வலது கன்னத்து மச்சம்

வாழ்க்கையிலே ஒவ்வொருத்தருக்கும் ஒரு கவலை. இதற்கு விதிவிலக்கே யாரும் கிடையாது போலிருக்கிறது.

இந்தச் செல்வம் இருக்கிறானே செல்வம், இவனுக்கு என்ன இருக்கிறது கவலைப்படுவதற்கு? பிரம்மச்சாரி; கொழுத்த சம்பளம்; இஷ்டப்படி செலவு செய்யலாம்; கேள்வி கேட்பார், அண்டுவார் அடக்குவார், யாரும் கிடையாது. இவனுக்கும் ஒரு கவலை.

"வலது கன்னத்தில் நடு மத்தியிலே சீரான வட்டமாகக் கால் ரூபாய் அளவுக்கு இருக்கிற அந்தக் கறுப்பு மச்சம் உன் சிவப்பு நிறத்துக்கு அழகாகத்தான் இருக்கிறது" என்று சொன்னால் கேட்டால்தானே?

அதைப்பற்றி பேசும் போதே அவன் கண்களைச் சுற்றி அழாத குறையாக ஓர் ஏக்கம்! குரலில் ஒரு கம்மல். எப்பொழுது பார்த்தாலும் அந்த மச்ச வட்டத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் விரல்!
பண்டிதர் களிம்பிலிருந்து பிளாஸ்டிக் சர்ஜரி வரை முயன்று விசாரித்துப் பார்த்து, முடியாது என்று தீர்ந்து போன அன்று அவன் அழுதிருக்கிற அழுகை…!

அன்று ஞாயிற்றுக்கிழமை. திருச்சி தெப்பக் குளக்கரை ஒரு மினியேச்சர் ஹை-பார்க். கை ரேகை நிபுணர்கள், பழைய புத்தகக்காரர்கள் (எதை எடுத்தாலும் எட்டணா, நாலணா!) பல் வைத்தியர்கள், ஒரு வாரத்தில் உடம்பு வீரியத்தை அதிகரிக்க வைக்கும் தாது புஷ்டி லேகிய விற்பனையாளர்கள் – இப்படித் தனித்தனிக் கும்பல்கள்.

நானும் செல்வமும் நின்று கொண்டிருந்த கூட்டம் மெஸ்மரிஸ்ட் –
ஹிப்னாட்டிஸ்ட் ப்ரொபஸர் (போர்டில் போட்டிருந்தது) சிவப்பிரகாசத்தினுடையது. வீடு வாங்க, விட்டை விற்க, நிலம் வாங்க, நிலம் விற்க, காதல், விவாகம், உத்தியோகம், பிரமோஷன், தனலாபம், காணாமல் போன பொருள்களைக் கண்டுபிடிக்க, தீராத ரோகங்களை நீக்க, மறிக்க – எல்லாவற்றிலும் ஆலோசனை தர – உதவ – வல்லவராம் புரொபஸர்.

நாங்கள் கூட்டத்துக்குப் போயிருந்த சமயம், அவர் ஓர் இளம் பெண்ணை (அவர் பெண்தான். பெயர் லோச்சி – பின்னர் தெரிந்தது.) ஈஸி சேரில் கிடத்தி உடல் முழுவதம் போர்த்தியிருந்தார் – (ஈஸி சேரிலிருந்து தொங்கிய சிவந்த பாதங்களையும் சேலைக் கரையையும் தவிர) "வா இந்தப் பக்கம்…"

"வந்தேன்."

"கேட்டால் பதில் சொல்லுவாயா?"

"சொல்லுவேன்."

"எதன் சக்தியால் — ?"

"என் மீதிருக்கும் தாயத்தின் சக்தியால்…"

தெருவில் போகிற கார் நம்பர், கூட்டத்தில் இருவரின் சிலாக் சட்டைக் கவர் பையில் இருக்கிற ரூபாய் நோட்டின் நம்பர் – இவற்றையெல்லாம் பிரமிக்கத்தக்க வகையில் சொல்லிக் கொண்டருந்தாள் அந்தப் பெண்.

"நேரமாயிற்று, போகலாம்," என்றால் "இருடா" என்று நிறுத்தி வைத்தான் செல்வம். எட்டணா கொடுத்துத் தாயத்தையும் வாங்கிக் கொண்டான்.

