அறிவியல் முத்துக்கள் (28)

வௌவால்கள் தலைகீழாகத் தொங்குதல்

Bats வௌவால்கள் பறக்ககூடிய பாலூட்டும் விலங்குகள் (mammals) ஆகும். பறவைகளால் பறக்கவும் நடக்கவும் இயலும்; ஆனால் வௌவால்களால் தமது கால்களைக் கொண்டு நடக்கவோ நிற்கவோ இயலாது. பரிணாம (evolution) வளர்ச்சியின்படி வௌவால்களின் முன்னியக்க உறுப்புகள் (forelimbs) அவற்றைத் தாங்கும் வகையில் மாற்றமடைந்துள்ளன. வௌவால்கள் பறக்காமல் இருக்கும்போது தலைகீழ்த் தோற்ற அமைப்பில் (posture) இயல்பாகத் தொங்கிக் கொண்டிருக்கும். தமது தனிச் சிறப்பு வாய்ந்த நகங்களைக் கொண்டு மரக்கிளைகளைப் பிடித்துத் தொங்குவதே வௌவால்களுக்கு இயல்பான நிலையாகும்.

தேனீக்கள் (bees) மென்மையான ஒலி (buzzing) எழுப்புதல்

Beesதேனீக்கள் ஒலி எழுப்புவதன் காரணம் அவற்றின் சிறகுகள் (wings) விரைந்து அடித்துக்கொள்வதுதான். அவை விரைந்து தம் சிறகுகளை அடித்துக்கொள்வதால், காற்றில் சிற்றலைகள் (ripples) உருவாகி மென்மையான ஒலி எழும்புகிறது. எல்லாப் பூச்சிகளுமே தமது சிறகுகளை அடித்துக்கொள்கின்றன. ஆனால் வண்ணத்துப்பூச்சி போன்ற சில வகைப் பூச்சிகள் மெதுவாக நொடிக்கு 4 முதல் 6 முறை மட்டுமே தம் இறகுகளை அடித்துக்கொள்ளும்; இதனால் ஒலி உண்டாவதில்லை. கொசு போன்ற சில உயிரினங்கள் தமது மிகச் சிறிய இறக்கைகளை அடித்துக்கொள்ளும்போது மிக நுண்ணிய ஒலியே உண்டாகும்; எனவே காதருகே அவை பறக்கும்போதுதான் அவ்வொலியைக் கேட்க இயலும். ஆனால் தேனீக்களின் இறக்கைகள் பெரியவை மற்றும் அவை நொடிக்கு 300 முதல் 400 முறை அடித்துக்கொள்கின்றன. எனவே தேனீக்கள் எழுப்பும் மெல்லொலியை மிகத் துல்லியமாக நம்மால் கேட்க இயலுகிறது.

பறவைகள் உறங்கும்போது தாம் உட்கார்ந்திருக்கும் மரக்கிளைகளிலிருந்து விழாதிருத்தல்

Penching Birdsநம்மைச் சுற்றி நாம் காணும் பறவைகளில் பெரும்பாலானவை மரக்கிளைகள், குச்சிகள், கம்பிகள் போன்றவற்றின் மீது அமரும் பறவைகளே (perching birds). அவற்றின் ஒவ்வொரு காலிலும் நான்கு விரல்கள் (toes) மூன்று முன்பக்கமும் ஒன்று பின்பக்கமுமாக அமைந்திருக்கும். தாவரத்தின் தண்டுகள், தொலைபேசிக் கம்பிகள், மரக்கிளைகள் போன்றவற்றில் பறவை அமர்வதற்கு இவையே துணை புரிகின்றன. இவ்வாறு அமரக்கூடிய பறவைகளின் காலிலுள்ள தசைநாண்கள் (tendons) உட்காரும் குச்சிகளை உறுதியாகப் பற்றிக்கொள்வதற்கேற்ப விரல்களை நெகிழ்ச்சியுடன் வளைக்க உதவி புரிகின்றன. உறங்கும்போது அசைவினால் பறவைகள் தம் சமநிலையிலிருந்து (balance) தவறிவிட நேர்ந்தாலும், அவற்றின் கால்கள் தாமாகவே உட்காருமிடத்தை உறுதியாகப் பற்றிக்கொள்வதால் அவை கீழே விழுவது தவிர்க்கப்படுகிறது.”

About The Author