அறிவியல் முத்துக்கள் (32)

வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளில் பொடித்தூள் படர்ந்திருத்தல்

Butterfly"வண்ணத்துப் பூச்சி மற்றும் அந்துப் பூச்சிகள் (moths) ஆகியவற்றின் சிறகுகளில் மிக நுண்ணிய செதிள்கள் (scales) படர்ந்திருக்கும். இந்த நுண்ணிய செதிள்கள் ஒளியின் குறுக்கீட்டினால் (optical interference of light) சிறகுகளில் கண்ணைக் கவரும் வண்ணங்களையும் வடிவங்களையும் (patterns) உருவாக்குகின்றன. மேலும் இச்செதிள்கள் எதிரொளித்து (reflex) மனதைக் கவரும் இவ்வண்ணங்களைப் பரவச் செய்யும் ஆற்றல் மிக்கவை. சிறகுகளை யாரேனும் தொட்டால், இந்நுண்ணிய செதிள்கள் பொடித் தூளாகக் கையில் ஒட்டிக்கொண்டு வெளியேறி விடுவதுடன், சிறகுகளின் பரப்பும் நிறமற்றதாக மாறிவிடும். 

வறண்ட மண்ணில் (parched soil) மழை பெய்தபின் மணம் வீசுதல்

Parched Soilவழக்கத்துக்கு மாறான இம்மணம் வீசுவதற்கு மண்ணில் வாழும் ஸ்ட்ரெப்டோமைசெட்ஸ் (streptomycetes) என்னும் நுண்ணுயிர்களே (bacteria) காரணம் ஆகும். வறண்ட கதகதப்பான மண்ணில் இந்த நுண்ணுயிர்கள் ஏராளமாக வாழ்கின்றன – ஒரு சிட்டிகை அளவு மண்ணில் பல நூறாயிரம் நுண்ணுயிர்கள் உள்ளன. உலர்ந்த மண்ணில் மழை பெய்து மண் ஈரமானவுடன், இந்நுண்ணுயிர்கள் ஜியோஸ்மின் (geosmin) மற்றும் 2-மீதைல் ஐசோபோர்னியோல் (2-methyl isoborneol) என்னும் இரு வகைப்பட்ட கூட்டுப்பொருட்களை (compounds) வெளிவிடுகின்றன. இதனால்தான் மழைக்காலத்தின் முதல் மழை பெய்தவுடன் ஒரு வகையான மணத்தை நாம் உணர்கிறோம். இத்தகைய மணம் புதிதாக உழப்பட்ட நிலத்திலிருந்தும் வீசுவதை நாம் உணரலாம்.

பனிப்பாறை மீது சறுக்கிச் செல்லமுடிவது (skating)

Skatingபனிச்சறுக்கு என்பது கடினமான பனிப்பாறையின் வழவழப்பான பரப்பின் மீது பனிச்சறுக்குக்கு உரிய காலணியை அணிந்துகொண்டு சறுக்கிச் செல்வதாகும்; இச்சிறப்பு வகைக் காலணியில் உலோகத் தகடுகள் இணைக்கப்பட்டிருக்கும். கடினமான மற்றும் வழவழப்பான பனிப்பாளத்தின் மீது எளிதாகச் சறுக்கிச் செல்லமுடிவதற்குக் காரணம், பனிப்பரப்புக்கும் உலோகத் தகட்டுக்கும் இடையே எவ்வித உராய்வு விசையும் (frictional force) இல்லாமலிருப்பதே ஆகும். மேலும் கூர்மையான உலோகத் தகடுகளின் அழுத்தத்தால் பனிக்கட்டி உருகி நீராகிறது; இந்த நீர் ஓர் உயவுப்பொருளாகப் (lubricant) பயன்பட்டு எளிதாகச் சறுக்கிச் செல்ல முடிகிறது. ஆனால் பனித்தூள் அல்லது மணல் போன்றவற்றின் மீது சறுக்கிச் செல்ல முடியாமைக்குக் காரணம், அவற்றின் பரப்பு கெட்டித் தன்மையுடன் அமைந்திருப்பதில்லை.

About The Author