அமானுஷ்யன்-121

ஜம்முவில் இருந்து டெல்லிக்கு கேசவதாஸுடன் வந்து சேர்ந்த அக்‌ஷயிற்காக ஆனந்த், மது, மகேந்திரன் மூவரும் காத்திருந்தனர். தம்பியை ஓடிச் சென்று கட்டியணைத்த போது ஆனந்த் கண்கலங்கி விட்டான். அக்‌ஷய் அண்ணனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே மதுவிற்கும், மகேந்திரனிற்கும் நன்றி சொன்னான்.

மகேந்திரன் சொன்னான். "பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே. நீ செய்ததற்கு முன் நாங்கள் செய்ததெல்லாம் ஒரு விஷயமே அல்ல"

உடனடியாக அக்‌ஷயை பிரதமர் சந்திக்க விரும்பியதால் அக்‌ஷய் விமான நிலையத்திலிருந்தே அனைவருடனும் பிரதமர் அலுவலகத்திற்குப் போனான். பிரதமருடன் சதுர்வேதியும் இருந்தார்.

வரவேற்ற பிரதமர் அக்‌ஷயிற்கு ஒரு மலர்க் கொத்தைத் தந்து விட்டு சொன்னார். "நியாயமாய் பகிரங்கமாய் ஒரு பெரிய விருது தரவேண்டும் உங்களுக்கு. ஆனால் நடந்ததை எல்லாம் வெளியே சொல்ல முடியாத நிலை எங்களுக்கு. அப்படி சொன்னால் நாட்டு நலன், கட்சி நலன் இரண்டுமே பாதிக்கப்படும். ஆனால் விளம்பரம் இல்லாமல் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் வாய் விட்டுக் கேட்டால் போதும்…"

அக்‌ஷய் அடக்கத்துடன் சொன்னான். "எல்லாம் நல்ல படியாய் முடிந்து விட்டதே எனக்கு பெரிய விருது கிடைத்த மாதிரி தான். இனி எதுவும் எனக்கு வேண்டாம்"

பிரதமர் மனம் நெகிழ சொன்னார். "என்னை சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தான் என்னிடம் வருகிறான். இது பிரதமர் பதவிக்கு வந்தது முதல் என் அனுபவம். ஆனால் முதல் முறையாக நான் என்ன செய்யவும் தயாராக இருக்கிற போதும் எதையும் எதிர்பார்க்காமல் இருக்கிற மனிதனைப் பார்க்கிறேன். உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை. கடவுள் உங்களுக்கு எல்லா நன்மையையும் தருவார்…"

சதுர்வேதி அக்‌ஷயிடம் சொன்னார். "இப்ராஹிம் சேட் உன்னைப் பத்தரை மாற்றுத் தங்கம் என்றார். இரண்டு மகன்களைப் பறி கொடுத்த எதிரி வாயால் அந்த வார்த்தையைக் கேட்க வேண்டும் என்றால் அதை விடப் பெரிய விருது இல்லை…."

அக்‌ஷய் மனம் நெகிழ சொன்னான். "நான் அவரை எதிரியாக நினைக்கவில்லை. இப்போதும் அவரை என் தந்தை ஸ்தானத்தில் தான் வைத்திருக்கிறேன்…."

சதுர்வேதி ஒரு கணம் பிரமித்துப் போனார். பேச வார்த்தைகள் எழாமல் அவர் அக்‌ஷயை அணைத்துக் கொண்டார். பிரதமர் தனித்தனியாக மது, மகேந்திரன், ஆனந்த் மூவருக்கும் நன்றி சொன்னார். கேசவதாஸையும் பாராட்டினார். பிரதமரும் சதுர்வேதியும் அவர்களை அனுப்பி விட்டு வீரேந்திரநாத்தைப் பார்க்கக் கிளம்பினார்கள். வீரேந்திரநாத்தை ஜம்முவில் இருந்து டெல்லியில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றிற்கு வரவழைத்திருந்தார்கள். அங்கு சென்று கோமாவிலும் அதிர்ச்சி முகபாவனையிலேயே படுத்திருந்த வீரேந்திரநாத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த பிரதமர் பத்திரிக்கையாளர்களிடம் தன் நண்பர் வீரேந்திரநாத் விரைவில் குணமடைவார் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த பிறகு கேசவதாஸ் அக்‌ஷயிடம் சொன்னார். "நீ தீவிரவாதி அல்ல, அப்பாவி, உண்மையான தேசவிரோத சக்திகள் சதித்திட்டமிட்டு உன்னை தீவிரவாதியாகப் பொய்யாய் சித்தரித்திருக்கிறார்கள் என்ற விதத்தில் டிவி, பத்திரிக்கைகளில் அறிவிப்பு செய்திருக்கிறோம். வெடிகுண்டு வெடித்த ஒரு இடத்திலும் பெரிய சேதம் என்று சொல்வதற்கில்லை. ஒன்பது இடங்களில் அவர்கள் சிக்கலான இடத்தில் தான் குண்டு வைத்திருந்தார்கள். ஆனால் படாத பாடு பட்டு அதையெல்லாம் நம் ஆட்கள் கண்டுபிடித்து அதை செயல் இழக்க வைத்திருக்கிறார்கள். அதனால் நாடு பெரிய ஆபத்திலிருந்து உன் தயவால் காப்பாற்றப்பட்டு விட்டது. " பிறகு அவர் அக்‌ஷயிற்கு தன் வீட்டுக்கு ஒரு முறை வர அழைப்பு விடுத்தார். "…ஆனால் இந்த முறை வாசல் வழியே வா. உனக்குப் பயந்து என் குடும்பத்தினரை நான் வெளிநாட்டிற்கு அனுப்பி இருந்தேன். அவர்கள் நாளை வந்து விடுவார்கள். அவர்கள் உன்னைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள்…"

சஹானாவின் வீட்டுக்கு அக்‌ஷயை அழைத்துச் சென்றவர்கள் அவனை இறக்கி விட்டு விட்டு ‘இதோ வந்து விடுகிறோம்’ என்று சொல்லி விட்டு காரில் எங்கேயோ போனார்கள். அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் முன் நிற்கையில் அக்‌ஷய் மனம் லேசாகியது. அந்த வீட்டின் நினைவுகள் இனிமையானவை. அந்த வீட்டின் மனிதர்களும் கூடத்தான்….

