அந்நியன்

விடிவெள்ளி மறையாத காலை
விழிதூங்க முடியாத கனவு
விமானப் பயணம்…..

என்ன வாங்கலாம்
என்ன கொடுக்கலாம்
எல்லோர் நினைவும்
முட்டி மோதிற்று…

அம்மாவுக்கு அப்பாவுக்கு
ஆசைத்தங்கைக்கு
அடுப்படி வரைக்கும் என்ன தேவையோ
கணக்கு போட்டாயிற்று

அம்மா கூட அறுபது நாள்
தங்க போகிறேன்
நினைவின் சுகத்தில்
அந்நாளும் வந்தது…

அத்தையும் மாமாவும்
ஏர்போர்ட்டில்
அப்பாவை காணலை
பயணம் தொடங்கிற்று…..

பொண்ணைக் கொடுத்த இடத்தில்
கையை நனைக்கிறதே…
அப்பாவும் அம்மாவும்
அரைநாள் தங்கவும்
சங்கடப்பட
அத்தையிடம் மெல்லக் கேட்டேன்

அங்கைபோய்
நிக்கப்போறியளோ?!
நுளம்பு பிள்ளை
ஆஸ்பத்திரியும் பெரிசில்லை
அவையள் வந்து நிக்கட்டும்
அல்லது போய் பகலோட திரும்பிடுங்கோ

ஓவென்று அலறும்
என்மனது அறியாமல்
அடுக்கிப்போனா அடுக்கடுக்காய்
எங்களின் இரண்டு மாத அட்டவணையை

அத்தை வீட்டுக்கு
அடிக்கடி வர
அம்மா சங்கடப்பட
ஆசை தங்கை
என்பிள்ளைகளைத் தூக்கக் கூட
பயந்து நிற்க

எனக்குப் பிடிக்கும் என்று
அப்பா வாங்கிவந்த
பிலாப்பழம் மணம் வீசியபடி
மூலையில் கிடக்க
எல்லாவற்றிற்கும்
அந்நியனாய் எந்நாட்டில்
நான் …

About The Author

4 Comments

  1. கீதா

    யதார்த்தம் சொல்லி நெகிழவைத்துவிட்டீர்கள். கவிதையின் தலைப்பு அந்நியன் என்பதற்குப் பதில் அந்நியமானவள் என்றிருந்திருந்தால் இன்னும் பொருத்தமாய் இருக்குமோ?

    அத்தனைக் கனவுகளும் நொறுக்கப்பட்டதன் வலியை உணர்வுபூர்வமாய்ச் சொல்கிறது கவிதை. பிரமாதம்.

  2. mukil

    உட்புகுந்து உலுக்கும் உக்கிர உனர்வுகலை உதசினப்படுத்தும் உலை கொதி

Comments are closed.