அமானுஷ்யன்-53

அறை எண் 210 வாசலில் நின்றிருந்தவன் இசைக்கும் செல்போனை எடுத்த போதும் அக்‌ஷய் அவனிடம் “சார்” என்று பணிவாக அழைக்க அந்த ஆள் கண்களில் தீப்பொறி பறந்தது. அந்த அனல் பார்வைக்குப் பயந்து அங்கிருந்து நகர்கிற மாதிரி அக்‌ஷய் நகர்ந்தான். அவன் மிக வேகமாகவும் அல்லாமல் மிக நிதானமாகவும் அல்லாமல் அந்த ஓட்டலில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் இயங்கினான்.

சிபிஐ மனிதன் அறை எண் 210 வாசலில் நின்றிருந்தவனிடம் புதிதாக ஏதாவது தகவல் இருக்கிறதா என்று கேட்டான். அவனால் தன் அலுவலகத்தில் ஏனோ நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவனுடைய உள்மனதில் ஏதோ ஒரு வகை நெருடல் தொடர்ந்து இருந்து வந்தது. அவனுடைய அனுபவத்தில் அது போன்ற நெருடல்கள் எப்போதும் வரப்போகும் அபாயத்திற்கு அறிகுறியாகவே இது வரை இருந்திருக்கின்றன என்பதால் அவன் அவற்றை அலட்சியம் செய்யவில்லை. தற்போதைய நிலவரம் என்னவாக இருக்கிறது என்று அறியும் பொருட்டு போன் செய்தான்.

அறை எண் 210 வாசலில் இருந்தவன் போகின்ற அக்‌ஷயைப் பார்த்தபடியே செல்போனில் பேசினான். “ஹலோ”. அவன் கண்கள் அறைக்குள் இருந்த இன்னொருவனிற்கு சமிக்ஞை செய்ய அந்த ஆள் ஆனந்தின் அறையைக் கண்காணிக்கும் வேலையை எடுத்துக் கொண்டு வாசலில் நிற்க, போனில் பேச ஆரம்பித்தவன் அறையினுள் அமர்ந்து கொண்டு தாழ்ந்த குரலில் பேசினான்.

"சொல்லுங்கள் சார்"

"ஆனந்த் அறைக்கு யாராவது சந்தேகப்படும் படி வந்தார்களா? ஆனந்த் சாப்பிடவோ, வெளியேயோ செல்லும் போது அவனிடம் கேஷுவலாக யாராவது பேச்சுக் கொடுத்த மாதிரி இருந்ததா?"

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை சார்"

"அவன் அறைக்கு காபி, டிபன், சாப்பாடு எல்லாம் கொண்டு போகும் நபர்கள் எல்லாம் ஓட்டலில் முதலில் இருந்தே வேலை செய்பவர்களா? இல்லை சில நாட்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த புதிய ஆள் யாராவது இருக்கிறார்களா?"

"புதிய ஆள்கள் யாரும் வேலைக்கு சேரவில்லை சார். ஆனந்த் அறைக்கு காபி தவிர எதுவும் தருவிப்பதில்லை. டிபன், சாப்பாடு எல்லாம் ரெஸ்டாரண்டில் தான். அப்போதும் யார் கூடவும் பேசுவதில்லை."

"காபி கொண்டு போகிறவன் தவிர அவன் அறைக்கு வேறு யாருமே போகவில்லை. வெளியே ரெஸ்டாரெண்டில் சாப்பிடும் போதும் யாரிடமும் பேசவில்லை என்பதை உறுதியாக தானே சொல்கிறீர்கள்?"

