விவேகானந்தர் பார்வையில் கர்ம யோகம் (12)

3. ஊருக்குழைத்திடல் யோகம்

3.1 வையகம் துயர் தீர்கவே!

இடைவிடாது உழைத்தல் கர்ம யோகம் என்று பார்த்தோம். வாழ்க்கையில் நமக்கு வாய்த்த இடத்தினாலும், சூழ்நிலையினாலும் இயல்பாய் ஏற்பட்ட கடமைகளைப் புரிவதே கர்ம யோகம் என்பதையும் பார்த்தோம். கர்ம யோகத்தின் இன்னொரு முக்கிய அம்சம் பிறருக்கு உதவுவது; நாலு பேருக்கு நல்லது செய்வது. “கடமையாவன தன்னைக் கட்டுதல்; பிறர் நலம் பேணுதல்” என்பார் மகாகவி. கூடவே அவர் சொல்லுவார், “ஊருக்குழைத்திடல் யோகம்” என்று.

நல்லது செய்வது என்பதைக் காசு பணத்தால் செய்ய வேண்டும் என்பதில்லை. வாய்ச்சொல்லாகவும் அருளலாம். வார்த்தையின் மகிமை பற்றிச் சுவாமி விவேகானந்தர் நிறையவே பேசுவார். சிந்தனைக்கும் சொல்லுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொண்டால் அரும்பெரும் சாதனைகளைப் புரியலாம் என்பார். இந்தப் பிரபஞ்சமே வாக்கினால் தோன்றியது எனச் சமயரீதியாகச் சொல்லப்படுகிறது. “ஓசை ஒலி எலாம் ஆனவன்” என இறைவனைப் புகழ்கிறார்கள். சமயமும் தத்துவமும் ஒருபுறம் இருக்க, அன்றாட வாழ்க்கையிலும் வாக்கின் சக்தியைப் பார்க்கிறோம். சுவாமிஜி சொல்லுவார்: என் சொல்லின் அலைகள் காற்றின் வழியே உங்கள் செவிகளில் புகுந்து, உங்கள் நாடி நரம்புகளைத் தொட்டு, உங்கள் மனங்களில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. முட்டாள் என ஒருவனிடம் சென்று சொல்லிப் பாருங்கள்! அவன் முஷ்டியை ஓங்கி ஒரு குத்து விடுவது நிச்சயம்! இதோ ஒரு காட்சி! துன்பவசப்பட்டு ஒரு பெண்மணி அழுது கொண்டிருக்கிறாள். மற்றொரு மாது அவள் அருகில் வந்து கனிவாகச் சில வார்த்தைகள் பேசுகிறாள். முதல் பெண்ணின் அழுகை மாறுகிறது. துக்கம் சந்தோஷமாகிறது. இதுதான் சொல்லின் ஆற்றல்! இராமன் வில்லின் ஆற்றலிலும் இஃது உயர்ந்தது! இந்த ஆற்றலைப் புரிந்து கொண்டு நல்ல முறையில் பயன்படுத்துவதும் கூடக் கர்ம யோகம்தான் என்கிறார் சுவாமிஜி.

ஊருக்கு உதவுவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஒருவரது உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்ல விஷயம். தேவைக்கு ஏற்ப உதவுதலும், நீடித்து நிற்கிறாற்போல் உதவுதலும் சிறந்தவையே! ஒரு மணி நேரத் தேவையைப் பூர்த்தி செய்வதை விட ஓராண்டுத் தேவையைப் பூர்த்தி செய்வது மேலானது. துன்பத்தை அடியோடு நீக்க்குவது அனைத்திலும் உயரிய செயல்! வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம். சரிதான்; பசி மீண்டும் மீண்டும் திரும்புமே? அதனால்தான் சொன்னார்கள், பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது என்று! சுவாமிஜியும் பசிப் பிணி நீக்குவதிலும் உயர்ந்ததாகக் கல்வி புகட்டுவதைச் சொல்கிறார்.

