அனாடமிக் தெரபி (45)

உணவை ஜீரணம் செய்வது எப்படி?

உணவை எப்படிச் சாப்பிட்டால் அதில் உள்ள அனைத்து பொருள்களும் தரமான  பொருளாக இரத்தத்தில் கலக்கும் என்பதைப் பார்க்கப் போகிறோம்.

(1) பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்

உணவை இப்படிச் சாப்பிட வேண்டும்; அப்படிச் சாப்பிட வேண்டும். இதைச் சாப்பிட வேண்டும்; அதைச் சாப்பிட வேண்டும். இப்படி எதுவும் இல்லாமலேயே ஒரே ஒரு சிறிய வழிமுறை மூலமாக உணவை நல்லபடியாக ஜீரணமாக்க முடியும். அது என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி என்றால் என்ன? நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து, ‘நாங்க ரெடி. உணவை நல்லபடியாக ஜீரணமாக்கி இரத்தத்தில் கலக்குவதற்குத் தயார்!’ என்று உடல் நம்மிடம் பேசும் பாஷைதான் பசி.

பசி இல்லாமல் சாப்பிடுகிற ஒவ்வொரு உணவும் கழிவாக மாறுகிறது அல்லது விஷமாக  மாறுகிறது. நமது சிகிச்சையில் மிக, மிக, மிக, மிக முக்கியமான ஒரு ரகசியம் என்னவென்றால் பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். நேரம் நேரத்திற்கு ஒழுங்காகச் சாப்பிட்டால் எந்த நோயும் வராது என்று கூறுகிறார்கள். அது தவறு.  பசி எடுத்துச் சாப்பிடுவது என்பதும், நேரம் பார்த்துச் சாப்பிடுவது என்பதும் வேறு வேறு.

உதாரணமாகக் காலை பத்து மணிக்குச் சாப்பிடுகிறீர்கள். அதன் பிறகு எந்த வேலையும்  செய்யவில்லை. பெரிதாக உடலுக்கு நீங்கள் எந்த உழைப்பும் கொடுக்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். மதியம் இரண்டு மணியைக் கடிகாரத்தில் பார்த்தவுடன் நாம் என்ன நினைக்கிறோம்? இரண்டு மணியாகிவிட்டது. சாப்பிடலாம் என்று நினைக்கிறோம், ஆனால் பசிக்கிறதா என்று யோசித்தோமா? என்றால் இல்லை. காலை சாப்பிட்ட உணவே இன்னும் ஜீரணம் ஆகாமல் இரத்தத்தில் கலக்காமல் இருக்கும் பொழுது பசி இல்லாமல் நேரம் பார்த்து இரண்டு மணிக்கு
மதியம் உணவு சாப்பிட்டால் உடலுக்கு நோய் வரும். ஏற்கனவே வயிற்றில் இருக்கும் உணவும் ஜீரணமாகாது. இப்பொழுது புதிதாகச் செல்லும் உணவும் ஜீரணமாகாது.

உலகிலுள்ள அனைத்து நோய்களுக்கும் முதல் காரணம் பசி எடுக்காமல் சாப்பிடுவதுதான். இரண்டாவது உதாரணம் காலை பத்து மணிக்கு உணவு சாப்பிடுகிறீர்கள். கடினமாக உழைக்கிறீர்கள். பன்னிரெண்டு மணிக்குப் பசி எடுக்கிறது. நான் சாப்பிட மாட்டேன். நேரம் நேரத்திற்குத்தான் சாப்பிடுவேன். இரண்டு மணிக்குத்தான் சாப்பிடுவேன் என்று காத்திருந்தால் என்ன ஆகும்? வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் ஆஸிட் என்ற அமிலம் பன்னிரெண்டு மணிக்கு சுரந்து விடும். இரண்டு மணி வரை இந்த அமிலத்திற்கு சாப்பிட எதுவும் கிடைக்காததால் நீர்த்துப்போகும். எனவே, பசி எடுத்து இரண்டு மணி நேரம் கழித்துச் சாப்பிட்ட அந்த உணவு ஒழுங்காக ஜீரணமாகாது. எனவே, நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், நேரத்திற்குச் சாப்பிடுவதை விட நன்கு பசி எடுத்துச் சாப்பிடுவது சிறந்தது.