பக்கத்து ஃபளாட் ஜெய்பால் சிங் அவன் கண்ணில் படவில்லை. சஹானா வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். சஹானா தான் கதவைத் திறந்தாள்.

அக்‌ஷய் எந்த ஆபத்தும் இல்லாமல் தப்பித்து விட்டான் என்பதை மட்டும் மது சொல்லி இருந்தானே தவிர அக்‌ஷயின் வரவை மது முன்கூட்டியே தெரிவித்திருக்கவில்லை.

திடீரென்று அவனை அங்கு பார்த்ததும் சஹானா உணர்ச்சிகளின் பிரவாகத்தில் தன்னை மறந்தாள். எத்தனையோ கட்டுப்படுத்திக் கொண்டும் கண்களில் நீர் திரள்வதை அவளால் தடுக்க முடியவில்லை. அவன் அவளையே பார்த்தபடி அமைதியாக நின்றான். இருவராலும் சிறிது நேரம் பேச முடியவில்லை.

உள்ளே நுழைந்த பின் அவனாக மவுனத்தைக் கலைத்தான். "பெரியம்மா இல்லையா?"

"இல்லை. கோயிலுக்குப் போயிருக்கிறார்கள்."

"வருண்?"

"பள்ளிக்கூடம் போயிருக்கிறான்"

மறுபடியும் சிறு மவுனம். பிறகு அக்‌ஷய் மெல்லக் கேட்டான். "சஹானா, நான் ஒன்றைக் கேட்டால் நீங்கள் கோபித்துக் கொள்வீர்களா?"

"இல்லை. கேளுங்கள்"

"என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா?"

அவளுக்கு காதில் விழுந்தது நிஜம் என்று நம்ப முடியவில்லை. அளவிட முடியாத சந்தோஷம் ஒரு நாள் தனக்கு கிடைக்கும் என்பதை அவள் நம்புவதை விட்டு நாட்கள் பல ஆகியிருந்தன. கனவல்ல என்பதை அவள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அப்படி உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு குரல் தழுதழுக்கச் சொன்னாள். "இப்படி ஒரு நாள் கேட்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு கனவில் மட்டுமே இருந்திருக்கிறது…"

பின் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வருத்தத்துடன் சொன்னாள். "….ஆனால் ஒத்துக் கொள்வதில் எனக்கு ஒரு நெருடல் இருக்கிறது"

"அது என்ன?"

"நான் ஒருவனுடன் வாழ்ந்தவள். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். நீங்கள் கல்யாணமாகாதவர் மட்டுமல்ல எந்தப் பெண்ணிடமும் நெருங்கிக் கூட பழகாதவர். பொருத்தம் நியாயமாகத் தோன்றவில்லை…."

"பொருத்தம் மனதைப் பொருத்தது சஹானா. நீங்கள் கல்யாணம் செய்து கொண்ட மனிதன் உங்கள் உடலைத் தொட்டிருக்கலாம். ஆனால் உங்கள் மனதைத் தொட்டதில்லை. இந்த நேசம், இந்தக் காதல் நம் இரண்டு பேருக்குமே புதியது தான். வருணைப் பொருத்தவரை அவனை நான் நேசிக்கிறேன் சஹானா. என் மகனைப் போல இப்போது மட்டுமல்ல எப்போதும் நேசிப்பேன். நாம் திருமணம் செய்து கொண்டால் என்றுமே அவன் தான் என் மூத்த மகனாக இருப்பான்…."

சஹானா அவன் அன்பான வார்த்தைகளில் கரைந்து போனாள். பெருகி வழிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியவள் ஓடி வந்து அவனைக் கட்டி அணைத்துக் கொண்டாள். "இப்போது இவ்வளவு அன்பு காட்டுகிற நீங்கள் அன்றைக்கெல்லாம் ஏன் பட்டும் படாமலும் இருந்தீர்கள்?". அவளுக்குக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

அவளை அணைத்துக் கொண்டபடி அக்‌ஷய் சொன்னான். "சஹானா, நான் உயிரோடு திரும்புவேனா என்பதே எனக்கு சந்தேகமாய் இருந்த போது நான் எப்படி என் மனதில் இருந்ததை உன்னிடம் காண்பிக்க முடியும். யோசித்துப் பார். முதலிலேயே நீ வாழ்க்கையில் நிறையவே அடிபட்டிருக்கிறாய். திரும்பவும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி மறுபடியும் பெரிய அடி விழுந்தால் நீ தாங்க மாட்டாய். அதனால் தான் அப்போதெல்லாம் அப்படி நடந்து கொண்டேன்…."

அவன் பன்மையைக் கை விட்டு ஒருமையில் பேசியதைக் கேட்ட போது அவள் அணைப்பு இறுகியது. அவள் மீது அவனுக்கிருந்த அந்த கரிசனம் மனதிற்கு அதிக இதமாக இருந்தது.

ஆனாலும் ஒரு ஆதங்கம் அவளுக்கு இருந்தது. "எடுத்தவுடன் கல்யாணத்தைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று ஒரு வாக்கியத்தை சொல்லத் தெரியவில்லையா?"

"சொல்லாமலேயே நாம் இருவரும் மானசீகமாக உணர்ந்த விஷயம் அல்லவா அது."

