மூர்த்தி, நான், மெட்றாஸ் ட்யூன்ஸ் மற்றும் சங்கரபாண்டி

2006 – ஐ.ஐ.டி வளாகத்தின் விடுதியிலிருந்து கிளம்பி லொங்கு லொங்கு என்று இரண்டு கி.மீ. நடந்து மெயின் ரோடு வந்தடைந்த ஆயிரம் நாட்களில் ஒரு இனிய நாள். சென்ற வார நினைவுகளை மனதில் ஓட்டிக் கொண்டே நடந்து வந்துகொண்டிருந்தேன்.

இயக்குனர் கே.பாலசந்தரின் விசிறிகளை ஒன்றிணைக்க ஒரு யாஹு குழுமத்தை நானும் என் நண்பர்களும் இணைந்து ஆரம்பித்திருந்தோம். அதன் மூலம், என்னுடைய உயிர்த்தோழன் ஸ்ரீராம் தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். அறிமுகம் என்றால் அவர்களையும் அதில் சேர வைத்தான், அவ்வளவுதான். முகம் தெரியாமல், வெகு நாட்களுக்கு கணினி மூலமே பேசிக் கொண்டிருந்தோம். நேரில் சந்தித்து பேசலாம் என்றால் அது நடக்கவே இல்லை.

ஸ்ரீராம் பெங்களூர் சென்றிருந்த சமயம், அவனுடைய தோழியின் பிறந்த நாள் வந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன், நானும் ஸ்ரீராமின் இன்னொரு தோழனும் சந்திக்க முடிவு செய்தோம். முன் பின் பார்த்தது கிடையாது, பேசியது கிடையாது. அடையார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒடிஸியில் பிறந்த நாள் பரிசு வாங்கலாம் என்று முடிவு செய்து, அக்கடை வாசலிலேயே சந்திக்கலாம் என்று ஃபோன் மூலம் பேசிக் கொண்டோம்.

முன்பு சொன்னது போல, இரண்டு – மூன்று கி.மீ பொடிநடையாக நடந்து ஒடிஸி வந்தடைந்து, திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தேன். என்னைப் போலவே இன்னொருவனும் பைக்கில் நின்று கொண்டு திருதிருவென்று விழித்தான். முதல் முறையாக மூர்த்தியைச் சந்தித்தது அப்பொழுதுதான். பரிசு வாங்கிவிட்டு, அருகில் இருந்த சங்கீதா ஹோட்டலுக்குச் சென்று நன்றாக கொட்டிக் கொண்டோம். அப்படி ஆரம்பித்ததுதான் எங்கள் உறவு. கே.பாலசந்தரைப் பற்றி நிறைய பேசுவோம். அவருடைய பிறந்த நாள் அன்று அவரது வீட்டுக்குச் செல்லவும் திட்டம் போட்டு, அதை சில நண்பர்களின் உதவியுடன் நிறைவேற்றவும் செய்தோம்.

முதல் சந்திப்பிலேயே மூர்த்தி ஆரம்பித்துவிட்டான், "என்ன மேட்டர்னு சொல்லு சங்கரபாண்டி" என்று என்னைக் கிண்டல் செய்வதை. ஐஐடியில் என் பெயர் சங்கர், பாண்டிச்சேரியில் இருந்து வந்தவன். புதுச்சேரியைச் சேர்ந்த யாரும் அவ்வூரை "பாண்டிச்சேரி" என்றோ "புதுச்சேரி" என்றோ அழைக்க மாட்டார்கள், ‘பாண்டி’தான்! அந்த வார்த்தைக்கு விடலைப் பருவத்தினரிடையே விவகாரமான, ‘இங்கு விளக்க முடியாத’ ஒரு அர்த்தம் உண்டு. அதனால், என்னை ‘சங்கரபாண்டி’ என்று கிண்டல் செய்வதில் அவர்களுக்கு அத்தனை கொண்டாட்டம். யார் வைத்த பெயர் அது – ஸ்ரீராம் தடியனாகத்தான் இருக்க வேண்டும். அவனால்தான், ஐஐடியையும் தாண்டி, எங்கெல்லாமோ அந்தப் பெயர் சென்றுவிட்டது!

