அற்புத புருஷரைச் சந்தித்து ஆனந்தமடைந்த அதிசய சித்தர்!

கலியுக அவதாரமான ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 82வது பிறந்த நாளை ஒட்டிய சிறப்புக் கட்டுரை

நன்றி : ஞான ஆலயம் டிசம்பர் 2007

ஒரு அவதாரம் பூவுலகில் ஒவ்வொரு கணமும் நிகழ்த்தும் அற்புதங்கள் ஏராளம். கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திவ்யமான அற்புத லீலைகளை நிகழ்த்திய லீலா நாயகரான ஸ்ரீ சத்ய சாயி பாபா தனது வாழ்வின் ஒரு ஏட்டை அவரே கூறிய போது மெய்மறந்து போகிறோம். அந்த அற்புத ஏடு கூறும் லீலை என்ன? இந்த சரித ஆரம்பத்தை ரஷியாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஸ்டாலினின் இரும்புக் கர ஆட்சி ரஷியாவில் நடந்து கொண்டிருந்த நேரம். மக்கள் நிரம்பி இருந்த ஒரு அரங்கத்தில் இரண்டு பச்சை சீருடை அணிந்த சோவியத் போலீஸார் நுழைந்தனர். திடீரென்று மேடையில் ஏறிய அவர்கள், வருந்துகிறோம், காட்சி முடிந்து விட்டது என்று கூறி விட்டு கோமல் என்ற அந்த நகரின் மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போதே மனோசக்தி மூலம் சைக்கிக் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்த உல்ப் மெஸ்ஸிங் என்ற சைக்கிக் நிபுணரை அழைத்து சென்றனர்.

உல்ப் மெஸ்ஸிங்கை அழைத்து வரச் சொன்ன சர்வாதிகாரி ஸ்டாலின், அவரை நோக்கி, மனோசக்தியால் எதையும் செய்யும் வல்லமை படைத்தவர் நீங்கள் என்றால் நாளைக்கு ஒரு லட்சம் ரூபிளை மாஸ்கோ பேங்கிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காட்டுங்கள் என்று கட்டளையிட்டார்.

வங்கிக்குச் சென்ற மெஸ்ஸிங் நேராக காஷியரிடம் சென்றார்.ஸ்கூல் நோட்புக்கிலிருந்து கிழிக்கப்பட்ட பேப்பர் ஒன்றை அவரிடம் தந்து ஸ்டாலின் பெறச் சொன்ன பெரும் தொகையைக் கேட்டார். காஷியர் பேப்பரை நன்கு பார்த்தார். பின்னர் காஷ் பெட்டியைத் திறந்து ஒரு லட்சம் ரூபிளை எடுத்துத் தந்தார். ஸ்டாலினின் இரண்டு உதவியாளர்கள் நடப்பதை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.

பணத்தைப் பெற்று சூட்கேஸில் பத்திரமாக வைத்துக் கொண்ட மெஸ்ஸிங், பிறகு காஷியரை நோக்கி, அது வெறும் பேப்பர் தான் என்று சொன்னவுடன் காஷியர் மயக்கமடைந்து விழுந்தார். நடந்த விஷயங்களைக் கேட்ட ஸ்டாலின் திகைத்தார்; அடுத்த சோதனை ஒன்றை வைத்தார்.

மெஸ்ஸிங்கை க்ரெம்ளினுக்கு நுழைவு பாஸ் இல்லாமல் குறிப்பிட்ட நாளில் வருமாறு சொன்னார் ஸ்டாலின். குறிப்பிட்ட நாளில் க்ரெம்ளின் மாளிகைக்கு வந்த மெஸ்ஸிங் காவல் காத்து வந்தோரை நோக்கி, நான் தான் பெரியா. உள்ளே போகலாமா? என்றார். அவர் மனோசக்தியில் மயங்கிய காவலர்கள், ஆமாம், நீங்கள் பெரியா தான்; எங்களைக் கேட்க வேண்டுமா என்ன? உள்ளே செல்லுங்கள் என்று மரியாதையாக அனுப்பி வைத்தனர். அந்தக் கால கட்டத்தில் ஸ்டாலினின் மிகுந்த நம்பிக்கைக்கு உரிய ஒரே நபர் பெரியா தான்! மனோ சக்தியின் வலிமையைக் காண்பித்து க்ரெம்ளின் மாளிக்கைக்கு உள்ளே சென்று ஸ்டாலினின் அறையில் அவரைச் சந்தித்தார் மெஸ்ஸிங். அதீத உளவியலின் அற்புத சக்தியை நேரடியாக உணர்ந்த ஸ்டாலின் பாராசைக்காலஜி பிரிவை ரஷியாவில் தொடங்கினார்.