அவள் பொய்க் கோபத்துடன் அவனைக் கடிந்து கொண்டாள். "என்ன தான் உணர்ந்தாலும் ஒரு பெண் காதலன் வாயால் அதைக் கேட்காமல் திருப்தி அடைய மாட்டாள். என்ன பெரிய அமானுஷ்யன். எத்தனையோ தெரிந்து வைத்திருக்கிறீர்கள், இந்த சின்ன அடிப்படை விஷயம் கூடத் தெரியவில்லையே"

அக்‌ஷய் அழகாய் புன்னகை செய்து அவள் மனதை ஒருமுறை கிறங்க வைத்தபடி சொன்னான். "எனக்கு நிறைய விஷயம் தெரியாது தான். இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும்…"

அவள் காதலுடன் அவனைப் பார்க்க அவளுடைய சிவந்த உதடுகளில் அவன் தன் உதடுகளைப் பதித்தான். அவர்கள் காலத்தை மறந்தார்கள்…..

**********

ஆனந்த், நர்மதா திருமணமும், அக்‌ஷய், சஹானா திருமணமும் எளிமையாய் ஒரு கோயிலில் நடந்தன. நர்மதாவின் உறவினர்கள் சிலர், கேசவதாஸ் மற்றும் அவர் மனைவி, ஆச்சார்யாவின் மனைவி லலிதா, இப்ராஹிம் சேட், அவர் மனைவி சாய்ரா பானு, மது, மகேந்திரன், ஜெய்பால் சிங், மஹாவீர் ஜெயின், அவர் மனைவி ஆகியோர் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

மஹாவீர் ஜெயினின் கோமா, மருந்தால் ஏற்பட்டதால் மாற்று மருந்தாலேயே குணப்படுத்த முடியும் என்று உணர்ந்து அக்‌ஷய் தன் திபெத்திய குரு ஒருவரிடம் சென்று தக்க மூலிகை மருந்தைக் கொண்டு வந்து கொடுத்து அவரை குணப்படுத்தி இருந்தான். குணமான பின்னும் மஹாவீர் ஜெயினிற்கு ராஜாராம் ரெட்டி இப்படி எல்லாம் செய்தார் என்பதை ஜீரணிக்கக் கஷ்டமாகத் தான் இருந்தது. ராஜாராம் ரெட்டியின் தற்கொலைக்குத் தனிப்பட்ட காரணம் என்றே செய்திகளை வெளியிட்டிருந்தார்கள். மேல்மட்டத்தில் சில பேரைத் தவிர வேறு யாரும் நடந்ததை எல்லாம் அறிந்திருக்கவில்லை.

இப்ராஹிம் சேட்டிடம் சதுர்வேதி போன் செய்து அக்‌ஷய் அவரைத் தகப்பன் ஸ்தானத்திலேயே வைத்திருப்பதாய் சொன்னதைச் சொன்ன போது அவர் அடைந்த துக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. அன்று அவர் தொழுகை நடத்திய போது அல்லாவிடம் மனமுருக அழுதார். அவன் திருமணம் பற்றிய தகவல் கிடைத்த உடனேயே மனைவியுடன் கிளம்பி வந்தவர் அவனை மனமார வாழ்த்தினார்.
சாய்ரா பானு சாரதாவிடம் சொன்னாள். "இது போல் ஒரு பிள்ளையைப் பெற நீங்கள் நிறைய புண்ணியம் செய்திருக்கிறீர்கள். தங்கமான மனசு"

மஹாவீர் ஜெயினின் மனைவி சாரதாவிடம் சொன்னாள். "உங்கள் மகன் எனக்குக் கடவுள் மாதிரி தான். அவர் இல்லை என்றால் இப்போதும் அவர் கோமாவில் தான் இருந்திருப்பார்."

மரகதம் கடைசி காலத்தில் தனக்கு ஒரு மகன் கிடைத்திருக்கிறான் என்று சாரதாவிடம் நிறைவுடன் சொல்லிக் கொண்டாள். அவனை சந்தித்திரா விட்டால் கடைசி வரை ஜடமாகவே வாழ வேண்டி இருந்திருக்கும் என்று சொல்லி கண்கலங்கினாள்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக மகனைப் புகழ்ந்ததில் சாரதா அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. காலமெல்லாம் இருந்த விரதத்திற்கு கடவுள் அவன் மகனிற்கு இத்தனை நேசத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் என்று மனதார சொல்லிக் கொண்டாள். ‘இதற்கு நன்றிக்கடனாக இனி ஏதாவது ஒரு விரதம் இருக்க வேண்டும்…’

ஜெய்பால் சிங் அக்‌ஷயிடம் ஆதங்கத்துடன் சொன்னார். "ஒரு கற்பனையான முஸ்லீம் பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி நம்ப வைத்து என்னை ஒரு காமெடியனாக்கி விட்டாயே"

வருண் அனைவரையும் விட உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருந்தான். அவன் அக்‌ஷயை விட்டு சிறிதும் நகராமல் அக்‌ஷய் அருகிலேயே பெருமிதத்துடன் இருந்தான். ஜெய்பால் சிங்கிடம் வருண் மெல்ல சொன்னான். "எனக்கும் நிறைய சக்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்…தெரியாமலேயே நான் அக்‌ஷய் என்று அவர் பெயரையே அவருக்கு எப்படி சரியாக வைத்தேன் பார்த்தீர்களா?"

ஜெய்பால்சிங் வாய் விட்டு சிரித்தார்.

மது அக்‌ஷயிடம் சொன்னான். "அக்‌ஷய். நான் சஹானாவை இப்படி ஒரு சந்தோஷத்தில் என்றுமே பார்த்ததில்லை. உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை."

அக்‌ஷய் மனைவியிடம் சொன்னான். "சஹானா, இப்படி ஒரு நண்பன் கிடைக்க நீ நிறையவே கொடுத்து வைத்திருக்க வேண்டும்".

