அமானுஷ்யன்-107

சலீம் உடனடியாக சற்று தள்ளிச் சென்று லாட்ஜ் ஆசாமிக்குப் போன் செய்தான்.

எடுத்தவுடன் லாட்ஜ் ஆசாமி கேட்டான். "அந்த சைத்தான் கிடைத்து விட்டானா?"

சலீம் சொன்னான். "கிடைத்து விட்டான். வெறுமனே அவனைக் கொல்வது என்றால் இதற்கு முன்னாலேயே நான் கொன்றிருப்பேன். அவனிடம் ஏதோ ரகசியம் கறக்க வேண்டும் என்று சொன்னதால் தான் செய்யவில்லை. இப்போது அவன் அந்த ரகசிய ஆதாரங்கள் வைத்து இருக்கும் இடம் எனக்குத் தெரிந்து விட்டது."

லாட்ஜ் ஆசாமி பரபரப்புடன் கேட்டான். "எங்கே"

"ஜம்முவில் செயிண்ட் ஆண்டனீஸ் சர்ச் எதிரே இருக்கும் ஜம்மு காஷ்மீர் பேங்கில் உள்ள லாக்கரில் வைத்திருக்கிறான். இப்போது அங்கே அவன் போய்க் கொண்டிருக்கிறான். ஒருவேளை அவன் அதை எடுத்துக் கொண்டு விட்டால் நீங்கள் அத்தனை பேரும் அழிந்த மாதிரி தான். அவன் எடுப்பதற்கு முன் நீங்கள் முந்த வேண்டும்….."

லாட்ஜ் ஆசாமி சில வினாடிகள் யோசிக்க சலீம் பொறுமையில்லாமல் சொன்னான் "….உடனடியாக அந்த மந்திரிக்குப் போன் செய்து அந்த பேங்க் லாக்கரில் உள்ள ஆதாரத்தைக் கைபற்றச் சொல்லுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவனை அங்கேயே கைதும் செய்ய முடியும். அவனை தீவிரவாதியாக விளம்பரம் செய்த அவர்களுக்கு இது சுலபம். இப்போது ஒவ்வொரு வினாடியும் உங்களுக்கு முக்கியமானது. மந்திரியிடம் பேசி விட்டு என்னிடம் பேசுங்கள்"

சலீம் பேசி முடித்த பிறகு லாட்ஜ் ஆசாமி சிறிதும் யோசிக்கவில்லை. வழக்கமாக குறுந்தாடிக்காரன் மூலமாகத் தான் மந்திரியிடம் அவன் தொடர்பு கொண்டிருக்கிறான். ஆனால் இந்த முறை நேரம் இல்லை என்பதால் நேரடியாக மந்திரியின் தனிப்பட்ட செல் போன் எண்ணிற்கு போன் செய்தான்.

அந்த நேரத்தில் மந்திரியுடன் ராஜாராம் ரெட்டியும் இருந்தார். லாட்ஜ் ஆசாமி சலீம் சொன்ன விவரங்களை சலீம் பெயரைச் சொல்லாமல் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல ஸ்பீக்கரை ஆன் செய்தார் மந்திரி. அதனால் அவன் பேசியதை ராஜாராம் ரெட்டியும் கேட்டார்.

கடைசியில் லாட்ஜ் ஆசாமி அமைதியாக ஆனால் உறுதியாகச் சொன்னான். "…பணத்தை வாங்கிக் கொண்டு இதுவரையில் அவன் விஷயத்தில் நீங்கள் எந்தக் காரியத்தையும் உருப்படியாகச் செய்யவில்லை. பிடித்தும் கோட்டை விட்டீர்கள். நாங்கள் பொறுமையாக இருந்தோம். ஆனால் இப்போது நீங்கள் கோட்டை விட்டால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். அதன் கடுமையான விளைவுகளை நீங்கள் சந்தித்தாக வேண்டும். ஒவ்வொரு வினாடியும் முக்கியம். உடனடியாக நடவடிக்கை எடுங்கள்…."

மந்திரி சொன்னார். "ஐந்து நிமிடங்களில் போலீஸ் அங்கே இருக்கும். கவலைப் படாதீர்கள்."

"சொல்லாதீர்கள். செய்யுங்கள்"

செல் போனைக் கீழே வைத்து விட்டு மந்திரி ராஜாராம் ரெட்டியைப் பார்த்தார். ராஜாராம் ரெட்டி சொன்னார். "அவன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. உடனடியாக நாம் செயல்பட வேண்டும்."

அவர்கள் மின்னல் வேகத்தில் இயங்கினார்கள்.

லாட்ஜ் ஆசாமி சலீமிற்குப் போன் செய்தான். "மந்திரி ஐந்து நிமிடத்தில் போலீஸ் அங்கே இருக்கும் என்கிறார்"

"நல்லது"

லாட்ஜ் ஆசாமி அவனிடம் கேட்டான். "அவர்கள் அவனைப் பிடித்து விடுவார்கள் என்றா நினைக்கிறாய்?"

