அன்னையர் பூமி

நவம்பர் பதினஞ்சு. நம்ம ஆளுடைய பிறந்த நாள்.

காலையில் ரெண்டு பேரும் கோவிலுக்குப் புறப்பட்டோம். ட்ராஃபிக் நெரிசலில் பைக் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்த போது, "என்னங்க கொஞ்சம் நில்லுங்க, நில்லுங்க" என்று பின்னாலிருந்து என் தோளை உலுக்கினாள்.

"இந்த நோட்டீஸைப் பாருங்களேன்" என்று பக்கத்துச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஒரு மினி போஸ்டரைக் காட்டினாள்.

‘தயவு செய்து இதைக் கிழிக்காதீர்கள்’ என்கிற கோரிக்கையுடன், மகேஷ் என்கிற அஞ்சு வயசுச் சிறுவன் காணாமற் போன அறிவிப்பு அச்சிடப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட ஆறு மாசமாய் சென்னை நகரின் சுவர்களிலும் தண்ணி டாங்க்கர்களின் பின்னாலும் இதே போஸ்டரைப் பலமுறை பார்த்திருக்கிறேன் என்கிற விஷயத்தை இவளிடம் சொன்னபோது, "என்னங்க இவ்வளவு அலட்சியமாச் சொல்றீங்க?" என்று பதறினாள்.

"அப்பறம் நா என்னம்மா செஞ்சிருக்கணுங்கற? பையனைக் கடத்திட்டுப் போனது யார்னு துப்பறியச் சொல்றியா? அது போலீஸோட வேலை. நாம என்னம்மா செய்ய முடியும்?"

"நம்மால எது முடியுமோ அதச் செய்ய முயற்சி செய்யலாம்ல? எத்தனையோ தடவ இந்த நோட்டீஸப் பாத்ததாச் சொல்றீங்களே, ஒரு தடவையாவது இந்த ஃபோன் நம்பர நோட் பண்ணீங்களா?"

சுருக்கென்றது.

‘ஆமா, நோட் பண்ணியிருக்கலாம்ல?’ என்கிற உரத்த சிந்தனையோடு, மகேஷ் என்கிற பெயரையும், ஃபோன் நம்பரையும் குறித்துக் கொண்டேன். ஃபோட்டோவிலிருந்த முகத்தை மனசில் பதித்துக் கொண்டேன்.

"அஞ்சு வயசுக் கொழந்தைங்க. பாவம் எங்க இருக்கானோ என்ன கஷ்டப்படறானோ, அவனப் பெத்தவங்க என்ன வேதனையில இருக்காங்களோ?" என்று வழி நெடுக அங்கலாய்த்துக் கொண்டே வந்தாள்.

கோவிலில், "யாரு பேருக்கு அர்ச்சன பண்ணனும் சாமி?" என்று அர்ச்சகர் கேட்டதற்கு, இவளுடைய பெயரை நான் முன்மொழியும் முன், என்னை முந்திக் கொண்டு இவள் குரல் கொடுத்தாள்:

"மகேஷ்".

(ஆனந்த விகடன், 15.08.2004)

About The Author