சஹானா அவர்கள் இருவரையும் பெருமிதத்துடன் பார்த்தாள்.

**********

அக்‌ஷய் தன் குடும்பத்தினர் எல்லோரையும் ஜம்முவில் இருந்த தன் புத்த பிக்கு குருவிடம் கூட்டிக் கொண்டு போய் வணங்கினான். அவர் அவன் வரவில் மகிழ்ந்தார். சஹானாவைத் தனியாக அழைத்து சொன்னார். "நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது"

"சொல்லுங்கள்"

"அக்‌ஷய் சாதாரணமான மனிதனில்லை. அவனை யாரும் சாதாரணமாக மாற்றி விடவும் கூடாது என்பது தான் என் பிரார்த்தனையும் கூட. என்றாவது ஒரு நாள், உன் குழந்தைகள் எல்லாம் வளர்ந்து பெரிதான பிறகு அவன் கடமைகளை எல்லாம் முடித்த பிறகு அவன் மனதில் கண்டிப்பாக ஆன்மிகத் தேடல் பெரிதாக எழும். அந்த நேரத்தில் நீ அவனை உன் அன்பால் கட்டுப்படுத்தி தடை செய்ய நினைக்கக் கூடாது. அவனை நீ சந்தோஷமாக அனுப்பி வைக்க வேண்டும். அவனால் இனியும் ஆக வேண்டியது நிறைய இருக்கிறது. அந்தக் காலத்தில் நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போதே சொல்கிறேன்"

அந்த முதிய பிக்குவிடம் மனதார சஹானா சொன்னாள். "அவருடன் சில காலம் வாழ்ந்தாலும் கூட எனக்கு அது போதும். மீதியுள்ள காலத்திற்கு அந்த நினைவுகளுடனேயே நான் கழித்து விடுவேன். நான் அவரை சந்திக்கும் வரை சந்தோஷம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவள். இன்றைக்கு நான் நிறையவே சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு இது போதும். அவருடைய எந்த ஒரு தேடலுக்கும் நான் எப்போதும் இடைஞ்சலாக இருக்க மாட்டேன்"

முதிய பிக்கு கனிவுடன் அவளைப் பார்த்துச் சொன்னார். "அக்‌ஷய் மனதில் இடம் பிடிக்க ஒரு சாதாரண பெண்ணால் முடியாது என்று நான் நினைத்து இருந்தேன். நான் நினைத்தது பொய்யாகவில்லை. புத்தர் அருள் உனக்குப் பரிபூரணமாய் கிடைக்கட்டும்."

************

அடுத்ததாக தன் குடும்பத்தினரை ஆரம்பத்தில் தனக்கு அடைக்கலம் கொடுத்த புத்த விஹாரத்திற்கு அக்‌ஷய் அழைத்துக் கொண்டு போனான். அவனைக் குடும்பத்தினரோடு பார்த்த புத்த பிக்குகள் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தார்கள். இளைய பிக்கு சின்னக் குழந்தை போல ஓடி வந்து அக்‌ஷயைத் தழுவிக் கொண்டார். மூத்த பிக்கு அவரைக் கண்டிப்பான பார்வை பார்க்க பின் மெள்ள விலகினார்.

எல்லோரும் அந்த பிக்குகளை வணங்கி ஆசிகளைப் பெற்றார்கள். சாரதா அந்த மூத்த பிக்கு காலில் விழுந்து வணங்கி கை கூப்பி அழுதாள். "அக்‌ஷய் நீங்கள் எல்லாம் அவனை எப்படி காப்பாற்றினீர்கள் என்று சொன்னான். என் பிள்ளையைக் காப்பாற்றியதற்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை"

மூத்த பிக்கு எல்லாம் அந்த புத்தரின் சித்தம் என்பது போல மஹா புத்தரின் திருவுருவச் சிலையைக் காட்டினார்.

இளைய பிக்குவிடம் அக்‌ஷய் சொன்னான். "என்னிடம் இப்போதும் நீங்கள் கொடுத்த சால்வை பத்திரமாக இருக்கிறது. உங்கள் நட்பின் அடையாளமாக நான் அதை என் வாழ்நாள் முழுவதும் விலை மதிக்க முடியாத பொருளாய் வைத்திருப்பேன்"

இளைய பிக்கு சொன்னார். "உனக்கு என்ன ஆயிற்றோ என்று நான் நினைக்காத நாளில்லை. இந்த தனிப்பட்ட பாசம் நல்லதல்ல, பிக்குகளுக்கு உகந்ததல்ல என்று குரு அடிக்கடி சொல்வார். ஆனாலும் என் மனத்திலிருந்து உன்னை விலக்க முடிந்ததில்லை. இப்போது உன்னை நேரில் பார்த்த பிறகு உனக்கு இனி ஆபத்தில்லை என்று தெரிந்த பிறகு மனம் நிம்மதியாகி விட்டது. இனி ஒழுங்காக தினமும் தியானம் செய்வேன்"

அக்‌ஷயிற்கு கண்கள் கலங்கி விட்டன.

அங்கிருந்து விடை பெற்ற போது அவன் மனம் லேசாக இருந்தது. சில நாட்களுக்கு முன் ஒரு நள்ளிரவில் இங்கு குண்டடி பட்டு விழுந்த அவன், இன்னொரு நள்ளிரவில் கடுங்குளிரில் இங்கிருந்து போகுமிடம் தெரியாமல், சுய விவரம் தெரியாமல் அனாதையாய் கிளம்பியும் இருக்கிறான். ஆனால் நேசிக்கின்ற மனிதர்களும், குடும்பமும் சூழ்ந்திருக்க இங்கு வந்து கிளம்பும் இப்படி ஒரு நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எண்ணியிருக்கவில்லை.

