அமானுஷ்யன்-96

மது வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான். அவனருகில் வருணும் பின் சீட்டில் ஆனந்தும் சாரதாவும் அமர்ந்திருந்தார்கள். சாரதா சோகத்துடன் பின் கண்ணாடி வழியாக வந்த வழியையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளைய மகன் பற்றிய பயம் அவளை மறுபடியும் பிடித்துக் கொண்டது. ஆனந்தின் மனம் தாயின் சோகத்தைப் பார்த்து ரணமானது.

"பயப்பட அவசியமே இல்லைம்மா. அவன் சீக்கிரமே வந்து விடுவான்"-அவன் தாயைத் தைரியப்படுத்தினான்.

சாரதா முழுவதும் நம்பிக்கை ஏற்படா விட்டாலும் தலையாட்டினாள். ஆனால் அவள் கண்களில் லேசாய் நீர் திரண்டிருந்தது.

வருண் பெருமையாய் சொன்னான். "அங்கிளை யாரும் எதுவும் செய்ய முடியாது. அவருக்காக பாட்டி முழு விரதம் இருந்தார்கள், நான் பாதி விரதம் இருந்தேன்…."

மது கேட்டான். "அதென்ன பாதி விரதம்?"

"நான் எப்போதுமே இரண்டு தோசை சாப்பிடுவேன். ஆனால் நேற்று ராத்திரி வெறும் பால் மட்டும் தான் சாப்பிட்டேன். அதுவும் பாட்டி கட்டாயப்படுத்தினதால் தான் சாப்பிட்டேன்"

மதுவும் ஆனந்தும் புன்னகைத்தார்கள்.

சிறிது தூரம் சென்ற போது மகேந்திரன் வேறொரு காரில் அவர்களுக்காகக் காத்திருந்தான். அவர்களைப் பார்த்த பிறகு அவன் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவன் ஆனந்திடம் சொன்னான். "இப்போதைக்கு அம்மாவிற்கும் வருணிற்கும் ஒரு பாதுகாப்பான இடம் ஏற்பாடு செய்திருக்கிறேன். அவர்கள் இந்தக் காரில் அங்கு போகட்டும். நமக்கு இன்னும் வேலை இருக்கிறது."

******

ராஜாராம் ரெட்டி நிருபர்களின் படையெடுப்பைப் பார்த்து விட்டு போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கி மறைவாக நின்று கொண்டார். நிருபர்கள் கூட்டம் முன்னேறி எம்.பி வீடு நோக்கி நகர்ந்தது. மிஸ்டர் எக்ஸ் பரிதாபமாக அவர்களைப் பின் தொடர்ந்தார். எம்.பி யின் வீட்டுக்குத் திரும்பும் குறுக்குத் தெருவில் சிலர் திரும்ப சிலர் திரும்பாமல் எதிரில் இருந்த போலீஸ்வேன் மற்றும் முன்னால் இருந்த போலீஸ்காரர்கள் மீது காமிராவைத் திருப்பினார்கள்.

மிஸ்டர் எக்ஸ் ஓடோடி முன்னுக்கு வந்து தடுத்தார். "எதற்கு இவர்களை வீடியோ எடுக்கிறீர்கள்?"

ஒரு நிருபர் கேட்டார். "இவர்கள் ஏன் இங்கு நிற்கிறார்கள்?"

இன்னொரு நிருபர் கேட்டார். "இவர்கள் இங்கு காவலுக்கு நிற்பது எம்.பி யாதவ் திருமணம் எந்த தொந்திரவும் இல்லாமல் நடப்பதற்காக என்று எடுத்துக் கொள்ளலாமா?"

எக்ஸ் மனதில் அவர்களை மிக தரக்குறைவாக அர்ச்சித்தாலும் வெளிப்படையாக பொறுமையுடன் சொன்னார். "அது தான் சொன்னேனே ஒரு தீவிரவாதி இங்கு இருக்கிறான் என்ற தகவல் வந்ததால் வந்தோம் என்று. எங்களுக்கும் எம்.பி யாதவின் திருமணத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை…"

"அப்படியானால் எம்.பி யாதவ் திருமணம் நடைபெறப் போவது உண்மை தான் இல்லையா?"

