அரங்கனுக்கு ஆண்டாள், சிவனுக்கு ஆவுடையம்மாள்

கன்னியாகுமரியின் தலைநகரான நாகர்கோயிலில் உள்ளது ‘வடசேரி’ என்கிற ஊர். இங்கிருந்து ஒரு கி.மீ தூரத்தில் ஒரு சிவன் கோயில் இருக்கிறது.

இந்தக் கோயிலில் சிவன் மிகவும் வித்தியாசமான பெயரில் எழுந்தருளியுள்ளார். அவர் பெயர் தழுவிய மகாதேவர். இந்தப் பெயர்க் காரணம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

கன்னிப்பெண் ஆவுடையம்மாள் தவறாமல் இந்தச் சிவனைக் காண வருவாள். ஈசன் மேல் அளவில்லாத காதல் அவளுக்கு. ஆண்டாள் அந்த ஸ்ரீரங்கநாதனிடம் எத்தனை அன்பு வைத்திருந்தாளோ அது போல் இவளும் ஆடலரசனின் மேல் அளவில்லாத காதல் கொண்டு தினமும் காலையும் மாலையும் பூஜை செய்து விட்டு வீடு போவாள். பூஜையுடன் . மணிக்கணக்காய் பாடல்களும் பாட, அவளது பக்தி அங்கு பிரதிபலிக்கும்.

ஒரு நாள் ஈசன் மேல் நெஞ்சுருகிப் பாடிக்கொண்டிருக்கும்போது ஈசன் அவள் அன்பில் தன்னை மறந்து அவள் முன் தோன்றி, அப்படியே அவளை அணைத்தபடி மறைந்தார். இதனால், அன்றைய தினத்திலிருந்து இந்த ஈசனை, ‘தழுவிய மகாதேவர்’  என்று மக்கள் அழைக்கின்றனர்.

இங்கு ஈசன் ஆவுடையம்மாளை அன்புடன் தழுவியபடிக் காட்சி அளிப்பதால் இந்த மகாதேவரைத் தொழுதால் இல்லறம் சுகம் பெறும், இனிமை கூடும் என்று மக்கள் நம்புகின்றனர்.

கோயில் அருகில் ‘தந்த நதி’ ஓடுகிறது. தேவேந்திரனுடைய யானை தனது தந்தத்தால் தண்ணீருக்காகப் பூமியைக் கீறியதில் உண்டான நதி என்பதால் இந்தப் பெயராம்.

மூலவர் சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக்கிறார். அருகில் இருக்கும் அம்பாள் அழகோ அழகு! இங்கிருக்கும் ஜுரதேவரிடம் வந்து முறையிட்டால் எப்படிப்பட்ட ஜுரமும் சரியாகிவிடும் என்பது இங்கு இன்னொரு சிறப்பு. ஜுர தேவருக்கென்று தனிச் சன்னிதி இருக்கிறது. மூன்று தலைகள், ஒன்பது கண்கள், மூன்று கால்கள், நான்கு கைகள் என்று பார்க்க வித்தியாசமான தெய்வம் ஜுர தேவர். இவரும் சிவ சொரூபம்தானாம்.

ஒரு சமயம் சிவனுக்கும், மகாவிஷ்ணுவுக்கும் ஒரு தர்க்கம் ஏற்பட்டதாம். அப்போது திருமால் கோபம் வந்தது போல் நடித்து ஜுரம் ஏற்படும் அம்பைச் சிவன் மேல் ஏவினாராம். அந்த அம்பை அப்படியே சிவபெருமான் தாங்கிப் பிடிக்க ஜுரதேவரின் உருவம் சிருஷ்டி ஆயிற்றாம்.

இந்த ஜுர தேவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்! இவரது பிரசாதம் மிளகுப் பால். பாலில் மிளகு அரைத்துப் போட்டு அவரது நெற்றியில் சந்தனம் போல் அப்ப வேண்டும். அதை மறுநாள் ஜுரம் வந்தவர்கள் சாப்பிட்டால் நோய் ஓடிப்போய்விடும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

ஜுரதேவர் அருகில் குருவான தட்சிணாமூர்த்திச் சன்னதி இருக்கிறது. பலர் இவருக்கு மஞ்சள் வஸ்திரமும் கொண்டைக்கடலை மாலையும் அணிவிக்கின்றனர். கோயிலின் தல விருட்சம் வில்வ மரம். அதுவும் மிக அபூர்வமாக, இந்த வில்வ மரத்தின் இலை இருபத்தொரு தளங்கள் கொண்டதாக இருக்கிறது! இங்கிருக்கும் சனிபகவான் பால சனியாக, சாந்தமாகக் காக்கை வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். காகத்தைக் கையிலும் ஏந்தியிருக்கிறார். இவரை வணங்கினால் பாலாரிஷ்டம், குழந்தைகளுக்கு வரும் தீராத நோய்கள் போன்றவை மாயமாக மறைந்துவிடும்.

எல்லாமே வித்தியாசமாக இருக்கும் இந்தக் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. நாகர்கோயில் போகும் பக்தர்கள் வடசேரி சென்று இந்தக் கோயிலையும் பார்த்து ஈசனின் அருள் பெறவேண்டும்!

About The Author