தாயத்து விற்பனை முடிந்தது. பெண் மயக்கம் தெளிந்து எழுந்தாள்.

பிரமிக்கத்தக்க வித்தைகள் தொடர்ந்தன. ஒரு நயா பைசாக்காசு கால் ரூபாயாக மாறியது. ஒரு சின்ன பொம்மையைக் கண்ணெதிரிலேயே ஒரு கர்ச்சீப்பாக்கிக் காட்டினார் புரொபஸர். பக்கத்து ஹோட்டலில் அப்போதுதான் கண்ணெதிரில் வாங்கிவந்த இட்டிலி, கண்முன் பாம்பும், தேளும் புழுவுமாக நெளிந்தது! அதைவிட – அந்தப் பெண்ணை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவைத்து, அவளது நாக்கைக் கூட்டத்தில் ஒருவரைவிட்டே நறுக்கச் செய்து, கூட்டத்தின் எதிரிலேயே அதை ஒட்ட வைத்தது, பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது. நல்ல கைதட்டல், நல்ல வசூல்.
கூட்டம் கலைந்தது. புறப்படக் கிளம்பிய என்னை செல்வம் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.

மணி எட்டு.

விட்டு விட்டு எரிந்த மங்கிய ட்யூப் லைட்டுகளின் வெளிச்சத்தில் நின்றிருந்தது நாங்கள் நாலே பேர்தான்.

நானும் செல்வமும் – கன்னத்திலிருந்த அந்தக் கறுப்பு மச்சத்தைத் தடவியபடி.
புரொபஸரும் அவர் மகளும்.

நெற்றியிலிருந்து மேல் தூக்கிக் கோதி விடப்பட்டிருந்த தலைமயிர், அகலமான நெற்றியில் பச்சை குத்தப்பட்டிருந்த பொட்டு, அந்தக் கண்கள் – பில்லி சூனியம் மெஸ்மரிஸக்காரர்களுக்கே உரிய தீட்சண்யக் கண்கள். சல்லிசு விலை பிரேம் போட்ட கண்ணாடிக்குள்ளேயிருந்து ஓரம் வழியாக ஊடுருவிப் பார்த்த கண்கள், பயங்கரத்தைக் கூட்டிப் புதர் போன்று அடர்த்தியாகக் கூடியிருந்த புருவங்கள், அவ்வளவாக ரசிக்க முடியாத ஒரு நகைச்சுவை உணர்வைக் காட்டிச் சுழித்த உதடுகள் – இதுதான் புரொபஸர்.

அடர்ந்த கூந்தல், கசங்கிய உடை, கறுப்பு உடம்பு; கவர்ச்சி முகம் – ஏனோ கலங்கிய கண்கள் கொண்ட ‘லோச்சி – புரொபஸரின் மகள்’.

கன்னத்திலிருந்த கறுப்பு மச்சத்தைக் காட்டி அதை எடுத்துவிட முடியுமா என்று கேட்டதற்கு "கண்டிப்பாக முடியும். ஒரு மண்டலம் தொடர்ந்து என் வீட்டுக்கு வந்தால் எடுத்து விடுகிறேன்" என்று சொன்னார்.

செல்வத்தின் முகத்திலேதான் எத்தனை மகிழ்ச்சி!

காலையில் அவருக்கு நேரமிருக்காதாம். தினம் இரவு எட்டரை மணிக்கு மேல் வரச் சொன்னார்.
செல்வத்துக்கு அவசரம். இன்றைக்கே சிகிச்சையைத் தொடங்க வேண்டுமாம்! இன்றிரவே, சாப்பிட்டுவிட்டு பத்து மணிக்கும் வந்து விடுகிறானாம்!

"டேய் செல்வம்! படித்துப் பட்டம் பெற்றவன் நீ. பிளாஸ்டிக் ஸர்ஜரியில் முடியாததை இந்தத் தெப்பக்குளத்தடி மாந்திரீகனா செய்யப் போகிறான்! முட்டாள்!" – நான் சொல்வதை எல்லாம் அவன் கேட்டால்தானே?

இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புரொபஸர் குறித்துக் கொடுத்த அவரது இருப்பிடத்தை நோக்கி நடந்தோம்.