"நீங்கள் யாதவ் கேட்டுக்கொண்டதற்காக வந்தீர்களா இல்லை நடிகை காமினி கேட்டுக் கொண்டதற்காக வந்தீர்களா?"

இனி வாய் திறந்தால் கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவர்களை வெளிப்படையாகவே திட்டி விடுவோம் என்ற பயத்தில் மிஸ்டர் எக்ஸ் ஒன்றும் சொல்லாமல் போலீஸ் ஜீப்பை நோக்கி நகர்ந்தார். ’ரெட்டி ஏதாவது வழி சொல்கிறாரா என்று பார்ப்போம்.

சில நிருபர்கள் போலீஸ் வேன் முன்னால் கல்லூரி செல்லும் சாலையை மறித்துக் கொண்டு நின்ற போலீஸ்காரர்களிடம் கேள்விகள் கேட்க அவர்கள் செவிடர்கள் போல பதில் பேசாது நின்றார்கள். மற்ற நிருபர்கள் கூட்டம் எம்.பி யாதவின் வீட்டை அடைந்து அந்த வீட்டு காவலாளியிடம் சர்ச்சிக்க ஆரம்பித்தது.

மிஸ்டர் எக்ஸ் தன்னை நோக்கி வருவதைக் கண்ட ராஜாராம் ரெட்டி அவர் பின்னால் எந்த நிருபரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின் சற்று முன்னுக்கு வந்தார்.

"என்ன சார் இது?" மிஸ்டர் எக்ஸ் அங்கலாய்த்தார்.

"எல்லாம் அவன் வேலை தான்…"

மிஸ்டர் எக்ஸ் நிருபர்கள் மேல் இருந்த கோபத்தில் ரெட்டியிடம் வெளிப்படையாகவே சொன்னார். "அந்த டிவிக்காரி மகனை நாம் கடத்திக் கொண்டு வந்திருக்கக் கூடாது. மீடியாவில் இருப்பவர்களை பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. இப்போது பாருங்கள் ஏதோ ஒரு வதந்தியை அந்த டிவிக்காரி கிளப்பி ஒரு கூட்டத்தையே இங்கே அனுப்பி வைத்திருக்கிறாள். அந்தப் பையனை விட்டு அந்தக் கிழவியைப் பிடித்துக் கொண்டு போகச் சொன்னீர்களே அதாவது நடந்ததா?"

"அந்தக் கிழவி, பையனை கூட்டிக் கொண்டு அந்த ஆனந்த் மாயமாகி விட்டான்"

"என்னது?" மிஸ்டர் எக்ஸ் வாயைப் பிளந்தார். "…அப்படியானால் அமானுஷ்யன்….."

அவனும் தப்பித்திருப்பான் என்று நினைக்க முடிந்த எக்ஸை எரித்து விடுவது போல் ரெட்டி பார்த்தார். பின் கல்லூரிக்குள் அவனை அனுப்பி வைத்திருப்பதை அவரிடம் தெரிவித்து சொன்னார். "..எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தக் கூட்டம் கல்லூரிப்பக்கம் போய் விடக்கூடாது என்பதற்காக தான் போலீஸ்காரர்களை இங்கு வந்து நிற்கச் சொல்லி இருக்கிறேன்."

"நல்லது செய்தீர்கள். நாசமாய் போன இந்த டிவிக்காரர்கள் பத்திரிக்கைக் காரர்கள் போன பிறகு நாம் போகலாம்"

ராஜாராம் ரெட்டி இவரைத் தேடி நிருபர்கள் திரும்பி வந்தால் தன்னையும் அடையாளம் கண்டு கொள்வார்களோ என்று பயந்தவராய் சொன்னார். "அவர்கள் எல்லாம் உங்களோடு என்னையும் சேர்த்து வீடியோ எடுத்து விடப் போகிறார்கள். நீங்கள் போய் அவர்களை எல்லாம் சீக்கிரம் அனுப்பப் பாருங்கள்"

***********

மகேந்திரன் மதுவிடம் சொன்னான். "அக்‌ஷய் சொன்ன திட்டம் இதோடு முடிந்தது என்றாலும் நாம் ஏதாவது அக்‌ஷயிற்கு உதவ முடியுமா என்று யோசிக்க வேண்டும். இப்போது அங்கே என்ன நிலவரம் என்று கேட்டு சொல்லுங்களேன்"