சரி, என்னைப் பற்றிச் சொன்னது போதும். மூர்த்தியின் கதைக்கு வருவோம். அவனைச் சந்திப்பதற்கு முன்னரே, என் நண்பன் மூலம் மூர்த்தியைப் பற்றி நிறைய அறிந்திருந்தேன். நண்பர்கள் மத்தியில் அவனை என்னவெல்லாமோ ஓட்டியிருக்கின்றோம் – உருப்படாத கேஸ், கிறுக்கன், இங்கு சொல்ல முடியாத எப்படி எல்லாமோ! பிளஸ்-2 முடித்துவிட்டு காலேஜ் போக முடியாது என்று சொன்னவன் மூர்த்தி. ஏன்? அவன் வாழ்க்கையில் ஒரே குறிக்கோள் – சினிமாவில் இசையமைப்பாளராக வேண்டும்! அவன் ரத்தத்திலேயே அது ஊறியிருந்தது. ஸ்ரீராமின் பிறந்தநாள் அன்று, மூர்த்தியின் வீட்டில் பார்ட்டி வைத்தோம். கழுத்துவரை தண்ணி அடித்துவிட்டு அவன் இசையமைத்த மெட்டுகளைப் பாடுவான் – ஹப்பா! ஒரு துளி ஸ்ருதி பிசகல் இல்லாது அப்படிப் பாடுவது சுலபம் இல்லை.

Playing musicயார் இந்த மூர்த்தி? கார்த்திகேய மூர்த்தி – இந்தியாவின் தலை சிறந்த மிருதங்க வித்வான் சங்கீத கலாநிதி முனைவர் திரு டி.கே.மூர்த்தியின் பேரன், என்னுடைய அருமைத் தோழன். நிலாச்சாரலின் நிலாஷாப் டெலிஃபிலிம்ஸ் பகுதியில் இருக்கும் ஒரு நாடகம் – காத்தாடி ராமமூர்த்தியின் அப்புசாமியும், ஆஃப்ரிக்கா அழகியும் – இதற்கு இசையமைத்தது டீன்-ஏஜ் கார்த்திகேய மூர்த்தி. ஆல் இண்டியா ரேடியோவில் இசையமைப்பாளராக பணிபுரியும் தன் தந்தை திரு.டி.கே.ஜெயராமனுடன் இணைந்து அச்சிறுவயதிலேயே ஒரு கலக்கு கலக்கியிருந்தான். ஆனால், ஏனோ அவனால் சினிமாவிற்கு இசையமைக்க மட்டும் முடியவில்லை.

தான் எடுத்த முயற்சிகளையும், வந்த சோதனைகளையும் அவன் சொல்லிக் கேட்டால், மனம் நெகிழ்ந்து கண்ணீர் வருவதுதான் மிச்சமாகும். ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, கோடி முறை இது போல் நடந்திருக்கிறது. வாய்ப்பு ஒன்று வரும், வந்துவிட்டது போலவே தோன்றும், கடைசியில் நழுவிவிடும். எனக்கும் பாடுவதில், இசையமைப்பதில் எல்லாம் ஈடுபாடு உண்டு. அதனால் எங்களுக்கிடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. இரவெல்லாம் கூத்து, பகலெல்லாம் ஊர் சுற்றுவது என்று காலம் சென்றது.