நடந்தோம் – நடந்தோம் இனந் தெரியாத ஒரு பீதி முதுகுத் தண்டு வழியாக ஊடுருவிப்போக –
நிறந் தெரியா, அசரீரிப் பறவைகளின் ‘சர்ப்’பொலிகள் அந்த மௌனத்துக்கு விசுவரூபம் கொடுக்க –
நாங்கள் நடந்தோம் – கெட்டியாக ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டபடி – அதோ ‘மினுக் மினுக்’கென்று எரிகிறதே அதுதான் புரொபஸரின் குடிசை. அவர் படம் வரைந்து காட்டியபடியே இருக்கிறது.

குடிசைக்குள்ளே தயங்கித் தயங்கிக் காலை வைக்கிறோம். வெளியே வெறும் இருட்டு என்றால் குடிசைக்குள்ளே கும்மிருட்டு.

"புரொபஸர்….!"

எங்கள் குரலுக்கு எதிரொலி போல, இருட்டில் பழகினாற்போலச் சிறிதும் மாறாமல் வந்த பாத ஒலிகள்! – லோச்சி!

அந்த இருட்டின் பின்னணியிலேயே அவள் என்னமாய்த் தெரிகிறாள்! மயங்கி நின்றுவிட்டான் செல்வம்; நானும்தான்.

"அப்பா பூஜை போடப் போய்விட்டார்; பரவாயில்லை. நீங்கள் வாருங்கள்."
தயங்கினோம்.

மாயச் சிரிப்புச் சிரித்தாள் லோச்சி. "அதெல்லாம் எங்கள் பாட்டிக்குத் தெரியும். உள்ளே வாருங்கள்" என்று நிதானமாக உள்ளே இட்டுச் சென்றாள் லோச்சி.

அங்கே – நாலைந்து மண்டை ஓடுகள்; எலும்புத் துண்டங்கள்; டப்பா டப்பாவாகக் கறுப்புக் களிம்புகள்; குறுக்கும் நெடுக்குமாக ஓடிய ஓர் அணில், நீளநீளக் கயிறுகள் – இவற்றுக்கு நடுவே – அந்தக் கண்கள்; பார்த்தவுடன் ‘வீல்’ என்று அலற வைக்கும் அந்தக் கண்கள்; பளிச்சென்று இருட்டிலே வைரம் போல மின்னிற்று ரேடியம் கண்கள்! அந்தக் கண்களுக்கு உரிய ஒரு கோரக் கிழ உருவம் இருட்டிலே மெல்ல மெல்லப் புலனாகியது.

"மச்சத்தை எடுக்கணும்னு வந்திருக்கிறது நீதானாப்பா…? எடுத்திடலாம்; கவலைப்படாதே….!" என்று நடுக்கி நடுக்கி அந்த உருவம் சொன்னதே நடுக்கம் தந்தது. அந்தக் கிழவிக்குத்தான் எவ்வளவு நீள நீல நகங்கள்!

ஒரு கறுப்புக் களிம்பைக் கொடுத்துக் கன்னத்தில் தடவிக் கொள்ளச் சொன்னாள் கிழவி. இன்னும் நாற்பத்தேழு நாட்கள் தினம் வந்து மந்திரித்துச் சாம்பலை இட்டுக்கொண்டு ஏதோ திரவத்தைக் குடிக்க வேண்டுமாம்!

‘தப்பித்தோம்; பிழைத்தோம்’ என்று அந்த இடத்தை விட்டு ஓடிவந்தேன்.

"டேய், செல்வம்! அந்த மச்சம் பாட்டுக்கு இருந்துவிட்டுப் போகிறது. இந்த விஷப்பரீட்சையெல்லாம் வேண்டாம்" என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சினேன். கேட்டால்தானே?

ஒரு வாரம் ஆயிற்று. செல்வம் அங்கு போய்வந்து கொண்டிருந்தான். மச்சம் குறைய – கரையவில்லையே தவிர, அவன் முன் மாதிரி சோகமாக இல்லாமல் கலகலப்பாக இருந்தான்.
ரகசியமாகச் சொன்னான். லோச்சியும் அவனும் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்கிவிட்டார்களாம்! அடப் பாவி! உன் அந்தஸ்து என்ன? புரொபஸருக்குத் தெரிந்தால்…
அதைப்பற்றி எல்லாம் அவர்கள் லட்சியம் செய்யவில்லையாம்.

