மூக்குத்திப்புல்

கரடுமுரடான பாதைதான்
கவலைப்படவில்லை
ஊன்றுகோல் மனிதன்!

காசி விஸ்வநாதன் குளியல் அறையில் வழுக்கி விழுந்தார்.

வயதாகி விட்டால் இப்படி எதாவது நேர்ந்து விடுகிறது. முன்னைப் போல இப்போது முடியவில்லை. அதிகாலையின் தளிர் வெளிச்சத்தில் கழியை முன்னே வீசி வீசி விறுவிறுப்பாக உலா போவார். ஊரெல்லாம் கடந்து, பசிய வயல்களை, காற்றை, பச்சென்ற வாசனையை, ஒருச்சாய்ந்த கதிர்களின் ஒயிலாட்டத்தையெல்லாம் ரசித்து அனுபவித்தபடி, மனசில் ராகம் மீட்ட ரயில் நிலையம் வரை நடை. ஸ்டேஷன் மாஸ்டரின் தோட்டத்து வீட்டில் சிறு தங்கல். ஆசுவாசம். வெயில் முற்ற வீடு திரும்புவார். அமாவாசை தாண்டி அலையடங்கினாற் போல, பாம்பு படத்தைக் கீழே போட்டாற் போல, எல்லாம் ஒடுங்கிப் போனது.

இரவானால் தூக்கம் வரவில்லை. மூளைக்குள் அடுக்கடுக்காய் நினைவுகள் மிதந்தன. ஓய்வேயில்லாத குழப்பமற்ற சிந்தனைத் தொடர். சில நாட்களில், கண்மூடிய பின்னும் சிந்தனைச் சங்கிலி. கண்ணயராமலேயே காலையில் எழுந்து கொள்கிறாற் போலிருக்கும். குடும்பப் பிரச்சிசனை, உடல் உபாதை, எதுவும் இல்லை. இது வயதாகிக் கொண்டிருப்பதின் அறிகுறிதான். இரா முழுக்க யோசனை குடைய, தானறியாமல் விடிகிற நேரம் கண்ணயர்கிறார். அந்நாட்களில் உலாவல் விட்டுப் போகிறது.

அடாடா, வெளிச்சம் வந்துட்டாப்ல இருக்குதே, என்று வெட்கப் பரபரப்புடன் எழுந்துகொண்டு பல் விளக்கப் போனவர் நிலை தடுமாறி, பதறி, பிடிகிடைக்குமா என்று துழாவி, டைல்ஸ் பதித்த தரை ஈரத்தில் வழுக்கி விழுந்தார். தோள்பட்டை எதன் மீதோ மோதி வலி பொறிதெறிரித்தது. கிர்ர்ரென்று சகலமும் தட்டாமாலை சுற்றினயது. மயக்கம் வந்தது. பேசாம அப்பிடியே படுத்துக் கிடப்பம், என்று கிடந்தார்.

ருக்மணிதான் சத்தம் கேட்டு ஓடிவந்தாள். அவர் கிடந்த கிடக்கையில் பதறி, "ஐயோ யாராச்சும் வாங்களேன்!"? என்று எதிர்வீட்டைப் பார்க்க அவள் ஓடியது கேட்டு வெட்கமாய் இருந்தது. இதுபற்றி ஒன்றும் செய்வதற்கில்லை. குறைந்தபட்சம் யாராவது வருமுன் சுயமாய் எழுந்து கொள்ள முடிந்தால் நல்லது., விடிந்தாலென்ன, அதற்குப் போய்ப் பதறுவானேன், என்று நினைத்துக் கொண்டார்., கண்மூடிய நிலையிலேயே இடக்கையால் காற்றில் தேடிப் பிடிமானம் கிடைக்கிறதா என்று பார்த்தார். வலக்கை தோளுக்கடியில் வகை தொகையில்லாமல் மாட்டிக் கொண்டிருந்தது. அசைக்க முடியாத வலி., எலும்பு பிசகியிருக்குமோ?. ச், இனி ஆஸ்பத்திரி, வைத்தியம் என்று கொள்ளையாய்க் காரியம் கிடக்கிறது.

எதிர்வீட்டு கிரியும் அவன் அப்பா வைத்தியும் வந்து "பாத்து… மெதுவா… " என்று தூக்கிவிட்ட போது சீண்டப்பட்ட பாம்பாய்த் தோளில் திரும்பவும் வலி சீறியது. காசி கண்மூடி பல்லைக் கடித்தார்.

எக்ஸ்ரே, மாவுக்கட்டு என்று சம்பிரதாயங்கள் துவங்கின. கையில் தூளி கட்டுவார்களா, தெரியவில்லை. பாவம் ருக்மணி!, ஒண்டியாளாய் ஒண்ணொண்ணுத்துக்கும் அவளே அலைய வேண்டி வந்தது… அருமையான மனைவி அவள்!. அவள் பெய் என்று சொன்னால் மழை கொட்டி முழக்கிவிடும். சட்டென்று உணர்ச்சித் தீவிரப்படுவதும், பயமும் கவலையுமாய்க் கடவுளைச் சரணடைவதும்… கொஞ்சம் ஆர்ப்பாட்டமாய் எதையும் அணுகும் சுபாவம்.

