அறிவியல் முத்துக்கள் (3)

கம்பியில்லாத் தொலைபேசி (cordless phone)

சாதாரணத் தொலைபேசியில் இருப்பது போன்று, அதன் அடிப்பகுதிக்கும் மேற்பகுதிக்கும் இடையே, இதில் கம்பி இணைப்பு இருப்பதில்லை. எனவே இது கம்பியில்லாத் தொலைபேசி என அழைக்கப்படுகிறது. இத்தொலைபேசியில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று தொலை பேசிக் கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ள அடிப்பகுதி; மற்றொன்று பேட்டரி மின்கல ஆற்றலுடன் கூடிய, பேசுவதற்கு கையில் வைத்துக் கொள்ளக்கூடிய பகுதி. இவ்விரு பகுதிகளிலும் குறைந்த ஆற்றலுடைய வானொலி அலைபரப்பியும் (transmitter), அலை வாங்கியும் (receiver) இருக்கின்றன; இவை இரண்டும், இருவழித் தகவல் தொடர்புக்காக, குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இயங்குவன. வெளியிலிருந்து யாரேனும் அழைத்தால், அவ்வழைப்பு அடிப்பகுதியால் உள்வாங்கப்பட்டு, வானொலி சமிக்கைக் குறியீடுகள் வாயிலாக (coded radio signals) கையில் வைத்துக் கொள்ளும் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. கையிலுள்ள கருவியில் இருக்கும் அலைவாங்கி அச்சமிக்கைகளைப் பெற்றுக்கொண்டு, பேசுவதற்கான தொடர்பை ஏற்படுத்தித் தருகிறது. அதேபோன்று பேசுவோருடைய பேச்சைக் கையிலுள்ள கருவி, அடிப்பகுதிக்கு வானொலி அலைகள் வாயிலாகச் செலுத்தி, பின்னர் அது கம்பி வழியே அனுப்பி வைக்கப்படுகிறது. இப்போது இருவரும் ஒருவருக்கொருவர் சாதாரணத் தொலைபேசியில் பேசுவது போன்று பேச முடிகிறது. ஆனால் பெரும்பாலான கம்பியில்லாத் தொலைபேசிகள், சில நூறு மீட்டர்களுக்குள் பேசுவதற்குத்தான் பயன்படுகின்றன.

எறும்பும் சர்க்கரையும்

Ant with Sugarகுழுவாக இருக்கும் எறும்புக் கூட்டத்தில் மூன்று வகை எறும்புகள் உள்ளன. இராணி எறும்பு, இறக்கைகளை உடைய ஆண் எறும்புகள், இறக்கைகளற்ற பெண் எறும்புகள் அல்லது வேலைக்கார எறும்புகள் என்பனவே அவை. வேலைக்கார எறும்புகளில் சில வேவு பார்க்கும் பணியும் செய்பவை. இந்த எறும்புகள் அங்குமிங்கும் சிதறி, உணவு தேடிக் கண்டு பிடிக்கும் பணி புரிபவை. சர்க்கரை போன்ற உணவுப் பொருளைக் கண்டறிந்த எறும்பு உடன் தனது கூட்டிற்குத் திரும்பும். திரும்பும் போது தனது அடி வயிற்றிலிருந்து வாசனைப் பொருள் ஒன்றைத் தொடர்ந்து தரையில் விழச்செய்யும். இவ்வாசனைப் பொருளை நுகரும் பிற எறும்புகள் அவ்வழியே சென்று சர்க்கரை அல்லது உணவுப் பொருட்களைக் கண்டறிந்து கொள்கின்றன.

About The Author