அனாடமிக் தெரபி (39)

சுவை மருத்துவம் – புளிப்புச் சிகிச்சை

புளிப்பு என்கிற சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் அந்தச் சுவையை ‘ஆகாயம்’ எனும் பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும். இந்த சக்திக்குக் கல்லீரல், கண்கள், பித்தப்பை – இவை மூன்றும் வேலை செய்யும்.

கண்ணுக்கும் கல்லீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இவை இரண்டும் வடிவத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும், கோப உணர்ச்சிக்கும் புளிப்புச் சுவைக்கும் கூட சம்பந்தம் உண்டு.
புளியம்பழத்தை நாக்கில் வைத்தால் நம் கண்கள் கூசுகின்றன. கண்களை மூடுகிறோம். ஏன்? அதில் உள்ள புளிப்புச் சுவை நாக்கில் பட்டு ஆகாய சக்தியாக மாறி உடல் முழுவதும் பரவுகிறது. ஆகாய சக்தியால் வேலை செய்யும் கண்கள் அதிக சக்தி கிடைப்பதால் கூசுகின்றன.

சாராயம் போன்ற போதைப் பொருட்களைச் சாப்பிட்டவருக்கு அடுத்த நாள் காலை கண்கள் சிவப்பாக இருக்கும். ஏன்? ஆல்கஹால் போன்ற போதைப் பொருட்கள் இரத்தத்தில் கலந்தவுடன் அந்தக் கெட்ட பொருட்களைப் பிரிப்பதற்காகக் கல்லீரல் இரவு முழுவதும் அதிகமாக வேலை செய்திருக்கும். நச்சுப் பொருட்களை வெளியேற்றக் கல்லீரல் உடலில் உள்ள ஆகாய சக்தியை முழுவதுமாகப் பயன்படுத்தியிருக்கும். இதனால், உடலில் ஆகாய சக்தி குறைந்து போயிருக்கும்.
காலையில் கண்கள் சிவந்திருக்கிறது என்றால் அது கண் சம்பந்தப்பட்ட நோய் கிடையாது. உடம்பில் ஆகாய சக்தி குறைவு என்பதே உண்மை.

கோபம் வந்தால் கண்கள் சிவப்பாகும். காரணம், கோபத்துக்கும் ஆகாய சக்திக்கும் தொடர்பு உண்டு என்பதால், அந்த உணர்ச்சி மனதில் எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது உடலில் உள்ள ஆகாய சக்தி முழுவதையும் சாப்பிட்டு விடும். இப்படி, உடலில் ஆகாய சக்தி குறைந்து விடுவதால் கண்கள் சிவந்து விடுகின்றன.

மதுப்பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்குக் கல்லீரல் கெட்டுப் போய்விடும் என்று கூறுவார்கள். கல்லீரல் கெட்டுப் போய்விட்டால் கோபம் அதிகமாக வரும். கோபம் அதிகமாக வந்தால் கல்லீரல் கெட்டுப் போகும். இப்படி புளிப்புக்கும் ஆகாயத்திற்கும், கல்லீரலுக்கும் பித்தப்பைக்கும், கண்ணுக்கும் கோபத்திற்கும் தொடர்பு உண்டு. இப்படித் தொடர்பு உண்டு என்று அறிந்த மருத்துவரால் மட்டுமே இந்த உறுப்புகளில் உள்ள நோய்களைக் குணப்படுத்த முடியும்.

கண்ணில் நோய் என்று ஒரு மருத்துவரைச் சந்தித்தால் அவர் கண்ணில் மட்டுமே ஆராய்ச்சி செய்கிறார், ஸ்கேன் செய்கிறார். அங்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறார். இது சரியான சிகிச்சை அல்ல! ஒருவேளை அந்த நோயாளிக்குக் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டதால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். புளிப்பு அதிகமாகச் சாப்பிட்டிருக்கலாம் அல்லது குறைவாகச் சாப்பிட்டிருக்கலாம். பித்தப்பையில் ஏதாவது பிரச்சினை இருக்கலாம். அல்லது, அடிக்கடி கோபப்படும் நபராக இருக்கலாம். அல்லது, மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம். இப்படிப் பல வகையான விஷயங்களை ஆராய்ச்சி செய்வதால் மட்டுமே நம் உடலில் உள்ள உறுப்புகளின் நோய்களைக் குணப்படுத்த முடியும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் மாங்காய் சாப்பிடுகிறார்கள்? குழந்தை உண்டாகும் முன்பு சாப்பிடுவதில்லை; குழந்தை பெற்ற பிறகும் சாப்பிடுவதில்லை. அது என்ன, கர்ப்ப காலத்தில் மட்டும் மாங்காய் சாப்பிடுகிறார்கள்? ஏனென்றால், கர்ப்பப்பையில் ஒரு செல்லாக இருக்கும் குழந்தையை முழுக் குழந்தையாக மாற்றுவது கல்லீரலின் முக்கியமான வேலை. எப்பொழுது கல்லீரல் அதிகமாக வேலை செய்கிறதோ அப்பொழுது மருந்து, சத்துபானம் போன்றவற்றை நம் உடம்பு கேட்காது. கல்லீரலுக்கு அதிக வேலை ஏற்பட்டால் உடலில் ஆகாய சக்தி தீர்ந்து விடுவதால் நாக்கு என்ற மருத்துவர் நம்மிடம் புளிப்பு என்ற மருந்தைத்தான் கேட்பார். கர்ப்ப காலத்தில் பெண்களுக்குப் புளிப்பு கொடுக்காமல் இருந்தால் குழந்தைக்கு, குழந்தை வளாச்சிக்கு பாதிப்பு ஏற்படும்.

எனவே, நாக்குதான் மருத்துவர், சுவைதான் மருந்து! எனவே, எப்பொழுது புளிப்பு சாப்பிட வேண்டும் என்று நாக்கு கேட்கிறதோ அப்பொழுது அதைச் சாப்பிடுவதன் மூலம் ஆகாய சக்தியை என்றுமே சீராக வைத்துக் கொள்ள முடியும். அதைச் சார்ந்த கண், கல்லீரல், பித்தப்பை ஆகிய உறுப்புகளையும் நல்லபடியாக வைத்துக் கொள்ள முடியும்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author