"ஆமாம். இப்போது ஒரு ஐந்து நிமிஷத்திற்கு முன்னால் புத்தகம் விற்கிற சேல்ஸ்மேன் மட்டும் தான் சர்வரல்லாமல் அவன் அறைக்குப் போன ஒரே ஆள்"

சிபிஐ மனிதன் தன்னையும் மீறிக் கத்தினான். "என்னது புத்தகம் விற்கிற சேல்ஸ்மேனா? அவன் சேல்ஸ்மேன் தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இதையேன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை"

"அவன் கண்டிப்பாக சேல்ஸ்மேன் தான் சார். அவன் முதல் மாடியில் எல்லா அறைகளுக்கும் போய் புத்தகங்கள் விற்க முயற்சி செய்து விட்டு பிறகு தான் இங்கே வந்தான். இங்கேயும் ஆனந்த ஆரம்பத்தில் அவனை துரத்தப் பார்த்தான். ஆனால் அந்த ஆள் கெஞ்சிக் கூத்தாடிய பிறகு தான் உள்ளே விட்டான். அந்த ஆள் அவன் அறையை முடித்து விட்டு என் கிட்டே கூட வந்தான். நான் போகச் சொல்லியும் கேட்கவில்லை. உங்கள் போன் வந்த போது மிரட்டி தான் அவனைத் துரத்தினேன்."

சிபிஐ மனிதன் ஓரளவு சமாதானம் அடைந்தான். "சேல்ஸ்மேன்கள் வீடுகளுக்கு வருவதுண்டு. ஆபிஸ்களுக்கும் வருவதுண்டு. ஆனால் ஓட்டல் அறைகளுக்கு வருவது நான் இது இதுவரை கேள்விப்படாதது. அவன் ஆனந்த் அறையில் எத்தனை நேரம் இருந்தான்?"

"பதினைந்து நிமிஷம் இருந்திருப்பான் சார்"

சிபிஐ மனிதன் சிறிது நேரம் மௌனமாய் இருந்தான். ஆனால் அவன் மூளையில் ஏகப்பட்ட சிந்தனைகள் ஓடின. பிறகு கேட்டான். "அவன் முதல் மாடியிலோ, இல்லை இரண்டாம் மாடியிலோ வேறு யாருக்காவது புத்தகம் விற்று இருக்கிறானா?"

"இந்த மாடியில் வேறு யாரிடமும் விற்கவில்லை சார். முதல் மாடியில் 108 அறையில் விற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது சார். அந்த அறையில் அவன் அரை மணி நேரமாவது இருந்திருப்பான் என்று நம் ஆட்கள் சொன்னார்கள். அந்த அறையில் ஒரு கிழவர் இருக்கிறார் சார்."

"உடனடியாக நீங்களே அந்த கிழவனைப் போய் பாருங்கள். அந்த ஆளிடம் அவன் ஏதாவது புத்தகங்கள் விற்று இருக்கிறானா, ஏதாவது ரசீது தந்திருக்கிறானா என்று கேட்டு விட்டு எனக்கு உடனடியாகப் போன் செய்யுங்கள். அது வரை உங்கள் அறையில் உங்களுக்கு பதிலாக இன்னொரு ஆளை இருக்க வைத்து விட்டுப் போங்கள்"

சிபிஐ மனிதன் உடனடியாக வேறு சிலருக்குப் போன் செய்து அந்த சேல்ஸ்மேன் பற்றி தெரிவித்து விட்டு சொன்னான். "அவன் அந்த ஓட்டல் ஏரியாவிலேயே தான் இப்பவும் இருக்க வேண்டும். ஐந்து நிமிஷத்திற்கு முன் தான் அந்த ஓட்டலில் இருந்தான். நான் சொல்கிற வரை அவனை உங்கள் பார்வையிலேயே வைத்திருங்கள். உதவிக்கு எத்தனை ஆள்கள் வேண்டுமானாலும் கூட்டிக் கொள்ளுங்கள். ஆனால் அவன் உங்கள் பார்வையிலிருந்து போய் விடக் கூடாது."

அடுத்த நிமிடம் அறை எண் 108 கதவை 210 அறைக்காரன் தட்டினான். கதவைத் திறந்த கிழவர் என்ன என்பதைப் போல அவனைப் பார்த்தார்.

மிக பவ்யமாக 210 அறைக்காரன் பேசினான். "தொந்திரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு முன் யாராவது ஒரு புத்தக சேல்ஸ்மேன் வந்தாரா?"

"ஆமாம்"

"என் அறைக்கும் வந்தார். நான் வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டேன். இப்போது போன் செய்த என் மனைவியிடம் தற்செயலாக அதைச் சொன்ன போது சமையல் அல்லது தோட்டக்கலை பற்றிய நல்ல புத்தகம் இருந்திருந்தால் வாங்கி இருக்கலாமே என்றாள். அதனால் தான் அந்த ஆளைத் தேடி வந்தேன்."

