அவதார் – ஒரு பார்வை

பன்னிரண்டு வருட வனவாசத்திற்குப் பிறகு, ஜேம்ஸ் கேமரூன் மீண்டும் வெள்ளித்திரையில் பிரவேசம் செய்கிறார். டைட்டானிக், அபைஸ் போன்ற படங்களின் மூலம், ‘பிரம்மாண்டம் என்றால் இதுதான்’ என்று எடுத்துக் காட்டிய ஜேம்ஸ், பதினைந்து வருடங்களுக்கு மேல் உழைத்து, தன் அடுத்த திரைப்படமான ‘அவதார்’-ஐ உலகிற்கு அர்ப்பணம் செய்திருக்கிறார். ஒரு சிறு குழந்தையை வளர்ப்பது போல, இத்திரைப்படத்தையும் பேணிக் காத்து உருவாக்கியிருக்கின்றார் மனிதர்.

Jake1997ல் வெளிவந்த டைட்டானிக்கைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதாக இருந்ததாம். ஆனால் ஜேம்ஸ், ‘இப்படத்திற்கு வேண்டிய அளவிற்கு தொழில்நுட்ப சக்தி தற்போது இல்லை’ என்று சொல்லிவிட்டாராம். அப்படி என்ன தொழில்நுட்ப வளர்ச்சி வேண்டியிருக்கின்றது என்று யோசிக்கிறீர்களா? இப்படத்தில் உபயோகப்படுத்தியுள்ள தொழில்நுட்பத்தைப் பற்றி மட்டுமே ஒரு முழு கட்டுரையை எழுத முடியும்.

சுருக்கமாகச் சொன்னால், கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உலகிற்கு ஒரு புது உபாயத்தை வடிவமைத்திருக்கின்றார். கண்களால் எப்படி எல்லாம் பார்க்க முடியுமோ, அப்படியெல்லாம் இயங்கும் ஒரு கேமரா சாதனத்தையும் வடிவமைத்திருக்கின்றார். குறிப்பாக, முப்பரிமாணத்தோடு (3D) எடுக்கப்படும் திரைப்படங்களில் இவ்வம்சம் முக்கிய பங்கு பெறும். அதோடு மட்டுமல்லாமல், ஸ்டீவன் ஸ்பீல்பர்க், பீட்டர் ஜாக்ஸன் போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களைத் தன் இடத்திற்கு அழைத்து, தன்னுடைய புது கம்ப்யூட்டர் இயந்திரங்களைக் காட்டி, அவர்களையும் அதைப் பரிசோதிக்கச் சொல்லியிருக்கிறார். ஸ்பீல்பர்கும், ஸ்டார் வார்ஸ் புகழ் ஜார்ஜ் லூகஸும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்று, அவ்வியந்திரங்களை கேமரூன் இயக்குவதைக் கண்டு ரசித்திருக்கின்றார்கள். ஜேம்ஸின் முயற்சி, கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் துறையில் ஒரு மாபெரும் முன்னேற்றம் என்று புகழ்பெற்ற வல்லுனர்களால் கருதப்படுகிறது.

சரி! இத்தனை நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ‘அவதார்’ படத்தில் என்னதான் செய்திருக்கின்றார்! ‘பண்டோரா’ என்றொரு கற்பனைப் பிரதேசத்தை மிக மிக அற்புதமாக வடிவமைத்திருக்கின்றார் ஜேம்ஸ்! உண்மையில் பண்டோரா என்பது பூமியிலிருந்து வெகு தூரத்தில் எங்கோ இருக்கும் இன்னொரு உலகத்தின் நிலா. அங்கிருந்து பார்த்தால், அதனுடைய உலகம் உருண்டையாகத் தெரியும். அது பூமி அல்ல, பூமியிலிருந்து ஆறு வருடம் பிரயாணம் செய்து அடையும் இன்னொரு உலகம். பண்டோரா என்பது அவ்வுலகத்தின் நிலா! ஆம், படம் முழுவதும் பண்டோராவிலேயேதான் நடக்கிறது. தியேட்டருக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே நம் பூமியை தானாகவே மறந்து விடுவோம். ஆறு வருடப் பயணமில்லாமல், நொடிகளில் பண்டோராவிற்கு நம் மனம் சென்று விடும்.

