அனாடமிக் தெரபி (63)

ஒரு மனிதன் ஒரு நாளில் எவ்வளவு லிட்டர் நீர் அருந்த வேண்டும்?

இந்த விஷயத்தில் பலருக்கும் பல குழப்பங்கள் உள்ளன. சிலர் கூறுகிறார்கள், ஒரு நாளைக்குக் கண்டிப்பாக இரண்டு லிட்டர் நீர் அருந்த வேண்டும் என. சிலர் ஐந்து லிட்டர் என்று சொல்கிறார்கள்; சிலர் மூன்று என்கிறார்கள். இப்படிப் பல மருத்துவர்கள் அவரவர் விருப்பத்துக்குக் கூறுகிறார்கள். இப்படி யார் யாரெல்லாம் அளவு பார்த்துத் தண்ணீர் குடிக்கிறீர்களோ உங்களுக்கெல்லாம் சிறுநீரக சம்பந்தப்பட்ட எல்லா நோய்களும் வரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

ஒரு நாளில் ஒரு மனிதன் இவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஒரு கட்டாயம் கிடையவே கிடையாது. சுவிட்சர்லாந்து, நார்வே போன்ற குளிர்ச்சி அதிகமாக உள்ள நாடுகளில் நீங்கள் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீரைப் பருகினால் ஒரு வாரத்திற்குள் உங்கள் சிறுநீரகம் பழுதடைந்து விடும். இராஜஸ்தான், சகாரா போன்ற பாலைவனங்களில் வசிக்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் போதாது. ரோடு வேலை செய்யும் ஒரு நபர் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை வெயிலிலே, சுடும் தாரிலே பூட்சும், ஹெல்மெட்டும் அணிந்து வேலை செய்யும்போது அவருக்குக் கண்டிப்பாக ஐந்து லிட்டருக்கு மேல் தண்ணீர் தேவைப்படும். ஒரு கணினிப் பொறியாளர் குளிர்பதன அறையிலே வேலை செய்யும்போது ஒரு நாளைக்கு அவருக்கு ஒரு லிட்டர் போதும். ஒரு நாள் ரோடு வேலை செய்யும் ஒருவர், அடுத்த நாள் அவர் நண்பருடன் குளிர்பதனக் காரில் பயணம் செய்யும்போது அவருக்குத் தேவையான தண்ணீரின் அளவு மாறி விடுகிறது.
எனவே, ஒரு மனிதன் ஒரு நாள் எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என யாரும் சரியாகக் கூற முடியாது. இது வயது, உயரம், உடல் எடை, தட்பவெப்ப நிலை, நாடு, மனநிலை, வேலை, வேலை செய்யும் இடத்தில் உள்ள அறைகள் போன்றவற்றைப் பொறுத்து மாறும். இப்படி, இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் குடிக்கும்பொழுது சிறுநீரகம் தேவை இல்லாமல் வேலை செய்து பழுதாகிறது.

சரி; ஒரு நாள் ஒரு மனிதன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? அதைக் கண்டுபிடிக்கவே முடியாது. அவரவர் உடலுக்கு மட்டுமே அந்த அளவு தெரியும். தாகம் எடுக்கும்பொழுது மட்டுமே நீரை அருந்த வேண்டும். தாகம் எடுக்கும்பொழுது உங்களுக்குத் தேவையான அளவு, மனதிற்குப் பிடித்த அளவு, ஆசை தீரத் தண்ணீர் குடிக்க வேண்டும். அத்துடன் மீண்டும் எப்பொழுது தாகம் எடுக்கிறதோ அப்பொழுதுதான் மறுபடி தண்ணீர் அருந்த வேண்டும்.

குளிர் பிரதேசங்களில் இருக்கும் நபர்களுக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை தாகம் எடுக்கும். ஒவ்வொரு முறையும் கால் லிட்டர் தண்ணீர் அருந்தினால் தாகம் தீர்ந்து விடும். வெயில் பிரதேசத்தில் ஒரு நாளைக்குப் பத்து முறை தாகம் எடுக்கும். ஒவ்வொரு முறையும் அரை லிட்டர் தண்ணீர் தேவைப்படும். குளிர் பிரதேசத்தில் இன்று இருக்கும் ஒரு நபர் அடுத்த நாள் வெயில் பிரதேசத்திற்குச் சென்று விட்டால் அவரது தாகம் மாறும். எனவே, அளவு பார்த்துத் தண்ணீர் குடிக்காதீர்கள்! தாகம் எடுத்தால் தேவையான அளவு, மீண்டும் தாகம் எடுத்தால் தேவையான அளவு எனக் குடித்தால் உங்கள் உடம்புக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பதை உடம்பே பார்த்துக் கொள்ளும். இதுவே ஒரு நாளில் நாம் குடிக்கும் தண்ணீரின் சரியான அளவாகும்.
சில மருத்துவர்கள் “தண்ணீர் நிறையக் குடியுங்கள்” என்று கூறுவார்கள். இப்படி யார் யாரெல்லாம் தேவையான அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் குடிக்கிறீர்களோ உங்களுக்கெல்லாம் சிறுநீரகம் தேவையில்லாமல் வேலை செய்து பழுதடைவதற்கு வாய்ப்பு உள்ளது. தாகம் இல்லாமல், மருத்துவர் கூறுகிறார் என்று நீங்கள் தேவையில்லாமல் தண்ணீரை அருந்தினால் சிறுநீரகம் நம்மைத் திட்டும். சிறுநீரகம் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது நமக்குத் தாகம் என்ற உணர்ச்சி ஏற்படாது. தாகம் எடுக்காதபோது நாம் தண்ணீர் அருந்தினால், சிறுநீரகம் தான் செய்யும் வேலையை விட்டுவிட்டு நாம் குடித்த நீரை ஜீரணம் செய்ய வந்து விடும். இந்தத் தண்ணீரை ஜீரணம் செய்து முடித்து விட்டு மறுபடியும் தன் வேலையை அது செய்யச் செல்வதற்குள் மீண்டும் நாம் நீர் அருந்தினால், சிறுநீரகத்தின் வேலைகள் பாதிப்படைந்து சிறுநீரகக் கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சிறுநீரகம் பழுதடைவதற்கும் வாய்ப்பு உள்ளது.