இந்த புத்த பிக்குகள், அம்மா, பெரியம்மா எல்லோரும் சேர்ந்து செய்த பிரார்த்தனையின் பலன் தான் இது என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை.

வெளியே நல்ல குளிராக இருந்தது. ஒரு புறம் சஹானாவும், இன்னொரு புறம் வருணும் அவனை ஒட்டியபடி நடந்தார்கள். பின்னால் ஆனந்தும், நர்மதாவும் இயற்கை அழகை ரசித்தபடி வர, அவர்களுக்கும் பின்னால் சாரதாவும், மரகதமும் பேசிக் கொண்டு வந்தார்கள். பின்னால் திரும்பி அவர்களைத் திருப்தியுடன் புன்னகையுடன் பார்த்து விட்டு அக்‌ஷய் மனைவியையும், மகனையும் தன்னுடன் மேலும் இறுக்கமாக சேர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

சஹானா அவளுக்குப் பிடித்த பாடலை அவனுக்கு மட்டும் கேட்கும்படி பாடினாள்.

You’re here, there’s nothing I fear
and I know that my heart will go on.
We’ll stay, forever this way
you are safe in my heart
and my heart will go on and on.

மனைவியைக் காதலுடன் பார்த்த அக்‌ஷயிற்கு அந்த நேரத்தில் தோன்றியது. "சொர்க்கம் என்பது எங்கோ இருக்கும் தனி இடமல்ல. நேசிப்பவர்களுடன் சேர்ந்திருக்கும் இந்த இடம் தான்…."

(முற்றும்)”

About The Author

40 Comments

  1. Sundar

    முதல் அத்தியாயத்திலே இருந்து 121 அத்தியாயம் வரை பிசிறில்லாமல் கதையை கொண்டு போவது என்பது சாதாராண விஷயம் இல்லை. அமானுஷ்யன் எங்கள் மனதில் பர்மனென்டாக தங்கி விட்டான். மிக அருமையான கேரக்டர். மரகதம் என்ற வயதான பெண்ணிடமும் சரி, வருண் என்ற சிறு குழந்தையிடமும் சரி, இளைய பிக்கு போன்ற சந்நியாசியிடமும் சரி அந்த கேரக்டர் மிக கச்சிதமாக இணையும் விதம் அருமை. சகானாவிடம் ஏற்படும் அந்த காதலும் மிக மென்மை. வெல்லத்தில் எந்த இடம் இனிப்பு என்று சொல்ல முடியாதபடி அத்தனையும் சிறப்பு. இப்போதெல்லாம் நீண்ட தொடர்கதைகள் வராத குறை தமிழுக்கு வந்து விட்டது. அபூர்வமான இக்கதையை கொடுத்து நிலாச்சாரலும், கணேசன் சாரும் வாசகர்கள் மனதில் தனிச்சிறப்பு பெற்று விட்டதாகவே சொல்வேன். அடுத்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

  2. madhumitha

    Wowwww… atlast our superhero is living happily with his family… Excellent story and extraordinary narration!!!!!!! Hats off to you Ganesan Sir… Pls let us know when you are going to start your next story in nilacharal????????? Please must reply… Congratulations Sir.. I was refreshing nilacharal for last 4 hrs and finally got the story….. Kudos to Ganesan.. PLease reply my question.

  3. கோபி

    ரொம்ப நல்ல மாறி முடிச்சிருக்கீங்க அண்ணா…. எனியும் நாங்க நிலாச்சாரலுக்கு வரனும்.. அதால நீங்க இப்பவே அடுத்த கதய தொடங்குவீங்க என்னு எதிர்பாக்கிறம்.. வாழ்த்துக்கள்..

  4. Veena

    சூப்பர் அப்டேட்!!!. சிரிப்புடன் என்ஜாய் பண்ணி ரசித்து படித்த அப்டேட் 🙂 . கணேசன் சார், thank u so much 🙂 .ரொம்ப அழகா, ரொம்ப அருமையா முடிச்சிருக்கீங்க. அக்‌ஷய் பிரதமரிடம் கூறும் வார்த்தைகள்- எல்லாம் நல்ல படியாக முடிந்ததே ஒரு பெரிய விருந்து என்று சொல்வது – excellent!!! ஆனாலும் பிரதமர்… நீங்க ரொம்ப கஞ்சம்…அக்‌ஷய்க்கு அவன் கேட்காவிட்டாலும் பெரிய பரிசு, பதவி இப்படி எதுவும் கொடுக்க கூடாது?… too bad 🙂 .அக்‌ஷய் சஹானாவை சந்திக்கும் இடம்…. nice entertainment .ஹலோ அக்‌ஷய் கண்ணா… marriage proposal பண்ணும்போது லேசா முட்டி போட்டு அழகா கையை பிடிச்சு கேளுப்பா 🙂 . அக்‌ஷய் தன் குடும்பத்தினருடன் புத்த பிஷுக்கள் அனைவரையும் சந்திக்கும் இடமும் சூப்பர்.

    மனதிற்கு நிறைவு, சந்தோஷம் தரும் முடிவை கொண்ட மிகவும் விறுவிறுப்பான நாவல். தொடக்கம் முதல் முடிவு வரை ஜெட் ஸ்பீட் :). அக்ஷய் – படிப்பவர் உள்ளங்களையும் கொள்ளை கொள்ளும் கதாப்பாத்திரம். பிரமிப்பு, உற்சாகம், தைரியம், சந்தோஷம், அன்பு, காதல்… இப்படி அனைத்து உணர்வுகளையும் நம் மனதிற்குள் உணரவைக்கும் சூப்பர் கேரக்டர் அக்ஷய். சதிகாரர்களை தவிர… அக்ஷையின் குடும்பமாக வரும் அனைத்து கேரக்டரும் soft & sweet characters. தொடக்கத்தில் அக்ஷை தன் கடந்த காலம் பற்றி தெரியாமல் இருக்கும் போது … எதுக்கு அவனை இப்படி துரத்துகிறார்கள், அய்யோ அவன் கடந்த காலம் பற்றி எதுவும் தவறான செய்தி வந்துவிடக்கூடாதே என்று எண்ண வைத்து… பிறகு… அய்யோடா எவ்ளோ பெரிய சதிகார கும்பல் அவனை துரத்துதே, தனி மனிதனாக எப்படி அவன் வெல்வான் என்று கலங்க வைத்து.. நிறைவான முடிவை கொடுத்த அழகிய நாவல் :). ஒவ்வொரு வாரமும் எங்களை ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் அடுத்த அப்டேட் எப்போ கிடைக்குமோ என்று ஏங்க வைத்த நாவல். Thanks for this excellent novel Ganeshan sir. Best wishes for ur cute writing talents. Eagerly waiting ur next novel.