"அந்த ஆள் அப்போதே போய் விட்டாரே"

"அவரிடம் நீங்கள் ஏதாவது புத்தகம் வாங்கினீர்களா? அவர் ஏதாவது விசிட்டிங் கார்டு தந்தாரா"

"இல்லை. அவரிடம் யோகா புத்தகங்கள் தான் நிறைய இருந்தன. அதில் ரெண்டு புத்தகங்கள் எனக்கு பிடித்தும் இருந்தன."

"ஓ நீங்கள் வாங்கினீர்களா? ரசீது கொடுத்திருப்பாரே. அதில் அவர் செல் நம்பர் இருக்குமே. இருந்தால் தாங்களேன். போன் செய்து கேட்கிறேன் சமையல் அல்லது தோட்டக்கலை புத்தகங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று"

"இல்லை. அவர் என்னிடம் என் அட்ரஸ் வாங்கிக் கொண்டு போனார். விபிபியில் அனுப்புவதாகச் சொன்னார். அவரிடம் இருக்கிற புத்தகம் எல்லாம் ஒவ்வொன்றாக தான் இருக்கிறதாம். மற்றவர்களுக்கும் காண்பித்து ஆர்டர் வாங்க வேண்டும் என்பதால் அதை விற்கவில்லை. ஒரு வாரத்தில் எனக்கு புத்தகங்கள் அனுப்புவதாக சொல்லி இருக்கிறார்"

"அவரிடம் சுமார் எத்தனை புத்தகங்கள் இருந்திருக்கும்?"

"சுமார் 15 இருக்கலாம். எல்லாமே யோகா தான்."

"நன்றி சார்" என்று சொல்லி விட்டுக் கிளம்பியவன் உடனடியாக சிபிஐ மனிதனுக்குப் போன் செய்தான்.

எல்லாவற்றையும் கேட்ட சிபிஐ மனிதன் அபாய அறிகுறிகளாக சில செய்திகளை மனதில் அடிக்கோடிட்டான். புத்தகங்கள் அவன் விற்கவில்லை. ஆர்டர் மட்டுமே எடுத்துள்ளான். ரசீதோ, விசிட்டிங் கார்டோ தரவில்லை. அந்த புத்தகங்கள் எல்லாமே அமானுஷ்யனின் விருப்பமுள்ள துறையான யோகா புத்தகங்கள்.

210 அறைக்காரனிடம் "எனக்கென்னவோ அவன் மேல் சந்தேகம் தான் வருகிறது. இன்னொரு தடவை பார்த்தால் கண்டிப்பாக எனக்கு போன் செய்யுங்கள்" என்று சொல்லி விட்டு போனை வைத்த சிபிஐ மனிதன் அவசரமாக சற்று முன் தான் போன் செய்த மனிதனிற்கு மீண்டும் போன் செய்தான்.

"அந்த சேல்ஸ்மேனை உடனடியாகக் கொன்று விடுங்கள். பிணத்தை அப்படியே விட்டு விடாதீர்கள். பிணம் போலீசுக்குக் கிடைத்து விடக் கூடாது. அது நமக்கு வேண்டும். எல்லாம் வேகமாக நடக்க வேண்டும்"

‘ஒருவேளை அந்த ஆள் நிஜமான சேல்ஸ்மேனாகவே கூட இருக்கலாம். ஆனால் இந்த இந்தியாவில் ஒரு புத்தக சேல்ஸ்மேன் செத்துப் போனால் அது ஒன்றும் பெரிய இழப்பில்லை.’ என்று நினைத்த சிபிஐ மனிதன் பரபரப்பாக இனி வரும் போன் கால்களுக்காகக் காத்திருந்தான்.

(தொடரும்)

About The Author

3 Comments

  1. கே.எஸ்.செண்பகவள்ளி

    அருமை கணேசன் சார்! என்னாகுமோ என்று முடிவிற்காக காத்திருக்கிறேன்!

  2. saiva

    கதை மிகவும் விருவிருப்பாக செல்கிரது!! வாழ்த்துக்கல்.

Comments are closed.