நாம் நிறைய அறிவியல் புனைவு படங்களைப் பார்த்திருப்போம். அவற்றில் எல்லாம், வேற்று கிரகங்களைக் காட்டும் பொழுது, அவ்விடமே ஏதோ இருட்டாக இருப்பதுபோலும், வேற்று கிரகவாசிகளெல்லாம் ஏதோ இயந்திரங்களைப் போல் இருப்பதுபோலும், அவ்வுலகங்கள் நம்மைவிட பல மடங்கு வளர்ச்சி கண்டது போலுமே பார்த்திருப்போம். இவை எதுவுமே பண்டோராவில் கிடையாது. ஜேம்ஸின் உலகம் மிக மிக பசுமையான இடம். எத்தனை பசுமை என்றால் – நம் பூமி உருவாகிய சமயத்தில் எப்படி இருந்திருக்குமோ, அதை விட நூறில்லை, ஆயிரமில்லை, லட்சம்-கோடி மடங்கு பசுமை!! அங்கிருக்கும் ஒவ்வொரு மரமும் சுற்றியிருக்கும் அத்தனை மரங்களுடன் ஏதோ பேசிக்கொண்டே இருக்குமாம்! இவ்வதிசயத்தைக் கண்டு, அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவே க்ரேஸ் அகஸ்டின் எனும் பெண் பூமியிலிருந்து பண்டோராவிற்கு செல்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

Pandoraஜேம்ஸ் செய்திருப்பதையெல்லாம் பார்த்தால் வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது. அங்கு வாழும் மனிதர்களை – ‘நாவி’ மக்கள் எனப்படுவோரை – அவரே வடிவமைத்திருக்கின்றார். அவர்கள் பேசும் பாஷை ஒன்றை, பால் ஃப்ரோமர் (இவர் மொழிக்கலையில் தேர்ந்தவர்) என்றவரின் உதவி கொண்டு ஜேம்ஸ் உருவாக்கியிருக்கிறார். ஒரு பாஷையை உருவாக்குவதென்றால் அத்தனை சுலபம் அன்று! அது மட்டுமில்லை, அவர்களின் பழக்க வழக்கங்கள், காலை முதல் மாலை வரை அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களுடைய கடவுள் நம்பிக்கை என்று எல்லாத் துறைகளைப் பற்றிய விவரங்களையும் ஜேம்ஸ் உருவாக்கியிருக்கின்றார்.

பண்டோராவில் இருக்கும் இயற்கை அம்சங்கள், அங்கு வாழும் மிருகங்கள் என்று ஒரு புது உலகத்தை அத்தனை அழகாய் வடிவமைத்திருக்கிறார் ஜேம்ஸ். இயற்கை என்றால் அதுவன்றோ! எத்தனை நீர்வீழ்ச்சிகள் – எண்ணினால் கோடிக்கு மேல் இருக்கலாம்! எத்தனை மரங்கள் – அவை அனைத்தும் இரவில் ஒளி தரும் பொழுது, நம் மனதில் ஒரு இன்பம் பூக்கிறதே, அப்பப்பா!! அந்தரத்தில் தொங்கும் மலைத்தொடர் – அதைப் பார்க்கும் பொழுது, ‘நாமும் இங்கு செல்ல மாட்டோமா’ என்று தோன்றுகிறதே! படம் முடிந்து, தியேட்டருக்கு வெளியே வந்தவுடன்தான் நம் மூளை வேலை செய்ய ஆரம்பித்து, ‘நீர் பார்த்தது இன்னொரு உலகம் அல்ல, கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள்!’ என்று சொல்கிறது! நாமும் ‘அப்படியா’ என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்! அத்தனை கனக்கச்சிதம்! நம் இதயத்தை அம்சமாக கவர்ந்துவிட்ட பண்டோராவை உருவாக்கிய ஜேம்ஸ், மாபெரும் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதானே சொல்ல வேண்டும்!

