அனாடமிக் தெரபி (71)

தேநீர், காபி, போதைப் பொருட்களைச் சாப்பிடக்கூடாது

தேநீர், காபி, போதைப் பொருட்கள் தூக்கத்திற்கு எதிரி. புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற போதைப் பழக்கங்கள் இருப்பவர்களுக்குத் தூக்கம் ஒழுங்காக வராது. இவற்றை நிறுத்தாமல் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காது! உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்காது!

போதைப் பொருட்கள் உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தும் என்பது நமக்கு ஏற்கெனவே நன்றாகத் தெரிந்ததுதான் என்பதால் அதைப் பற்றி இங்கு அதிகமாகக் கூற விரும்பவில்லை. எனவே, தேநீர், காபி குடித்தால் தூக்கம் கெட்டுப்போவது பற்றி நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

தூக்கம் வர வேண்டும் என்றால் மூளைப் பகுதியில் செரடோனின், டோப்பாமின் என்ற சுரப்பிகள் சுரக்க வேண்டும். இவை சுரந்தால் மட்டுமே நமக்குத் தூக்கம் வரும். தேயிலையில் டேனின் என்ற நச்சுப்பொருளும், காபியில் காபின் என்ற நச்சுப்பொருளும் உள்ளன. இந்த இரண்டும் நம் உடலுக்குள்ளே செல்லும்பொழுது நேரடியாக மூளைப்பகுதிக்குச் சென்று தூக்கத்திற்கான சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகின்றன. ஏற்கெனவே அவை சுரந்துவிட்டிருந்தால் சுரந்த திரவங்களைச் சிறுநீர் வழியாக வெளியே அனுப்பி விடுகின்றன.

ஒரு கோப்பைத் தேநீர் அல்லது காபி அருந்தினால் குறைந்தது 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை நமக்குத் தூக்கத்திற்கான சுரப்பிகள் சுரக்காது. அதுவும் நீங்கள் அருந்தும் பானத்துடைய திடத்தை (strong) பொறுத்து இது மாறுகிறது.
நமக்கு மாலை 6 மணிக்கு இலேசாகத் தூக்கம் வருவதுபோல இருக்கும். ஆனால், நாம் படுத்துத் தூங்க மாட்டோம். தூக்கம் வருவதுபோல் ஓர் உணர்வு ஏற்பட்டால் என்ன அர்த்தம்? மூளைக்குள் தூக்கத்திற்கான சுரப்பிகள் சுரந்துவிட்டன என அர்த்தம். ஆனால் நாம், நமக்கு இருக்கும் அற்ப வேலைகளுக்காக ஒரு தேநீர் அல்லது காபி குடித்துத் தூக்கத்தைத் துரத்திவிட்டு வேலை செய்கிறோம். பிறகு இரவு 9 மணிக்குப் படுத்து, ‘தூக்கம் வரவில்லையே, வரவில்லையே’ எனக் கவலைப்படுகிறோம்.
நீங்கள் அருந்தும் தேநீர் அல்லது காபியின் திடத்தைப் பொறுத்துப் பல மணி நேரத்திற்குத் தூக்கம் வராது. இதைப் புரிந்து கொள்ளாமல் தூக்கம் வரவில்லையே என்று கவலைப்பட்டு, அந்தக் கவலையால் மேலும் பல நோய்களை நாம் சம்பாதித்துக் கொள்கிறோம்.

ஒரு நாளில் நீங்கள் 5 முறை தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் கண்டிப்பாக உங்களுக்குத் தூக்கத்தில் பிரச்சினை இருக்கும். எனவே, தூக்கம் இல்லாமல் கவலைப்படுபவர்கள் தயவு செய்து தேநீர், காபி, போதைப் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து வெளியே வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.

