அமானுஷ்யன் (79)

மந்திரி செல் போனைக் கீழே வைத்து விட்டு ஆழ்ந்த ஆலோசனையில் ஆழ்ந்தார். அவருக்கு கேசவதாஸைப் பற்றி நன்றாகத் தெரியும். அந்த ஆள் அவ்வளவு சுலபமாக பயப்படக் கூடிய ஆள் அல்ல. அப்படிப் பட்ட ஆளே பயந்து போயிருக்கிறான் என்றால் அது அந்த சைத்தானின் சாதனை என்றே சொல்ல வேண்டும். அந்த குறுந்தாடி சைத்தான் என்று அடிக்கடி அழைத்து இப்போது அவருக்கும் அப்படியே அமானுஷ்யனை அழைக்கத் தோன்றுகிறது. அந்தப் பெயருக்கு அவன் பொருத்தமானவன் தான்…..

"சார். அவன் வந்து நம் திட்டத்தைத் தவிடு பொடி ஆக்கி விடுகிற வரை இப்படித் தான் யோசித்துக் கொண்டிருப்பீர்களா?" குறுந்தாடி காட்டமாகக் கேட்டான்.

"நீங்கள் எல்லாம் ஏன் பயப்படுகிறீர்கள்? நம் திட்டம் என்ன என்று தெரிந்து வைத்திருந்தால் அவன் இப்படி அங்கே இங்கே என்று அலைவானா? அவனுக்கு அந்த மலை உச்சியில் இருந்து விழுந்ததில் இருந்து முக்கியமான ஞாபகம் எல்லாம் போய் விட்டது போல தான் தோன்றுகிறது. அவன் அம்மா, அந்த சின்னப் பையன் எல்லாரும் கூட நம் வசம் தான் இருக்கிறார்கள். அவன் கண்டிப்பாக நமக்கு எதிராக இயங்க முடியாது"

"அந்த சிபிஐ காரன் மாதிரியே பேசாதீர்கள் சார். ஞாபகம் போனது மாதிரி இன்னொரு தடவை அவன் விழுந்து எழுந்திருத்தால் ஞாபகம் திரும்பக் கூட வரலாம். அதை மறந்து விடாதீர்கள். அந்த டிஐஜி சொன்னது மாதிரி அவனைக் கொன்று விட்டு வேறு வேலை பாருங்கள்…."

இன்னொரு முறை அவன் விழுந்து எழுந்தால் அவனுக்கு பழைய நினைவுகள் வந்து விடலாம் என்று குறுந்தாடி சொன்னது மந்திரிக்கும் சரியாகவே தோன்றியது. அவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. சிறிதும் தாமதிக்காமல் மந்திரி சிபிஐ மனிதனுக்குப் போன் செய்து கேசவதாஸ் சொன்னதை எல்லாம் விரிவாகச் சொன்னார். பின் சொன்னார். "…இத்தனை நாள் எனக்கு சல்யூட் அடித்து சொன்னதை எல்லாம் கேட்டு அப்படியே செய்த கேசவதாஸ் கூட எதிர்த்துப் பேச ஆரம்பித்து விட்டார். இங்கே தினமும் ‘அந்த’ ஆட்களும் என்னை வேறு எதுவும் செய்ய விடாமல் உயிரை எடுக்கிறார்கள். இப்போது கூட அந்த தாடிக்காரன் என் எதிரில் தான் உட்கார்ந்திருக்கிறான். ஓட்டலில் சாப்பிட ஆர்டர் செய்து விட்டு அதைத் தந்தால் தான் போவேன் என்று அடம்பிடிக்கிற மாதிரி அந்த சைத்தானின் பிணத்தைக் கேட்டு உட்கார்ந்து அடம் பிடிக்கிறான். உடனடியாக அவனைக் கொன்றால் தான் நான் நிம்மதியாகத் தூங்க முடியும். கேசவதாஸ் சொன்னது மாதிரி அவனை சீக்கிரமே கொல்வது தான் நல்லது. உடனடியாக ஆனந்திற்குப் போன் செய்யலாம் என்று நினைக்கிறேன்…"

சிபிஐ மனிதன் சிறிது யோசனைக்குப் பிறகு சொன்னான். "சரி"

"அவனை எங்கே தருவிக்கிறது என்று யோசித்து வைத்திருக்கிறீர்களா?" மந்திரி கேட்டார்.

