அமானுஷ்யன்(44)

என்.கணேசனின் ‘பார்வைகள்’ சிறுகதைத் தொகுதியை மின்னூலாகப் பெற..


ஆனந்தின் கண்கள் கலங்கியதையும் என்ன சொல்லலாம் என்று தவித்ததையும் கண்ட அக்‌ஷய் புன்னகையுடன் அண்ணனைத் தட்டிக் கொடுத்தான்.
"அதில் ஒன்றும் தப்பில்லை. ஏன் என்றால் உன் நிலைமையில் நான் இருந்தாலும் அதைத் தான் செய்திருப்பேன்."

ஆனந்த் அப்போதும் சமாதானமாக முடியாமல் தவித்தான்.

அக்‌ஷய் வாய் விட்டு சிரித்தான். ஆனந்த் கேட்டான்."உன்னால் எப்படி இந்த நிலைமையிலும் சிரிக்க முடிகிறது?"

"ஏதாவது ஒரு நாள் எல்லோரும் இறந்துதான் ஆக வேண்டும் என்கிற உண்மை எனக்கு விளங்கி இருக்கிறதால்தான்"

எல்லா தத்துவங்களையும் அறிந்திருப்பதும், சொல்வதும் பெரிதல்ல. சொந்த வாழ்க்கையில் அடிபட நேரும்போது அறிந்த தத்துவமும், சொன்ன தத்துவமும் காற்றில் பறந்து விடுகிறது என்பதை ஆனந்த் நன்றாக அறிவான். அதனால் தம்பி அதை ஏற்றுக் கொண்ட விதம் அவனை பிரமிக்க வைத்தது.

அக்‌ஷய் ஆனந்திடம் தொடர்ந்து சொன்னான்."இன்னொரு விஷயம் யோசித்துப் பார். அந்தச் சாது நான் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை ஞான திருஷ்டியில் பார்த்தார் என்று சொல்கிறாய். அவர் அது எந்தக் காலத்தில் என்று ஏதாவது சொன்னாரா? அது என்னுடைய எழுபதாவது வயதிலாகக் கூட இருக்கலாம். அப்புறம் அந்த சாதுவுக்கு இது வரை ஞான திருஷ்டியில் தெரிந்ததெல்லாம் நடக்காமல் இருந்ததில்லை என்று சொன்னால் கூட அப்படியே எதிர்காலத்தில் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. எதற்கும் ஒரு முதல் தடவை என்று ஒன்று இருக்கிறதல்லவா? ஏன் என்னுடைய கேஸ் அப்படிப்பட்டதாக இருக்கக்கூடாது?"

ஆனந்த் ஒன்றுமே சொல்லாமல் அவனையே பார்த்தான். இப்போதும் தோன்றியது. "அந்தச் சாது எதிர்கால விஷயங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வது நல்லதல்ல என்று சொல்லும் போதே நான் விட்டிருக்க வேண்டும்.."

ஆனந்தின் முகத்தைப் பார்த்து விட்டு பேச்சை மாற்ற விரும்பிய அக்‌ஷய் கேட்டான்."சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு வைத்ததாக ஒருவன் ஃபோட்டோவை டிவியில் காண்பித்தார்களே? அது பற்றி உங்கள் சிபிஐயில் என்ன சொல்கிறார்கள்?"

"அது எங்கள் டிபார்ட்மெண்ட் சம்பந்தப்பட்டதில்லையே. அதனால் பெரிதாக அது பற்றி கருத்து எதுவும் இல்லை. ஏன் கேட்கிறாய்?"

"அவர்கள் காண்பித்தது என்னுடைய ஃபோட்டோவைத் தான்"

ஆனந்த் திகைத்துப் போனான். அந்த புகைப்படத்தை அவனும் பார்த்து இருக்கிறான். ஆனால் இப்போதைய அக்‌ஷயின் தோற்றத்திற்கும் அதற்கும் சம்பந்தம் சிறிதுமில்லை. இப்போதைய நிலைமையின் பூதாகாரம் ஆனந்திற்கு புரிய ஆரம்பித்தது. இவனைக் கொல்ல அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

அக்‌ஷய் அவனிடம் அந்த ஃபோட்டோ டிவியிலும் பத்திரிக்கைகளிலும் வந்ததில் இருந்து நடந்ததை விவரித்தான். அந்த சிறுவனின் குடும்பம், ப்யாரிலால் பற்றி எல்லாம் சொன்னான். ப்யாரிலால் வீட்டுக்கு இரண்டாவது முறை சென்று அறிந்ததையும் சொன்னான். அதையெல்லாம் சொன்ன போது ‘அவர்களை மிரட்டி உண்மையை அறிந்து கொண்டேன்’ என்று சொன்னானே ஒழிய எப்படி மிரட்டி சொல்ல வைத்தான் என்பதை அவன் சொல்லவில்லை. ஆனால் அவனிடம் அனுபவப்பட்ட ஆனந்திற்கு அது எப்படி என்று சொல்லத் தேவை இருக்கவில்லை. தன் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

அக்‌ஷய் கேட்டான்."வலிக்கிறதா?"

