அது ஒரு காலம் (2)

(மின்சாரம் வரும் வரை தெருக்களுக்கு ஒளி வழங்கிய காந்தி லைட் பற்றி திரு. P.பாலகிருஷ்ணன் பின்னூட்டக் குறிப்பு எழுதியிருந்தார். அந்தக் குறிப்பு, இந்தக் கட்டுரையை எழுத என்னைத் தூண்டியது. அவருக்கு மிக்க நன்றி.)

வீதிகளின் முக்கிய இடங்களில் சுமார் 2 மீட்டர் உயரக்கல் அல்லது மரக் கம்பம் நட்டு உச்சியில் ஒன்றரை சாண் உயரமும், ஒரு சாண் அகலமும் கொண்ட மெல்லிய மற்றும் ஒளி ஊடுருவும் கண்ணாடிகளால் ஆன கூண்டொன்று பொருத்தப்பட்டு இருக்கும். அடிப்பாகம் குறுகலாகவும், மேலே போகப்போக அகலமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும் அதன் ஒரு பக்கக் கண்ணாடியைக் கதவு போல் திறக்கலாம், மூடலாம். பூட்டு இல்லை, தாழ்ப்பாள் உண்டு! அடியில் காற்று புகுந்து மேல் மூடி வழியாய் வெளியேறும்.

சூரியன் மறைந்தவுடன் நகராட்சி ஊழியர் சிறிய ஏணியும், கண்ணாடியால் செய்த நாடா விளக்குகள் நிறைந்த கூடையும் சுமந்து வந்து, கம்பத்தில் ஏணி சாத்தி ஏறி, கதவைத் திறந்து ஒரு விளக்கை ஏற்றிய பின்பு அந்தக் கூண்டிலேயே பக்கவாட்டில் கிடக்கும் கண்ணாடி சிம்னியை எடுத்துப் பொருத்திவிட்டுக் கதவை மூடித் தாழிட்டு இறங்கிக் கூடை, ஏணி சகிதம் அடுத்த கம்பம் நோக்கிச் செல்வார். விளக்கு சுமார் 2 மணி நேரம் எரிந்து மங்கலான வெளிச்சத்தைத் தந்துவிட்டு ஓய்வுபெறும். மறு நாள் முற்பகலில் ஊழியர் வந்து சிம்னியைக் கூண்டில் வைத்துவிட்டு விளக்கை எடுத்துப் போவார்.

விளக்கைத் திருடிக் கொண்டு செல்வது எவர்க்கும் எளிது. அதைவிட எளிது கல்லெறிந்து கண்ணாடியை உடைத்து நொறுக்குவது. என்றாலும் ஒருவரும் அந்தச் செயல்களில் ஈடுபடவில்லை. பொதுச் சொத்தைச் சேதப்படுத்தலாம் என்கிற ‘அறிவு’ யாருக்கும் உண்டாகாத காலம்!!

வீடுகளில் திருமணம், இறப்பு முதலிய நிகழ்ச்சிகளுக்குக் கூடும் உறவினர்களின் வசதிக்காக இரவில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வாடகைக்கு எடுக்கப்படும். மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு பம்ப்பை இயக்கினால் சூடான பர்னருக்கு எண்ணெய் போய் ஆவியாகி எரியும்போது மேண்ட்டில் (mantle) என்ற பகுதி மிகப் பிரகாசமான ஒளியைப் பரப்பும். அந்த விளக்கைத் தாங்கியிருக்கும் ஒரு மீட்டர் உயரமுள்ள மர ஸ்டூலின் அடியில் நுழைந்து தலையில் சுமந்து கொண்டு தொழிலாளி வருவார். நாம் காட்டும் இடத்தில் ஸ்டூலை இறக்கி வைப்பார். தேவைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகளை நாம் வரவழைக்கலாம்.

இரவு நேரத்தில் டாக்ஸியில் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, திருமண ஊர்வலம் நடைபெறும்போது நாம் ஆர்டர் கொடுத்தால் பெட்ரோமாக்ஸ் விளக்கு ஸ்டூல்களைத் தூக்கிக் கொண்டு இரு பக்கமும் தொழிலாளிகள் நடந்து வருவார்கள்.

பெட்ரோமாக்ஸை விடச் சிறியது ‘பேபி லைட்’. இதுவும் கேஸ் விளக்குதான். இதை மேசை மீது வைக்கலாம். பிளாஸ்டிக் வாளியைத் தூக்க உதவும் கம்பி போல இதிலுள்ள கம்பியைப் பிடித்துத் தூக்கிச் செல்லலாம். உயரத்தில் மாட்டி வைக்கலாம். இதுவும் அதிக வெளிச்சம் தரும்.

இவ்வாறு நாடா விளக்குகளும், கேஸ் விளக்குகளும் மக்களின் ஒளித் தேவையை நிரப்பின.

About The Author

5 Comments

  1. P.Balakrishnan

    நன்றி திரு.ஞானசம்பந்தன் அவர்களே. திரைப்பட நகைச்சுவைக் காட்சி ஒன்றில் பெட்ரோமாக்ஸ் லைட் எப்படி எரிகிறது என்று கவுண்டமணியிடம் செந்தில் கேட்க, அவர் இந்த மேன்டிலின் உதவியால்தான் என்று சொல்ல இதிலிருந்து எப்படிண்ணே வெளிசம் வருது என்று கூறி செந்தில் மேன்டிலை விரல்களால் நசுக்கவும் இருந்த ஒரே லைட்டையும் கெடுத்திட்டியேடா என்று கவுண்டமணி திட்ட அப்போது பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு கேட்டு ஒரு பெண்மணி வர அவரை ஏற இறங்கப் பார்த்த கவுண்டமணி சமாளிப்பதற்காக அந்தப்பெண் இடுப்பில் கூடை வைத்திருப்பதைப் பார்த்து கூடை வச்சிருக்குற பொம்பளைங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் கெடயாது என்று விரட்ட…-மீண்டும் மீண்டும் சிரிப்பு!

  2. Rishi

    இது போன்ற நினைவுகள் மேலும் மேலும் மலரட்டும் ஞானசம்பந்தன் அவர்களே!

  3. paramaswari

    அந்த காலத்திய விளக்குகளைப் பற்றி இந்தக் காலத்திளுள்ளவர்களுக்கு விளக்கியதற்கு மிக்க நன்றி.

  4. Powell

    சுவையான பல தகவல்கள் கொண்ட கட்டுரை. இளைய தளைமுறையினர்க்குப் புதிய தகவல்களைச் சொல்லும் இக்கட்டுரை, சற்று வயது முதிர்ந்தோர்க்கு நினைத்தாலே இனிக்கும் மலரும் நினைவுகளைக் கிள்ளும்.

Comments are closed.