அப்பு (2)

"நான் கொஞ்சம் வெளியில் போய் வருகிறேன்" என்றவாறு ஆறுமுகம் சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டு அவசரமாகப் புறப்பட்டார். சாரதாவுக்கு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அவள் அறிந்தவரை எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும், மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வெடுத்த பின்புதான் அப்பா அதைத் தொடருவார். எதற்கும் எளிதில் கலங்காத அவர், அப்புவைக் காணாமல் இப்படிப் பதறுகிறார் என்றால், உள்ளுக்குள் எத்தனைப் பிரியம் வைத்திருப்பார் என்று எண்ணினாள். அண்ணன் மேல் உள்ள பிரியத்தையும் இப்படித்தான் மூடி வைத்திருக்கிறாரோ என்ற எண்ணமும் எழுந்தது.

சற்று நேரத்தில் சோர்ந்து போனவராக திரும்பி வந்தார் ஆறுமுகம். எப்படியோ, அன்று இரவு அப்பு வீட்டுக்கு வந்துவிட்டது. அதைப் பார்த்த பிறகுதான் அவரிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. "எங்கே போயிருந்தே? நாய்வண்டியைப் பார்த்து பயந்து விட்டாயா? ம்…..?" என்று கேட்டுவிட்டு "ஹ்ஹா….ஹ்ஹா…." என்று உரக்கச் சிரித்தார். அதுவும் எல்லாம் புரிந்ததுபோல் வாலை ஆட்டிக்கொண்டு அவர் முன் நின்றுகொண்டிருந்தது. அதன் காதோரம் இருந்த காயத்தை சிவகாமி சுட்டிக் காட்ட, "இது வழக்கம்தானே! எங்கேயாவது போய் வேறு நாயுடன் சண்டை போட்டிருக்கும்" என்றார். சிவகாமி வேப்பெண்ணெய் கொண்டுவந்து காயத்தில் தடவினாள். கறியும், சோறும் கொண்டு வந்து வைக்க வேகவேகமாகச் சாப்பிட்டது. ஆறுமுகம் அதை ரசித்துக்கொண்டு நின்றிருந்தார்.

அதன் பிறகு அப்பு வெளியில் செல்வதையே தவிர்த்து வந்தது. அதனிடமிருந்த துறுதுறுப்பு எல்லாம் அடியோடு போய்விட்டது. சரியாகச் சாப்பிடுவதுமில்லை. எப்போதும் சோர்ந்துபோய் படுத்தே இருந்தது. யாராவது அருகில் சென்றால், எப்போதும் இல்லாத புது வழக்கமாக, ‘உர்ர்….. உர்ர்….’ என்று உறுமியது. சிவகாமியே அதன் அருகில் போகப் பயந்தாள். அப்புவின் சாப்பாட்டை ஈக்களும், எறும்புகளும் மொய்த்துக்கொண்டிருந்தன.

ஆறுமுகம் அப்புவின் நிலையைக் காணச் சகியாமல் ஏழுமலையைக் கூட்டி வந்தார். ஏழுமலை, ஆறுமுகத்திடம் முன்பு வேலை பார்த்தவன். அவரிடம் மிகுந்த விசுவாசம் கொண்டவன். அவனிடம், அப்புவைக் கொண்டு போய் மிருக வைத்தியரிடம் காட்டுமாறு சொன்னார் ஆறுமுகம். அப்பு அவனை நெருங்கவே விடவில்லை. எட்ட நின்று சற்று நேரம் அதையே உற்றுப் பார்த்தவன், ஆறுமுகத்திடம் ஏதோ சொல்ல, அவரும் யோசனையுடன் தலையசைத்தார். பின் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தனுப்பினார். சிவகாமி விவரம் கேட்க, "நாளை வந்து தூக்க மருந்து கொடுத்து தூங்கச் செய்து, பின் கொண்டுபோவதாகக் கூறியுள்ளான்" என்றார்.

ஏழுமலை சொன்னதை அப்படியே சொல்ல அவருக்கு வாய் வரவில்லை. ஏழுமலை நாயை உற்றுப் பார்த்தபோதே அது வெறிநோய்க்கு ஆளாகியிருப்பதை கணித்து விட்டான். அதன் தலையில் காதுக்கு மேற்புறம் இருந்த காயம் புரையோடிப் போயிருந்தது. கொஞ்ச நாளாகவே யாரையும் அருகில் நெருங்க விடாததால் காயத்தைக் கவனிக்க முடியாமல் போய்விட்டது. அது வைத்தியம் செய்யும் நிலையைக் கடந்திருந்தது. இப்படியே விட்டால், ஒன்று, பார்ப்போரையெல்லாம் கடிக்கின்ற நிலை வரலாம். அல்லது, இப்படியே உணவின்றிக் கிடந்து, கொஞ்சங்கொஞ்சமாக சித்திரவதைக்குள்ளாகி உயிரை விட நேரிடலாம். எந்த நிலையிலும் யாரையும் கடிப்பதற்கான சாத்தியம் அதிகம். எனவே, அவன் பரிந்துரைத்தது இதுதான். "பூனைகளை சுருக்கு மாட்டிப் பிடிக்கும் நரிக்குறவர் குழாம் ஒன்று அப்போது கிராமத்தில் முகாமிட்டிருந்தது. அவர்களிடம் சொன்னால் ஒரே சுருக்கில் அப்புவின் கதையை முடித்துவிடுவார்கள். அப்புவின் அவஸ்தையும் நீங்கும்; அதைப் பார்த்து நித்தம் வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும் சிவகாமியின் கவலையும் நீங்கும்; அது யாரையும் கடித்து வைத்துவிடுமோ என்று நாளும் பயப்படவும் தேவையில்லை" என்றான். ஆறுமுகம் அவனுடைய யோசனைக்கு அரைமனதாக சம்மதித்து, பணமும் கொடுத்தனுப்பினார். இது தெரிந்தால் சிவகாமியும், சாரதாவும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அப்புவை அங்கிருந்து வெளியேற்றி, எங்காவது கண் காணாத இடத்தில் அதைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆறுமுகம் அப்புவையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பு தலையைத் தரையில் ஊன்றி, கண்களை மட்டும் மேலேற்றி அவரையே பார்த்தவண்ணம் படுத்திருந்தது. வாலை மட்டும் மெதுவாக ஆட்டியபடியே இருந்தது. அன்றிரவு சாப்பிடப் பிடிக்கவில்லை. சிவகாமி காரணம் கேட்டதற்கு எரிந்து விழுந்தார். நெடுநேரம் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டியபின் அப்படியே உறங்கிப் போனார்.

