அமானுஷ்யன் 54

அந்த ஓட்டலில் இருந்து அக்‌ஷய் வேகமாக வெளியேறிய போதும் மூன்று பேர் பின் தொடர்வதை அவன் கவனித்தான். அவன் மெல்ல நடந்தால் அவர்களும் மெல்ல நடந்தார்கள். அவன் வேகமாக நடந்தால் அவர்களும் வேகமாக நடந்தார்கள். கிட்டத்தட்ட அருகிலேயே இருந்தார்கள். அந்த மூவர் கையிலும் செல் போன்கள் இருந்தன.

அக்‌ஷய் புன்னகைத்தான். அவனுக்கு ஏனோ அவர்களுடைய அருகாமை பயமுறுத்தவில்லை. அமைதியாக நடந்து கொண்டிருந்தான். பின் திடீரென்று ஓடிப் போய் ஒரு ஓடும் பஸ்ஸில் ஏறிக் கொண்டான். அந்த மூவரும் அவனுடைய அந்த செய்கையை எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் திகைத்து நின்ற விதத்திலேயே தெரிந்தது. ஆனால் மூவரும் சுதாரித்துக் கொண்டு ஓடி வந்து அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டு அந்த கண்டக்டரிடம் வசவுகளை வாங்கிக் கொண்டார்கள்.

அந்த மூன்று பேரையும் மிக நுணுக்கமாக கவனித்த அக்‌ஷயிற்கு ஒரு உண்மை புரிந்தது. அவர்களில் இரண்டு பேர் போலீஸ் துறையாக இருக்க வேண்டும், மூன்றாமவன் போலீஸ் துறைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாதவன். மூன்றாமவன் முகத்தில் ஒருவித குரூரம் தெரிந்தது. ஏதோ தீவிரவாதி போல தெரிந்தான். அந்த மூன்றாமவனை அந்த இரண்டு போலீசாரும் சற்று எரிச்சலுடன் பார்த்தனர். ஆனால் அவன் அதைக் கவனித்ததாய் தெரியவில்லை. அவன் பார்வை அக்‌ஷய் மேலேயே ஒட்டிக் கொண்டிருந்தது.

மூன்றாமவன் தன் செல்போனில் யாரிடமோ பேசி விட்டு வெளியே பார்த்தான். வெளியே பஸ்ஸை ஒட்டினாற் போல பைக்கில் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவன் ரகசியமாகத் தலையசைத்ததை அக்‌ஷய் கவனிக்கத் தவறவில்லை. அந்த பைக்கில் வருபவனும் மூன்றாவது மனிதனின் ஆள் தான் என்பதில் அக்‌ஷயிற்குச் சந்தேகம் இருக்கவில்லை. பஸ்ஸை விட்டு வெளியேயும் ஒருவன் வாகனத்தில் பின் தொடர்வது நல்ல சகுனமாக அவனுக்குத் தெரியவில்லை.

அதே நேரத்தில் அந்த போலீஸ்காரர்களில் ஒருவனுக்குப் போனில் தகவல் வந்தது. “அவனைக் கொன்று விடச் சொல்கிறார்கள். ஆனால் பிணம் நம் கையில் தான் கிடைக்க வேண்டும் என்கிறார்கள். முதல் காரியத்தை முடி. அடுத்ததை நாம் எல்லாரும் சேர்ந்து பின் யோசிப்போம். இப்போது எங்கே இருக்கிறீர்கள்?”

“பஸ்ஸில் இருக்கிறோம்”

“பஸ்ஸிலா?” குரலில் ஆச்சரியம்.

“ஆமாம். அவன் திடீரென்று ஓடி வந்து பஸ்ஸில் ஏறிக் கொண்டான். நாங்கள் இருவரும் ஓடி வந்து ஏறிக் கொண்டோம். அவர்கள் ஆளில் ஒருவனும் ஓடி வந்து ஏறிக் கொண்டான்”.

“பஸ்ஸில் சுட்டு விடாதே. அது இன்றைய தலைப்புச் செய்தியாகி விடும். பிணத்தை நாம் எடுத்துக் கொள்வதும் கஷ்டம். கீழே இறங்கிய பின் ஏதாவது அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரியத்தை முடி”

“சரி”

“அவன் மாய வித்தைக் காரன் என்று மேலிடம் சலிக்காமல் நினைவு படுத்துகிறது. ஒரு தடவை கண்ணில் இருந்து மறைந்து அடுத்ததாக நம் பார்வைக்கு வரும் போது ஏதாவது மாற்றம் செய்து புதிய ஆள் போல வருவானாம். ஏமாந்து விடாதீர்கள்”

“ஏமாற மாட்டோம் சார். இன்றைக்கு அவன் பிணம் நிச்சயம் உங்கள் கையில் கிடைக்கும். கவலைப்படாதீர்கள்”

**********

ஆனந்த் பொறுமையில்லாமல் காத்திருந்தான். அடிக்கடி ஃபேக்ஸ் மெஷினைப் பார்த்தான். அவனைப் போலவே மஹாவீர் ஜெயினும் பரபரப்போடு காத்திருந்தார்.

அரை மணி நேரம் முன்பு தான் அவர் ஆனந்தைத் தனது அறைக்கு அவசரமாக அழைத்தார். அவன் வந்த போது அவர் பரபரப்பாக இருந்தார்.

“என்ன சார்?”

“ஆனந்த். அன்று அமானுஷ்யன் என்ற ஒரு பெயர் சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா?”

”ஆமாம் சார்” ஆனந்த் மனதில் ஒருவித படபடப்பு எழுந்தது.

