அறிவியல் முத்துக்கள் (31)

ஒட்டகத்தின் முதுகில் தசை முண்டு (hump)

Camelஒட்டகத்தின் தசை முண்டுப் பகுதியில் பெருமளவு கொழுப்பு நிறைந்துள்ளது. தண்ணீரும் உணவும் கிடைக்கும்போது ஒட்டகம் அவற்றைச் சேமித்து வைத்துக் கொள்ளும்; அதற்கு ஆற்றல் (energy) தேவைப்படும்போது இக்கொழுப்பைச் செரிமானம் செய்து கொள்ளும். ஒட்டகம் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரையும் கூட நீரும் உணவும் இன்றி வாழக்கூடிய ஒரு விலங்கு. இக்காலப் பகுதியின் போது, தான் சேமித்து வைத்துள்ள கொழுப்பை அது பயன்படுத்திக் கொள்கிறது. ஒட்டகம் கொழுப்பைச் செரிமானம் செய்யும்போது வெளிப்படும் ஹைடிரஜனுடன், சுவாசிக்கும் போது பெறப்படும் உயிர்வளி / ஆக்சிஜன் சேர்கையில் நீர் உற்பத்தி ஆகிறது. வளர்சிதை மாற்றம் (metabolism) என்னும் இம்முறையால் உண்டாகும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொண்டு ஒட்டகம் பல நாட்களுக்குத் தனது நீர்த் தேவையை நிறைவு செய்து கொள்ளும். இச்செயல்முறையின் வாயிலாக அது தன் உடல் எடையில் 100 கிலோகிராம் வரை இழக்க நேரிடலாம். ஆனால் பாலைவனச் சோலையைக் (oasis) கண்டவுடனே சுமார் 120 லிட்டர் வரையான நீரை விரைந்து குடித்து சேமித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலையும் ஒட்டகம் பெற்றுள்ளது.

விண்ணில் பறக்கும் கழுகுகள் (vultures)

Vulturesகழுகு போன்ற கழிவுப் பொருட்களை உண்ணும் பறவைகள் (scavenger birds) இறந்துபோன விலங்குகளின் இறைச்சியை உண்பவை; தமது உணவைத் தேடுவதற்கு வானுயரப் பறந்து வட்டமடிப்பவை. மிக உயரத்தில் நிலைகொண்டு பறப்பதன் வாயிலாக பெரும் நிலப்பரப்பை அவற்றால் சுற்றாய்வு (survey) செய்ய முடிகிறது. ஏனெனில் கூம்பு வடிவப் பகுதியின் உச்சியில் பறவை இருப்பதால் அது சுற்றாய்வு செய்யும் அடிப்பகுதி பரந்து விரிந்து அமைகிறது. உயரம் அதிகமாக அதிகமாக அடிப்பகுதிப் பரப்பளவும் பெரிதாகிக்கொண்டே போகும். இவ்விதமாக இப்பறவைகள் தமது இரைகளை பெருமளவு நிலப்பரப்பில் தேட முடிகிறது. எனவேதான் கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பிற உயிரினங்களை உணவாகக் கொள்ளும் பறவைகள் வானுயரப் பறந்து வட்டமடிக்கின்றன. இருப்பினும் இத்தகைய பறவைகளுக்கு மிகக் கூர்மையான பார்வை இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

அயோடின் கலந்த உணவு உப்பு (edible salt)

Goiterமனிதர்கள் மற்றும் விலங்குகளின் இயல்பான வளர்ச்சிக்கு மிகச் சிறிய அளவிலான அயோடின் ஓர் இன்றியமையாத ஊட்டச் சத்தாகும். தைராக்சின் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்யும் தைராய்ட் சுரப்பியின் செயல்பாட்டில் அயோடின் பற்றாக்குறையினால் கோளாறு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. உடலின் வளர்சிதை மாற்றம் (metabolism) மற்றும் வளர்ச்சி வீதத்தை தைராக்சின் கட்டுப்படுத்துவதால், அயோடின் பற்றாக்குறை பல்வேறு உடற்கோளாறுகளை உருவாக்கிவிடும்; சிறுவர்கள் மற்றும் வயது வந்தோரிடம் ஏற்படும் குரல்வளைச் சுரப்பி வீககம் (goiter), மூளை வளர்ச்சிக் குறைபாடு, அறிவுக் கூர்மையின்மை மற்றும் குழந்தைகளிடம் ஏற்படும் தசைக் கோளாறுகள் ஆகியன அயோடின் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்களாகும். கருவுற்ற தாய்மார்களுக்குக் குழந்தை இறந்து பிறக்கக்கூடும்.

உப்பில் அயோடின் கலத்தல் (iodization) வாயிலாக அயோடின் பற்றாக்குறையை எளிதில் நீக்க இயலும். முதலாவதாக உப்பு நமது உணவில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது; அடுத்ததாக அதனை உணவில் மிக அதிகமாகச் சேர்த்துக்கொள்ளவும் முடியாது. எனவே சாதாரண உப்புடன் அயோடின் கலப்பதால் மிகக் குறைவான/தேவையான அயோடின் நமது உடலுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது; மேலும் அயோடின் பற்றாக்குறையால் நமது உடலுக்கு வரக்கூடிய தீங்குகளும் தவிர்க்கப்படுகின்றன.”

About The Author