மெஸ்ஸிங் இந்தியா வந்த போது மகாத்மா காந்தியடிகளைச் சந்தித்தார். சிறிது நேரம் இருவரும் அரசியல் பற்றிப் பேசினர். பின்னர் மகாத்மா மெஸ்ஸிங்கிடம் சோதனைக்குத் தயாரா என்றார். மகாத்மா தன் மனம் மூலமாக மெஸ்ஸிங்கிற்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதைக் கண்டுபிடித்துச் செயல்படுத்த வேண்டியது மெஸ்ஸிங்கின் பொறுப்பு.

மகாத்மா மெஸ்ஸிங்கிற்கு கொடுத்த வேலை சின்ன வேலை தான்! மேஜை மேலிருக்கும் புல்லாங்குழலை எடுத்து அறையில் இருக்கும் யாரிடமேனும் கொடுங்கள்! மெஸ்ஸிங் உடனே அப்படியே செய்தார். பிறகு புல்லாங்குழலை உதடில் வைத்து அற்புத்மாக கானம் இசைக்க ஆரம்பித்தார்.

மெஸ்ஸிங்கில் வாழ்வில் இப்படி நடந்த அற்புதங்கள் ஏராளம்!
இப்படிப்பட்ட மகத்தான சைக்கிக் நிபுணர் பாபாவை அவரது பதினொன்றாம் வயதில் சந்தித்து அவரை இறைவனே என்று அடையாளம் கண்டு கொண்டார்.

22-11-1980 அன்று பகவான் பாபாவே நடந்த விவரங்களை விளக்கமாக உலகினருக்கு எடுத்துரைத்தார் (சத்ய சாயி ஸ்பீக்ஸ் 14ம் பாகம் பக்கம் 364) 1937ம் ஆண்டு. கடப்பா ஜில்லாவில் உள்ள கமலாபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இரு நண்பர்களுடன் பாபா நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மெஸ்ஸிங் அவர் கைகளைப் பற்றி முத்தமிட்டு கண்களில் நீர் வழிய, எனக்கு மிகுந்த சந்தோஷம்; எனக்கு மிகுந்த சந்தோஷம். ஐ லவ் யூ. ஐ லவ் யூ என்று ஆனந்த மிகுதியால் கூவினார்.

ஒரு வெள்ளைக்காரன் பாபாவைப் பிடித்துக் கொண்டு போவதை விரும்பாத அவரது நண்பர்களான ரமேஷும் சுரேஷும் பாபாவை அவசரம் அவசரமாக ரமேஷின் வீட்டிற்கு ஜீப்பில் அழைத்துச் சென்றனர். மெஸ்ஸிங் பின்னால் ஓடி வந்தார், அவரது வீட்டிற்கு முன்னால் மூன்று நாட்கள் நின்று கொண்டிருந்தார். பின்னர் அந்த வீட்டின் கதவில், இந்த வீட்டில் வாழ்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள்.தெய்வக்குழந்தையைத் தங்களுடன் வைத்துக் கொண்டு சேவை செய்கின்றனர்.எனக்கு அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இல்லை. பரவாயில்லை, நன்றி என்று எழுதி வைத்து விட்டுச் சென்றார்.