ஆஸ்பத்திரி வாசல் பிள்ளையாருக்கு நேர்த்தி, வேண்டுதல்கள் ஆரம்பித்திருக்கும். சந்தனக்காப்பு கொழுக்கட்டை என உத்திரவாதங்கள். திருமாங்கல்யப் பிச்சை… புன்னகை செய்துகொண்டார். இந்தத் தாலி சென்ட்டிமென்ட் நம்மூர்ப் பெண்களை என்னமாய்ப் படுத்துகிறது!…

முதல் மாடியில் அவருக்குத் தனியறை ஒதுக்கியிருந்தது. காற்றோட்டமான அறை. கிணற்றடியில் குளிக்க இறங்கிய பெண்பிள்ளை போல, ஜன்னல் கீழ்ப்பாதி திரைகட்டிக் கொண்டிருந்தது. எழுந்துபோய் வேடிக்கை பார்க்க முடிந்தால் நல்லது. எழுந்து கொள்ள முடியவில்லை.

தோள்பட்டையில் நல்ல வீக்கம். கை அசைக்க முடியவில்லை. "வேணாமே!, எதுக்கு இப்ப அசைக்கணும்? கொஞ்சநாள்ப் போவட்டும்" என்று புன்னகைக்கிறாள் டாக்டர் நிர்மலா. எல்லாத்துக்கும் அவளுக்குக் கூடவே சிறு சிரிப்பு, இலவச இணைப்பு போல. அவள் சிரிப்புக்கும் அவள் பேச்சு கேட்கவுமே அங்கே இருக்கலாம் போலிருந்தது.

வீக்கத்துக்கும் அதுக்கும் ரெண்டுநாள் காய்ச்சல். கண்மூடிக் கிடந்தாலும் கண்ணீர் திரண்டு கொதித்தது. சும்மா படுத்துக் கிடப்பதுதான் தாள முடியவில்லை. வீட்டிலானால் எதாவது வாசித்துக் கொண்டிருப்பார். காற்று வருகிற வசத்தில், வெளிச்ச வாகில் ஈசிசேரைப் போட்டுக் கொண்டு கண்ணாடியில்லாமல் வாசிப்பார். ஹைக்கூ ரசிகர் அவர். ஒருவரி வடிவம் நாக்கில் சட்டென்று ருசி தட்டச் செய்வதும், வேறுபல பொழுதுகளில் மனசில் மேலெழுவதும் அருமையான விஷயம்.

உதிர்ந்த இலைகளை
அழைத்துச் சென்றது
காற்று

டிஃபன்சிலிருந்து ஓய்வு பெற்று தனது கிராமத்தில் ஒதுங்கிக் கொண்டார் அவர். கேபிள் டி.வி-யில் உலகமே கையருகில் வந்துவிட்டது. ஸ்டார் பிளஸ்சில் அருமையான ஆங்கிலப் படங்கள், உலகளாவிய விளையாட்டுக்கள் என்று பார்ப்பார்.

கிராமம் சிரமமாய் இல்லை. அதன் எளிமை, சுத்தமான காற்று, பசிய வயல்வெளிகள், இயற்கை சார்ந்த ஒத்திசைந்த வாழ்வு, அவ்வப்போது நினைவில் எழும் ஹைக்கூக்கள். என வாழ்க்கை நிறைவாய் இருந்தது. எப்படியாயினும், வாழ்க்கை பற்றிச் சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது… வாழ்க்கையை வாழ்வதே பேரனுபவம் அல்லவா?

மின்விசிறி சுற்றிட
சுவரில் நடனமாடும்
ஒட்டடை!

நாலாம் நாள் முரளி ஓடோடி வந்துவிட்டான். கூட அவனது இளம் மனைவி, சிவப்பான கொழுகொழு ரோஷினி. மதுரை வரை விமானம், அங்கேயிருந்து கார் அமர்த்திக் கொண்டிருந்தான். "அப்பா! என்னாச்சிப்பா உங்களுக்கு? ஒண்ணில்லையே?".. என்று பரபரப்புடன் வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். அழுதுவிடுவான் போலிருந்தது. அவனைப் பார்த்து ரோஷினிக்கும் அழுகை வந்தது. அவருக்கு வேடிக்கையாய் இருந்தது… இந்தப் பெண்கள் அன்பு வெச்சிட்டா அதுக்கு அளவே கிடையாது., கிறுக்கு ஜென்மங்கள், என்று நினைத்துக் கொண்டார்.