  5. potkody

    ஒவ்வொரு ஞாயிறும் ஆசையோடு எதிர்பார்த்து காத்திருந்து வாசித்த கதை.
    அருமை கணேசன் சார். உங்களின் அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்தபடி ..
    நன்றி நிலாச்சாரல் ..

  6. Bala

    மனதை நெகிழ வைத்த அருமையான கதை! Thanks, Mr.Ganesan!

  7. கே.எஸ்.செண்பகவள்ளி

    அருமையான, திருப்தியான முடிவு கணேசன் சார்.
    இப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட முடிகிறது.
    இன்னும் பல நல்ல கதைகளைப் படைக்க வேண்டும். வாழ்த்துகள் சார்!

  8. Rajarajeswari

    நேசிக்கின்ற மனிதர்களும், குடும்பமும் சூழ்ந்திருக்க இங்கு வந்து கிளம்பும் இப்படி ஒரு நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எண்ணியிருக்கவில்லை.

    சொர்க்கம் என்பது எங்கோ இருக்கும் தனி இடமல்ல. நேசிப்பவர்களுடன் சேர்ந்திருக்கும் இந்த இடம் தான்…./

    எந்தக்கதையையும் இப்படிக் காத்திருந்து வாசித்ததில்லை..
    மிக அருமையாய் மனம் கவர்ந்த கதைக்குப் பாராட்டுக்கள்..

  9. A.Saravanan

    அருமையான கதை நல்ல முடிவு. கணேசன் சார், தயவு செய்து அடுத்த கதை தொடஙவும். உங்கள் ப்லொக்ல் உள்ள நல்ல கருதுக்கள் கதையில் புகுத்தியது நன்றாக இருந்தது.

  10. srividya

    மிக அருமை உங்கள் படைப்பு. உங்களின் அடுத்த கதையை ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  11. Sharmila Mahadevan

    இனிமையான நாவல்…. ஒவ்வொரு வாரமும் காத்திருந்து வாசித்த அருமையான கதை. ஏழுத்து என்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிட்டும் மாபெரும் வரப்பிரசாதம்.. திரு. கணேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்கள் படைப்பிற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்…

  12. janani

    அருமையான படைப்பு. . சுபமான முடிவு. மிக்க நன்றி. அக்ஷய் போல் ஒரு கதாபாத்திரம்……………………….. சொல்ல வார்த்தைகள் இல்லை. எனக்கும் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மீண்டும் ஒரு அருமையான படைப்புடன் வருவீர்கள் என்று நம்பிக்கையுடன்……….

  13. Venkatesh

    மிகவும் அருமை…. ஆரம்பம் முதல் இறுதி வரை கதையின் நடை சிறிதும் விலகாமல் அதனை சுவாரஸ்யம் கலந்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி….. Hats off Mr. Ganesan

  14. kumaraguruparan

    Thanks Mr. Ganeshan for an excellent story. Every week is interesting.We are expecting another nice story from you.

  15. Priya

    அட்டகாசமான, மிகவும் நிறைவான கதை இப்படி ஒரு மகன், தம்பி, காதலன் இருக்க கொடுத்து வைக்க வெண்டும் என ஒவ்வொருவரும் என்னும் அக்ஷய் பாத்திரம். ரியலி சூப்பர் கணேஷ் சார்

    We will definitely miss Akshay from next week. It will take a while to fill this vacuum. Thank you very much for the wonderful story & the way the story went around. Expecting more from you….. Priya

  16. Akilan

    பொதுவாக நான் தொடர்கதைகளை படிப்பதில்லை..காரணம் சஸ்பன்ஸ் மற்றும் கதையின் முக்கியமான இடங்களை தொடரும் என போடுவதால், ஆனால் உங்களிடம் தோற்றுவிட்டேன். அருமையான தொடர்க்கதை நீண்ண்ண்ண்ட நாட்களுக்கு பிறகு. உங்களின் அடுத்தபடைப்பை படிக்க ஆவலை இருக்கிறேன்.

    முடிவைப்படித்து நெகிழ்ந்தேன்…பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டே இருக்கிறேன்…
    ★* 。 • ˚ ˚ ˛ ˚ ˛ •
    •。★.★ 。* 。
    ° 。 ° ˛˚˛ * _Π_____*。*˚
    ˚ ˛ •˛•˚ */______/~\。˚ ˚ ˛
    ˚ ˛ •˛• ˚ | 田田 |門| ˚
    அன்புடன் அகிலன் **********