அதே போல், தாகம் எடுத்துத் தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் சிறுநீரகம் பழுதடையும். தாகம் என்பது சிறுநீரகம் நம்மிடம் பேசும் மொழி. அதற்கு எப்பொழுது நீர் தேவைப்படுகிறதோ அப்பொழுது அது நமக்குத் தாக உணர்ச்சியை ஏற்படுத்தும்.
சிலர் பேருந்தில் அமர்ந்து பத்து ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து விடுவார்கள். நன்றாகத் தாகம் வரும். ஊருக்குச் சென்று வீட்டில் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விடுவார்கள். ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு வீட்டிற்குச் சென்று தண்ணீர் அருந்துவார்கள். இந்த ஐந்து மணி நேரமும் நம் உடல் நம்மிடம் தண்ணீர் கேட்டுக் கொடுக்காமல் இருந்தால் சிறுநீரகம் நம் உடல் உறுப்புகளில் உள்ள நீர் அனைத்தையும் உறிஞ்சித் தன் வேலையை முடித்துக் கொள்ளும். இதனால் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்துக்கும் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தாகம் எடுத்தால் உடனே தண்ணீர் குடிக்க வேண்டும்; குடிக்காமல் இருந்தால் நோய். அதே போல், தாகம் இல்லாமல் தண்ணீர் குடித்தாலும் நோய்!

ஆகவே, ஒரு நாளைக்கு இவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தேவையில்லாதது. மேலும், தண்ணீர் அதிகமாகக் குடித்தால் நோய் குணமாகும் என்ற தவறான செய்தியையும் மறந்து விடுங்கள்! தாகம் எடுத்தால் உடனே நீர் அருந்துங்கள்! ஆசை தீர, மனதிற்குப் பிடித்தது போல நீர் அருந்துங்கள்! மீண்டும் தாகம் எடுக்கும் வரை காத்திருங்கள். மீண்டும் தாகம் எடுத்தால் ஆசை தீரத் தண்ணீர் அருந்துங்கள்!

தண்ணீர் குடிக்கும்பொழுது இடது காலை வலது காலில் இருந்து சற்று முன்னால் வைத்து, இடது கையில் கோப்பையைப் பிடித்துக் குடிக்க வேண்டும் என்று என் குருநாதர் ஒருவர் கற்றுக் கொடுத்தார். இதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை என்றபோதிலும், இந்த முறையில் தண்ணீர் குடித்தால் நல்லது என்று பலர் கூறியிருக்கிறார்கள். எனவே, தண்ணீர் குடிக்கும் பொழுது இந்த முறையில் குடித்துப் பழகுவோம். இந்தத் தொடரைப் படிப்பவர்கள் யாருக்காவது இதற்குச் சரியான காரணம் தெரிந்தால் எழுதி அனுப்புங்கள்!

தண்ணீரைக் குடிக்கக் கூடாது சாப்பிட வேண்டும்!

"தண்ணீரைச் சாப்பிட வேண்டும்! உணவைக் குடிக்க வேண்டும்" என்று ஒரு பழமொழி உள்ளது. உணவை வாயில் வைத்து நன்றாக மென்று கூழ் போல மாற்றிக் குடிக்க வேண்டும்; தண்ணீரை மெதுவாக, உணவு சாப்பிடுவதைப் போலச் சப்பி சப்பிச் சாப்பிட வேண்டும் என்பதே அதன் பொருள்.

தண்ணீரில் ஆறு சுவைகள் உள்ளன! தண்ணீரை மெதுவாகச் சப்பி சப்பிக் குடிப்பது மூலமாக நம் உடலுக்குத் தேவையான அந்த ஆறு சுவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தண்ணீரில் உமிழ் நீர் கலந்து, வாயில் உள்ள நொதிகள் கலந்து உள்ளே செல்வதால் நம் உடலுக்குப் பல விதமான நன்மைகள் ஏற்படுகின்றன.

தண்ணீரையும் அதில் உள்ள கிருமிகளையும் நமது உடல் வெப்பநிலைக்கு ஏற்ப மாற்றுவதற்கு ‘டான்சில்’ எனப்படும் உறுப்பு உதவி செய்கிறது. அண்ணாந்து, வேகமாகக் கடகடவெனத் தண்ணீர் குடிக்கும்பொழுது, தண்ணீர் டான்சில் வழியாக வேகமாகக் கடந்து செல்வதால் டான்சிலும் அதற்கேற்ப வேகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இதனால், அதில் நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, தண்ணீரை எவ்வளவு மெதுவாகக் குடிக்கிறோமோ அவ்வளவு தூரம் நம் உடலுக்கு ஆரோக்கியமும் சக்தியும் கிடைக்கும். டான்சில் வீக்கம், மூச்சிரைப்பு (wheezing), நெஞ்சுச் சளி, சைனஸ் போன்ற எந்த வியாதியும் நமக்கு வராது; வந்தாலும் உடனே குணமாகி விடும்.

எனவே, தண்ணீரை மெதுவாகச் சப்பிச் சப்பிச் சுவையை ரசித்துக் குடியுங்கள்! வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author