வலி… வழி… (2)

அன்று 11.9.2001.

காலையில், ரகு நான்கு வயதே ஆன மூன்று குழந்தைகளுடன் விளையாடிய மகிழ்ச்சியில் "குமு, ஆபிஸ் போகவே மனசில்லை….." என்றான்.

"குமு, மாமா சின்னக் குழந்தை ஆகிவிட்டார். ஆபிஸுக்கு போகாம அடம் பிடிக்கிறார்…." கமலினி கேலி செய்தாள்.

"லீவு போட ஆசையா இருந்தாலும் ஏக கமிட்மென்ட்ஸ்.. போயே ஆகணும்…."

அவன் சென்று அரைமணிக்கு உலகமே அதிர்ந்த அந்த செய்தி வந்தது, ந்யூயார்க் நகர இரட்டைக் கோபுரங்கள் விமானங்கள் மோதி தகர்க்கப்பட்டன என்று. குமுதினி செய்தி கேட்டு மயக்கமானாள்; அவள் தலையில் இடியே இறங்கிவிட்டது.

****

இதோ ஏழு வருடங்கள் கடந்துவிட்டன. ஷ்யாமா பல விஷயங்களை தன் போக்கில் தெரிந்து கொண்டாள். ஒரு வருடமாக அப்பா, அம்மா, சகோதரிகளைப் பார்க்கும் ஆர்வத்தை வெளியிட்டாள். இனியும் அவள் விருப்பத்தை ஆறப் போடுவது நியாயம் இல்லை என குமுதினி உணர்ந்தாள். கமலினியும் அவர்கள் இந்தியாவில் தங்கி விடுவதே சிலாக்கியம் என வற்புறுத்தினாள்.

ஷ்யாமாவும் இந்தியாவில் தொடர்ந்து இருக்க ஆர்வம் காட்டினாள். ஏனோ ஏதோ ஒன்றை இழக்கப் போகும் சோகம் குமுதினியை அலைக்கழித்தது.

மும்பை ஏர்ப்போர்டை விட்டு வெளியே வந்ததும் ஷ்யாமா கமலினி குடும்பத்துடன் ஐக்கியமானாள். குமுதினி நெஞ்சை அடைக்கும் உணர்வுடன் அவர்களுடன் சென்றாள்.

இதோ ஆறு மாதங்கள் கடந்து விட்டன. ஷ்யாமாவின் வாழ்வில் குதூகலம்; குமுதினி வெறுமையை வெளிக்காட்டவில்லை.

"நாளைக்கு குழந்தைகளின் பிறந்த நாள். தாஜ் ஹோட்டல்ல விருந்து….எப்படி என் ஐடியா!" விஷாலின் அறிவிப்பிற்கு அமோக வரவேற்பு.

"அப்பாவை தனியா விடமுடியாது….." கமலினி கவலை தெரிவித்தாள்.

தான் உடனிருப்பதாக குமுதினி கூற எல்லோரும் சந்தோஷமாக தலை அசைத்தார்கள்.

அன்று 26.11.2008 இரவு.

குமுதினியின் கைபேசி அலறியது.

"குமு.. இங்கே தாஜில் எங்களுடன் விவேக்கும் இருக்கிறார். உன்னோட விவேக். இன்று இரவு நம் வீட்டில் தங்கப் போகிறார். உன் எதிர்காலத்தை விவாதிக்கப் போகிறோம்." கமலினி போனை துண்டித்து விட்டாள்.

குமுதினி உள்ளம் படபடக்க, அப்படியே அமர்ந்து டிவியை வெறித்தாள். கண்முன் விரிந்த செய்தி மனதில் பதிய அதிர்ந்து போனாள்.

மூன்று தினங்கள் மூன்று யுகமாகக் கழிந்தன. இரவும் பகலும் தொலைக்காட்சி பெட்டியே கதியாகக் கிடந்தாள். தீவிரவாதிகளின் இடைவிடாத தாக்குதல், இந்திய கமாண்டோக்களின் எதிர்ப்பு… கமலினி குடும்பத்தைப் பற்றிய தகவலின்மை. அப்படியே
மனது ஸ்தம்பித்து விட்டது.

அப்பாவிற்கு இயந்திர கதியில் குளிப்பாட்டி, ஆகாரம் கொடுத்து அவரிடம் உண்மையைக் கூறாமல் சமாளிக்க படாதபாடு பட்டாள்.

அன்று ஞாயிறு காலை எட்டு மணிக்கு தீவிரவாதிகள் முறியடிக்கப்பட்டு உள்ளே பிணைக் கைதியாக மிஞ்சி இருந்தவர்கள் வெளியே வந்தனர்.

"குமு, நீ எப்படி கலங்கித் தவித்திருப்பாய்! நாங்கள் அத்தனை பேரும் ஒரு வெளி நாட்டு தம்பதிகளின் உதவியினால் அவர்கள் அறையில் தங்கி விட்டோம். ரெஸ்டாரென்டில் தீவிரவாதிகள் புகுந்து சுட நாங்கள் அடி படாமல் தப்பியது பெரிய அற்புதம். பதட்டத்தில் என் கைப்பையை தவற விட்டுவிட்டேன். விஷாலோட மறதி.. செல்லை அன்று முழுவதும் சார்ஜ் செய்யவில்லை. விவேக் எங்களிடமிருந்து பிரிந்து வேறு அறையில் புகுந்து விட்டார். அவரிடம் நம் வீட்டு நம்பரும் இல்லை; உன் நம்பரும் இல்லை. பெரிய சோதனையிலிருந்து தப்பி விட்டோம்." போனில் கமலினி பொரிந்தாள்.

தொடர்ந்து "விவேக்கும் எங்களோட வர்றார். குழந்தைகளோட பிறந்த நாளை அடுத்து எங்க எல்லாருக்கும்
புது பிறவி…. உனக்கு புது வாழ்க்கை" என்றவளின் இனிமையான வார்த்தைகள் குமுதினியின் காதில் ரீங்காரம் செய்தன.

About The Author