ஒரு முறை, பைக் எடுத்துக் கொண்டு, நாங்கள் எல்லோரும் ஈ.ஸி.ஆர் ரோடில் பயணம் செல்ல, திடீரென்று என்னிடம் ஸ்ரீராம் சொன்னான், "மூர்த்தி, உன் பேர வைச்சு ஒரு பாட்டே போட்டுருக்கான் தெரியுமா?!" அவ்வளவுதான்! மூர்த்தி பாட ஆரம்பித்துவிட்டான் – சங்கரபாண்டி பாடலை. ம்யூஸிக் கிடையாது, வாத்தியங்கள் கிடையாது, வெறும் மூர்த்திதான். அப்பாடலின் முதல் பிரதியைக் கேட்ட பாக்கியம் எங்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால், ஒரு விஷயம் சொன்னேனோ, என்னை அப்படி கிண்டல் செய்தால் எனக்குப் பிடிக்காது. அவன் அதைப் பாடினாலும், எரிச்சல்தான் மிஞ்சும். அவனைத் திட்டி அடித்து… அந்த கால நிகழ்வுகளை நினைத்தால் என்றைக்குமே இனிக்கும்!

With rahmanஅவன் இசையமைத்த பாடல்களை விரும்பிக் கேட்பேன். அற்புதமான மெலடிகள், ரஹ்மானிடமிருந்து (மூர்த்தியின் அறையில் இருக்கும் சுவர் முழுவதும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படங்கள்தான்!) மானசீகமாகக் கற்றுக்கொண்ட சில மிக்ஸிங் நுணுக்கங்களை வைத்து கலக்குவான். சந்தடி சாக்கில், அவனுடைய சங்கரபாண்டி பாடலுக்கும் ரீ-ரெகார்டிங் செய்துவிட்டான். அப்பாடலை என் தோழி ஒருத்தியிடம் கேட்கச் சொன்னேன். அவளோ, "ஓ, இது ரொம்ப நன்னாருக்கு! சூப்பர் சாங்" என்று சொல்லிவிட்டாள்.

ஜூன் 24, 2007. மேல் படிப்பிற்காக நான் அமெரிக்கா கிளம்பிய தினத்தன்று கூட நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் காஃபி டேவை கதிகலங்க வைத்துவிட்டோம். இன்னோரு தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டம், மூர்த்தியின் பாடல் என்று கடைக்காரர்கள் பயந்தே போனார்கள். எல்லோரும் சேர்ந்து நெகிழ வைக்கும் பிரியா விடை ஒன்றையே தந்தார்கள்.

நான் இங்கு வந்து சில தினங்களில், "ஊ லா!லா!லா!" என்றொரு நிகழ்ச்சிக்காக விஜய் டி.வி. விளம்பரம் செய்தது. அதே சமயத்தில், மூர்த்தி தன்னுடைய இசைக்குழு "மெட்றாஸ் ட்யூன்ஸ்"ஐ அமைப்பதில் மும்முரமாக இறங்கினான். ஊ, லா லா லா நிகழ்ச்சியில் மெட்றாஸ் ட்யூன்ஸ் பங்கேற்றது. இணையம் மூலமாகவோ, ஃபோன் மூலமாகவோ நான் அடிக்கடி அவனிடம் பேசுவேன். "மச்சான், ரஹ்மான் பார்த்தேன்டா!", "சங்கரபாண்டி, பாட்டு சூப்பர் ஹிட் டா!" – என்று குதூகலத்துடன் பேசுவான்.

சினிமா என்று கவனம் செலுத்தாமல், கிடைக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டான். யமஹா தன் புது பைக் R15ஐ ரிலீஸ் செய்த விழாவில் மெட்றாஸ் ட்யூன்ஸ் கலக்கியது. அதனோடு, ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில் தன்னுடைய ‘சங்கரபாண்டி’ பாடலை ரெகார்ட் செய்வதற்கான சந்தர்ப்பமும் கிடைத்தது. அந்நாட்களில் அவனிடம் பேசும்பொழுது ஃபோனிலேயே மூர்த்தி குதிப்பான் – "ரஹ்மான் ஸ்டூடியோடா!", "என்னையே சங்கரபாண்டின்னுதான் ரஹ்மான் கூப்பிடறாரு!" இத்தனை வருடங்கள் உழைத்ததற்கு கிடைத்த லாபங்களை எண்ணி நாங்கள் சந்தோஷப்பட துவங்கிய காலம் அது.

