அரசியல் அலசல்

சில காலமாக மன நலம் சரியில்லை என்று சொல்லப்படும் நபர்கள் ஜெ. வீட்டின் அருகில் அலைவது தெரிகிறது. “தமிழ் நாட்டில் உள்ள மன நோயாளிகள் எல்லாம் என் வீட்டுக்குப் படையெடுத்து வருவது போல் தெரிகிறது” என்று அங்கலாய்க்கிறார் அவர். “உங்கள் கட்சிக்கு வருபவர்களும் அப்படித்தான்” என்று எதிர்க் கட்சிக்காரர்கள் கிண்டலடிக்கக் கூடும்.

***

சத்தியமூர்த்தி பவன் கத்திக்குத்து பவன் ஆகிவிட்டது. கிருஷ்ணஸ்வாமியைத் தாக்கியவர்கள் பற்றிப் புலன் தெரியவில்லை, என்றாலும் மயூரா ஜெயகுமாரைத் தாக்கியது, காங்கிரஸார் ஏற்பாடு என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் வெளியே வந்து விட்டது.

காந்திஜியின் பாரம்பரியத்துக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். காமராஜ் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று பீற்றிக் கொள்கிறார்கள். சத்தியாக்கிரக நூற்றாண்டு கொண்டாடுகிறார்கள். நாடு சுதந்திரம் பெற்றபோது எந்தப் பதவியையும் வேண்டாமல், கலவரப் பகுதிகளில் உண்ணாவிரதம் இருந்தவர் காந்திஜி. பதவியைத் தோள் துண்டை உதறுவது போல் உதறியவர் காமராஜ். அறப்போர் புரியும்போது, ரத்தம் சிந்தினால் அது நம் ரத்தமாக இருக்க வேண்டுமே தவிர எதிராளியின் ரத்தமாக இருக்கக்கூடாது என்பார் காந்திஜி. காந்திஜியின் அடியொற்றிய சீடர் காமராஜ்.

காங்கிரஸ்காரர்களே, இனிமேல் காந்திஜி, பெருந்தலைவர் பெயரையெல்லாம் சொல்லி அவர்களைக் களங்கப் படுத்தாதீர்கள்.

கலைஞர் அவர்களே, உங்களுக்குக் கோடி கும்பிடு. பைசாவுக்கு பிரயோசனமில்லாத (அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்) இளைஞர் காங்கிரஸ் பதவிக்கே இத்தனை ரத்தம் என்றால், நீங்கள் ஒரே ஒரு மந்திரி பதவி கொடுத்திருந்தால் கூட, எத்தனை கொலைகள் விழுந்திருக்குமோ, நினைக்கவே பயமாக இருக்கிறது, ரொம்ப தாங்க்ஸ், தப்பித் தவறி பதவியைக் கண்ணில் காட்டி விடாதீர்கள்.

காங்கிரஸ¤க்குப் புது ரத்தம் தேவை என்கிறார்கள். நம் அபிப்பிராயத்தில் அந்தக் கட்சிக்குத் தேவை முழு அளவிலான டயாலிஸிஸ்.

***

தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி எழுதிய இரங்கற்பா எங்கள் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத்துவிட்டது.
– தமிழகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

அவ்வளவு உருக்கமாகவா இருந்தது?

வளர்ந்துவரும் 119 நாடுகளில் பசியால் வாடுவதில் இந்தியா 96வது இடத்தில் உள்ளது. சீனா 47வது இடத்தில் – செய்தி

பொருளாதாரம் 8 சதவிகிதம் 9 சதவிகிதம் உயர்ந்துவிட்டது என்று மார் தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் காதில் விழுகிறதா?

அம்பேத்கார் சிலை கைவிரல்கள் சேதப்படுத்தப்பட்டன, திருநெல்வேலி அருகே தேவர் சிலைக்கு சேதம் – செய்திகள்

போகிற போகில் சிலைகளுக்குக்கூட இசட் + பாதுகாப்புத் தேவை போலிருக்கிறது!

