விரல் தொட்ட வானம் (40)

கருப்புசாமியின் பெருங்குரல்

அடர்ந்த காடுகளை
தேடியலைந்தது ஒரு காலம்.
மரங்களின் நறுமணமும்
அதன்
வேர்களில் கசியும்
உயிர்த் திரவமும்
முகப் பூச்சாய் மிளிர்ந்ததும்
அந்தக் காலத்தின் பக்கங்களில்
கூடுதலாகவே இருக்கும்
காடுகளின் ருசியை
அறியத் தந்தவன்
கருப்புசாமிதான்.
எந்த ஊரில் திருவிழா என்றாலும்
காடுகளின் அழகை ரசிக்கவே
பயணித்திருக்கிறோம்.
எங்களின்
பல இரவுகள்
யாரும் பார்க்காத பகல்கள்
அவற்றின் பிடியில்தான்
கிடந்திருக்கின்றன.
இடம் மாறும் காலங்களிலும்
எப்போதும்
என் மனவிரல் பிடித்து நடக்க
கால்களை வளர்த்துக் கொள்கிறது
காடுகளின் ருசி.
ஒரு
இலைஉதிர் காலத்தில்
காடுகள் அதிர
பெருங்குரல் எடுத்தான் அவன்
உதிர்ந்த இலைகள் மேல்
கிடந்தன
அவனது உடைந்த குரல்ஒலிகள்.
புதைகுழிகள்
காடுகளிலும் உண்டென
புரிந்து கொண்டது அப்போதுதான்.
இயல்பு வாழ்க்கையில்
இப்போதும்
வட்டமிடும் காடுகள்
எதிர்ப்படும் தருணங்களில்
என்னுள் துளிக்கும் ருசியைக்
கிள்ளி எறிகிறது
கருப்புசாமியின் பெருங்குரல்

–தொட்டுத் தொடரும்

About The Author