அப்பா (3)

அரங்கநாயகி அப்பா, அப்பா என்று கை நீட்டி என்னைக் காட்டிக் கொண்டிருந்தாள். வீடு நுழைகையில் உள்ளிருந்து ஓடி வந்த ராஜாமணி, ‘யாரு’ என்று முகம் பார்த்தாள். "வாங்கோ."

அரங்கநாயகியும் அப்பா ஊர் வந்தபோது கொடுத்த மாதிரி கலர் பனியன், ஜட்டி போட்டிருந்தாள். அவளுக்குக் கொஞ்சம் பெரிதாக தொளதொளவென்றிருந்தது. "அரங்கநாயகி நல்லா இருக்கே. யார் வாங்கிக் கொடுத்தா… தாத்தாவா?" என்றேன்.

"இல்லீங்க போன ரெண்டு வாரம் முன்னே பனியன் கம்பெனியிலிருந்து கொண்டு போன சரக்கை வழியிலே நிறுத்தி இறைச்சும், தீ வெச்சும் கலாட்டா நட்ந்துச்சு… ஒத்தக் கண் பாலம் பக்கம் போன இவங்கப்பா இறைஞ்சி கெடந்ததுன்னு ரெண்டு அட்டைப் பெட்டிகளோடு எடுத்துட்டு வந்தாரு. அதுலே ஜட்டிகளும், பனியன்களும் இருந்துச்சு. அதிலிருந்துதான் சிவகுமாருக்கும் குடுத்துட்டாங்க இவங்கப்பா…"

கொஞ்சம் நேரம் கழித்துச் சோர்வுடன் வந்த வெங்கடேஷ் உண்ணாவிரதம் இருந்த தொழிற்சங்கத் தலைவர்களைப் போலீஸ் கைது பண்ணின செய்தியைச் சொன்னான். அங்கிருந்துதான் திரும்பினானாம். கைதின் போது போலீஸ் தடியடி நடத்த வேண்டி ஆனதாம்.

வீட்டின் சூழலும் வெறுமையும் ஒரு இரவுத் தங்கலுக்குக்கூட சங்கடமளித்தது. குழந்தை அரங்கநாயகிகூட கவலை கொண்டவர்களின் முகம் பார்த்து அதே சாயல் கொள்ள முயற்சித்த மாதிரி இருந்தது.

திரும்புகையில் அப்பாவைத் தேடினேன். பெரியக்கா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருப்பதாய்ச் சொன்னார்கள். எனக்காகவே காத்திருக்கிற மாதிரி நாலைந்து பேர் தெருவை வெறித்து எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். அப்பா என்கூட நடந்தார். "பஸ் ஸ்டாண்டுக்கே போயிடிரியா…"

வெங்கடேஷிடம் பணம் கொடுத்திருப்பதாயச் சொன்னேன். நடந்துகொண்டே பதினைந்து ரூபாயைக் கையில் வைத்தேன். "தாத்தா ஊருக்குப் போறேன்னு சொன்னதும் சிவகுமார், ‘எந்தத் தாத்தாப்பா… – ஜட்டித் தாத்தாவா, ஜட்டித் தாத்தா’ன்னான். உங்க பேரை கிச்சு முச்சுத் தாத்தாவிலிருந்து இப்படி மாத்திட்டான். எல்லாத்துக் கிட்டேயும் ஜட்டியும் பனியனும் காமிச்சு ஜட்டித் தாத்தா குடுத்துச்சுங்கறான்…" அவற்றையெல்லாம் நான் கொஞ்சம் வலிந்து சொன்னமாதிரிதான் பட்டது. பணத்தைப் பாக்கெட்டில் வைத்தபடியே தாராளமாய்ச் சிரித்தார். "அவனை ஒரு கை கூட்டிட்டு வந்திருக்கலாமில்லே… கொழந்தே மொகம் பாத்தாலே ஒரு சொகந்தா… சொமெ ஒரு பாடு கொறையுமே" என்றார் வெறிச்சென்றிருந்த வீதியைப் பார்த்தபடியே.

(முடிந்தது)

About The Author