தேநீரும், காபியும் எந்த ஊரில் விளைகின்றனவோ அந்த ஊர் மக்கள் மட்டுமே சாப்பிட வேண்டியவை. உதாரணமாக, தேயிலைகள் குளிர்ச்சியான பிரதேசத்தில் மட்டும்தான் விளையும். அந்த இடங்களில் தேநீர், காபி சாப்பிட்டால் உடலில் மேற்படி நோய்கள் வராது. ஏனென்றால், குளிர்ச்சியான பிரதேசங்களில் நமக்குப் போதுமான அளவு உடற்சூடு இருக்காது. சோம்பலாக இருக்கும். எந்த வேலையும் செய்வதற்கு விருப்பம் இருக்காது. எனவே அப்பொழுது தேநீர் சாப்பிட்டால் அதிலுள்ள கசப்புச் சுவையும் மற்றுமுள்ள பொருட்களும் நம் உடலை ஊக்குவித்து, வேகமாக வேலையைச் செய்ய வைக்கும். எனவே, எந்த ஊரில் தேயிலை, காபிக்கொட்டை விளைகிறதோ அந்த ஊர் மக்கள் அவற்றைச் சாப்பிடுவதால் தவறு ஏதும் இல்லை. மற்ற ஊர்களில் உள்ளவர்கள் அதைச் சாப்பிடுவதால் அது உடலுக்கு நோயைத்தான் உண்டு செய்கிறது.

சைனாவில், சாப்பிட்டவுடன் குறைவான அளவில், பால் இல்லாத காபி அல்லது பால் இல்லாத் தேநீர் அருந்துவார்கள். அது செரிமானத்துக்காக. நாமும், தேவைப்பட்டால் மிகவும் குறைவாக, 1/4 டம்ளர் தேநீர் அல்லது காபியை, பால் இல்லாமல், வெள்ளைச் சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். இரண்டு வாய் (சிப்) சாப்பிட்டால் மருந்து; ஆனால், ஒரு டம்ளர் சாப்பிட்டால் விஷம்!

உங்கள் ஊரில் அதிகமாக எந்த வகைக் காய்கறிகள், பழங்கள் விளைகின்றனவோ அவையே உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவு! சில நாடுகளில் அரிசி அதிகமாக விளையும். அந்த மக்கள் அரிசிச் சாதத்தைச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள். சில நாடுகளில் கோதுமை அதிகமாக விளையும். அவர்கள் அதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

ஆப்பிள், பிளம் போன்ற, குளிர்ப் பிரதேசங்களில் விளையும் பழங்களை மற்ற ஊர்களில் இருப்பவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுகிறோம். குளிர்ப் பிரதேசங்களில் உள்ள மக்கள் கடினமான பொருட்களாகிய சப்பாத்தி, புரோட்டா, சாப்பாடு போன்றவற்றைச் சாப்பிட்டால் செரிக்காது என்பதற்காக அந்த ஊரில் இவை போன்ற மென்மையான உணவுகள் உற்பத்தியாகின்றன. அவை அந்த நாட்டு மக்களுக்குப் பொருந்தும். ஆனால், மற்ற ஊர்களுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் ஆசைக்காகச் சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், அவற்றை நாம் அதிகமாகச் செலவு செய்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்!

அதே போல், வெளிநாட்டில் விளையும் ஓட்சை (oats) அதிக விலை கொடுத்து வாங்கி நாள்தோறும் சாப்பிடுவதும், இந்த நாட்டில் விளையும் கோதுமையைக் கொண்டு சென்று வெளிநாடுகளில் வேறு பெயர் சொல்லி விற்பதும் நகைச்சுவையாக உள்ளது.

தர்பூசணி வெயில் காலத்தில் மட்டுமே அதிகமாக விளைச்சல் கொடுக்கும். மக்கள் வெயிலில் வாடுகிறார்கள் என்பதற்காக இறைவன் அந்த நேரத்தில் இந்தப் பழங்களை அனுப்பி வைக்கிறார். இப்படித்தான் எல்லாத் தானியங்களும், பழங்களும், காய்கறிகளும் அந்தந்தப் பகுதிக்கேற்ப, ஒவ்வொரு பருவத்திற்கேற்ப விளைகின்றன. இதைப் புரிந்து கொண்டு அந்தந்தப் பகுதியில் வாழ்பவர்கள், அவ்வப்போதைய பருவநிலைக்கேற்ப உணவுப்பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் செலவும் மிச்சமாகும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author