இவை அனைத்துக்கும் மேலான மனிதத் தேவை, துன்பமே இல்லாத நிலை! மனித மனத்தில் மலர்ச்சி, மாற்றம், ஏற்பட்டால் ஒழிய இந்த நிலை வருவதற்கில்லை. ஆன்மிக அறிவு ஒன்றே அந்தத் தூய பெரு நிலையைத் தரும்! அந்த ஆன்மிக அறிவைத் தருவதே அத்தனை உதவிகளிலும் தலையாய உதவி என்று சுவாமிஜி உபதேசிக்கிறார்.

ஒவ்வொரு வீட்டையும் தர்மசாலை ஆக்கிப் பாருங்கள்! நாடு முழுக்க ஆஸ்பத்திரியைக் கட்டுங்கள்! ஆனால் மனிதனுடைய பண்பு மாறும் வரையில் மனித குலத் துயர் நீங்க வழியே இல்லை! மனிதர்கள் ஒளி பெறட்டும்! தூய்மை அடையட்டும்! ஆன்மிக அறிவு பெற்று வலிமை அடையட்டும்! அப்போதுதான் வையகம் துயர் தீர்ந்து செழிக்கும்!

(ஆதாரம்; Collected works (CW) – Pages 52 – 53, 72 – 75).

3.2. உலகம் பிறந்தது எனக்காக(வா?)

நாம் செய்யும் காரியங்கள் எல்லாவற்றுக்கும் ஊக்க சக்தி உலகத்துக்கு உதவுவதாகவே இருக்க வேண்டும்! இதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. ஆனாலும் ஒரு சாரார் சொல்லுவது போல, உதவுவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு தருவதற்காகவே இறைவன் இந்த உலகத்தைப் படைத்திருக்கிறான் என நினைத்துக் கொள்வது கொஞ்சம் அதிகப்படி! உலகம் நம் உதவியை எதிர்பார்த்து நிற்கிறது எனச் சொல்வது உண்மையில் இறைவனுக்கு இழைக்கும் அபசாரமாகும். கூட்டிக் கழித்துப் பார்த்தீர்களானால், நாம் பிறருக்கு உதவுவது என்பது நமக்கு நாமே உதவிக் கொள்வதே ஆகும்!

சின்ன வயதில் சுவாமிஜி சில வெள்ளை எலிகளை வளர்த்தார். குட்டிக் குட்டிச் சக்கரங்கள் உள்ள பெட்டி ஒன்றில் அவற்றை வைத்திருந்தார். எலிகள் இந்தச் சக்கரங்கள் மீது ஏறி அவற்றைக் கடக்க முயலும்போதே சக்கரங்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். எலிகள் இருந்த இடத்தை விட்டு நகரவே முடியாது. உலகம் என்பதும் நாம் அதற்கு உதவுவது என்பதும் இது போலத்தான். நாம் உதவிக் கொள்வதெல்லாம் நமக்குத்தான். எப்படி? நமக்கு ஓர் ஆன்மிகப் பயிற்சி கிடைக்கிறதே, அந்த அளவில்.

இந்த உலகம் முழுக்க நல்லது எனவோ கெட்டது எனவோ கிடையாது. அஃது அவரவர் பார்க்கும் விதத்தைப் பொறுத்தது. பெரும்பாலும் முதியவர்கள் கடந்து போன தங்கள் நாட்களை எண்ணி, இழந்து விட்ட வாய்ப்புகளை நினைத்துப் பெருமூச்சு விட்டு அங்கலாய்க்கிறார்கள். இளைஞர்கள் முன்னர் வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். இரண்டு அணுகுமுறைகளுமே தவறானவை. பார்வையின் கோணத்தில், நோக்கும் விதத்தில்தான் இன்பமும் துன்பமும். குளிருக்கு வெம்மை தரும்போது தீ அழகு; விரலைத் தீக்குள் விட்டால் தகிப்பு.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள், நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உலகம் அது பாட்டுக்குச் சீராக இயங்கிக் கொண்டிருக்கும். நாம் கோபுரத்தைத் தாங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கும் பொம்மைகளே! ரொம்பவும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை!

என்ன சொல்ல வருகிறார் சுவாமிஜி?

(ஆதாரம்: CW – Pages 75 – 76).

— பிறக்கும்

About The Author