"அது தான் சொன்னேனே அதிர்ஷ்டம் இருந்தால் பிடிக்கலாம். அப்படி இல்லாவிட்டாலும் அந்த லாக்கரில் இருப்பதைக் கண்டிப்பாகக் கைபற்றலாம்."

"நீ என்ன செய்யப் போகிறாய்?"

"உங்கள் ஆட்களுக்கு அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் நான் இருக்கிறேன். அவனைப் பிடிப்பது தான் கஷ்டமே தவிர அவனைக் கொல்வது அத்தனை பெரிய காரியமல்ல. அவன் சாவு என் கையால் தான்"

சலீம் குரலில் தெரிந்த உறுதி லாட்ஜ் ஆசாமிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. அவனை நம்பவும் செய்தான். சலீம் கொன்ற பெரும்பாலான நபர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. பலரும் பலத்த பாதுகாப்பில் இருந்தவர்கள். அவர்களை அவன் கொன்றது மட்டுமல்ல யாரிடமும் அகப்படாமல் அலட்டிக் கொள்ளாமல் தப்பித்தும் இருக்கிறான். எனவே அமானுஷ்யனை அவனால் கொல்லமுடியும். ஆரம்பத்தில் ஒரு வாடகைக் கொலையாளியை இதில் பயன்படுத்துவதில் அவனுக்கு சம்மதம் இருக்கவில்லை தான். ஆனால் இன்று அமானுஷ்யனைக் கண்டுபிடித்ததும், அவன் ரகசியங்களை எங்கு ஒளித்து வைத்திருக்கிறான் என்பதைக் கண்டுபிடித்ததும் எல்லாம் சலீம் தான். எனவே அமானுஷ்யனை அப்புறப்படுத்த சரியான ஆள் அவன் தான்….

இப்படியெல்லாம் சிந்தித்த லாட்ஜ் ஆசாமி தன் ஆட்களுக்கும் அமானுஷ்யன் போகக் கூடிய இடத்தைப் போன் செய்து தெரிவித்தான். எல்லா பக்கங்களில் இருந்தும் அமானுஷ்யனை நெருங்குவது நல்லது….

சலீம் தனக்கு ஜம்மு காஷ்மீர் பாங்க் பற்றி சொன்ன டிரைவரிடம் சொன்னான். "என்னை அந்த ஜம்மு காஷ்மீர் பாங்கிற்கு அழைத்துப் போகிறீர்களா? அவனை அங்கேயே போய் பார்க்கிறேன்."

**********

அக்‌ஷய் சென்று கொண்டிருந்த டாக்சி பழுதாகி அந்த டிரைவர் அதை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு இக்கட்டான கட்டத்தில் இப்படி கால தாமதமாவது அக்‌ஷயின் பொறுமையை சோதித்தது. ஆனால் அதை வெளியே காட்டாமல் அமைதியாக அந்த டிரைவரையே கவனித்துக் கொண்டிருந்தான். பின் சொன்னான். "எனக்கு அவசரமாகப் போக வேண்டி இருக்கிறது. இப்போதைக்கு சரியாகுமா?"

டாக்சி டிரைவர் தலையை சொறிந்தான்.

அக்‌ஷய் சொன்னான். "பரவாயில்லை. நான் வேறு வண்டி பிடித்துப் போகிறேன்"

"வேறொரு வண்டி பிடிக்கத் தேவை இல்லை சார். அடுத்த தெருவில் தான் அந்த பாங்க் இருக்கிறது. ஒரு ஃபர்லாங்க் தூரம் தான். அந்த சிக்னலில் இடது புறம் போய் வலது பக்கம் திரும்பினால் நாலாவது கட்டிடம்…"

அக்‌ஷய் அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பினான்.

*********

போலீஸ் உயர் அதிகாரிகள் புடைசூழ உள்ளே நுழைந்ததைப் பார்த்த பாங்க் மேனேஜர் திடுக்கிட்டுப் போனார். "என்ன விஷயம்?"

ஒரு அதிகாரி அக்‌ஷயின் போட்டோவை அவரிடம் காட்டினார். "இவனை அடையாளம் தெரிகிறதா?"

நேற்றிலிருந்தே டிவியிலும் பத்திரிக்கைகளிலும் காண்பித்து வந்த அந்த புகைப்படத்தைப் பார்த்திருந்த அந்த மேனேஜர் ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது அப்போதே நினைத்திருந்தார். அப்துல் அஜீஸ் என்ற அந்த இளைஞன் நல்லவன். கண்ணியமானவன். "இவர் எங்கள் வாடிக்கையாளர். நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை. ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்று நினைக்கிறேன்"

அவர் கருத்தை அவர்கள் லட்சியம் செய்யவில்லை. அடுத்த கேள்வியைக் கேட்டனர். "இவன் இங்கே இன்று வந்தானா?"