மது யாதவ் எம்.பி வீட்டருகே நிருபர்களுடன் கலந்து நின்றிருந்த தன் நண்பனுக்குப் போன் செய்து நடப்பு தகவல்களை அறிந்து சொன்னான். "அந்தக் கார் இப்போது அங்கே இல்லையாம். போலீஸ் ஜீப், போலீஸ் வேன் மட்டும் தான் இருக்கின்றனவாம். அந்தக் கார் கல்லூரி பக்கம் போனதாய் தெரிகிறது. அந்தப்பக்கம் போய் விடக் கூடாது என்பதில் போலீஸ் கவனமாக இருக்கிறது. நிறைய போலீஸ்காரர்கள் சாலையை மறித்துக் கொண்டு நின்றிருக்கிறார்களாம். "

ஆனந்த் கேட்டான். "இப்போது அங்கே இருப்பவர்களில் எத்தனை பேருக்கு இந்த எம்.பி கல்யாணம் பற்றிய தகவல் பொய் என்று தெரியும்?"

மது சொன்னான். "மொத்தத்தில் ஐந்தாறு பேருக்கு உண்மை தெரியும். மற்றவர்களுக்குத் தெரியாது. அந்த ஐந்தாறு பேர்களும் நானும் தான் இந்த வதந்தியை ரகசியமாய் கசிந்த உண்மை என்று சொல்லி கிளப்பிக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறோம்…."

ஆனந்த் சொன்னான். "அக்‌ஷயைக் காப்பாற்ற நாம் ஏதாவது செய்ய வேண்டுமானால் நாம் இப்போதே செய்ய வேண்டும். அவனுக்குத் தப்பிக்க ஏதாவது வழி இருந்தால் இந்த களேபரத்தில் தான். அவர்கள் அக்‌ஷயைக் கூட்டிக் கொண்டு இங்கிருந்து போய் விட்டால் நாம் எதுவும் செய்ய முடியாது"

மகேந்திரன் கவலையுடன் சொன்னான். "இந்தக் கல்யாணம் வெறும் வதந்தி என்று தெரிந்து எல்லோரும் சீக்கிரமே அங்கிருந்து கிளம்பி விடுவார்களே"

மது சொன்னான். "இத்தனை தூரம் வந்தவர்களுக்கு அவர்களை அங்கே நிறுத்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லை….". உடனடியாகப் போன் செய்து முதலில் பேசிய நண்பனிடம் மறுபடியும் பேசினான்.

*********

மதுவின் நண்பன் மதுவிடம் பேசி முடித்து விட்டு சத்தமாய் சொன்னான். "…..சாலையை மறித்துக் கொண்டு போலீஸ்காரர்கள் நிற்பதைப் பார்த்தால் எனக்கென்னவோ நடிகை காமினியும், யாதவும் கல்லூரிக்குள்ளே போய் ஒளிந்திருப்பதாய் அல்லவா தோன்றுகிறது."

எக்ஸிற்கு அடக்க முடியாத கோபம் வந்தது. "அவர்கள் என்ன குற்றவாளிகளா அங்குமிங்கும் போய் ஒளிவதற்கு. என்ன முட்டாள் தனம் இது…"

ஒரு பெண் நிருபர் யோசனையுடன் சொன்னாள். "இவர்கள் யாதவ் வீட்டுக்குப் போகும் வழியைத் தடுக்காமல் அந்தக் கல்லூரிக்குப் போகும் வழியைத் தடுத்து நிற்கும் போதே எனக்கு சந்தேகம் வந்தது….."

எக்ஸ் கோபம் அடங்காமல் சொன்னார். "அது தான் சொன்னேனே. தீவிரவாதி அச்சுறுத்தல் காரணமாகத் தான் இங்கே வந்திருக்கிறோம். யாதவ்-காமினி விவகாரத்திற்காக அல்ல…"

"அப்படியானால் தீவிரவாதிகள் அந்தக் கல்லூரியில் இருப்பதாக நம்புகிறீர்களா?"

