அனாடமிக் தெரபி (32)

மனது கெட்டால் உடலில் நோய் வரும்

மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனது கெட்டுப்போனால் உடல் கெட்டுப்போகும். உடல் கெட்டுப்போனாலும் மனது கெட்டுப்போகும்.

இரண்டு மூன்று நாட்கள் நாம் சரியாக தூங்கவில்லை என்றால், அனைவரிடமும் கோபமாகப் பேசுவோம். அமைதியாகப் பேசுபவர் என்று பெயர் பெற்றவர்கள் கூட இதற்கு விதிவிலக்கில்லை. ஏன் திடீரென நாம் இப்படிக் கோபமாகப் பேசுகிறோம் என்றால், உடலில் நோய் ஏற்படும்பொழுது அது நம் மனதைப் பாதித்துக் குணத்தை மாற்றுகிறது. சாதரணமாக, நன்றாகப் பேசிக்கொண்டிருக்கும் நமக்கு அதிகப்படியான தலைவலி உள்ள நேரத்தில் குணம் மாறுகிறது. ஏனென்றால், உடலில் நோய் வந்தால் மனது பாதிப்படைகிறது.

உடலில் எவ்வளவு நோய் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல மனதில் பாதிப்பு ஏற்படும். அதே சமயத்தில், மனதில் பாதிப்பு எப்போது ஏற்பட்டாலும், அது உடலிலும் தெரியும். சில நேரங்களில், நேரடியாக நம் மனதைப் பாதிக்கும் சம்பவங்களும் நடக்கும். சில நேரங்களில், மறைமுகமாகவும் மனது பாதிக்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்வது மூலமாகப் பல நோய்களைக் குணப்படுத்தலாம். இதே போல, உடலில் உள்ள நோய்களைக் குணப்படுத்துவது மூலமாக மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும் முடியும்.

கடந்த மூன்று வாரங்களாக நாம் பார்த்து வருவது போல், இரத்தத்தில் உள்ள சில பொருட்களின் தரம் குறைவது நோய்வாய்ப்படுவதன் முதல் நிலை.

பின்னர், இரத்தத்தில் சில பொருட்களின் அளவு குறையும் அல்லது இல்லாமல் போகும். இது இரண்டாவது நிலை.

அடுத்து மூன்றாவது நிலையாக, இரத்தத்தின் அளவு குறையும். அதன் பிறகுதான் நமது மனம் பாதிக்கும்.

இப்படியும் நம் மனம் பாதிக்கும் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. இதைப் புரிந்து கொண்டு நம் மனதைச் சரி செய்வது மூலமாக நோயின் இந்த நான்காம் நிலையையும் குணப்படுத்த முடியும்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author