"இவ அவசரப்பட்டு உனக்குத் தகவல் குடுத்திட்டாளா?.. எனக்கு ஒண்ணில்லடா கண்ணா!" என்று அவன் கையை இடது கையால் அழுத்திக் கொடுத்தபடி, சற்று நகர்ந்து ரோஷினிக்கும் உட்கார இடம் ஒதுக்கினார். "முன்னைக்கிப்ப பரவால்ல, தமிழ் நல்லாப் பேசற" என்று சிரித்தார்.

நல்லவேளை, நாலு நாள் கழித்து வந்தார்கள். ஆஸ்பத்திரியில் சேர்த்த கோலத்தில், பதறிப் போயிருப்பார்கள். மறு விமானத்தில் டெல்லிக்கு ஏற்றிக் கொண்டு போயிருப்பார்கள். அடித்த காய்ச்சல் தீவிரத்தில் என்னென்னமோ பினாத்திக் கொண்டு கிடந்திருக்கிறேன்… பயந்து போய்த்தான் இவள் தந்தி அடித்திருப்பாள்.

"போய் ரெஸ்ட் எடுத்துக்கங்கப்பா!, ரொம்ப தூரம் வந்திருக்கீங்க… சாயந்தரமா பேசிட்டிருக்கலாம் " என்று அவர்களை அனுப்பி வைத்தார்.

கை சரியாக இன்னும் பத்திருபது நாள் எடுக்கும் போலிருந்தது. ச், எல்லாம் சிறு கவனக்குறைவினால், என நினைக்க வருத்தமாய் இருந்தது. இப்படி சுகவீனமாய் ஆஸ்பத்திரியில் அவர் கிடந்ததே இல்லை.

மோகன்ராம் அருமையான மனுசன். அந்த ஊருக்கு அவரே ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் தருகிறவர், பரிசோதகர் எல்லாம். ஊருக்கு வெளியே ஒதுக்கி வைக்கப்பட்டாற் போல ரயிலடி. அதை ஒட்டிய குடியிருப்பு. தோட்டம் அடர்த்தியாய் நிழல் மூடிக்கிடக்கும். எந்தக் கோடைக்கும் வெயில் தெரியாத பூமி, "தினசரி என்னைப் பார்க்க வாக் வருவீங்க. இப்ப நான் உங்களைப் பார்க்க வரவேண்டியதாப் போச்சே". என்று சிரிக்கிறார் "எனிஹௌஹவ், விஷ் யூ எ ஸ்பீடி ரெகவரி!"…’

டாக்டர் நிர்மலா அந்த மருத்துவமனையை நிர்வகிக்கிற அழகே அலாதியானது. அவரது அறைக்குள் தினசரி புத்தம் புது மலர்களை மாற்றச் சொல்லியிருந்தாள். அழகான இளம் பூக்களைப் பாருங்கள். கண் திறக்கும் போதெல்லாம் பாருங்கள். சீக்கிரம் குணமடைந்து விடலாம். எத்தனை அழகாகப் பேசுகிறாள்!. வந்த சுருக்கில் கிளம்பிப் போய்விடுவாள் என்றாலும், அந்தச் சில நொடிகளில் ஒரு வாசனையை, பளீரென்ற புன்னகையை, அமைதியை அறையெங்கும் தூவி இறைத்துவிட்டுப் போய்விடுகிறாள்.

காய்ச்சல் அடங்க ஆரம்பித்திருந்தது. கைதான் புண் ஆறவில்லை. உள்ளூரற செமத்தியாய்ப் பட்டிருக்க வேண்டும். சின்னக் குழந்தையாட்டம் டாக்டரிடம், எனக்கு எப்ப குணமாகும், என்று கேட்கச் சங்கடமாய் உணர்ந்தார். அதைவிட அவளிடம் ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக் கொண்டிருக்கலாம். கவிதை பற்றி அவளோடு பேசவேண்டுமாய் ஆர்வம் எழுந்தது.

அரும்புகளே மலராதிருங்கள்
பறக்கட்டும்
பட்டாம்பூச்சி!

அவரைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் சின்னப் பெண். தாத்தா, தாத்தா, என்று அவள் அவரைக் கூப்பிடும் போதெல்லாம் என்னவோ போலிருந்தது. அவர் இன்னும் தாத்தா ஆகவில்லை. ஆனாலும் என்ன, பதவி ஓய்வு பெற்றுவிட்டேன். நான் தாத்தா அல்லாமல் வேறென்ன?..

தாத்தாதான் நான். அந்த வேகம், சுறுசுறுப்பு, ரிஃப்ளெக்ஸ் இனி என்னிடம் எப்படி இருக்கும்?. என்னிடம் இருப்பதாக என்னை நானே ஏமாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. வாழ்வில் இது ஒரு காலகட்டம். அடுத்த கட்டம். அதை நான் ஏற்றுக் கொள்வது நல்லது. அல்லாமல் வேறு மார்க்கமும் கிடையாது.