"வலி கழுத்தில் இல்லை. என் ஈகோவில். இத்தனை வருஷங்கள் என் சர்வீஸில் நான் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளானதில்லை. அக்‌ஷய் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. உனக்கு பழையது எதுவும் ஞாபகம் வரவில்லை என்கிறாய். ஆனால் இந்த வித்தைகள் எல்லாம் உனக்கு எப்படி நினைவில் இருக்கிறது?"

"தெரியவில்லை ஆனந்த். எனக்கு அதெல்லாம் இயல்பாய் வருகிறது"

"சரி ஏன் நீ கேசவதாஸைப் பார்க்கப் போகவில்லை?"

"நான் அங்கே போவேன் என்று எதிர்பார்த்து அவருடைய செக்யூரிட்டியை அதிகப்படுத்தி விட்டார்கள். அதையெல்லாம் மீறி அந்த ஆளைப் பிடிப்பது பெரிய கஷ்டமான வேலை இல்லை. ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் போகலாம் என்று விட்டு விட்டேன். முதல் மூன்று நாள் அந்த ஆளுக்கு இருந்த பாதுகாப்பு கெடுபிடி எல்லாம் இப்போது இல்லை. இனி போகப் போக அதுவும் குறையும். அப்போது போகலாம் என்று இருக்கிறேன்."

ஆனந்த் சொன்னான்."அந்த ஆளிடம் ஜாக்கிரதையாக இரு. மிகவும் திறமைசாலி, தைரியசாலி என்றெல்லாம் அந்த ஆள் பெயர் எடுத்தவர்"

*********

அவர்கள் கேசவதாஸைப் பற்றி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் கேசவதாஸும் அமானுஷ்யனைப் பற்றியேதான் நினைத்துக் கொண்டு இருந்தார். அந்த ஃபைலில் அவர் படித்திருந்த தகவல்கள் சரியாக இருக்குமானால் அவனுக்கு அந்தப் பாதுகாப்பை மீறி அவரை வந்து பார்ப்பது ஒரு பெரிய விஷயமல்ல. எனவே அவன் வருவான் என்று காத்திருந்தவர் ஏமாந்து போனார்.

மந்திரி அவனை ஒழிக்கப் போட்ட திட்டத்தில் தன்னிடம் முழுவதையும் சொல்லி விடவில்லை என்ற சந்தேகம் கேசவதாஸுக்கு இருந்து கொண்டே இருந்தது. இது போன்ற பதவியில் தாக்குப் பிடிக்க வேண்டுமானால் அரசியல் தலைவர்களுக்குப் பல காரியங்களை செய்ய வேண்டி இருக்கும் என்பதால் இது வரை எத்தனையோ அரசியல்வாதிகளுக்கு எவ்வளவோ செய்திருக்கிறார். ஆனால் அந்த சமயங்களில் எல்லாம் என்ன செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்றெல்லாம் தெளிவாக அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இப்போதோ அந்த மந்திரி முழுவதுமாகத் தன்னிடம் சொல்லவில்லை என்பதும் பின்னால் ரகசியமாக ஏதோ செய்து கொண்டிருக்கிறார் என்பதும் மனதில் மிகவும் நெருடலாக இருந்தது.

ப்யாரிலாலைக் கண்டு அவனிடம் விரிவாக சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இரு நாட்களாக பலப்பட்டுக் கொண்டே இருந்தது. ஆனால் அவனை வரவழைத்துப் பேசினால் அது மந்திரிக்கு சந்தேகத்தைக் கிளப்பும் என்பதால், தானே அவனைப் போலீஸ் ஸ்டேஷனிலேயே சென்று சந்திக்க முடிவெடுத்தார். ஆனால் அங்கு மட்டும் நேரடியாகச் சென்றாலும் அதே சந்தேகம் வரும் என்பதால் திடீர் சோதனை செய்ய மூன்று போலீஸ் ஸ்டேஷன்களைத் தேர்ந்தெடுத்து அதில் ப்யாரிலால் ஸ்டேஷனும் வருமாறு பார்த்துக் கொண்டார். மற்ற இரண்டு ஸ்டேஷன்களில் சோதனையை முடித்து விட்டு ப்யாரிலால் ஸ்டேஷனுக்குச் சென்றார்.

அலுவலகத்தில் சில ஃபைல்களையும் ரெகார்டுகளையும் பரிசோதித்த அவர் சில ஃபைல்களை எடுத்துக் கொண்டு ப்யாரிலாலிடம் தனியாக அது பற்றி பேச அழைத்தார். அவர் அழைக்கும் போதே அவர் ஏன் அழைக்கிறார் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிந்து கொண்ட ப்யாரிலால் மனதினுள் அமானுஷ்யனையும் அந்தக் கேஸில் தன்னை சிக்க வைத்த அனைவரையும் மனமார சபித்துக் கொண்டே உள்ளே போனான்.

"உட்கார்" என்று எதிரே இருந்த நாற்காலியைக் காட்டிய கேசவதாஸ் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் அவனையே ஆழ்ந்த சிந்தனையுடன் பார்த்தார்.

