அனாடமிக் தெரபி (26)

கொழுப்பு, கொழுப்பு கட்டி (HDL, LDL) – 2

கொழுப்புக் கட்டியை அறுத்து எடுப்பதற்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அப்படி அகற்றி விட்ட பிறகு, அதன் பின் கொழுப்புப் பொருட்களை எப்படிச் சாப்பிட்டால் நல்ல கொழுப்பாக அது இரத்தத்தில் கலக்கும் என்கிற வித்தையைச் சொல்லிக் கொடுத்தார்களா? இரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது அதைக் கட்டுப்படுத்த மருந்து மாத்திரை கொடுக்கும் மருத்துவர்கள், இரத்த நாளங்களில் அடைத்த கெட்ட கொழுப்பை அகற்றுவதற்கும், அதற்குப் பிறகு நாம் சாப்பிடுகிற உணவில் நல்ல கொழுப்பு உள்ளே செல்வதற்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார்களா?
இன்றைய மருத்துவத்தில், இருதயத்தில் உள்ள கெட்ட கொழுப்பை, அடைப்பை வெளியே எடுப்பதற்கு மட்டுமே வைத்தியம் இருக்கிறது. ஆனால், சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை நல்லபடியாக ஜீரணமாக்கி நல்ல கொழுப்பாக இரத்தத்தில் கலக்கச் செய்யும் வித்தையை யாரும் சொல்லிக் கொடுப்பதே இல்லை. அதற்குப் பதிலாக இனிமேல் கொழுப்பு சம்பந்தப்பட்ட எந்தவொரு பொருளையும் சாப்பிடக்கூடாது; கொழுப்பே சேர்த்துக் கொள்ளக் கூடாது என அறிவுரை வழங்குகிறார்கள். இதைக் கேட்டுப் பல பேர் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அறவே தவிர்க்கிறார்கள். அவர்களுக்குக் கூடிய சீக்கிரமே மிகப்பெரிய நோய் வர இருக்கிறது. ஏனென்றால், கொழுப்பு உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசியமான ஒரு பொருள்.

நமது உடலில், இரு செல்கள் ஒன்று சேருமிடத்தில் கவரிங் மெட்டீரியலாக, பேக்கிங் மெட்டீரியலாக இரு செல்லுக்கு நடுவேயும் பசை போன்ற கொழுப்புகள் இருப்பதால்தான் செல்கள் ஒழுங்காக இயங்க முடிகிறது. ஒவ்வொரு செல்லுக்கு நடுவிலும், கொழுப்புப் பொருட்கள் இருக்கின்றன. தோலில் எப்பொழுதும் ஒரு எண்ணெய்ப் பசை இருக்கும். இதுவும் ஒருவிதமான கொழுப்புதான். இந்த எண்ணெய்ப் பசைதான், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நமக்கு வராமல் பாதுகாக்கும் அற்புதமான கவசம். மேலும், இரத்தத்தில் உள்ள 80 சதவீதம் கொழுப்புப் பொருட்கள் கல்லீரலால் உறிஞ்சப்பட்டு, பித்த நீராக (Bile) மாற்றப்பட்டுப் பித்தைப்பையில் (Gall Bladder) சேமித்து வைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் பொருட்கள் வயிற்றுக்குள் செல்லும்பொழுது அவற்றை ஜீரணம் செய்வதற்குப் பித்த நீர் சுரந்தே ஆக வேண்டும்.

இப்படித் தலைமுடி முதல் உள்ளங்கால் வரை உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அத்தியாவசியத் தேவையான கொழுப்பைச் சாப்பிடக்கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? உடலில் கொழுப்பின் பங்கு என்ன என்று தெரியாத மருத்துவர்கள் மட்டுமே கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடக்கூடாது என்று அறிவுரை சொல்லுவார்கள்.

எனவே, தயவு செய்து கொழுப்புப் பொருளைப் பார்த்து பயப்படாதீர்கள்!