நாவி மக்கள் – நீல நிறம், சப்பை மூக்கு, சராசரியாக பத்துப் பன்னிரண்டு அடி உயரம், பெரிய வால், வாலின் நுனியில் தன் உடலை இயற்கையுடன் ஒன்றிணைக்கக் கூடிய மாபெரும் சக்தி! மற்றபடி அவர்கள் பார்ப்பதற்கு மனிதர்களைப் போலவேதான் இருப்பார்கள். படத்தில் ‘அவர்களுக்கு நமக்கும் டி.என்.ஏவில் அத்தனை வித்தியாசம் இல்லை’ என்று சொல்லும் வசனம் கூட உண்டு. ஆனால், அவர்கள் வாழ்க்கைக்கும் நம் வாழ்க்கைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. நம்மைப் போல் காலை எழுந்து, ஆஃபீஸுக்குச் சென்று, மாலை வீடு திரும்பும் இயந்திர மக்கள் அல்ல. அவர்கள் இயற்கையை ரசிப்பவர்கள். தொழில்நுட்ப ரீதியில் நம்மை விட மிகக் குன்றிய வளர்ச்சி அடைந்தவர்கள். துப்பாக்கி, குண்டு என்றால் என்னவென்றே தெரியாதவர்கள். மனிதர்களைக் கண்டு பயம் கொள்பவர்கள். படத்தில் கூட, அவர்கள் மனிதர்களை ‘sky people’ என்றே அழைக்கிறார்கள்.

Pandoraஅவர்களுக்கு வீடுகளெல்லாம் கிடையாது. அடர்ந்த காட்டிற்கு நடுவில் ஒரு பெரிய (மிக மிக மிகப் பெரிய) மரத்தில் குடித்தனம் செய்பவர்கள்.நம் ஊரில் விமானம் பறக்கும் உயரத்தை விடவும் உயர்ந்ததாக அம்மரம் இருக்கும். அம்மரத்தையும், சுற்றியுள்ள இயற்கையையும் தெய்வமாக பாவிப்பவர்கள். ‘எய்வா’ என்றொரு முக்கியமான மரத்தை – பண்டோராவின் மொத்த இயற்கையையும் இணைக்கும் மரத்தை – கடவுளாக நினைப்பவர்கள். சூதுவாது அறியாதவர்கள், எல்லோரும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஜேம்ஸ் ஒரு யுடோபியாவை (Utopia என்றால் Idealistic world – எல்லாமே நெறி தவறாமல் நடக்கும் ஒரு கற்பனை உலகம்) உருவாக்க முயற்சி செய்திருக்கிறார் என்றே தோன்றுகின்றது. இதற்கு நேர்மாறாக ஏதேனும் இருக்க வேண்டுமே! உருவாக்க வேண்டுமா என்ன? அதுதான் நாம் மனிதர்கள் இருக்கின்றோமே! அதனால் நம்மையே படத்தின் வில்லனாக ஆக்கி விட்டார் ஜேம்ஸ்!! படத்தின் கதைக்கு வருவோமே.

2154ல் நடக்கின்றது இக்கதை. மனிதர்கள் தொழில்நுட்பத்தில் இன்னும் பல மடங்கு முன்னேறி விட்டார்கள். வேற்று கிரகங்களுக்குச் சென்று அங்கு என்னவெல்லாம் இருக்கிறதென்று தேடி அறிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டார்கள். மேலே குறிப்பிட்டுள்ள நாவிகள் வாழும் மரத்தின் கீழ், விலை உயர்வான, கிடைப்பதற்கரிய ஓர் உலோகம் இருக்கிறது என்று மனிதர்கள் அறிந்து கொண்டு விட்டார்கள். அதற்கு Unobtanium என்று பெயர். (டிக்ஷனிரியில் இல்லாத இவ்வாங்கில வார்த்தையின் பொருளே ‘கிடைப்பதற்கரியது’ என்பதுதான்.) அதனால், நாவி மக்களின் வீடாக, தெய்வமாக வணங்கும் அம்மரத்தை இடித்து, கீழே உள்ள உலோகத்தை எடுத்துக்கொண்டு பூமி திரும்ப வேண்டும் என்பது மனிதர்களின் திட்டம். அவர்களுக்கு இந்நாவி மக்கள் எல்லோரையும் ஒரேயடியாகக் கொன்றுவிட வேண்டும் என்று ஆசை. ஆனால், இயற்கை ஆராய்ச்சி செய்யும் க்ரேஸ் அகஸ்டீன், நாவிகளுடன் தாம் பேசிப் பழகி அவர்களை அவ்விடத்தைக் காலி செய்ய வைப்பதாக உறுதி கூறுவதால் மனிதர்கள் நாவி வேட்டையைத் தொடங்கவில்லை. Pandora