சர்வதேச அணுசக்தி ஏஜன்ஸியிடம் மத்திய அரசு பேச இடதுசாரிகள் ஒப்புதல் – செய்தி

நந்தி விலகியதற்கு நந்திகிராம்தான் காரணம் என்று சொல்கிறார்களே!

நான் பதவி பெறுவதில் அண்ணன் ஸ்டாலின் மகிழ்ச்சி அடைவாரே தவிர கோபித்துக்கொள்ள மாட்டார் – கனிமொழி

மனம் பூராவும் மகிழ்ச்சி பொங்க வானத்தில் பறப்பாரோ!

சென்னையில் ஸ்வர்ணசக்தி அபிராமி தியேட்டரில் படுத்துக்கொண்டே படம் பார்க்க வசதி – செய்தி

திரையிடும் படங்கள் படுக்காமல் இருந்தால் சரி!

‘உடலிலேயே மிகவும் கவர்ச்சியான அம்சம் கண்கள்தானாம்! சிரித்த முகத்துடன் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசுவோர் மற்றவர்களைவிட அதிகக் கவர்ச்சியாக உள்ளனர். கண்கள் கவர்ச்சியாக இருந்தால் உடல் கவர்ச்சி எடுபடுவதில்லை’ என ஒரு ஆய்வு சொல்கிறது.

யார் சொன்னது? உடலிலேயே கவர்ச்சியான அம்சம் தொப்புள்தான் என்கிறார் ஒரு படத்தயாரிப்பாளர்.

ஊழல் மற்றும் முறைகேடுகள் நடக்கும் பட்டியலில் காவல்துறைக்குத்தான் முதலாவது இடம் என்று சொல்கிறார்கள். அந்தப் பட்டியலில் அரசியல்வாதிகள்தான் முதலிடத்தில் உள்ளனர் – கூடுதல் டி.ஜி.பி லத்திகா சரண்

மயிரிழையில் முந்திவிட்டார்களோ! விடாதீர்கள். அடுத்த முறை நீங்கள் முதலிடம் பிடிக்க வேண்டும்!

பெண்களுக்கு சமத்துவம் அளிப்பதில் 128 நாடுகளில் இந்தியா 114வது இடத்தில் இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு அரசியல் சமத்துவத்தில் 21வது இடமாம்!

***

லாலுவின் புதுமுகம்

கனடா நாட்டு ஒளிபரப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்திய ரிபான் என்ற வண்ணப் படத்தில் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் நடிக்க இருக்கிறார். அவரது வாழ்வின் சுவையான அம்சங்கள் இந்தப் படத்தில் இடம் பெறுமாம் (சொல்ல முடியாது, லாலுவுக்கு லக் உண்டு, ஆஸ்கார் அவார்டு கிடைத்தாலும் கிடைக்கலாம்).

***

தட்டிக் கேட்கும் தெருவோரக் குழந்தைகள்

மத்திய அரசு தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் ஒன்பது சதவிகிதத்தைத் தங்களின் கல்வி மருத்துவ வசதிகளுக்காக அளிக்க வில்லையென்று என்று மும்பையைச் சேர்ந்த நடைபாதைகளில் வசிக்கும் சிறுவர்கள் NINE IS MINE என்ற தங்கள் அமைப்பின் மூலம் மாநாடு நடத்தி, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தப் போகின்றனர். மூர்த்தி சிறிதானாலும்—–! 

About The Author

4 Comments

  1. selva

    இந்த மாதிரி நிஜ காமிடிய படிச்சாலே ஒரு அஜல் குஜல் தான்ப!

  2. Rishi

    ஜ.ப.ர. குடும்பத்துக்கு நையாண்டி பாணி நகைச்சுவை அத்துப்படி…
    இன்னும் நெறய எழுதினா நல்லா இருக்கும்.

  3. kalaiananthan

    india enga pogirathu enre theritale……………namma nadu munnera ore vali thannalam illatha thalaivargal thevai………youngsters talent valathukittu arasialukku varanum………………..kandippa india 2020 vallarasagum………… jaiho………………….

Comments are closed.