குறுந்தாடி அவசரமாக இடைமறித்தான். "அந்தக் கிழவியையும் பையனையும் எங்களிடம் ஒப்படையுங்கள். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்…"

மந்திரி அவனையே பார்த்தபடி சிபிஐ மனிதனிடம் கேட்டார். "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அந்த சைத்தான் சமாச்சாரத்தை இந்த சைத்தான்களிடம் ஒப்படைத்து விடலாமா?"

குறுந்தாடி மந்திரியை முறைக்க மந்திரி "சும்மா செல்லமாக சொன்னேன்" என்று வாயசைத்துக் காட்டினார்.

சிபிஐ மனிதன் சொன்னான். "யோசித்து சொல்கிறேன்"

மந்திரி திட்டவட்டமாகச் சொன்னார். "எதுவானாலும் ஒரு மணி நேரத்தில் முடிவெடுங்கள்"

பதிலுக்குக் காத்திராமல் மந்திரி போன் இணைப்பைத் துண்டித்தார்.

**************

ஆனந்திற்கு அக்‌ஷய் வரும் வரை நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஜெயினிடம் பேசி விட்டு வந்த பிறகு ஓட்டல் அறையில் அடுத்ததாக என்ன என்று யோசிக்கக் கூட அவனால் முடியவில்லை. அம்மாவைக் கடத்தியவர்களும் ஏனோ இன்னும் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை. மகேந்திரனையும், கேசவதாஸையும் காணப்போன இடத்தில் அவனுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம் அவனுக்கு நேரமாக ஆக அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஆனால் நல்ல வேளையாக அக்‌ஷய் வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்தவுடன் அவன் விட்ட நிம்மதிப் பெருமூச்சு அக்‌ஷயை மனம் நெகிழ வைத்தது. பாசம் என்பது எவ்வளவு வலிமையானது என்று நினைத்துக் கொண்டான். அண்ணனைக் கேட்டான். "அவர்கள் போன் ஏதாவது வந்ததா?"

"இல்லை. நீ போனது என்ன ஆயிற்று?" ஆனந்த் பரபரப்போடு கேட்டான்.

முதலில் மகேந்திரனைப் பார்க்க முடியாததையும் கேசவதாஸ் வீட்டிற்குப் போகும் வழியில் வருண் கடத்தப்பட்டதை அறிந்ததையும் அக்‌ஷய் சொன்னான். வருணும் கடத்தப்பட்டதை அறிந்ததை அவன் சொன்ன போது அவன் முகத்தில் தெரிந்த அளவு கடந்த வேதனை ஆனந்த் மனதை என்னவோ செய்தது.

பிறகு கேசவதாஸ் வீட்டில் நடந்ததையும் அக்‌ஷய் விவரித்தான். எல்லாவற்றையும் கேட்ட ஆனந்திற்கு சந்தேகம் வந்தது. "அக்‌ஷய்! கேசவதாஸ் த்ரிபாதி பற்றி சொன்னது உண்மையாக இருக்குமா? நீ போய் பார்க்க முடியாது என்பதற்காக வேண்டுமென்றே நாட்டில் இல்லாதவர் பெயரைச் சொல்கிறாரா?"

"தெரியவில்லை ஆனந்த்"

"நீ உன் வழக்கமான முறையைக் கையாண்டு கேட்டிருந்தால் உண்மை தெரிந்திருக்குமே"

"என் உள்ளுணர்வு அது வேண்டாம் என்று சொன்னது. அதனால் விட்டு விட்டேன்"

ஆனந்த் தம்பியுடன் பழகிய இந்த குறுகிய காலத்தில் அவன் தன் உள்ளுணர்வுக்குத் தரும் முக்கியத்துவத்தை நன்றாக அறிந்திருந்தான். அவன் உள்ளுணர்வு ஒரு விஷயத்தை உணர்த்தி விட்டால் அது எத்தனை தான் புத்திசாலித்தனமாகத் தெரியா விட்டாலும் உள்ளுணர்வு சொல்கிறபடியே தான் அவன் நடப்பான். அவனை எதிரிகள் துரத்திக் கொண்டு சென்ற வேளையிலும் சுரங்கப் பாதையில் ஓடிக் கொண்டிருக்கையில் திடீரென்று அவன் சிலையாக நின்றதும் அப்படி உள்ளுணர்வு சொல்லித் தான். உண்மையில் அவன் அப்படி நின்றது தான் அவன் உயிரையும் காப்பாற்றி இருக்கிறது….

