அறிவியல் முத்துக்கள் (23)

கைவிரல்களில் ஏற்படும் வெட்டுக்காயங்கள் விரல் ரேகைகளை (finger prints) பாதிப்பதில்லை.

Finger Printபொதுவாக ஒரு மனிதரின் விரல் ரேகைகள் அவரது வாழ்நாள் முழுவதும் மாறுவதில்லை. சிறிய மற்றும் மேம்போக்கான, ஆறக்கூடிய வெட்டுக்காயங்களால் தோலின் மேலுச்சிப் பரப்பிலுள்ள விரல் ரேகைகளில் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இருப்பினும், தீவிரமான மற்றும் ஆழமான வெட்டுக்காயங்கள், கடுமையான தீப்புண்கள், அறுவை சிகிச்சை மற்றும் நோய்கள் ஆகியவற்றால் விரல் ரேகைகளில் மாற்றம் ஏற்படுவதுண்டு. ஆழமான வெட்டுக்காயங்களால் தோலின் அடிப்பகுதி பாதிப்படைந்து, புண் ஆறிய பின் தழும்பு ஏற்படுவதுண்டு. தழும்பின் திசுவானது விரல் ரேகைகளைக் காட்டுவதில்லை. இருப்பினும் இந்நிகழ்வுகள் மிக மிக அரிதாக நடைபெறுபவை; எனவே விரல்ரேகைகள் வாழ்நாள் முழுதும் பெரும்பாலும் மாற்றமின்றியே இருக்கும்.

நாவில் ஏற்படும் புண்/காயம் விரைந்து ஆறிவிடும்

Mouth Sourநாவில் ஏற்படும் புண்/காயம் விரைந்து ஆறிவிடுவதற்குக் காரணம் அதில் அமைந்துள்ள இரத்த நாளங்களும் (blood vessels) அதன் காரணமாக ஏற்படும் மிகுதியான இரத்த ஓட்டமுமே ஆகும். இதனால் வெள்ளை இரத்த உயிரணுக்கள் ஏராளமாக உற்பத்தியாகி காயம் ஏற்பட்ட இடத்திற்கு எளிதாகச் சென்று நோய்க்கிருமிகளால் (bacteria) ஏற்படும் நோய்த் தொற்றுகளைத் (infections) தடுப்பதுடன் புண் ஆறுவதைத் தடுக்கும் நுண்ணுயிரிகளையும் (microorganisms) அழிக்கின்றன. நாவில் உற்பத்தியாகும் உமிழ்நீரும் (saliva) கூட லைசோசைம் (lysozyme) என்னும் வேதிப்பொருளை உற்பத்தி செய்து நோய்க் கிருமிகளை அழிக்கிறது. மேலும் நாவின் மேற்புறத்திலுள்ள உயிரணுக்களும் நாவில் ஏற்படும் புண் விரைந்து ஆறுவதற்குக் காரணமாக அமைகின்றன.

கண்ணிமையின் முடிகள் நீண்டு வளர்வதில்லை

Eye Lashesநம் உடலில் வளரும் முடிகள் பல்வகைப் பண்புக்கூறுகளைக் (characteristics) கொண்டவை. தலையின் முடி நீண்டு வளரும்; நமது தோலிலும் கண்ணிமைகளிலும் வளர்பவை மிகவும் குட்டையானவை. கண்ணிமை முடிகள் தொடர்ந்து ஒழுங்கான இடைவெளிகளில் விழுந்து, புதிதாக முளைக்கின்றன. ஒரு உறுப்பின் மரபுவழிப்பட்ட பண்புகள்/சிறப்பியல்புகள் காரணமாக நிகழும் பரிணாம வளர்ச்சியின் ஒரு கூறாக இது கருதப்படுகிறது.

About The Author