ஒரு வேளை நான் இனி பிறருக்குப் பாரமாக ஆகிவிடுவேனா… என முதல் முதலாய்க் கவலை வந்தது. எது குறித்தும் அவசரமாக, பதட்டமாக நினைக்கவும் கலவரப்படவும் வேண்டியதில்லை., தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறது. யாருக்கும் எந்த வயதிலும் வாழ்க்கை ஏராளமாய் மிச்சமிருக்கிறது.

அன்றைக்கு ராத்திரி அருமையாய் உறக்கம் வந்தது. துடைத்து வைத்த சிலேட் போல மனமெங்கும் தெளிவு. கனவுகளற்ற அழகான உறக்கம். இப்படித் தூங்கி எத்தனை காலமாயிற்று!. கண்ணை மூடிய கணம் இமைமீது உறக்கம் வண்ணத்துப் பூச்சியாய் வந்து உட்கார்ந்து கொண்டது. சிறு சிறகு விசிறல். தாயின் கர்ப்பப்பைக்குள் போல அமைதியாய், பாதுகாப்பாய் கதகதப்பான இருளில் கரைந்து கிடந்தார்.

அன்றிரவு மழை பெய்தது. சிறு மின்னல்கூட இல்லாமல் அமைதியாய் ஆரம்பித்தது மழை., தானறியாமல் விழிப்பு வந்தது. அபூர்வமான உறக்கம்!, அதைவிட அபூர்வமான விழிப்பு!, விழிப்பு அவரை வேறுலகத்துள் கொண்டுவந்து, கண்ணைத் திறந்துவிட்டாற்போல. வெளியேயிருந்து குளுமையான மண்வாசனை வர, மழை அறிகுறிகளை உள்மனம் குறித்துக் கொண்டாற் போல் கண்திறப்பு…

மனம் சலனமற்றுக் கிடந்தது. நிசப்தத்தில் நனைந்து முங்கிக் கிடந்தது மனம். உள்ளே ஆழ ஆழம் வரைப் பார்க்கும்படியான தெளிவோ தெளிவு. நிறைந்த நிலை அது. நிறைந்து, தளும்பாத நிலை.

நன்றாய் வியர்த்து காய்ச்சல் விட்டிருந்தது. உடலே லேசான மாதிரி, பலூனாகி விட்டாற் போலிருந்தது. மெல்ல எழுந்து கொள்ள முடியுமா என்று பார்த்தார். தலை லேசாய்க் கிறுகிறுத்தது. சமாளித்துக் கொண்டார். எப்படியும் அவர் எழுந்து கொள்ள வேண்டும். அருமையான மழையிரவு!. தூங்கி அதை வீணாக்குவதா?? கட்டிலோடு முடங்கிக் கிடப்பதா??

வலக் கையின் பாரத்தை அனுசரித்து, இயன்றவரை அசக்காமல் எழுந்து கொள்ள முடிந்தது! சந்தோஷம் ஊற்றைப் போலப் பீறிட்டது அவருள். எனக்கு எதுவுமில்லை. படுக்கை வாசம் இனி இல்லை. நான் எழுந்துகொண்டு விட்டேன். நிர்மலா, உனக்கு நன்றி.

நடக்க முடிகிறதா?… ஓ எஸ்!, என்ன சந்தேகம் உனக்கு அதில்?. மெல்ல, கவனமாய் ஜன்னலை நோக்கி நடந்தார். நிதானம்!, திரும்ப விழுந்து தொலைக்காதே!, புன்னகை செய்து கொண்டார். மழையின் சுருதி வலுத்திருந்தது. மழைக் கச்சேரி.

புடவையையே போர்த்திக் கொண்டு பெஞ்சில் ருக்மணி படுத்திருந்தாள். நாலைந்து நாளாய் அவளுக்குத் தூக்கமேயில்லை. இப்போது, இன்றைக்கு நான் தூங்குவதைப் பார்த்ததும், அவள் தூங்குகிறாள். பெண்கள் தியாகப் பிரும்மங்கள்தான்.

மணி என்ன, தெரியவில்லை. என்னவாயும் இருக்கட்டும். அழகான ஈர நிமிடங்கள்!. குளிர்ந்த பூமி. மண் நெகிழ்ந்த வாசனை. ஜன்னல் வழியே வெளியே பார்த்தார். வெளிச்சமும் இருளுமாய்த் தழுவிக் கிடந்தது வெளி. மருத்துவமனைக் கட்டட வளாகத்துள் தூங்குமூஞ்சி மரங்கள் சிலிர்த்து நின்றிருந்தன. அவற்றின் அசையும் உச்சி தெரிந்தது. குதிரைப் பிடரி போல உச்சிக் கொப்புகள் இலைமடிப்புகளுடன் ஒளி சிதற மினுமினுத்தன.