பேச்சு அபாயகரமாகத் திரும்புவதை எக்ஸ் உணர்ந்தார். இருட்டில் மறைந்து நின்று கொண்டிருக்கும் ரெட்டி இந்த வேளையில் சமயோசிதமாக எதாவது சொல்லி தப்பிக்க வைப்பாரா என்று ஆசையுடன் எக்ஸ் எதிர்பார்த்தார். ஆனால் ராஜாராம் ரெட்டி பிசின் போட்டு ஒட்டியது போல் ஜீப்புடன் ஒட்டி நின்றாரே ஒழிய அவர்கள் பக்கம் வரவில்லை.

ஒரு நிருபர் காமிராவைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். படப்பிடிப்பு அது செய்யப் பட்டது.

"வணக்கம் நேயர்களே. ரெயின்போ டிவிக்காக உங்கள் முன் இருப்பது மல்லிகார்ஜுன். எம்.பி சாந்தகுமார் யாதவிற்கும் நடிகை காமினிக்கும் இடையே ரகசியத் திருமணம் நடைபெற உள்ளது என்று கேள்விப்பட்டு யாதவின் புறநகர் வீட்டுக்கு நாம் வந்திருக்கிறோம். நமக்கும் முன்னே இந்த அதிகாலை போலீஸ்காரர்கள் பெருமளவு வந்து குவிந்திருப்பதில் நமக்கு அதிர்ச்சி. பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவைக்கு ஏற்ப போலீஸ் இலாகா செயல்படுகிறதா என்ற கேள்வி நம் முன்னே எழுகிறது. போலீஸ்காரர்களோ அதை மறுத்து தீவிரவாதிகள் குறித்து ஏதோ தகவல்கள் அவர்களுக்கு கிடைத்து அதற்காகவே வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். சாந்தகுமார் யாதவின் வீட்டில் யாரும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவருக்குச் சொந்தமான அருகே உள்ள கல்லூரிக்குப் போகும் வழியை மறைத்துக் கொண்டு போலீஸ்காரர்கள் நிற்கிறார்கள். இப்போது நம் முன் சில கேள்விகள் முக்கியமாக நிற்கின்றன. சாந்த குமார் யாதவ் நிருபர்கள் வரவை அறிந்து நடிகை காமினியுடன் கல்லூரிக்குள் போய் விட்டாரா, அவரை மறைக்கவே இந்த காவல் துறை உதவுகிறதா என்பது முதல் கேள்வி. அப்படி இல்லை தீவிரவாதிகள் குறித்து தகவல் கிடைத்து தான் போலீஸ் பட்டாளம் வந்துள்ளது என்றால் அந்தத் தீவிரவாதிகள் கல்லூரியில் ஒளிந்திருப்பதாக இவர்கள் எண்ணுகிறார்களா? அப்படியே அவர்கள் ஒளிந்திருந்தாலும் அவர்களைச் சென்று பிடிப்பதற்குப் பதிலாக இவர்கள் அந்த வழியில் யாரும் போகாமல் காவல் காத்து நிற்பது எதற்காக? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அறிய இங்கே இருக்கும் உயர் காவல் அதிகாரியை நாம் கேட்போமா…."

சொல்லிக் கொண்டே மைக்கை மிஸ்டர் எக்ஸிடம் நீட்டினார் அந்த நிருபர். காமிராவும் அவர் பக்கம் திரும்ப எக்ஸ் பரிதாபமாக விழித்தார்.

நிலைமை மோசமாகிக் கொண்டே போவதை அறிந்த ராஜாராம் ரெட்டிக்கு இது எதிரிகளின் திட்டமிட்ட வேலை என்பதில் சந்தேகமில்லை. எக்ஸ் சொன்னபடி டிவிக்காரி இதில் அவர்களுக்கு ஒத்துழைப்பைத் தந்திருக்கிறாள்.

உடனடியாக அக்‌ஷயின் கூடவே இருந்த நபருக்குப் போன் செய்தார். "அவன் உங்கள் பாதுகாப்பில் தானே இன்னமும் இருக்கிறான்"

"ஆமாம் சார். அவன் கையைக் கட்டி ஒரு வகுப்பறைக்குள் வைத்திருக்கிறோம். அவனை சுற்றி நான்கு பேர் இருக்கிறோம். வகுப்பறைக்கு வெளியே நான்கு பேர் இருக்கிறோம். எல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது சார். கவலைப் படாதீர்கள்"

ராஜாராம் ரெட்டி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

(தொடரும்)

About The Author

1 Comment

Comments are closed.