுது போக்கு இடங்களுக்கு அழைத்துச் செல்வான். ஆனால் எதிலும் மனம் ஒன்றாமல் ராமு விட்டேற்றியாக நடந்து கொண்டாலும், துரை தன் முயற்சியைக் கைவிட்டு விடவில்லை.

ஒரு நாள், “ப்ளீஸ்டா, உன் மனதை மாற்றிக் கொள். இப்படியே இருந்து உன் வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளாதே. இந்தப் பரந்த உலகில் எவ்வளவோ விஷயங்கள் தினம் தினம் நடக்கின்றன. பூகம்பத்தினாலும், புயல், மழையினாலும், சுனாமியினாலும், விபத்துக்களாலும், கொள்ளை நோய்களாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்து கொண்டிருக்கின்றனர். அது போல உன் தந்தை இறந்ததும் ஒரு விபத்து என நினைத்துக் கொள்” என்று துரை சொல்லும் போதே, “நிறுத்தடா உன் மடத்தனமான அறிவுரையை” என்று ஆவேசமாக கத்தியவன் “ஒரு பாவமும் செய்யாத என் தந்தையை என் கண்ணெதிரே துவம்சம் செய்ததே அந்தக் கொடூர மிருகம் அது சரி என்று சொல்கிறாயா? என்னைத் தனியே விட்டு விடு. உபதேசம் செய்வதை விட்டு விட்டு நீ போய்விடு. நான் பார்த்துக் கொள்கிறேன் அந்த மிருகத்தை. அதை என் கையினால் கொல்லும் நாள்தான் எனக்குத் தீபாவளி” என்று முடித்தான்.

துரையும் விடவில்லை. “ஆத்திரப்படாதே. நீயே சொல்கிறாய் அது மிருகம் என்று. அதற்குப் பகுத்தறிவு உண்டா. நல்லது, தீயது என பாகுபடுத்தத் தெரியுமா?” என துரை சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராமு, அவசரமாகத் துரையின் தலையைத் திருப்பி, “டேய் அதோ பார். அந்த மலைச் சரிவில் அந்தக் கொலை வெறி பிடித்த யானை தன் குட்டியோடு வந்து கொண்டிருக்கிறது பார். இன்று தாயும் சேயும் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. ஒரு உயிருக்கு இரட்டை உயிர்” என்று படபடப்பாகப் பேசியபடித் தயாராய் வைத்திருந்த துப்பாக்கியைக் கையிலெடுத்தான்.

யானை தன் துதிக்கையால் குட்டியை அணைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தது. மரத்தின் மறைவில் நின்று குறி பார்த்தான். இன்னும் சில அடி தூரம்தான். இதோ இதோ என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது குட்டி யானை அங்கிருந்த பெரிய பள்ளத்தில் விழுந்துவிட்டது. அவ்வளவுதான், தாய் யானை காடே அதிரும்படி பயங்கரமாக பிளிறியது. பள்ளத்தைச் சுற்றி சுற்றி வந்து தன் துதிக்கையைப் பள்ளத்திற்குள் நீட்டியது. பயனில்லை. யானையும் குட்டியும் போட்ட சப்தத்தைக் கேட்ட மற்ற யானைகள் அங்கே வர, சிறிது நேரத்தில் ஒரு யானைக் கூட்டமே பள்ளத்தைச் சுற்றி நின்றன. குட்டியை மேலே தூக்குவதற்காகத் துதிக்கையை பள்ளத்திற்குள் நீட்டி நீட்டிப் பார்த்தன.

மரத்தின் மறைவில் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராமுவும், துரையும் திகைத்துத்தான் போயினர். துன்பம் வந்தபோது துணையாக வந்த அந்த மிருகங்களைப் பார்த்து அதிசயித்து போனான் துரை.

தாய் யானையின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டிக் கொண்டிருக்க பள்ளத்தைச் சுற்றி சுற்றி வந்தது அது. மற்ற யானைகளும் அங்கேயே நின்று கொண்டுதானிருந்தன.

ராமு திடீரெனத் தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து குச்சியை உரசி காய்ந்த புல் தரையில் போட தீ மளமளவெனப் பரவியது. தீயைக் கண்ட யானைகள் பிளறிக் கொண்டே நாலா திசைகளிலும் ஓடின. தாய் யானையும் சிறிது தூரம் ஓடிய பின் பள்ளத்தைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தது.

"இப்படிச் செய்துவிட்டாயே, ராமு. பாவம் அந்தக் குட்டி" என்று துரை கோபமாய்க் கூற,

"துரை, என்னுடன் வா "என அவனை இழுத்தபடி மரம் அறுக்கும் இடத்திற்குச் சென்றான் ராமு, "இந்தப் பலகையைத் தூக்கு, துரை" என்று அறுத்த பலகையை ஒன்றைச் சுட்டிக் காட்டினான். இருவரும் சேர்ந்து அதனைத் தூக்கிக் கொண்டு பள்ளத்தை நோக்கி ஓடிய போது துரைக்குப் புரிந்து போயிற்று.

பள்ளத்திற்குள் பலகையை சாய்வாக நிறுத்தினர். கையோடு எடுத்து வந்த கயிற்றில் கண்ணி அமைத்து யானைக் குட்டியின் காலில் லாவகமாக வீசினான் ராமு. துரையின் உதவியுடன் பலகை வழியே குட்டி மேலே வருவதற்காக கயிற்றை இழுத்தான். யானைக் குட்டி சமர்த்தாகப் பலகையில் ஏறி மேலே வர, தாய் யானை ஓடி வந்து குட்டியை அணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் பெருக்கிற்று.

ராமுவின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது. இத்தனை ஆண்டாகக் கல்லாகிப் போன மனம் கரைந்து உருகிய நீரோ – அது. யானையையும், குட்டியையும் பரிவோடு தடவிக் கொடுத்தான் ராமு. யானை தன் துதிக்கையால் ராமு, துரை இருவரின் தலையைத் தொட்டது. நன்றியின் வெளிப்பாடு போலும்.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தன் குட்டியை அணைத்தபடி காட்டிற்குள் சென்றது யானை. தாயையும் சேயையும் பரிவோடு கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்ற ராமுவை அணைத்தபடி நிம்மதி பெருமூச்சு விட்டான் துரை.

***

About The Author