விழிப்பு வந்தது எத்தனை அழகான விஷயம்!. இரவில்தான் பூமி அழகாய் இருக்கிறது. பகலில் இந்த மனுசப் பயல்கள் நிசப்தத்தைக் கோரமாய்க் கீறிக் காயப்படுத்துகிறான்கள். முகத்தில் எச்சில் வழிய மௌனம் அழாக் குறையாய் முறையிட்டு நிற்கிறது. இரவு, நல்ல வேளை!, மானுடத்தின் கண்ணுக்கு மைதீட்டி, ஏமாற்றி, நிசப்தத்தை மீட்டெடுக்கிறது.

இந்த ஜப்பானியக் குள்ளப் பயல்கள்,. என்று நினைத்துக் கொண்டார். நவீன யுகத்தோடு கட்டிப் புரண்டு முட்டி மோதுகிறார்கள். போட்டி என்று அமெரிக்கா வரை வியாபாரத்தில் கை கலக்கிறார்கள். ஆனாலும் அவனு களுக்குள்ளே இன்னும் இயற்கை சார்ந்த பிரியம், ஆச்சரியம், வணக்கம்,. இன்னும் உலரவில்லை. ரசனை அடங்கவில்லை.

வாத்திய இசையைச்
சற்றே நிறுத்துங்கள்
வாசலில் மழை!

நிறைய ஹைக்கூ கவிதைகள், வாசித்த கணம் பெரிய அதிர்வு ஏற்படுத்தாமல் போனாலுங்கூட வேறொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத நேரம், அந்நேர உணர்வு அடிப்படையில், குபீரென்று உள்ளே வெளிச்சந் தருகின்றன. மத்தாப்பூ சிதறினாற்போல…

மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த முகூர்த்தத்தின் பவித்ரத்தை அப்படியே கண்மூடி உள்வாங்கிக் கொண்டார். பால் நினைந்து ஊட்டும் தாய்போல பூமிக்கு மடிதிறக்கிறது வானம். இளமையில் அவரும் ருக்மணியும் ஓர் இரவில் மொட்டை மாடியில் படுத்துக்கிடக்கிறார்கள். மழை… என்று பதறி வாரிச்சுருட்டி எழுந்துகொண்டாள் ருக்மணி. அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டார்.

"மழை நல்லாருக்கில்ல?"

"ம்."

"பின்னென்ன?"

"ஐய!, ஜலதோஷம் பிடிச்சிக்கப் போகுது. என்ன இது சின்னக் குழந்தையாட்டம்?"..’ என்று பிடி உருவிக் கொண்டாள்.

"குழந்தையா இருக்கறது வாழ்வின் அதிர்ஷ்டம் ருக்மணி" என்றார் காசி. "நாமதான் அடுத்த கணத்தை நினைச்சிக்கிட்டு இந்தக் கணத்தை நழுவ விட்டுர்றம்… கோவிலுக்குள்ள வந்துட்டபின் வாசல்ல விட்ட செருப்பை நினைச்சிக்கறாப்ல…"

தூங்கும் பெண்கள் அழகாய்த்தான் இருக்கிறார்கள். வாழ்வின் உக்கிரம் விலகிக் குழந்தையின் எளிமையாய், கனவின் பூவருடலின் மென்மை. அதுவும் அவளுக்கு முகத்தில் காலத்தின் எழுத்துக்களே கிடையாது. நாற்பதுக்கு மேல் வயது ஏறவேயில்லை. சில சமயம் அவளுடன் நடக்க அவருக்கே லஜ்ஜையாய் இருக்கும். மீசை எடுத்து, வீட்டிலானால் பனியன்கூட அணியாத தன் வயசும், இன்னும் பவுடரும் வாசனை எண்ணெயுமான, உள்ளாடை தவிர்க்காத ருக்மணியும்.. பார்த்த ஆணிடம் சிறு கிளர்ச்சி ஏற்படுத்துகிற கவனம்… புன்னகை செய்து கொண்டார். குனிந்து அவளை முத்தமிட… வேண்டாம்!, எழுந்து கொண்டால் வில்லங்கம். போங்க படுங்க, என்று முதுகில் தள்ளிப் போய்ப் படுக்க வைத்துவிட்டு மறுவேலை பார்ப்பாள்.

மரங்கள் குளிக்கின்றன. தாவரங்களுக்குள் மழை அற்புதங்கள் செய்யும். பூப்பெய்தியத பெண்ணின் மஞ்சக் குளிப்பு போல பருவத்தின் முதல் மழைக்குப் பயிர்கள் ஆர்வமாய் உயிர்க்குலை சிலிர்க்கக் காத்திருக்கும். மழை ஈரத்துடன் பச்சென்று கிளம்பும் தாவர வாசனை. இயற்கையின் வண்ணத்துடன் மழை அடர்த்தியாய்க் கலக்கிறது. கடும் பச்சையான, அந்தத் தூங்குமூஞ்சி மரத்தின் துவண்ட இலைகளைக் கிட்டத்தில் பார்க்க உந்துதல் பெற்றார்.

