அனாடமிக் தெரபி (12)-செல்களின் இயக்கம்

செல்களின் இயக்கம்

கார் ஓடுவதற்குப் பெட்ரோல் தேவை. மின்விசிறி சுழல்வதற்கு மின்சாரம் தேவை. பெட்ரோல் தீர்ந்த அடுத்த நிமிடம் கார் நின்று விடும், மின்சாரம் இல்லாத அடுத்த நிமிடம் மின்விசிறி நின்று விடும். என்னதான் புதுக் காராக இருந்ததாலும், புது மின்விசிறியாக இருந்தாலும் இயங்குவதில்லை.

அது போலத்தான், உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் ஏதாவது ஒரு எரிபொருள் மூலமாக வேலை செய்கின்றன. எரிபொருள் இல்லையென்றால் உடனே அவை தன் இயக்கத்தை நிறுத்தி விடுகின்றன; உடலிலுள்ள செல்கள் உட்பட!

உடலிலுள்ள செல்களை வீடுகள் போலவும், இரத்தத்தைச் சாலை போலவும் கற்பனை செய்துகொள்ளுங்கள்! நமது உடல் பல கோடிக்கணக்கான செல்கள் என்கிற வீடுகளாலும், பல லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தம் என்கிற சாலையாலும் உருவாக்கப்பட்டது. ஒரு செல் என்கிற வீடு கதவைத் திறக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எடுக்கும். கண்ணுக்கே தெரியாத செல்லுக்குள் ஓர் அடுப்பும் இருக்கிறது. அதற்கு மைட்டோ காண்ட்ரியா எனப் பெயர். அந்த அடுப்பிற்கு விறகு என்ற சர்க்கரை தேவை. ஒரு பொருள் எரிவதற்குக் காற்று தேவை. சர்க்கரை என்ற பொருளுக்கும் அது தேவை. எனவே, செல் மீண்டும் கதவைத் திறந்து இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து வந்து சர்க்கரை எனும் விறகை மைட்டோ காண்ட்ரியா என்கிற அடுப்பில் வைத்து எரிக்கிறது. இப்படி விறகும் ஆக்ஸிஜனும் சேர்ந்து எரியும்பொழுது ஒரு தீ உருவாகிறது. இந்தத் தீயினால் வெப்ப ஆற்றல் உருவாகிறது. அது இயக்க ஆற்றலாக மாறுகிறது. இந்த ஆற்றலுக்குப் பெயர்தான் பிராணசக்தி! இந்தச் சக்திதான் காஸ்மிக் எனர்ஜி, உயிர்ச் சக்தி (Life force) எனப் பல இடங்களில் பல பெயர்கள் சொல்லி அழைக்கப்படுகிறது. யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் போன்ற பயிற்சிகளில் பிராணசக்தியைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனுடைய அறிவியல் விளக்கம் இதுதான்.

தலைமுடி முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உறுப்புகளின் செல்களும் இந்த வேலையைத்தான் செய்கின்றன. செல்கள் உயிரோடு இருப்பதற்கு அத்தியாவசியமான உணவு சர்க்கரையும் ஆக்ஸிஜனும். கண்ணில் உள்ள செல்கள் சர்க்கரையையும் ஆக்ஸிஜனையும் சாப்பிட்டு அதன் மூலம் கிடைக்கும் பிராண சக்தியை வைத்து, பார்க்கும் வேலையைச் செய்கின்றன. எலும்பில் உள்ள செல்கள் இதே சர்க்கரையையும் ஆக்ஸிஜனையும் சாப்பிட்டு அதனால் கிடைக்கும் சக்தியின் மூலம் அவற்றுக்குண்டான வேலையைச் செய்கின்றன. ஆக, உடல் முழுவதும் இருக்கும் செல்கள் அனைத்தும் சாப்பிடுவது ஒரே பொருளைத்தான். செய்யும் வேலை மட்டும்தான் வெவ்வேறு. வீட்டில் இருக்கும் நாம் அனைவரும் ஒரே உணவைத்தான் சாப்பிடுகிறோம். ஆனால், செய்யும் வேலைகள் வெவ்வேறுதானே? அதுபோல.

வீட்டில் அடுப்பு எரிக்கக் கடையில் விறகு வாங்கி வருகிறோம். விறகு எரிந்தவுடன் கரிக்கட்டையாக மாறுகிறது. கரிக்கட்டை நமக்குத் தேவை இல்லை. எனவே, சாலையிலுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுகிறோம். இதே போல், சர்க்கரை என்கிற விறகு எரிந்த பிறகு யூரியா என்கிற கழிவுப்பொருளாகவும், ஆக்ஸிஜன், கார்பன்-டை ஆக்ஸைடாகவும் மாறி மீண்டும் இரத்தத்திற்கு வருகின்றன. சாலையில் நல்ல பொருளை எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. கழிவுப் பொருளை எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. அது போல, இரத்தம் என்கிற சாலையில் நல்ல பொருட்களை செல்களுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. கெட்ட பொருட்களை வியர்வை, சளி, சிறுநீர், மலம் போன்ற குப்பைத் தொட்டிகளுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களும் உண்டு. இரத்தத்தில் நல்ல பொருளும் இருக்கும், கெட்ட பொருளும் இருக்கும்.

பத்து வீடு வரிசையாக இருக்கும்பொழுது பத்து வீட்டுக்காரர்களும் மளிகைக் கடையில் ஒரே மாதிரிப் பொருளை வாங்குகிறார்களா? அல்லது ஒரே மாதிரிக் குப்பையைத்தான் போடுகிறார்களா? ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் தேவை என்ன? வாழ்க்கை முறை என்ன? இவற்றைப் பொறுத்து அவர்கள் வாங்கும் பொருளும் வெவ்வேறாக இருக்கும். அதற்கேற்பக் கழிவுப் பொருட்களும் வேறுபடும். அதே போல, ஒவ்வொரு செல்லுக்கும் தேவைப்படும் பொருளும் வேறு, அவை வெளியேற்றும் கழிவும் வேறு. செல்கள் அவற்றின் வேலை, நோய் போன்ற பல விஷயங்களைப் பொறுத்து ஒவ்வொரு வினாடியும் வெவ்வேறு பொருட்களை இரத்தத்தில் இருந்து எடுக்கும். வெவ்வேறு கழிவுகளை இரத்தத்தில் கொட்டும். ஆக, ஒரு செல் உயிரோடு இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தன் நோயைத் தானே குணப்படுத்திக் கொள்வதற்கும் பொருட்களைக் கொண்டு வந்து சேர்ப்பதும் வெளியேற்றுவதும் இரத்தம். இப்படி, தலைமுடி முதல் உள்ளங்கால் வரை நம் உடலில் இருக்கும் அனைத்து செல்களும் இரத்தத்தை நம்பித்தான் வாழ்கின்றன. எனவே, செல்களுக்கு வரும் நோய்களைச் செல்களில் சிகிச்சை செய்தால் குணப்படுத்த முடியாது; இரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகளே செல்களின் நோய். எனவே, இரத்தத்தில் சிகிச்சை செய்தால் மட்டுமே செல்களைக் குணப்படுத்த முடியும்.

இதுவரை நாம் உடல் என்றால் என்ன, செல்கள் என்றால் என்ன, இரத்த நாளங்கள் என்றால் என்ன என்பனவற்றைப் பற்றி விளக்கமாகப் பார்த்தோம். இனி, நாம் ஒவ்வொரு நோய்களைப் பற்றியும் பார்க்கப் போகிறோம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

அடுத்த அமர்வில் சந்திப்போம்

About The Author