ஜூலை ஒன்பதாம் தேதி அன்று சங்கீத கலாநிதி முனைவர் டி.கே.மூர்த்தியின் எழுபத்தைந்து வருட கர்னாடக சங்கீதப் பயணத்தை கௌரவிக்கும் வகையில், ம்யூசிக் அகாடமியில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜாகிர் ஹுஸைன், டி.என்.சேஷகோபாலன், விக்கு விநாயக்ராம், டி.எம்.கிருஷ்ணா, பாடகர் ஹரிஹரன், மேண்டலின் ஸ்ரீனிவாஸ், பியானோ ஸ்டீஃபன் போன்ற பல பிரபலங்களின் முன்னிலையில் மெட்றாஸ் ட்யூன்ஸ் தன் திறமைகளை மேடையேற்றியது. குறிப்பாக, குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் அடையும் வெற்றியைப் பற்றி அவர்கள் அமைத்த ‘இசை ஒடிஸி’ பெரும் பாராட்டைப் பெற்றது.

இதற்கிடையில் மூர்த்திக்கும் மெட்றாஸ் ட்யூன்ஸ் இசைக் குழுவிற்கும் பல வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன. அவற்றைப் பற்றி எல்லாம் விவரமாகச் சொன்னால், அமெரிக்கா வந்து என்னைக் கொன்றுவிடுவான் மூர்த்தி – அதனால் மூச்ச்ச்!

oh..la..la.la

ஊ… லாலா நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களின் பாடல்களின் தொகுப்பை ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதியன்று ஏ.ஆர்.ரஹ்மானின் தலைமையில் மெட்றாஸ் சி.டி. செண்டரில் வைத்து SaReGaMa நிறுவனத்தினர் இசைக் குறுந்தட்டாக வெளியிட்டனர். மெட்றாஸ் ட்யூன்ஸின் "சங்கரபாண்டி" பாடலும் இத்தட்டில் இடம்பெற்றிருக்கிறது. எனக்குத் தெரிந்த மூர்த்தி, "கார்த்திக் ஐயர்" ஆக பிரபலமடைந்துவிட்டான். அவன் வித்திட்டு உருவாக்கிய மெட்றாஸ் ட்யூன்ஸ் பாண்டும் பிரபலமடைந்துவிட்டது. மெட்றாஸ் ட்யூன்ஸ் இசைக்குழு கார்த்திக் ஐயர், விஜய், ஸ்ரீஹரி, ராஜா, ஹரிணி ராகவன், ஹரிணி ராமகிருஷ்ணன், ஸிமி, சௌம்யா என்று நீளும் இளைஞர் பட்டாளமாகத் திகழ்கிறது.

இத்தனை வருடங்களாக என்னை வாட்டும் விஷயம் என்னவென்றால் – மூர்த்தியின் பல அற்புதமான மெட்டுகளும் மெலடிகளும் இன்னும் மக்களைச் சென்று அடையவில்லை என்பதே. முதன் முதலில் அவன் வீட்டுக்கு சென்ற பொழுதில், அவன் எனக்கு பாடிய மெட்டுக்கள் இன்னும் என் நெஞ்சத்தில் அழியாமல் நிற்கின்றன. தன்னுடைய முதல் தனி இசை ஆல்பத்தை கூடிய சீக்கிரத்தில் வெளியிடுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்தப் பாடல்கள் அவ்விசைத் தொகுப்பில் இடம்பெறுகின்றனவா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்று இரவு அவனுக்கு ஃபோன் செய்ய வேண்டும். அவனுடைய ஆல்பம் எப்படி இருக்கின்றதென்று கேட்கவேண்டும். நான் கூட ஒரு சின்ன நாடகத்திற்கு கதை வசனம் எழுதி அவனை இசையமைக்கச் சொல்லியிருந்தேன். அதைப் பற்றி எல்லாம் யோசித்தானா என்று கேட்க வேண்டும். அவனோ ஃபோனை எடுத்தவுடன், "சொல்லுடா சங்கரபாண்டி" என்பான். இத்தனை நடந்த பிறகும், நான் கடுப்பாகி, "ச்சே, வாயை மூடு!" என்பேன்!!

About The Author