மழைக்குப் பின் பூமி சுறுசுறுக்கிறது. அதற்கென்றே காத்திருந்தாற்போல மறுநாளே பூரித்து நிற்கிறது. புற்கள் வாளுயர்த்திக் கம்பீரமாய் நால்ற்திசையும் பார்க்கின்றன. தவளைக் குஞ்சுகள், வெட்டுக் கிளிகள் என்று குஞ்சும் குளுவானுமாய் எத்தனை புதிய உயிர்கள் பிறப்பெடுக்கின்றன!.

ஆஸ்பத்திரி ஜன்னல் வழியே மழைத்துளிகள் சாய்ந்து விழுந்தன. ஜன்னல் கம்பியில் தெறித்து ஒரு துளி துள்ளி அவர் நெற்றியில் சிலீரென்று சேர்ந்தது. தவளைப் பாய்ச்சல். மழை அவரை விளையாட அழைத்தாற் போலிருந்தது. இயற்கை படபடவென்று என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தது. நான் புரிந்து கொள்வேனா… எனக்குப் புரியுமா, என்று தவித்தார்.

ஆஸ்பத்திரி வராண்டாவின் கடிக்கும் குளிரான கடும்பச்சை சிமென்டுத் தளத்தைக் கால்களால் அளைய விரும்பினார். மழை விட்ட காலைகளில் உலா போவது சுகம். மோகன்ராமின் தோட்ட வீட்டில் மழைக்குக் காத்திருப்பது பேரனுபவம்… பறவைகளும், மரத்துப் பிற ஜீவன்களுமாய், அடிப்பாகம் பெருத்த விருட்சத்தின் கீழே ஒருசேரக் காத்திருக்கிற உணர்வு விவரணைக்கு அப்பாற்பட்டது. மழை விடவும், சிறகு கோதி மீண்டும் உற்சாகமெடுக்கும் பட்சிகள். ஒலிக் கும்மாளம்!.

மனசுக்குள் சங்கீதம் புரண்டது. தமிழில் அல்லாமல் தெரியாத மொழியில் ஏதோ பாட்டு… பாட்டுகூட அல்ல, இசை மாத்திரமேயான மெட்டு. அடுத்த நிகழ்ச்சி சில நொடிகளில் தொடருமுன், வானொலியில் எதிர்பாராமல் கேட்கும் அழகான மெட்டு போல.

காய்ச்சல் இல்லை. மழை விடட்டும், என்றுற வெளியே செல்லக் காத்திருந்தார். என் பிரச்சிசனை அடைந்து கிடப்பதில்தான், என்று நினைத்துக் கொண்டார். லம்பாடியின் மார்போடு பால் குடித்தபடித் தூளியில் வரும் குழந்தையாய், என் கை தோளோடு கட்டிக் கிடக்கிறது. பரவாயில்லை, எப்படியும் நடந்தாக வேண்டும். இந்த அருமையான விடியலை வீணாக்க முடியாது. அதற்குமுன் இவள் எழுந்து கொள்ளாதிருக்கணுமே என்றிருந்தது.

உடம்பு சரியாய் இருந்திருந்தால், அப்போதே வெளியே கிளம்பியிருப்பேன். மழை, இரவு, தனிமை, நனைதல், தான் மாத்திரமேயான உலகில் திளைப்பது… நிர்மலாவையும் கூட அழைத்துக் கொள்ளலாம். அவளும் ஜலதோஷம் பற்றிக் கவலைப்படுவாளா?? நிர்மலா, மழையில் குளித்த புதுப்பூக்களைச் செடியில் பார்த்திருக்கிறாயா?.. ஹா!, உன்னைப் போலவே இருக்கும்… வா! நாம் மழையில் நனைந்தபடிக் கவிதை பரிமாறிக் கொள்ளலாம். உன் வாசனையை நான் கிட்டத்தில் முகர வேண்டும்.

அநாதையைத் தாலாட்டி
தூங்க வைத்தது
ரயில் படுக்கை!

மழை விட்டிருந்தது., என்றாலும் ஆச்சரியகரமாக, குளிர் குறையவில்லை. பரவாயில்லை. ஆகாவென்று எழுந்து கொண்டார். ஒரு விநாடி நின்று ருக்மணியைப் பார்த்தார். தூங்கு ருக்மணி!, உனக்கு அது தேவை;. எனக்கு இது தேவை.