பகவான் பாபா மெஸ்ஸிங் பற்றி மீண்டும் 31-8-2002 அன்று தனது உரையில் ஏராளமான அற்புத செய்திகளைக் கூறியுள்ளார். (சத்ய சாயி ஸ்பீக்ஸ் பாகம் 35 பக்கம் 233-239) ஒரு நாள் பங்களூரில் என்னை தரிசித்து, ஆஹா! இவரைத் தான் சிறிய பையனாக இருந்த போது பல வருடங்களுக்கு முன்னர் தரிசித்தேன். அவரைச் சுற்றி தெய்வீக அவுரா – ஒளி உள்ளது என்று கூறி மகிழ்ந்தார். அவர் இந்த முறை மெஸ்ஸிங் தன்னுடன் கிர்லியன் கேமராவைக் கொண்டு வந்திருந்தார். அப்போது கல்லூரி பிரின்ஸிபாலாக இருந்த நரேந்திரா அந்த கேமரா வழியே பாபாவைப் பார்க்க விரும்பினார். அந்தக் கால கட்டத்தில் பாபா நகர சங்கீர்த்தனம் முடிந்தவுடன் தரிசனம் தருவது வழக்கமாக இருந்தது. நரேந்திரன் கேமரா மூலம் பாபாவைப் பார்த்து போட்டோவையும் எடுத்தார். அந்த இடமே ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருந்ததைப் பார்த்து நரேந்திரன் ஆச்சரியப்பட்டார். புனிதத்தைக் குறிக்கும் வெண்ணிற ஒளி பாபாவின் உடலைச் சுற்றியும் சுற்றுப்புறமெங்கும் பரவி இருந்தது.
சில நாட்கள் தங்கி இருந்த மெஸ்ஸிங் திடீரென ஒரு நாள் கிளம்பி விட்டார். அவர் நரேந்திரனுக்கு ரஷியாவிலிருந்து ஒரு கடிதம் எழுதினார்:-கடவுளுக்காகப் பணி புரியும் ஆசிரியர் நீங்கள்! எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி நீங்கள்!

ஒரு நாள் பாபாவுடன் அறையில் தனித்திருந்த நரேந்திரன் ஏதோ சந்தேகங்களை ஸ்வாமியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அறையில் வேறு யாருமே இல்லை. திடீரென மெஸ்ஸிங் உள்ளே வந்தார்.அவர் எப்படி உள்ளே வந்தார் என்று நரேந்திரன் ஆச்சரியப்பட்டார்.

இதைப் பற்றி பாபா கூறினார் இப்படி:- அவர் என்னை தரிசித்தார். உடனே மறைந்து விட்டார். இப்படிப் பட்ட காட்சியை அனைவராலும் பார்க்க முடியாது.புரிந்து கொள்ளவும் முடியாது.தெய்வீகம் மிகவும் மர்மமானது.

மெஸ்ஸிங் பற்றிய அனைத்து விஷயங்களும் பாபா நேராக தனது வாயாலேயே கூறிய அமுத மொழிகள் ஆகும்.
மெஸ்ஸிங் இந்தியாவிற்கு ஏன் வந்தார்? அவதார ரகசியங்களைப் பற்றி நேரடியாக அறிந்து கொள்ள வேண்டுமென்று அதற்குரிய சரியான இடமான இந்தியா நோக்கி அவர் வந்தார். அவதார ரகசியத்தை அறிவது அவரது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்தார்!

வந்த இடத்தில் அவதாரத்தையே நேரில் கண்டார். அந்த அவதாரத்தைக் கண்ட அதிசிய சித்தரைப் பற்றி அந்த அவதாரமே தன் உரைகளில் எடுத்து விளக்கியது இன்னும் அற்புதமான ஆச்சரியமான விஷயம் அல்லவா!

ஆயிரக்கணக்கான அற்புத மலர்களால் தொடுக்கப்பட்ட சாயி சரிதத்தில் ஆர்வமூட்டும் அதிசயமான மலர் தான் உல்ப் மெஸ்ஸிங் பாபாவை சந்தித்து இறைவனைக் கண்டேன் என்று ஆனந்தக் கண்ணீர் உகுத்த சரிதம்!

அதிசய சித்தர் அவதாரம் என்று சுட்டிக் காட்டிய அவதாரமான பாபாவை அவரது பிறந்த நாளில் பணிந்து உய்வோமாக!

*****************
 

About The Author

2 Comments

  1. s muthamizhselvi

    Mஇக்க நன்ட்ரு தஙலின் ஆன்மேக செவைக்கு

  2. Visweswaran Subramanyam

    Sairam Nagarajan!

    Upon reading the subject of your above article there is a question from one of my friends as follows:

    Was Sri. Saibaba alive when Stalin ruled Russia?!”

    Ileave his question to you for an answer please.

    nanRi, vaNakkam.

    Jai Sairam.

Comments are closed.