"இல்லை. இவரைப் பார்த்து நிறைய நாளாகி விட்டது"

"இவனுக்கு இங்கே லாக்கர் இருக்கிறதா?"

அவர் தயக்கத்துடன் சொன்னார். "இருக்கிறது"

"அதைக் காட்டுங்கள். தீவிரவாத நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட முக்கிய தடயங்கள் அந்த லாக்கரில் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். அதைப் பறிமுதல் செய்ய வந்திருக்கிறோம்"

லாக்கரை உடைக்க ஆட்களோடு போலீசார் வந்திருப்பதைப் பார்த்த பாங்க் மேனேஜர் வேறு வழியில்லாமல் எழுந்தார்.

**********

சலீம் போகின்ற வழியில் அக்‌ஷய் சென்ற டாக்சி தெருவோரம் நிற்பதைப் பார்த்து திகைத்தான். என்ன ஆயிற்று?

சலீமின் டாக்சி டிரைவர் சொன்னான். "சார். அந்த டாக்சியில் ஏதோ பிரச்சினை போல இருக்கிறது. உங்கள் நண்பர் இங்கேயே இருக்க வேண்டும்"

சலீம் டாக்சியிலிருந்து இறங்காமல் அந்த டிரைவரிடம் சொன்னான். "அவன் இருக்கிறானா என்று உங்கள் நண்பரிடம் விசாரிக்கிறீர்களா?"

அந்த டிரைவர் டாக்சியில் இருந்து நிதானமாக இறங்கினான். அக்‌ஷயை அழைத்து வந்த டாக்சிக்காரனிடம் போய் கேட்டான். "என்ன ஆயிற்று?"

அக்‌ஷயை அழைத்து வந்த டாக்சிக்காரன் தன் காரின் பிரச்னைகளை விளக்க ஆரம்பித்தான். சலீம் பொறுமையில்லாமல் அந்தக் காரில் அமானுஷ்யன் இருக்கிறானா என்று இருந்த இடத்தில் இருந்தே ஆராய்ந்தான். அமானுஷ்யன் அந்த டாக்சியில் இல்லை.

கடைசியில் சலீமின் டாக்சி டிரைவர் கேட்டான். "உன் டாக்சியில் வந்தவர் எங்கே போனார்"

"அவர் நடந்தே போய் விட்டார். பக்கம் தானே"

"எப்போது போனார்"

"பத்து நிமிடம் இருக்கும்"

அமானுஷ்யன் பாங்க் போய் சேர்ந்திருப்பான் என்று சலீம் கணக்கு போட்டான். தன் டாக்சி டிரைவரிடம் சீக்கிரம் அங்கே தன்னை அழைத்துப் போகச் சொன்னான். டாக்சி பறந்தது.

ஜம்மு காஷ்மீர் பாங்க் முன்னால் ஒரு போலீஸ் ஜீப், ஒரு போலீஸ் வேன், இருபதிற்கும் மேற்பட்ட போலீசார், நிறைய ஆட்கள் நின்றிருந்தார்கள். சலீம் சற்று தூரத்திலேயே டாக்சியை நிறுத்தச் சொன்னான்.

"என்னவோ பிரச்சனை போல இருக்கிறது சார். போலீஸ் குவிந்திருக்கிறது" என்று சொன்ன டிரைவரின் கருத்துக்குப் பதில் சொல்லாமல் அந்தக் கூட்டத்தை ஆராய்ந்தான். போலீசிற்கு இணையாக தீவிரவாதிகளின் ஆட்கள் இருந்தது அவனுக்குத் தெரிந்தது. பொது மக்கள் பலரும் தூர நின்று என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டம் போதும் அமானுஷ்யன் தப்பித்துக் கொள்ள…

அவன் செல்போன் அதிர்வுகளை ஏற்படுத்தியது. எடுத்துப் பேசினான். பேசியது லாட்ஜ் ஆசாமி தான். "அந்த சைத்தான் கிடைக்கவில்லை. ஆனால் அவன் லாக்கரில் வைத்திருந்த ஒரு பென் டிரைவ் கிடைத்து விட்டது. போலீசார் அதைக் கைப்பற்றி விட்டார்கள்"

சலீம் புன்னகை செய்தான். அமானுஷ்யனுக்கு கிடைத்திருக்கும் முதல் பின்னடைவு இது. இது வெறும் ஆரம்பம் தான் என்று அவன் கண்டிப்பாக அமானுஷ்யனுக்குப் புரிய வைப்பான்.

(தொடரும்)

About The Author

3 Comments

  1. Mala Ram

    அமனுஷ்யனை கொல்ல வேன்டாம். அவனக்கு இனி எல்லாம் நல்லதாக நடக்கட்டும்.

  2. madhu

    No we cannot accept any backout for Akshay.. He has to win continously… Please author dont do any harm to akshay and hearing the words of few people, dont finish it soon. They havent tasted the story completely.

Comments are closed.