”மற்ற சிபிஐ யூனிட்களில் இருக்கும் என் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் இந்தப் பெயரைச் சொல்லி அவர்கள் ரிகார்டுகளில் ஏதாவது இந்த பெயர் பற்றி இருக்கிறதா என்று கேட்டிருந்தேன். இப்போது சிறிது நேரத்திற்கு முன் என் மும்பை நண்பர் ஒருவர் போன் செய்து அவர்களுடைய ரகசிய ஃபைல்களில் அமானுஷ்யன் பற்றி நிறைய தகவல் இருக்கிறதாக சொன்னார். அதை அனுப்பச் சொன்ன போது என்னுடைய பர்சனல் க்ளியரன்ஸை மெயிலில்
அனுப்பச் சொன்னார். அந்த அளவு ரகசியமாய் பாதுகாக்கப்படுகிறது போல தெரிகிறது. நான் மெயில் அனுப்பி இருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் ஃபேக்ஸ் அனுப்புவதாகச் சொன்னார். சிறிது நேரத்தில் வந்து விடும். நமக்கு வேண்டிய தகவல்கள் அதில் இருக்கலாம்.”

இருவரும் காத்திருந்தார்கள். ஆனந்திற்கு ஒரு வினாடி யுகம் போல் கழிந்தது. சிபிஐ ரிகார்டுகளில் ரகசியமாய் பாதுகாக்க வேண்டுமென்றால் அவனுடைய சகோதரன் சாதாரணமானவனாக இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் மிக நல்லவனாக அவன் இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. அந்த செய்தி அவன் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆனாலும் அதே சமயத்தில் அவன் தம்பியின் கடந்த காலத்தை அவன் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்பதால் ஆவலும் அவனுள் எழுந்தது.

இப்போது வரும் தகவல்களில் ஏதாவது ஒன்றாவது அவனுடைய அண்ணனாகத் தன்னை சுட்டிக் காட்டுமா என்று ஒரு கணம் எண்ணம் வந்து போனது. அப்படி இருந்தால் ஜெயினிடம் முன்பே சொல்லி விடுவது நல்லது என்று நினைத்தான். ஆனால் இந்த அலுவலகத்தில் இருந்து யாரோ உதவி செய்து தான் ஆச்சார்யாவின் கொலை நடந்துள்ளது என்ற சந்தேகம் இருக்கையில், அக்‌ஷயைக் கொலை செய்ய முயன்றவர்களுக்கும் இந்த அலுவலகத்தில் இருந்து உதவி போயிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் ஜெயின் உட்பட இந்த அலுவலகத்தில் யாரிடமும் இந்த உறவை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் இருப்பது புத்திசாலித்தனம் என்று அறிவு எச்சரித்தது. யோசித்துப் பார்க்கையில் அக்‌ஷயின் கடந்த காலம் ஃபேக்ஸில் வரும் தகவலில் தெரியலாமே ஒழிய கடந்த காலத்தின் கடந்த காலமான அவனது மூன்று வயது வரை உள்ள வாழ்க்கையின் உறவுகள் வெளியே வர வாய்ப்பில்லை என்பது புரிந்தது.

ஃபேக்ஸ் மெஷின் இயங்கியது. இதயத் துடிப்புகள் சம்மட்டி அடிகளாய் கேட்க ஆனந்த் வரும் தகவல்களைப் படிக்கத் தயாரானான்.

*********

ஆனந்தின் பரபரப்பை விட சிபிஐ மனிதனின் பரபரப்பு பல மடங்காக இருந்தது. அமானுஷ்யன் என்று சந்தேகிக்கும் மனிதன் பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருக்கிறான் என்ற தகவல் சற்று முன் தான் வந்தது. போனில் தகவல் சொன்னவன் பஸ்ஸில் கொலை செய்ய வேண்டாம் என்றும் அவன் கீழே இறங்கிய பின் அதிக ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொலை செய்யலாம் என்றும் தெரிவித்ததாகச் சொன்னான்.

“சரியாகத் தான் சொன்னீர்கள். ஆனால் அவன் மாயாவி…..”

அந்த ஆள் இடைமறித்தான். ஆயிரம் தடவை கேட்ட விஷயத்தை இனியொரு முறை கேட்க அவனுக்கு விருப்பம் இல்லை. “….அதை நானும் நம் ஆட்களிடம் பல தடவை சொல்லி இருக்கிறேன். அவர்கள் இன்று பிணத்தை என் கையில் ஒப்படைப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அப்புறம் இன்னொரு தகவல்…”

“என்னது?”

“அவர்களுடைய ஆள் ஒருவனும் பஸ்ஸில் தான் இருக்கிறான்….”

”இருக்கட்டும் விடுங்கள். இப்போதைக்கு அவர்களும், நாமும் அவன் சாக வேண்டுமென்று தான் எதிர்பார்க்கிறோம். அவர்கள் கொன்றாலும், நாம் கொன்றாலும் இரண்டு பக்கத்திற்குமே அது வெற்றி தான். சீக்கிரம் எனக்கு நல்ல செய்தி சொல்லுங்கள். நான் உங்கள் போன் காலிற்காகக் காத்திருப்பேன்”

போனை வைத்து விட்டு சிபிஐ கடிகாரத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். கடிகார முள் அநியாயத்திற்கு மெதுவாக நகர்ந்தது.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. srividya

    கணெசன் சார் மிக அருமை காதிருக்க முடியவில்லை. மிக விருவிருபாக போகிறது. வாழ்த்துக்கள்

Comments are closed.