கொழுப்பு நம் உடலுக்கு மிக முக்கியமான ஒரு பொருள். உணவில் இருக்கும் கொழுப்பை ஒழுங்காக ஜீரணம் செய்யத் தெரியாததால் கெட்ட கொழுப்பு உடலில் சென்று நோயை ஏற்படுத்துகிறது. அதற்குக் கொழுப்பே சாப்பிடக்கூடாது என்பது தீர்வாகாது. கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை எப்படிச் சாப்பிட்டால் நல்ல கொழுப்பாக மாற்றலாம் என்கிற வித்தையைச் சொல்லிக் கொடுப்பதே சரியான சிகிச்சையாகும்.

நமது சிகிச்சை முறையில், கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் எண்ணெய்ப் பலகாரம், தேங்காயைச் சாப்பிட்டால் மட்டுமே நோய் தீரும் என்பதுதான் உண்மை. நாம் உங்களுக்குக் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை எப்படிச் சாப்பிட வேண்டும் என்கிற ரகசிய வித்தையைச் சொல்லிக் கொடுப்போம். அதன் மூலமாக நீங்கள் எண்ணெய்ப் பலகாரம், தேங்காய் மற்றும் கொழுப்பு சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிட்டே கொழுப்பு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்திக் கொள்ளலாம்.

மருத்துவர்கள் தேங்காய் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடாதீர்கள் என்று கூறுவார்கள். இது ஒரு நகைச்சுவையான விஷயம்! தேங்காய் உலகத்திலேயே மிகச் சிறந்த ஓர் உணவு. அதில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாதுப் பொருட்களும் இன்ன பிற நல்ல பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. அப்படிப்பட்ட பொருளை ஏன் சாப்பிடக் கூடாது?

பழங்காலத்தில், எந்த நோயாக இருந்தாலும் தேங்காய்ப்பால் – பனங்கருப்பட்டி சேர்ந்த ஒரு கலவையைக் குடிப்பதன் மூலமாக நமது முன்னோர்கள் நோய்களை விரட்டிக் கொண்டிருந்தார்கள். நமது தாத்தா, பாட்டியிடம் கேட்டுப் பாருங்கள். தேங்காயும், பனங்கருப்பட்டியும் சேர்த்துச் சாப்பிடுவது எவ்வளவு பெரிய உயிர்காக்கும் மருந்து என்பதை அவர்கள் கதை கதையாய்க் கூறுவார்கள். யாருக்கும் எந்த நோய் வந்தாலும் தேங்காய்ப் பாலும் பனங்கருப்பட்டியும் கலந்து குடிப்பதன் மூலமாக நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஒரே மருந்து தேங்காய்ப்பால் பனங்கருப்பட்டிக் கலவை.

முன் காலங்களில், அனைத்து மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தியும் குணப்படுத்தப்பட முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிக்குக் கடைசியாகக் கொடுக்கும் மருந்து தேங்காய்ப்பால் மருந்து! தேங்காயைப் பொரியலுக்குத் துருவுவது போல் சிறு துகள்களாக ஆக்கி, அதை உள்ளங்கையில் நன்றாக அழுத்தி இலேசாக நீர் விட்டால் அதிலிருந்து ஒரு பால் வரும். இந்தத் தேங்காய்ப் பாலை ஒரு டம்ளர் எடுத்து மருத்துவரால் கைவிடப்பட்ட, உயிருக்குப் போராடும் நோயாளிக்குக் கொடுத்தால் அவர் பிழைப்பார் என்பது நம் முன்னோர்களின் மருத்துவம்.
இப்படி நம் முன்னோர்கள் தேங்காய்ப் பால் மூலமாக உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், நாம் இப்பொழுது உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கும் தாத்தா பாட்டிக்குப் பேரன் பேத்தி கையால் மாட்டுப்பாலைக் கொடுத்து உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது வீட்டில் யாராவது உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தால் மாட்டுப்பாலைக் கொடுக்காதீர்கள்! தேங்காய்ப்பால் கொடுத்து உயிரைக் காப்பாற்றுங்கள்!

எனவே, தேங்காய் என்பது சாப்பிடக் கூடாத ஒரு பொருள் கிடையாது. தேங்காயை எப்படிச் சாப்பிட்டால் நல்லபடியாக ஜீரணமாகி நல்ல கொழுப்பாக மாறும் என்கிற வித்தையைக் கற்றுக் கொள்வதன் மூலமாகக் கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ள நபர்கள் தேங்காய் சாப்பிட்டே அந்த நோய்களைக் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்

About The Author