ஒரு நாளைக்கு மூன்று நேரம் சாப்பிட வேண்டும் என்பதை யார் உருவாக்கியது? ஒரு சிலரின் உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் ஒரு நாளில் ஐந்து முறை கூடச் சாப்பிடலாம். ஒரு சிலர் உடல் உழைப்பு குறைவாக இருக்கும். அவர்கள் இரண்டு முறை சாப்பிட்டால் போதும். எனவே, இன்று முதல் தயவு செய்து சாப்பிடுவதற்கு நேரம் பார்க்காதீர்கள். நாம் நம் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது உடல் பசி என்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறதோ
அப்பொழுதுதான் நீங்கள் உணவை சாப்பிடுவதைப் பற்றி யோசித்து அதன் பிறகுதான் சாப்பிட வேண்டும்.

"மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்" என்று திருவள்ளுவர் கூறுகிறார். யாக்கை என்றால் உடம்பு. எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவையே இல்லை. அருந்தியது அற்றது போற்றி உணின். அதாவது சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமான பிறகு மீண்டும் நன்கு பசித்த பின்பு உணவு அருந்தினால் எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவைப்படாது. எனவே, இந்தச் சிகிச்சையில் மிக முக்கியமான ஒரு விஷயம் பசி எடுத்த பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும்.
இந்த ஒரு விஷயத்தைக் கடைபிடிக்காமல் இதற்குப் பிறகு வரும் பல முறைகளைக் கையாள்வதன் மூலமாக உங்களுக்குப் பலன் குறைவாகவே கிடைக்கும்.

ஒரு நாளைக்கு மூன்று முறை மாதத்திற்கு 90 முறை உணவு சாப்பிடுகிறோம். எல்லோராலும் 90 முறையும் பசி எடுத்துச் சாப்பிட முடியாது. எனவே, ஆரம்பத்தில் மாதத்தில் குறைந்தது பத்து முறையாவது பசி எடுத்துச் சாப்பிட்டுப் பழகுங்கள்.போகப் போக இருபது முப்பது என்று அதிகப்படுத்தலாம். நம்மில் சிலர் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருப்போம். ஒரு மணிக்கு உணவு இடைவேளை ஆரம்பித்து, இரண்டு மணிக்கு வேலைக்குத் திரும்பப் போக வேண்டும். ஒருவேளை அப்பொழுது பசி இல்லையென்றால் என்ன செய்வது என்று கேள்வி வரும்.

மீண்டும் சொல்கிறேன். சில நேரங்களில் பசி இல்லாமல் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அந்த மாதிரி நேரங்களில் இனி கூறப்போகும் பல டெக்னிக்குகளைப் பயன்படுத்துங்கள். அதன் மூலமாக உணவு கழிவாகவும், விஷமாகவும் மாறுவதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். இருந்தாலும் வீட்டில் இருக்கும் பொழுது மட்டும் நம்மால் முடிந்த தருணங்களில் பசிக்காகக் காத்திருப்பது நல்லது. எனவே, தயவு செய்து பசி எடுத்த பிறகே உணவை உண்ணுங்கள்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்...

About The Author

1 Comment

  1. இரா.அ.பரமன்

    பசி எடுத்தபிறகுதான் சாப்பிடவேண்டும் என்பது சரியே. எப்படிப்பட்ட உட்லுழைப்புக்காரராக இருந்தாலும் அரோமணி தொழில் நுட்பப்படி (நன்றாக மென்று ஏப்பம் வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வது) அளவோடு சாப்பிடும்போது, 4 மணிநேர இடைவெளியில் பசி எடுத்து விடும். ஆகவே ஒரு உணவுக்கும் அடுத்த உணவுக்கும் 4 மணிநேர இடைவெளி விட்டு சாப்பிடலாம்

Comments are closed.