  17. N Ganeshan

    என் அன்பு வாசகர்களே, நான் மிகவும் ரசித்து உருவாக்கிய அமானுஷ்யனை நீங்கள் ஒவ்வொருவரும் பாராட்டியது குழந்தையின் பெருமையை பெற்ற தாயிடம் சொன்னால் எந்த அளவு மகிழ்ச்சியடைவாளோ அந்த அளவு மகிழ்ச்சியை எனக்கும் அளித்தது. எத்தனை எழுதினோம் என்பது முக்கியமல்ல, எழுதியதில் எத்தனை வாசகர்கள் மனதில் தங்குகிறது என்பதே முக்கியம் என்று நினைப்பவன் நான். அந்த அளவுகோலில் இந்த தொடர் வெற்றியடைந்து விட்டது என்று உங்கள் நற்சான்றிதழ் கிடைத்து விட்டது எனக்கு நிறைவாக இருக்கிறது. அடிக்கடி பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கு என் பிரத்தியேக நன்றிகள். உங்கள் பின்னூட்டங்கள் என்னை நிறையவே உற்சாகப்படுத்தின. சில இடங்களில் அமானுஷ்யன் மெருகு பெற நீங்கள் காரணம் என்பதை ஒத்துக் கொள்ள விரும்புகிக்றேன். ரசித்து பாராட்டி ஊக்குவித்த நிலாச்சாரல் வாசகர்களுக்கு நன்றி தெரிவிக்க எனக்கு பொருத்தமான வார்த்தைகள் இல்லை. நன்றி. நன்றி. நன்றி. நிலாச்சாரலில் என் பயணம் மிக நீண்டது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன். நீ நான் தாமிரபரணியில் ஆரம்பித்து அமானுஷ்யன் முடியும் இந்தக் கணம் வரை ஒவ்வொரு வாரமும் நிலாச்சாரலில் இருந்திருக்கிறேன். ஆனால் இந்தப்பயணம் முடிவுக்கு வந்து விட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாசகர்கள் என்னுடைய வலைப்பூவில் என் எழுத்துக்களை படிக்கலாம். இத்தனை காலம் எனக்கு ஆதரவு தந்து வளர்ச்சி பெற உதவிய நிலாச்சாரலுக்கும், குறிப்பாக நிலா அவர்களுக்கும், என் அன்பிற்கினிய வாசகர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. – அன்புடன், என்.கணேசன்

  18. Veena

    நீங்கள் நிலாச்சாரலில் எழுதிய 3 கதைகளும் மிகவும் அருமையானவை. விலை மதிப்பில்லா பொக்கீஷங்கள் . அதிலும் அமானுஷ்யன் சூப்பரோ சூப்பர். அணைத்து நாவல்களையும் சுட சுட எங்களுக்கு என்ஜாய் பண்ண கொடுத்ததற்கு thank you so much. இதுபோல் நீங்கள் நிறைய நாவல்கள் தொடர்ந்து எழுத வேண்டும். ப்ளீஸ், எங்களுக்கு அதை படித்து ரசிக்கவும் தரவேண்டும். நீங்கள் இனி நிலாச்சாரலில் தொடர்கதைகள் எழுதப்போவதில்லையா? உங்கள் blog -ல் இது போல் தொடர் கதைகள் எழுதுவீர்களா? இப்போவே உங்க ப்ளாக்குக்கு வந்து வெய்ட் பண்றோம் 🙂 ,

  19. Murugananandam

    எல்லா வயதினரையும் கவரும்படியான ஒரு அருமையான கதையை அழகாக முடித்து விட்டீர்கள். என் தாயார் அமானுஷ்யனை முதலில் இருந்து இன்னொரு முறை படிக்க ஆரம்பித்து விட்டார். இனி திங்கள் கிழமை காலைகள் களையிழந்து போகும். விகடனில் உங்கள் ஆழ்மனசக்தி தொடர் படித்து உங்கள் வாசகனான நான் அமானுஷ்யன் படித்து விட்டு தீவிர ரசிகனாகி விட்டேன். இது போன்ற சுவாரசியமான இன்னொரு கதையை கண்டிப்பாக நீங்கள் எழுத வேண்டும் என்பது என் தாயாரின் விருப்பம். எங்களைப் போன்ற வாசகர்களை தயவுசெய்து ஏமாற்றி விடாதீர்கள்.

  20. Vetri

    மிக அருமையான கதை. வாழ்த்துக்கள். அமானுஷ்யன் நல்ல கதையம்சம் உள்ள விறுவிறுப்பான தொடர்.

  21. Arvind

    ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிறிதும் தொய்வில்லாமல், விறுவிறுப்பாக இருந்தது. அமானுஷ்யன் கதாபாத்திரம் அருமையிலும் அருமை. அடுத்த ஒரு நல்ல தொடரை ஆரம்பியுங்கள் என்.கணேசன் சார்.

  22. g.c sharavanan B.e

    இப்போது தான் அமானுஷ்யன் கதை முழுவதும் படித்து முடித்தேன்.கதை ஆரம்பம் முதல் இறுதி விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்ஃ மிக அருமை நன்று.இதே போல கதையை எதிர்பார்க்கிறேன் கணேஷ்

  23. Gayathri

    நாவல்கள் குறைந்து அழிய ஆரம்பிக்கும் இந்தக் காலத்தில் இவ்வளவு நல்ல நாவலை எழுதியதற்கு என்.கணேசன் அவர்களுக்கும், பிரசுரித்த நிலாச்சாரலுக்கும் மனமார்ந்த நன்றிகள். பலமுறை இந்த நாவலைப் படித்து ரசித்து விட்டு ஒரு நண்பர் இதைப் பற்றிச் சொல்ல சமீபத்தில் தான் இதைப் படித்து முடித்தேன். மிக அழகான அனுபவமாக இருந்தது இந்தக் கதை. சினிமாவாகவோ, டிவி தொடராகவோ எடுத்தால் அதுவும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது என் கருத்து.