எப்படி பேசிப் பழகுவது? பண்டோராவில் இருக்கும் காற்றை மனிதர்களால் சுவாசிக்க முடியாதே! அதனால் நாவிகளைப் போலவே ஒரு உடம்பை உருவாக்கி (Genetic Engineering மூலம்), அதில் மனிதரின் ‘ஆவியை’ புக வைக்கும் கருவியை தயார்படுத்துகிறார்கள். ‘கூடு விட்டு கூடு பாய்வது’ போல நினைத்துக் கொள்ளுங்களேன்! க்ரேஸ் தலைமையில் இயங்கும் இக்குழுவின் பெயர் ‘அவதார் புரோக்ராம்’. இக்குழுவில் இருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும், அவருக்கென்றே தயார் செய்யப்பட்ட நாவி உடம்பு ஒன்று உண்டு. அதுதான் அம்மனிதருடைய ‘அவதார்’. ஒரு வழியாகப் படத்தின் தலைப்பிற்கான காரணத்தைக் கண்டுவிட்டோம்!

படம் ஆரம்பிக்கும் சமயத்தில், இது போன்ற சில ‘அவதார்கள்’ நாவி மக்களுடன் நட்பு கொண்டாடி, அவர்கள் பாஷையைக் கற்றுக் கொண்டு, அவர்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக் கொடுத்து, அவர்தம் முயற்சிகளில் கொஞ்சம் வெற்றி பெற ஆரம்பித்துவிட்டார்கள். நாவிகளை அம்மரத்திலிருந்து காலி செய்ய வைக்க முடியும் என்ற நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துவிட்டது.

படத்தின் முதல் காட்சி – ‘அவதார்’ குழுவில் பங்கு கொள்ள வேண்டிய ஒருவர் பூமியில் சந்தர்ப்ப வசத்தால் இறந்து போக, அவருடைய இரட்டைச் சகோதரரை பண்டோராவிற்கு அழைத்து வருகிறார்கள். பண்டோரா, நாவி என்றால் அவருக்கு என்னவென்றே தெரியாது! இறந்தவருக்கென்று வடிவமைக்கப்பட்ட அவதாரில் ஒரு மனிதர் புக வேண்டுமென்பதற்காக அவர்களை அழைத்து வருகிறார்கள். வருபவர்தான் கதாநாயகன் ஜேக் சுல்லி. ஒரு போர் விபத்தில் காலை இழந்த ஜேக், தன் அவதார் மூலம் நடக்க முடிவதால், தன் புது வேலையை மிகவும் ரசிக்கின்றார்.

ஒரு சமயத்தில் காட்டில் தனியாக மாட்டிக் கொள்ள, அவர் நாவி மக்களுடன் உறவு மேற்கொள்கிறார். நாவி மக்களின் இளவரசி நேய்த்ரியுடன் நட்பு கொள்கிறார். நேய்த்ரியின் மூலம் அவர்களின் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறையையும் கற்றுக் கொள்கிறார். தூங்கும் சமயம் மட்டும், அவருடைய ‘ஆவி’ தொலைவில், ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் அவரது மனித உடலுக்குத் திரும்பி விடும். நாவி மக்களை அம்மரத்திலிருந்து அப்புறப்படுத்துவதுதான் அவர் வேலை.