நீளப் பரந்த வராந்தா காலியாய்க் கிடந்தது. குழல் விளக்கின் வெளிச்ச வெள்ளம் திகட்டியது. உடனே அதை அணைத்துவிட்டு, மெலிதான சல்லாத்துணி போல் விடிவிளக்கைப் பொருத்த வேகங் கொண்டார். இரவுகளை ஆபாசப் படுத்தாதீர்கள் மானுடரே!…

நர்ஸைக் காணோம்… தூங்கப் போய்விட்டாளா?… சிறு வேலையாய் வேறு நோயாளியைப் பார்க்கவோ, காபி அருந்தவோ போயிருக்கலாம். நல்லவேளை!. ஓய்வெடுங்கள் மானிடரே!. பகலில் நீங்கள் கிளப்பிச் சென்ற புழுதி அடங்கட்டும்.

மழை விட்ட இரவு உள்ளங்காலிலிருந்து உச்சிக்கு ஒரு குளிர்ச்சியை ஊடுருவ வைத்தது. பகலைவிட இரவுமழை வேறு மாதிரியானது. அழகுக்கு அழகு செய்தாற் போல… பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்து போகிற நண்பன் போல, இரவுமழை பூமியைப் பிரிகிறது. மீண்டும் சந்தித்துக் கொள்கிற நினைப்புடனேயே அவர்கள் பிரிகிறார்கள்.

கை அதிராத கவனத்துடன் நடந்தார். இப்போது அந்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல் இல்லை. நடை விட்டுப் போய், நடக்க ஏக்கமாகிவிட்டது… நாய்களும் உறங்கும் அமைதியான இரவு. மழை முடிந்த குளுமைக்கு உலகமே உறக்கத்தில் கட்டிக் கிடந்தது. அருந்தியான பின்னும் அடிநாக்கில் தொடரும் காபி ருசிபோல… மரங்களிடையே செல்கையில் காற்றின் குறும்பில் மழைத் தேங்கலின் சொட். அவருக்கு இயற்கையின் மொழியைக் கற்றுக் கொள்ள மீண்டும் ஆவேசமாய் இருந்தது. ஓயாது என்ன பேச்சு… அது புரியாமல் என்ன வாழ்க்கை!.

இயற்கை. அதன் விசித்திரம். அதன் பிரம்மாண்டம். அதன் அற்புதம். அதன் சிரிப்பு. சீற்றம். கோபம். அரவணைப்பு. என்ன பேச்சு!, என்ன பேச்சு!. வெயிலும் நிழலும், மழைமேகத்தின் முக மாற்றமுமாய், என்ன பாவனைகள்!…

கைத்தடி கொண்டுவரவில்லை. தேவையில்லை., நினைவை உதறினார். கைதான் சற்று… ஒரு சிரமமும் இல்லை. என்னால் முடியும். ஐயோ! இந்தப் பொழுது, இதன் ரம்மியத்தை அனுபவிக்காமல் நான், என் வலி, என் பிரச்சிசனை, என்று உளறிக் கொண்டிருக்கிறேன். கோவிலுக்கு வந்தபின் செருப்பை உதறு.

சிறு காற்று புறப்பட்டு உள்ளே ஜிலுஜிலுப்பாய் அளைந்தது. வாயைப் பிளந்து அந்தக் காற்றை உறிஞ்சிக் குடித்தார். இதுதான் எனக்கு மருந்து. என் ஆரோக்கியம் இதுதான்.. நடக்க நடக்க தூரம் தெரியவில்லை. எங்கிருந்தோ அவருள் தெம்பு ஊறியது. இயக்கப் பட்ட நிலை அது. இருள் விலக ஆரம்பித்துச் சுண்ணாம்பின் பால்வண்டல்.. இருளுக்குள் வெளிச்சம் மெல்லக் கம்பி கம்பியாய் ஊடுருவியது. அவருள் பூப்பூவாய்ச் சொரிய ஆரம்பித்தது.

மழை விட்டதற்கும் அதற்கும் குளிர் அடங்கவில்லை. வயல் வெளிகளில் முத்து முத்தாய்க் கதிர்கள்மேல் இலைத் தாள்கள்மேல் பனி மூக்குத்திகள். ஒரு ஸ்வெட்டர்… பரவாயில்லை. ஒரு வேளை ஜுரம், என்ற நினைவையும் தலை உதறி மறுத்துக் கொண்டார்.

வயலைத் தழுவிக் கிடந்தது இருள். தூரங்கள் மங்கிப் பனியில் கரைந்து கிடந்தன. குளிருக்கு வரப்பு கூசியது. ரப்பர் செருப்புக்கடியில் கரம்பைக் கற்கள் உறுத்தின.. நல்ல வேகமான நடைதான். எத்தனை நாளாயிற்று, என்று நினைத்துக் கொண்டார். பழக்கம் விட்டுப் போனதில் கால் சுணங்குகிறது. அவரது நடைவேகத்துக்கு ருக்மணி கூடநடக்கத் திகைப்பாள். இப்போது பலவீனமாய், மூச்சுத் திணறலாய்… இல்லை, இல்லை, காய்ச்சலில் இருந்து, நான் விடுபட்டு விட்டேன். எனக்கு ஒன்றுமில்லை.

