அனாடமிக் தெரபி (36)

அனைத்து நோய்களுக்கும் காரணம் ஒன்று!

நமக்கு வரும் நோய்கள் அனைத்துக்கும் ஐந்து காரணங்கள் உண்டு என்பதை இதுவரை பார்த்தோம். உண்மையில், ஐந்து காரணங்கள் கிடையாது. ஒரே ஒரு காரணம்தான். நமக்கு சுலபமாகப் புரிய வேண்டும் என்பதற்காகவே ஐந்து காரணங்களாகப் பிரித்து இதுவரை தெளிவுபடுத்தி வந்தோம்.
உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்குமான அந்த ஒரே ஒரு காரணம் ‘இரத்தம் கெட்டுப்போவது’ மட்டுமே. உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே ஒரு சிகிச்சை இரத்தத்தைச் சுத்தப்படுத்துவது மட்டுமே. எனவே, இனிமேல் நமக்கு ஏதாவது நோய் வந்தால் அதற்குப் பெயர் வைத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு இரத்தம் கெட்டுப் போய்விட்டது என்று நினைத்துக் கொண்டால், அந்த நோயை சுலபமாகக் குணப்படுத்தலாம். எந்த நோய் வந்தாலும், அமைதியாகச் சிந்தித்துப் பார்த்தால், இரத்தம் கெட்டுப் போய் விட்டதால் மட்டுமே அது வந்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

மருந்து கொடுக்கும் வைத்திய முறைகள் அனைத்தும் நமது இரத்தத்தில் உள்ள பொருட்களைச் சரிசெய்வதற்கும் சுத்தம் செய்வதற்குமான முயற்சிகளே. இவை தற்காலிகமான தீர்வையே தரும். எனவே, மருந்து மாத்திரை ஊசி கொடுக்கும் மருத்துவத்திற்கு ஆபத்துக் காலத்தில், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே செல்ல வேண்டும்.

யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம், அக்குபஞ்சர், நியுரோதெரப்பி மற்றும் முத்திரா, ரெய்கி, ப்ராணி ஹீலிங், டச் ஹீலிங், மெக்னோடோ தெரபி போன்ற மருந்து இல்லாத வைத்திய முறைகள் நமது இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்கின்றன. இவை நேரடியாக சுத்தம் செய்வதில்லை; ஆனால், மறைமுகமாக சுத்தம் செய்கின்றன.

யோகா நேரடியாக இரத்தத்தை சுத்தம் செய்வது கிடையாது. ஆனால் யோகா செய்த பிறகு நாம் ஓர் உணவைச் சாப்பிட்டால் அந்த உணவை சுத்தமான இரத்தமாக மாற்றி நோய்க்கு மருந்தாகச் செயல்பட வைத்து நோயைப் பக்க விளைவுகள் இல்லாமல் சிறந்த முறையில் குணப்படுத்துகிறது.
அக்குபஞ்சரில் நாடி பார்ப்பார்கள். எந்த நாடி சரியாகத் துடிக்கவில்லையோ அந்த உறுப்பு சரியாக வேலை செய்யாமல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, உடலில் உள்ள புள்ளிகளில் எந்தப் புள்ளி அதற்குத் தொடர்புடையதோ அதைத் தொடுவது மூலமாகவோ, அதில் ஊசி செலுத்துவது மூலமாகவோ அதைத் தூண்டுதல் (Stimulate) செய்து சக்தி அளித்து அந்த உறுப்பை இயங்க வைப்பார்கள். அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டில் வந்து உணவைச் சாப்பிடும்பொழுது அந்த உணவு இரத்தமாக மாறி நோய்களைக் குணப்படுத்துகிறது. இது போல, மருந்தில்லாத மருத்துவ முறைகள் அனைத்தும் இயற்கையாக இரத்தத்தை சுத்தம் செய்கின்றன. மருந்து கொடுக்கும் மருத்துவ முறைகள் அனைத்தும் செயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்கின்றன.

எனவே, மருந்து கொடுக்கும் வைத்தியத்திற்குத் தேவைப்பட்டால் மட்டுமே செல்லுங்கள். ஏனென்றால், அவை சரியான மருந்தாகவே இருந்தாலும் பக்க விளைவுகள் ஏற்படுத்தும்.
ஆக, உலகில் உள்ள அனைத்து வைத்திய முறைகளும் கெட்டுப் போன நமது இரத்தத்தை சுத்தம் செய்வது மூலமாகவே நோய்களைக் குணப்படுத்தி வருகின்றன. ஒவ்வொரு சிகிச்சை முறையிலும் வேவ்வேறு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவே தவிர, அனைவரும் ஒரே இடத்திற்குத்தான் கடைசியில் சென்றடைகிறார்கள். எனவே, நோய் என்பது இரத்தம் கெட்டுப்போவது என்றும் சிகிச்சை என்பது இரத்தத்தைச் சுத்தப்படுத்துவது என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்!
இரத்தத்தில் எல்லாப் பொருட்களையும் நல்ல பொருளாக, சரியான அளவில் வைப்பது மட்டுமே உலகத்தில் மிகச்சிறந்த சிகிச்சையாகும். அதைச் செய்வதும் நமது கையில்தான் உள்ளது. நாம் இதை ஒழுங்காகச் செய்தால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும். தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்.

நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் அனைத்து செல்களுக்கும் தம்மைத் தாமே குணப்படுத்திக் கொள்வதற்கும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கும் தெரியும். அந்த உறுப்புகளுக்குத் தேவைப்படும் பொருட்கள் இரத்தத்தில் தேவையான அளவிலும் தரத்திலும் இருந்தால் போதும்.

நோய் வருவதற்கான ஐந்து காரணங்களில், செல்களின் அறிவு கெட்டுப்போதல், நம் மனம் கெட்டுப்போதல் ஆகியவற்றைக் குணப்படுத்த நம்மால் நேரடியாக அறிவைக் கொடுக்கவோ, மனதை ஒழுங்குபடுத்தவோ முடியாது. மூன்றாவது காரணி இரத்தத்தின் அளவு குறைதல். ஆனால், இரத்தத்தின் அளவை நேரடியாக நம்மால் சரி செய்ய முடியாது. ஆனால், மிச்சமிருக்கும் இரண்டு காரணிகளான இரத்தத்திலுள்ள பொருட்களின் அளவு குறைவது அல்லது இல்லாமல் போவது, அவற்றின் தரம் குறைவது ஆகிய இரண்டையும் சரி செய்வது நம்மால் முடியும். இரத்தத்தின் எல்லாப் பொருட்களையும் நல்ல பொருளாக வைப்பது நம் கையில்தான் உள்ளது. எனவே, ஐந்து காரணங்களில் இந்த இரண்டு காரணங்களை மட்டுமே நாம் சரி செய்தால் போதும். இரத்தம் ஊறுவது, மனதைச் சரிப்படுத்துவது, உடல் அறிவைச் சரிப்படுத்துவது ஆகிய மற்ற மூன்று வேலைகளையும் உடலே செய்து கொள்ளும்.

ஆக, இரத்தத்தில் உள்ள எல்லாப் பொருட்களையும் நல்ல பொருட்களாக, தேவையான அளவில் வைப்பதே உலகத்தில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தப் போதுமான சிகிச்சை ஆகும்.
இனி, இதைச் செய்வது எப்படி என்கிற இரகசியத்தைக் கற்றுக் கொள்வோம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author