அறிவியல் முத்துக்கள் (30)

ஏரி, குளங்களின் தரைப்பகுதி நீரில்லாதபோது வெடிப்பது

Landஏரி குளங்களில் தண்ணீர் இருக்கும்போது அவற்றின் அடிப்பகுதியில் சாதாரணமாக சேறு மற்றும் களிமண் கலந்த வண்டல் படிவம் (sediments) இருக்கும். களிமண்ணில் வேதிப் பொருட்களான (chemical substances) சோடியம் பெண்டனைட் கலந்திருக்கிறது; இது விரியும் தன்மை (expand) கொண்டது. ஈரப்பசை இன்றி உலரும் தன்மை ஏற்படும்போது களிமண்ணில் சுருக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக பாளம் பாளமாக வெடிப்பு உண்டாகிறது. எனவே, கோடைக்காலத்தில், நீர் வற்றிய நிலையில், ஏரி குளங்கள் வறண்டு அவற்றின் தரைப்பகுதியில் வெடிப்புகள் காணப்படுகின்றன.

பறவைகள் பாடுவது அல்லது இசையொலி எழுப்புவது

Birdsபெரும்பாலான பறவைகள் தமது தொண்டைகளில் அமைந்துள்ள பாடும் குரல் உறுப்பைப் (syrinx) பயன்படுத்தி ஒலிகளை எழுப்புகின்றன; ஆனால், எல்லாப் பறவைகளும் எழுப்புகின்ற ஒலியைப் "பாட்டு" அல்லது "இசையொலி" எனக் கூற இயலாது. சுமார் 5,000 பறவை இனங்களில் மட்டுமே, ஆண் பறவைகள் "பாட்டு" என வரையறுக்கத்தக்க வகையில் ஒழுங்கமைவுள்ள (organized) இனிய குரல் ஒலியை உருவாக்கக்கூடியனவாகும். ஆண் பறவைகள் பெண் பறவைகளைக் கவரவும் பிற ஆண் பறவைகளை எச்சரிக்கவும் பாடுகின்றன. இரு தனிப்பட்ட பறவைகளின் பாட்டு ஒரே மாதிரி இருப்பதில்லை எனினும், ஒவ்வொன்றும் தெளிவான (distinct) வேறுபாட்டுடன் அமைந்திருக்கும். பெரும்பாலான பறவைகள் காலை அல்லது மாலை வேளைகளில் பாடுகின்றன; நண்பகலில் அமைதியாகவே இருக்கும். குளிர் காலத்தில் பெரும்பாலானவை இசையொலி எழுப்புவதில்லை; ஆனால் இளவேனிற் (spring) காலத்தில் மகிழ்ச்சியுடன் பாடிக் களிக்கும். இக்காலப் பகுதியில்தான் ஆண் பெண் பறவைகளின் சேர்க்கையும் இனப் பெருக்கமும் நடைபெறுகின்றன.

வேர்கள் (roots) அடிப்புறமும் தண்டுகள் (shoots) மேற்புறமும் செல்வது

Rootsவிதை முளைவிட்ட (germination) பின் வேர்கள் அடிப்புறமும் தண்டுகள் மேற்புறமும் செல்வதற்கு இரண்டு எதிரிடையான பண்புநலன்களே (properties) காரணமாகும். முளைவிடும்போது வேர்களே முதலில் தோன்றுபவை; புவி ஈர்ப்பு விசையை (gravity) உணரும் ஹார்மோன்களின் செயல்பாட்டால் அவ்வேர்கள் கீழ்நோக்கிச் செல்வதற்கு வழிகாட்டப்படுகிறது. இப்பண்புநலன் புவி இயைபு (geotropism) எனப்படும். மாறாகத், தண்டுகள் ஒளியை உணரும் ஹார்மோன்களின் வழிகாட்டுதலால் மேல்நோக்கிச் செல்கின்றன. இப்பண்புநலன் ஒளி இயைபு (phototropism) எனப்படுகிறது. இவ்விரு பண்புநலன்கள் காரணமாக, முளைவிடும் போது விதை மண்ணில் எந்நிலையில் இருந்தாலும், வேர்கள் அடிப்புறமும் தண்டுகள் மேற்புறமும் செல்வது உறுதி செய்யப்படுகிறது.”

About The Author