அறிவியல் முத்துக்கள் (18)

கணினித் துறையில் கேட்/கேம் (CAD/CAM)

CAD CAMCAD மற்றும் CAM என்பவை முறையே "Computer Aided Design (கணினி துணையுடனான வடிவமைப்பு)" மற்றும் "Computer Aided Manufacture (கணினி துணையுடனான உற்பத்தி)" எனப் பொருள்படும். இரண்டுமே அடிப்படையில் வரைபடங்களை உருவாக்க அல்லது பொருட்களை உற்பத்தி செய்ய உதவும் கணினி நிரல்கள் (Computer programs) – அறிவுறுத்தல்களின் தொகுதிகள் (Sets of Intructions) – ஆகும். CAD நிரலின் வாயிலாக எளிய பேனா அல்லது சுட்டியைப் (mouse) பயன்படுத்தி கணினித் திரையில் திருத்தமற்ற வரைபடங்கள் (rough sketches) வரையப்பட்டு, பின்னர் அவை துல்லியமான விவரங்களுடன் இறுதி செய்யப்படும். இவ்வாறு இறுதி செய்யப்பட்ட வரைபடங்கள் முழுமையாகவோ அல்லது பல பகுதிகளாகவோ கணினி நினைவகத்தில் (Memory) எதிர்காலப் பயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கப்பட முடியும். இவ்வாறு சேமித்து வைக்கப்படும் வரைபடங்களை மாற்றம் செய்யவோ அல்லது மேம்படுத்தவோ இயலும். சில நேரங்களில் CAD நிரல்கள், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் மற்றும் கணினிச் சில்லுகள் போன்றவற்றை வடிவமைக்கும் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மாறாக CAM நிரலானது தொழிற்சாலைகளில் பொருட்களை உற்பத்தி செய்வதில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக கணினியால் இயக்கப்படும் கடைசல் பொறிகள் (lathes), துளையிடும் கருவிகள் (drilling machines), பற்றவைப்புப் பொறிகள் (welding machines) அல்லது ரோபோவால் இயக்கப்படும் வரிசை முறை உற்பத்தி ஆகியவற்றைத் தொழிற்கூடங்களில் பயன்படுத்தி, பல்வேறு துல்லியமான பொருட்களை விரைந்து உற்பத்தி செய்ய இயலும்.

புற்று நோய் (Cancer)

Cancerஉடலில், அசாதாரணமான மற்றும் கட்டுப்படுத்த முடியாத உயிரணுக்களின் (cells) வளர்ச்சியே, புற்றுநோய் அல்லது கான்சர் (cancer) எனப்படுகிறது. உடலின் குறிப்பிட்ட பகுதியில் அவை கட்டுப்படுத்த இயலாமல் அசாதாரணமாக வளர்ந்து கட்டித் (tumour) திசுவாக மாறுவதோடு உடலின் பிற உறுப்புகளுக்கும் பரவத் துவங்குகிறது. உடலின் பிற பகுதிகளுக்குப் பரவும் கட்டிகள் "வீரியமிக்க கொடிய" கட்டிகளாக இருக்கின்றன; இவை தோன்றுமிடத்திலேயே தங்கிவிடும் "தீங்கற்ற, வலிமையில்லாத" கட்டிகளிலிருந்து மாறுபட்டவை ஆகும்.

தற்போது புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்க மூன்று வழிகள் உள்ளன. முதலாவது, முதலில் தோன்றும் மூலக் கட்டியையும், பிற துணைக் கட்டிகளையும் முடிந்த அளவு அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றுவது. இரண்டாவது, ரேடியத்திலிருந்து பெறப்படும் ஆற்றல் மிக்க காமா கதிர்களைப் (gamma rays) பயன்படுத்தி புற்று உயிரணுக்களை அழிக்கும் முறை. புற்று எதிர்ப்பு மருந்துகள் சிலவும் உள்ளன; இவற்றைக் கொண்டு புற்று நோயைக் கட்டுப்படுத்த இயலும்.

ஆனால், இம்முறைகளால் கான்சர் உயிரணுக்கள் அழிவதுடன், சுற்றிலுமுள்ள சாதாரண திசுகளும் சிதைந்து போய், தீவிரமான பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். மரபியல் ஆய்வின் (genetic research) அண்மைக்கால முன்னேற்றங்கள் புற்றுநோய்ச் சிகிச்சையில் புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளன.

About The Author