அனாடமிக் தெரபி (75)

யோகாவின் எட்டுப் படிநிலைகள்

1. இயமம்: இயமம் என்பது என்னவென்றால், நாம் எதை எதைச் செய்யக்கூடாது என்பதைப் புரிந்து கொள்ளும் ஒரு கலை. நாம் எந்தெந்தத் தவறான பழக்க வழக்கங்களினால் உடல், மனம், புத்தி, உயிரைக் கெடுத்துக் கொள்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டு அந்தக் காரியங்களைச் செய்யாமல் இருப்பதே இயமம் ஆகும்.

2. நியமம்: நாம் எதை எதைச் செய்ய வேண்டும், நல்ல பழக்க வழக்கங்கள் என்ன, அவற்றைச் செய்வதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் ஒரு கலை நியமம் ஆகும்.

3. ஆசனம்: ஆசனம் என்பது நம் உடலிலுள்ள அனைத்து தசைகளுக்கும், எலும்புகளுக்கும், அனைத்து உறுப்புகளுக்கும் அசைவைக் கொடுத்து உடலிலுள்ள நிணநீர் ஓட்டத்தைச் சரி செய்வதற்கான ஒரு பயிற்சி. ஆனால், நம்மில் பலர் ஆசனம் செய்வதை மட்டுமே யோகா என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.

4. பிராணாயாமம்: நமது உடலில் பிராண உடல் என்று ஒன்று உள்ளது. மூச்சுப் பயிற்சிகள் மூலமாக – குறிப்பாக, நாடிஸ்ருதி, பஸ்திரிகா, கபாலபதி, பிராணாயாமம், அக்னிஷார் போன்ற பல பயிற்சிகள் மூலமாக – உடலிலுள்ள மூச்சுக் காற்றை ஒழுங்குபடுத்திப் பிராண உடலைச் சரி செய்யும் கலைக்குப் பெயர் பிராணாயாமம்.

5. பிரத்தியாகாரம்: பிரத்தியாகாரம் என்பது நமது உடலிலுள்ள ஐந்து இந்தியரிங்களை – அதாவது, பார்த்தல், முகர்தல், கேட்டல், சுவைத்தல், தொட்டு உணர்தல் ஆகிய ஐந்து உணர்ச்சிகளை – அடக்கி வைக்கிற அல்லது மறக்கடிக்கும் ஒரு நிலைக்கான பெயர்.

6. தாரணை: நம் மனம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டிருந்தால் அதற்குப் பெயர் தாரணை என்று கூறுவார்கள். நம் மனம் வேறு எந்த விஷயத்தையும் கவனிக்காமல் ஒரு பொருளையோ, ஒரு பூவையோ, குல தெய்வத்தையோ, நமக்குப் பிடித்த நபரையோ மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கும்போது மனம் ஒடுங்கும். இதற்குத் தாரணை என்று பெயர்.

7. தியானம்: தியானம் என்பது என்ன? தாரணையின்பொழுது ஒரே ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டிருக்கும் நாம், அந்த ஒரு விஷயத்தையும் மறந்து, எதையும் நினைக்காமல், ஐந்து இந்திரியங்கள் மூலமாக எதையும் உணராமல் சும்மா இருப்பது. இது குறுகிய காலத்தில், – அதாவது ஒரு நிமிடம், இரு நிமிடம் போன்ற குறுகிய கால அளவில் செய்யப்படுவது.

8. சமாதி: நீண்ட நேரமாக – அதாவது, ஒரு மணிநேரம், இரண்டு மணி நேரம் – நாம் தியானத்தில் இருந்தால் அதற்குப் பெயர் சமாதி.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author