ஆனால், இதற்குப் பிறகு கதையின் போக்கு மாறுகிறது. காலை இழந்து பூமியில் ஏதுமே செய்ய முடியாமல் இருப்பதை விட அவருக்கு நாவி வாழ்க்கை இன்னும் பிடிக்க ஆரம்பிக்கின்றது. மீதிக் கதையை நான் சொல்லப் போவதில்லை. படத்தின் சூழலையும், முதல் இருபது நிமிடங்களையும்தான் இதுவரை சொல்லியிருக்கின்றேன். மீதியை நீங்களே பாருங்கள். அதிலும் தியேட்டரில் பாருங்கள். முடிந்தால் 3Dயில் பாருங்கள்!

உண்மையைச் சொல்லப் போனால், இனி படத்தில் பெரிய கதையெல்லாம் ஒன்றுமில்லை. ‘Dances with wolves’, ‘The Last Samurai’ போன்ற படங்களை கலந்தடித்தால் அவதார் படத்தின் கதை வரும். ஆனால் அதெல்லாம் முக்கியமில்லை. இவ்வளவு ஏன், இதுவரை நான் கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும்தான் சொன்னேனே தவிர, நடிகர், நடிகைகளைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனென்றால், அவர்களுக்கும் கூட அதிக முக்கியத்துவம் இல்லை. ஜேக் சுல்லியாக ஸாம் வர்திங்டன், நெய்த்ரியாக ஜோ ஸல்டானா, க்ரேஸ் அகஸ்டினாக ஸிகுர்னி வீவர் நடித்திருக்கின்றனர்.

Mountain‘அவதார்’ முழுக்க முழுக்க ‘ஜேம்ஸ் கேமரூனின்’ படம். கதாநாயகன், இயக்குனர், தயாரிப்பாளர் – எல்லாமும் அவர்தான்! ஒவ்வொரு காட்சியையும் மனிதர் அத்தனைத் துல்லியமாக செதுக்கியிருக்கின்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியும் ‘சொல்லப்படும் விதம்’ இருக்கின்றதே, அதுதான் டாப் க்ளாஸ்! எடுத்துக்காட்டிற்கு. கடைசியில் அந்தத் ‘தொங்கும் மலைத்தொடர்’ நடுவில் நடக்கும் அரை மணி நீள சண்டை இருக்கின்றதே, அப்பப்பா!! பார்ப்பதற்கு கண்ணாயிரம் போதாது!! ஏன், நாவிகள் வாழும் அம்மரத்தை மனிதர்கள் தரைமட்டம் ஆக்கும் காட்சியைக் கூடச் சொல்லலாம் – கல்லும் கரைந்து விடும்! ‘ஜெயிப்பது மனிதர்கள்தான்’ என்பதை மறந்து, நாவிகளை நினைத்து மனமொடிந்து, நாமும் கணநேரத்திற்கு நாவிகளாகவே மாறிவிடுவோம்! தியேட்டரில், பல ‘ஐயோ, பாவம்’ குரல்களை நானே கேட்டேன்! அத்தனை துல்லியம், அத்தனை (என்னதான் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸாக இருந்தாலும்) இயற்கைத்தனம், அத்தனை அற்புதம்!

எத்தனையோ வருடங்களுக்கு ஒரு முறை வரும், ஹேலியின் காமெட்டைப் போல, எத்தனையோ வருடங்களுக்கு ஒரு முறைதான் இது போன்ற ஒரு அற்புதம் நிகழும். அதாவது, ‘அவதார்’ போன்ற ஒரு திரைப்படம் வரும். அதைக் கண்டு களிப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ‘அவதார்’ வெற்றி அடைந்தால், இன்னும் இரண்டு ‘தொடர் படங்களை’ எடுப்பதாகச் சொல்லியிருக்கின்றார் ஜேம்ஸ்! அவை இரண்டையும் அவரே இயக்குவார் எனும் பட்சத்தில், அவையும் பிரம்மாண்டமாகவும், அற்புதமாகவும் இருக்கும்!!

காத்துக்கொண்டிருக்கின்றோம் ஜேம்ஸ் இன்னும் மூன்று மணி நேரம் நாவிகளோடு பண்டோராவில் வாழ்வதற்கு!!

About The Author

1 Comment

  1. sumathi.t

    இட்ச் அ வெர்ய் நிcஎ அவடர் fஇல்ம் இன் 2010

Comments are closed.