  24. ss

    முதல் அத்தியாயத்திலே இருந்து 121 அத்தியாயம் வரை பிசிறில்லாமல் கதையை கொண்டு போவது என்பது சாதாராண விஷயம் இல்லை. அமானுஷ்யன் எங்கள் மனதில் பர்மனென்டாக தங்கி விட்டான். மிக அருமையான கேரக்டர். மரகதம் என்ற வயதான பெண்ணிடமும் சரி, வருண் என்ற சிறு குழந்தையிடமும் சரி, இளைய பிக்கு போன்ற சந்நியாசியிடமும் சரி அந்த கேரக்டர் மிக கச்சிதமாக இணையும் விதம் அருமை. சகானாவிடம் ஏற்படும் அந்த காதலும் மிக மென்மை. வெல்லத்தில் எந்த இடம் இனிப்பு என்று சொல்ல முடியாதபடி அத்தனையும் சிறப்பு. இப்போதெல்லாம் நீண்ட தொடர்கதைகள் வராத குறை தமிழுக்கு வந்து விட்டது. அபூர்வமான இக்கதையை கொடுத்து நிலாச்சாரலும், கணேசன் சாரும் வாசகர்கள் மனதில் தனிச்சிறப்பு பெற்று விட்டதாகவே சொல்வேன். அடுத்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

  25. Savitha

    திரு எஸ் எஸ் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. மிக அருமையான கதை. அடுத்த நல்ல தொடர் எப்போது வரும்? அமானுஷ்யன் போன பின் ஏற்பட்ட வெறுமை நிலாச்சாரலில் தொடர் என்ற தலைப்பின் கீழ் இருக்கும் வெறுமையிலேயே தெரிகிறது. சீக்கிரம் நல்ல தொடர் ஒன்றை தர்வீர்களா கணேசன் சார்?

  26. Sathish

    இப்படி ஒரு கதையை நான் இது வரை படித்ததில்லை. அத்தனை அருமையாக இருக்கிறது. தங்கள் ப்ளாகில் ஆரம்பித்துள்ள புதிய நாவல் பரமன் ரகசியத்தின் பின்னூட்டத்தில் தான் முதல் முதலில் அமானுஷ்யன் பற்றி சில வாசகர்கள் மூலம் கேள்விப்பட்டேன். அதன் பின் நிலாசாரலுக்கு வந்தவன் பயணத்திற்கு நடுவே கூட விட முடியாமல் கடைசி வரை படித்தேன். வாழ்த்துக்கள் கணேசன் சார்.

  27. VGS.Kalathiyan

    Prior to read this story, there were 2 ganesans were impressed ,one is lord ganesha and other one is sivaji ganesan, now one more ganesan impressed
    me. Very great story it is infinity time better than james hardly chase. i have
    enjoyed thoroughly this story. Keep it up. VAZGA VALAMUDAN

  28. varadarajan

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. நிலாச்சாரலுக்கும் கணேசன் சாருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பரமன்ரகசியம் பின்னூட்டம் வழியாகத் தான் இந்த நாவல் பற்றி அறிந்தேன். ஆரம்பித்த பின் முடிக்காமல் உறங்க முடியவில்லை. சீரியலாகவோ திரைப்படமாகவோ கூட எடுக்கலாம்.

  29. T.K.Selavaraj

    ஓராண்டு கழிந்த பின்னும் திரும்பத் திரும்ப இந்த நாவல் என்னை இழுக்கிறது. சலிக்கவில்லை. தயவு செய்து புத்தகமாக வெளியிடுங்கள். டிவி சீரியலுக்கும் மிக பொருத்தமாக இருக்கும். (கணேசன் சார் உங்கள் பரமன் ரகசியமும் செம விறு விறு.)

  30. suresh

    தெளிவான நாடை, நிறைந்த கருத்ககள், நல்ல வாழ்வியல் சிந்தனைகள், தொய்வில்லாத விருவிருப்புகள், வாசிப்பவர்கள் மனதினை
    உனர்ந்த நல்ல கதை எப்பொழுதவாது வாசிக்கும் என்போன்றோர்கு மனநிறைவு வாழ்த்துகள். இறைவன் தஙகளுக்கு

  31. Kausalya

    WOWWWWWWWWWWWWW.. Today only I have read this story. Really SUPPPPPPPPPPPPPERb,,,,,,,, What a great Character Amanushan is!!!! Where can I get your books., Please let me know.. Please write lots of novels like this.

    Wishing you all the very best for ur future plans…………

  32. S.Vishnu

    I think this story is a masterpiece by Ganesan sir. Amanushyan is really unforgettable. I thank Mr.Saravankumar Balasubramanian for recommending the story. Because I did not know about this novel earlier. If anyone takes movie, or season serial it would be a great hit. I have no doubt.

  33. Swaminathan

    கணேசன் சாரின் வாசகர் குழு முகநூல் மூலம் அமானுஷ்யன் படிக்க வந்தேன். மறக்க முடியாத கேரக்டராய் அக்ஷய் எங்கள் மனதில் தங்கி விட்டான். பாராட்டுக்கள் கணேசன் சாருக்கும் நிலாச்சாரலுக்கும்.

  34. sundari

    நீண்ட நாட்களுக்கு பிறகு இடைவிடாமல் படித்த கதை .என்னோ சுஜாதாவை நினைவு படுத்தியது .

  35. N.Ganeshan

    My sincere thanks to readers who read amanushyan and commented. Even though I finished amanushyan two and half years ago, the continuous support and appreciation for the novel overwhelms me with gratitude. Still amnushyan is discussed in many forums and people are still writing to me personally, telephoning me personally and write in comment section of my new novel paraman ragasiyam in my blog. Once again my humble thanks to you readers and nilacharal. You may read my present novel paraman ragasiyam in my blog enganeshan dot com

    – N.Ganeshan

  36. Pradeep

    i was able to read this whole story within whole night 🙂 thanks for the story sir!!! 🙂 its really interesting and very nice….

  37. Saraswathi Ranganathan

    After reading your Parama Ragasiyam in your blog, I started this Amanushyan and finished at a stretch. Really superb. Fantasic flow of writing. Wish to read again.

Comments are closed.