புரொபசரின் சம்மதம் கிடைக்காவிட்டால், இருவரும் ஓடிவிடுவது என்று கூடத் தீர்மானித்துவிட்டார்களாம்!

ஒருநாள் முக்கால் மணி நேரம் அவனை உட்கார்த்தி வைத்து ‘அட்வைஸ்’ கொடுத்தேன். முடிவு? எங்கள் நட்பில் முறிவு.

தணிக்கை இலாகாவில் எனக்குக் கூடுதல் சம்பளத்தில் வேலை கிடைத்தது; போய்விட்டேன், திருச்சிக்கே தலை முழுகிவிட்டு.

செல்வத்தைத் தவிர, பழைய நண்பர்களிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருந்தது. ஒரு கடிதம் பேரிடியான தகவலைத் தந்தது. செல்வம் ஆள் எங்கோ காணாமல் போய்விட்டானாம்! பத்து நாளாகிறதாம்; போலீஸ், ரேடியோ, பத்திரிக்கை எல்லா முயற்சிகளும் வீணாகிவிட்டதாம்!
எனக்குப் புரிந்தது. அவன் எங்கோ ஓடிவிட்டான் அந்த லோச்சியுடன் என்பது! மற்றவர்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாது. பழகின தோஷம், ஒரு நாள் பூரா என் மனசே சரியில்லை; பிறகு ஏறத்தாழ அவனை நான் மறந்தோ போய்விட்டேன்!

சென்ற வாரம் தணிக்கைக்காக மதுரை போயிருந்தேன். மதுரை பஸ் ஸ்டாண்டில் ஒரு கோடியிலே – ‘வீடு வாங்க – வீடு விற்க; நிலம், வாங்க – நிலம் விற்க,’ என்ற பரிச்சயமான குரல் கேட்கவே –
கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். ‘புரொபஸர்’தான்! விழியிலே கொடுமை ஏறியிருந்தது.

லோச்சிதான் ஓடிவிட்டாளே, கூட இருக்கிற பெண் யார்? ஆவலோடு பார்த்த எனக்கு ஆச்சிரயம் காத்திருந்தது. லோச்சியே நிற்கிறாள்! அப்படியானால் – அவள் ஓடிப் போகவில்லை?

என்னை லோச்சி கவனித்து விட்டாள்! மருண்டுபோன விழியோடு, அங்குமிங்கும் பார்த்தபடி, கை கூப்பி என்னிடம் ‘போய்விடுங்கள்; போய்விடுங்கள்’ என்று சாடை காட்டினாள்.

புரொபஸர் கூட்டத்திலே ஏதோ லெக்சர் அடித்துக் கொண்டிருந்தார். லோச்சியின் பார்வையில் ஓர் ஏக்கமும், பரிதாபமும் ஒரு திகிலும் இருந்தன.

புரொபஸர் தமது சாமான்களை வைத்துக் கொண்டிருந்த மறைவிடத்திலிருந்து ஒரு சிவப்பு நாய்க்குட்டி ஓடி வந்து லோச்சியையே சுற்றிச் சுற்றி நின்றது. என்னைப் பார்த்து அவசரமாகப் போகும்படி சாடை காட்டினாள் லோச்சி. ஏன் அவள் கண்களில் நீர்….?

"உம், உஸ்ஸ்…" என்று மோப்பம் பிடித்தபடி ஓடி வந்தது அந்த நாய். பின்னங்கால்களால் நின்றபடி என்னைப் பிடித்தது. எனக்கு ஓர் அச்சம்: அருவருப்பு – ஓடத் தொடங்கினேன்.

நாயைப் பிடித்தாள் லோச்சி.

திரும்பு ஒரு பார்வை பார்த்து விட்டு ஓடினேன் – அப்போது நன்றாகத் தெரிந்தது – அந்த நாயின் முகத்திலே –

வலது பக்கத்திலே –

கால் ரூபாய் அகலத்துக்கு –

ஒரு

கறுப்பு

மச்சம்!

About The Author