தோட்டத்து வீடு எல்லைகள் மயங்கித் தெரிந்தது. உள்ளே போய் உட்கார உத்தேசங் கொண்டார். மோகன்ராமை எழுப்ப வேண்டாம். திடீரென்று என்னைப் பார்த்து, நீ நீயா, உன்னுடைய ஆவியா… என்பது போலக் குழம்பலாம்.

ரயில் நிலையம் கம்பு வேலிக்குள் கிடந்தது. சோம்பலாய்ச் சில விளக்குகள் அழுதுவடிந்து கொண்டிருந்தன. அவற்றின் வெளிச்சத்தில் தூக்கம் தெரிந்தது. திடீரென்று அவர் ரயிலடியில் போய் உட்கார முடிவு செய்தார். யாருமற்ற பிரம்மாண்ட வெளி. வெளி உலகமே மயங்கிக் கிடக்கிறது. அ, நான் மாத்திரமென்ன, தூக்கமும் விழிப்புமான கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். இயற்கையின் மொழியைப் புரிந்து கொள்ள யத்தனிக்கும் எளிய மாணவன் நான். என்முன் பிரம்மாண்டமான இயற்கை. பிரம்மாண்டமான தனிமை. நான் சமிக்ஞைகளுக்குக் காத்திருக்கிறேன்.

தண்டவாளப் பாதைக்கு இருமருங்கும் உயர நடைமேடை. காலி பெஞ்சுகளில் ஒன்றில் உட்கார்ந்து கொண்டார். அப்பா, என்று இருந்தது. கை வலித்தது. இத்தனை நேரம் இந்த வலியைச் சட்டை செய்யாமல் நடந்து வந்து சேர்ந்துவிட்டேன். வலி தெறித்தது உள்ளே. ரத்தம் கசிகிறதோ?. ச், அதைப் பற்றி என்ன??

அப்படியே மல்லாக்கப் படுத்துக் கொண்டார். பளீரென்று நீலமும் வெண்திட்டுக்களுமாய்ப் பரந்துகிடந்தது வானம். கடல் தன் முகம் பார்த்துக் கொள்ளும் வானம். உலகம் பெரியது, இயற்கை பெரியது. என்று மேலே பார்த்தால், ஆ!. இந்த ஆகாயம். எல்லையே அற்ற பெருவெளி. அதை அப்படியே கண்களால் அளக்கப் பசித்த குழந்தையின் ஆவேசத்துடன் முயன்றார்.

பனி விழுகிறது. எங்காவது ஒதுங்கிக் கொள்ளலாமா?. நிச்சயம் தடுமன் பிடிக்கும். ஜுரம் கூட வரலாம். பரவாயில்லை. அவர் வானத்தைப் பார்த்தார். அவர் கண்ணில், உயர உயரத்தில் பறந்து போகும் இரு நாரைகள் தெரிந்தன. வெளிர் நிறத்தில், பனி சூழ்ந்த மேகங்களூடே, எங்கே போகின்றன அவை?. எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டுக்குப் போகின்றன?. ஒரு ஜப்பானிய ஹைக்கூ மனசில் சிலிர்ப்பாய் எழுந்தது.

காலைப் பனியில்
காணாமல் போயின
வெள்ளை நாரைகள்

அடாடா!, இயற்கையோடு ஒன்று கலப்பதில் இதைவிட அருமையாய் எப்படி ஒரு உருவந்தர முடியும்!. முன்பு வாசித்த போது கிடைக்காத்தாத அர்த்த வீர்யத்தை இப்போது உணர்ந்தார். அப்படியே கண்மூடிக் கொண்டார். மனம் பூரித்து விம்மிக் கிடந்தது. அப்போதுதான் அவருள் திடுமென ஓர் உள்ளுணர்வு பொறிதட்டியது. ஆகா, என் சாவு வேளை வந்துவிட்டது!. ஆம்!, நான், சர்வ நிச்சயமாகச் சாகப் போகிறேன். மரணந் தழுவுதல், இயற்கை எய்துதல். தமிழில் எத்தனை அழகான வார்த்தைகள்!. பரவசமாய் இருந்தது!. காலைப் பனியே!, இந்த நாரைகள் போல், என்னை உன்னோடு இணைத்துக் கொள்!. மீண்டும் கண்ணை மூடிக் கொண்டார்.

விழிக் கோளம் முழுதும் வானத்தின் நீலம் நிறைந்தது.

(ஹைக்கூ கவிதைகள் : உதயகண்ணன்)

About The Author

1 Comment

  1. Vijayalakshmi Sivakumar

    காலைப் பனியில்
    காணாமல் போயின
    வெள்ளை நாரைகள்
    எத்தனை அழகான வார்த்தைகள்!.

Comments are closed.