அக்‌ஷய் சொன்னான். "ஆனால் கேசவதாஸிற்கு இந்த கடத்தல் விஷயம் நிஜமாகவே தெரியவில்லை போல தான் இருந்தது…."

"அந்த த்ரிபாதி பாதி தான் அவரிடம் சொல்கிறார் போல இருக்கிறது. மீதி வேறு ஆள் மூலமாக செய்கிற மாதிரி இருக்கிறது…."

"ஆனால் நான் போவேன் என்று எதிர்பார்த்து அந்த ஆள் காத்து இருந்த மாதிரி தான் தெரிந்தார். கேட்டால் அவர் அனுமானித்த மாதிரி சொன்னார்…."

"இல்லை அக்‌ஷய். எனக்கென்னவோ நம் அம்மாவைக் கடத்திய ஆள் தான் நீ அங்கு போவாய் என்று முன்பே அவரை எச்சரித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது…."

"அப்படியானால் நம் எதிரி உண்மையிலேயே பெரிய புத்திசாலியாகத் தான் இருக்க வேண்டும்…."

சிறிது நேரம் அண்ணனும் தம்பியும் அமைதியாக இருந்தார்கள்.

பிறகு அக்‌ஷய் சொன்னான். "எனக்கு சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். நீ தூங்குவதானால் தூங்கு…."

ஆனந்த் பதில் ஏதும் சொல்வதற்கு முன் அறை மூலையில் ஒரு போர்வையை மடித்துப் போட்டு அதன் மீது அமர்ந்து அக்‌ஷய் தியானம் செய்ய ஆரம்பித்தான். சில நிமிடங்களில் அக்‌ஷய் அசையாமல் சிலை போல மாறி விட்டான்.

ஆனந்த் தம்பியை திகைப்புடன் பார்த்தான். தம்பியின் முகத்தில் பேரமைதி தெரிய ஆரம்பித்தது. ஆழ்ந்த தியான நிலைக்குப் போய் விட்டது தெரிந்தது. ஆனந்திற்கு தியானம் குறித்து பெரிய அனுபவம் இல்லை என்றாலும் இந்த நிலைக்குப் போவது அத்தனை சுலபம் இல்லை என்பது மட்டும் புரிந்தது. தம்பி அவனுக்குப் புதிராகத் தெரிந்தான். இப்படி ஒரு நிலைக்கும் அவனால் சீக்கிரமே போக முடிகிறது. அதே போல அதே வேகத்தில் அடுத்தவரை கோமா நிலைக்கு அனுப்பவும் அவனால் முடிகிறது. இத்தனை எல்லாம் முடிகிற அவனுக்கு ஏன் பழைய நினைவுகள் வர மறுக்கின்றன. அதுவும் மிக முக்கியமான அந்த கடைசி வருடங்கள் பற்றி ஏன் வரவில்லை. அவனுடைய ஃபைலைப் படிக்கிற போது அந்த வருடங்கள் எல்லாம் உடனடியாக அவனுக்கு நினைவுக்கு வந்தன. ஆனால் அத்துடன் அந்த நினைவுச் சங்கிலி அறுந்தும் போய் விட்டதே. கடவுளே இந்த இக்கட்டான நிலைமையிலாவது அவனுக்குப் பழைய நினைவுகளைத் திருப்பி விடேன்….

அந்த நினைவுகளுடன் அமர்ந்திருந்தவன் அப்படியே உறங்கியும் விட்டான். உறங்கிய அவனையும், தியானத்தில் இருந்த அக்‌ஷயையும் ஆனந்தின் செல்போன் மணியோசை எழுப்பியது. கடத்தல் காரர்கள் அவர்களுடன் பேசத் தயாராகி விட்டார்கள்.

ஆனந்திற்கு நிகழ்காலத்திற்கு வர சில வினாடிகள் தேவைப்பட்டன. ஆனால் அக்‌ஷய் மின்னல் வேகத்தில் செல் போனை எடுத்து ஆனந்த் கையில் தந்து சொன்னான். "பேசு"

(தொடரும்)

About The Author

1 Comment

Comments are closed.