ப்யாரிலால் தர்மசங்கடத்துடன் நெளிந்தான். ஆனால் கேசவதாஸ் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பார்வையில் இருந்து அவனால் அவருடைய சிந்தனையை ஊகிக்க முடியவில்லை.

திடீரென்று கேசவதாஸ் கேட்டார்."அவனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?"

யார் என்று சொல்லாமலேயே யாரைப் பற்றி அவர் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட ப்யாரிலால் பெருமூச்சு விட்டான். அன்று இருட்டில் இருந்து கேள்விகள் கேட்டவனும் சரி, இன்று இவரும் சரி அவனைப் பற்றி அதிகம் அறிந்து கொள்ள ஆவலாக இருந்தார்கள். இருவருமே அவனைப் பார்த்திராதவர்கள் என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. தன் சந்தேகத்தை வாய் விட்டே ப்யாரிலால் கேட்டான்."நீங்கள் அவனைப் பார்த்ததில்லையா?"

கேசவதாஸ் ஒரு சில வினாடிகள் மௌனம் சாதித்து விட்டு சொன்னார்."இல்லை"

"நீங்கள் அதிர்ஷ்டசாலி"

அந்த ஃபைலில் படித்தது கேசவதாஸிற்கு நினைவுக்கு வந்தது. அவனை சந்திக்க நேர்ந்ததே தங்கள் துரதிர்ஷ்டம் என்று அவனுடைய எதிரிகள் சொன்னதாகப் படித்திருந்தார். ப்யாரிலாலும் அதைத்தான் சொல்கிறான்.

"எனக்கு அவனை நீ பார்த்தது முதல் ஒன்று விடாமல் சொல்"

ப்யாரிலால் வெறுத்துப் போனான். இதே கேள்வியைத் தான் அந்த இருட்டில் இருந்தவனும் கேட்டான். கேட்டதற்குப் பதில் சொன்ன பின் மறுபடி அந்த சைத்தான் அவனைத் தேடி வந்தான். இன்னொரு தடவை வந்தால் என்ன செய்வான் என்பதை அவன் எச்சரித்துச் சென்றதும் நினைவுக்கு வந்தது. இவர்களுடன் சிக்கிக் கொண்ட தன் விதியை நினைத்து மனம் நொந்தான்.
அழாத குறையாக அவரிடம் சொன்னான்."சார் அவனைப் பற்றி நான் உங்களிடம் சொன்னது தெரிந்தால் என்னை வாழ்நாள் எல்லாம் கோமா ஸ்டேஜில் ஆக்கி விடுவேன் என்று சொல்லியிருக்கிறான். அவன் கண்டிப்பாய் செய்யக் கூடியவன்தான்."

கேசவதாஸ் சொன்னார்."நீ என்னிடம் பேசினது எதுவும் நம் இரண்டு பேரைத் தவிர வேறு யார் காதுக்கும் போகாது ப்யாரிலால். நீ என்னை நம்பலாம். நான் வார்த்தையை சாதாரணமாகத் தர மாட்டேன். தந்தால் காப்பாற்றாமல் இதுநாள் வரை இருந்ததில்லை"

"சார் சொல்லாமலேயே தெரிந்து கொள்ளக்கூடிய ஆள் அவன்"

"இல்லை ப்யாரிலால். இது கண்டிப்பாய் ரகசியமாய் இருக்கும்"

கேசவதாஸைப் ப்யாரிலால் பரிதாபமாகப் பார்த்தான். பின் விதி விட்ட வழி என்று முதல் சந்திப்பில் நடந்தது எல்லாவற்றையும் சொன்னான். அவர் அவனை குடோனில் இருட்டில் விசாரித்தவன் கேட்டதையும் கேட்டார். சொன்னான்.

"அந்த ஆள் எதிர்பார்த்தது போல் அவன் திரும்பவும் உன்னைப் பார்க்க வந்தானா?"

தலைக்கு மேல் போனபின் ஜான் என்ன முழம் என்ன என்று அப்போது நடந்ததையும் சொன்னான்.

அங்கிருந்து கிளம்பும் போது கேசவதாஸ் சந்தேகம் வலுத்திருந்தது. அந்த மந்திரி சொன்னது போல் அவன் கண்டிப்பாக தீவிரவாதி அல்ல. ஆனால் அவனைப் பார்த்து அந்த மந்திரி பயப்படுகிறார். அடுத்த பிரதமராக வர வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் அவ்வளவு பெரிய ஆள் அவனிடம் பயப்பட என்ன காரணம்? ஏன் அவனை ஒழித்துக் கட்ட இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் அவர்? விஷயம் எதுவாக இருந்தாலும் மந்திரிக்கு ஆதரவாகத் தான் கேசவதாஸ் நடப்பார் என்பது தெரிந்தாலும் கூட மந்திரி அவரிடம் அதை சொல்லாமல் இருக்க வேண்டுமானால் ஏதோ பெரிய விவகாரமாக இருக்கும் போல் அல்லவா தோன்றுகிறது?

(தொடரும்)

About The Author