அறிவியல் முத்துக்கள் (8)

காற்று மாசுத் துப்பறிகருவி (Air pollution detector)

Air Pollutionவளிமண்டலத்தில் சாதாரணமாகக் காணப்படாத பொருட்கள் கலப்பதால் காற்று மாசு படுகிறது எனலாம். காற்று மாசடைவதற்கான முக்கியக் காரணிகளாக விளங்குபவை சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், பொதுவாக வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு மற்றும் தொழிற்சாலைப் புகை ஆகியனவாகும். மாசுபடுத்தும் பொருட்களின் வேதியியல் அல்லது இயற்பியல் பண்புகளைப் பயன்படுத்தி, காற்று மாசுத் துப்பறிகருவிகள் செயல்புரிகின்றன. எடுத்துக்காட்டாக, வேதியியல் எதிர் வினையின் காரணமாக உமிழப்படும் ஒளியைப் பயன்படுத்தி நைட்ரஜன் ஆக்சைடுகள் கண்டறியப்படுகின்றன. இந்நிகழ்வு வேதிஒளிர்வு (chemiluminescence) எனப்படுகிறது. நைட்ரஜன் ஆக்சைடுகள் இருந்தால் ஒளி உமிழ்வு நடைபெறும்; உமிழப்படும் ஒளியானது, ஒளிக்கண்டுபிடிப்பானால் அறியப்படுகிறது. சல்ஃபர் டை ஆக்சைடானது, அதனைத் தீச்சுடரில் செலுத்தி, தீச்சுடர் ஒளிக்கருவியின் (flame photometer) மூலம் நிறத்தைப் பகுப்பாய்வு செய்து கண்டறியப் படுகிறது.

கார்பன் மோனாக்சைடு வாயுவானது அகச்சிவப்புக் கதிர்வீச்சின் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில், ஒரு தீப்பிறை அல்லது தீப்பொறியில் கிளர்வூட்டப்படும்போது கண்டறியப்படுகிறது. காற்றில் இவ்வாயு கலந்திருப்பதை அறிய அகச்சிவப்பு நிறநிரல் கருவி (spectrometer) பயன்படுத்தப்படுகிறது.

காற்றில் இவ்வாயுக்கள் எந்த அளவு கலந்துள்ளன என்பது ஒளியின் அடர்த்தி அல்லது உமிழும் நிறநிரல்களைக் கொண்டு அளவிடப்படுகிறது.

ஷாம்புவிலிருந்து நுரை உண்டாதல்

Shampooசோப்பின் நுண்ணிய சின்னஞ்சிறு குமிழ்களின் திரட்சியே நுரை எனப்படுகிறது. நம் தலை மயிரிழைகளின் இடைவெளியில் எப்போதும் ஏராளமான காற்று உள்ளடங்கி இருக்கும்.

நீரில் மிகுதியாகக் கரையும் திறன்கொண்ட மென்மையான சோப்புக்கட்டிப் பொருளிலிருந்து தான் ஷாம்பு தயாரிக்கப்படுகிறது. ஷாம்பைத் தண்ணீர் மற்றும் முடியுடன் இணைத்து உரசும் பொழுது மென்மையான சோப்புப் படலங்கள் உண்டாகின்றன; அப்போது முடியிடையே பொதிந்திருக்கும் காற்றின் காரணமாக நுண்ணிய சின்னஞ்சிறு குமிழ்கள் உருவாகின்றன. தலையில் ஆயிரக்கணக்கான மயிரிழைகள் இருப்பதால், ஏராளமான அளவில் ஷாம்பு நுரையும் உண்டாகிறது.

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    மொட்டைத் தலையில் ஷாம்பு தண்ணீர் போட்டு உரசினாலும் நுரை வரும்

Comments are closed.