காலையில் ஏழுமலை ஆட்களைக் கூட்டி வந்தபோது, அப்பு இறந்து கிடந்தது. யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் தானே போய்ச் சேர்ந்திருந்தது. ஆறுமுகம் ஒரு குற்றத்தைச் செய்யாமல் தப்பியது போல் உணர்ந்தார். சாகும்போது கூட அவரை வாட்டாமல், மனவேதனைப்படுத்தாமல், அமைதியாய் இறந்து கிடந்த அப்புவைப் பார்த்தார். நேற்று அவரும், ஏழுமலையும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருக்குமோ என்று அஞ்சினார்.

அதற்குப் புரியாமல் இருக்குமா? சில சமயங்களில் அப்பு, நான்கு தெரு தள்ளி எங்காவது நின்றுகொண்டிருக்கும். அவரை அங்கு பார்த்துவிட்டால் ஓடி வந்து வாலாட்டி நிற்கும். ‘வீட்டுக்குப் போ!’ என்றதும், விழுந்தடித்துக்கொண்டு அவருக்கு முன் வீட்டில் வந்து நிற்கும். "ஏன் ஊரைச் சுற்றிவிட்டு வருகிறாய்?’ என்றால் குற்ற உணர்வுடன் தரையைப் பார்த்துக் கொண்டு நிற்கும். ‘இன்று உனக்கு சாப்பாடு கிடையாது’ என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான்! தட்டை வாயில் கவ்விக் கொண்டுவந்து அவர் முன்னே வைத்து இறைஞ்சுவது போல் பார்க்கும். இத்தனை விஷயங்களைப் புரிந்துகொண்ட அப்புவுக்கு, தன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள் என்பது மட்டும் புரியாமலா போயிருக்கும்? குட்டியிலேயே என்றோ செத்திருக்க வேண்டியது! தன்னைக் காப்பாற்றி வளர்த்தவர்களே , தன்னைக் கொன்று அந்த பாவத்தைச் சுமக்க வேண்டுமா என்று எண்ணியிருக்குமோ? ஆறுமுகத்தின் மனம் மிகுந்த வேதனைப்பட்டது.

ஆறுமுகம் மலை போல அப்படியே அமர்ந்திருந்தார். சோகம், சந்தோஷம் எதையும் வெளிக்காட்டும் சுபாவம் அவருக்கில்லையாதலால், இறுகிய முகத்துடன் ஏழுமலை குழி தோண்டுவதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். சிவகாமிதான் அழுது தீர்த்தாள். ”பிள்ளை மாதிரி வளர்த்தேனே! இப்படி அநியாயமாகப் போய்விட்டாயே!” என்று கதறினாள். அம்மா அழுவதைப் பார்த்து சாரதாவுக்கும் அழுகை வந்தது.

கொல்லைப்புறத்தில் ராஜாவுக்குப் பக்கத்தில் அப்பு புதைக்கப்பட்டது. சிவகாமி அந்த இடத்தில் பாலூற்றி, பூ வைத்துக் கும்பிட்டாள். சில நாட்களுக்கு, கொல்லைப்புற வாயிலைத் தாண்டும்போது தன்னையறியாமல்’ ‘ஷ்ஷூ…ஷ்ஷூ..” என்று குரல் கொடுத்துக் கொண்டே தாண்டினாள். சாரதாவிடம் அப்புவுக்குச் சோறு எடுத்து வைக்கவேண்டும் என்று நினைவூட்டினாள். சாரதா அம்மாவைத் தேற்றினாள்.

ஆறுமுகம் எப்போதும் போல், "ஏழுமலையை வேலி கட்ட வரச் சொன்னேனே.. வந்தானா?" "துணியெல்லாம் உலர்ந்து விட்டதே! எடுக்கக்கூடாதா?" போன்ற கேள்விகளுடன் நுழைந்தார்.

ஓருநாள், ஆறுமுகம் வெளியில் போய்விட்டு வரும்போது, வழக்கத்துக்கு மாறாக அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை சாரதா கவனித்தாள். "என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்கள் மனதில்? நானும் ஒரு மனுஷிதானே! எத்தனை இழப்புகளைத்தான் தாங்குவது? என்னால் முடியாது, ஐயா! ஆளை விடுங்கள்! இனிமேல் எல்லாவற்றையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். சாரதா ஓடி வந்து பார்த்தாள். ஆறுமுகம் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். அவர் கையில் இருந்த வத்தலும், தொத்தலுமான ஒரு சோனி நாய்க் குட்டி, அவளைப் பார்த்து வேகவேகமாக வாலாட்டியது. இதற்கு என்ன பெயர் வைக்கலாமென்று சாரதா யோசனையில் ஆழ்ந்தாள்.

About The Author

4 Comments

Comments are closed.