ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் – 1

குடித்திருந்தான், வழக்கம்போல.

குடி பல விநோதமான உள் கிளர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. உள்ளிறுக்கத் தளர்ச்சிகளைக் குடி தருகிறது. குடித்தாலே மாப்ளைக்குத் தனி கெத்துதான். அந்தஸ்துதான்!

படகுச் சவாரி தரை மீதே! ஒரு ஜோக் அவன் ஞாபகத்தில் வந்தது. குடிக்கும்போது குபீர் குபீரென்று அநேக விஷயங்கள் மேல்தளத்தில் வரும். சில யோசனைகள் கீழ் அமுங்கிக் கொள்ளும் தன்னைப்போல. ஞாபகம் இருக்க வேண்டியது டாடா காட்டி விடும். எப்போதோ மறந்து போனது ஞாபகம் வரும். அது மறந்து போனதே ஞாபகத்தில் இராது. ஞாபகப் பாம்பு வழவழவென்று உள்நழுவிக் காணாமல் போய்விடும். எதையோ நினைத்துக் கொண்டிருந்தமடா, என்று கயிற்றைத் தளரவிட்ட பதட்டத்துடன் தேடினால் ஆப்டாது. சில வண்டிமாடுகள், வண்டியை அவிழ்க்கும்போது, மாட்டை முதலில் கட்டாமல் வண்டியைக் கீழே வைக்கிறபோது ரஸ்தாவில் விறுவிறுவென்று ராஜநடை எடுத்து விடும். அதைப் பிடித்துக் கட்டுமுன் ஒம்பாடு எம்பாடு ஆய்ப்போவும். அதைப்போல.

எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்? ஆ, அவனாவது மறக்கிறதாவது. யார் அவன். சிங்கராஜ். ராஜா அல்லவா அவன். அவனுக்கு ஒரு மாபெரும் சந்தேகம் வந்தது. எதிரில் நடந்து வருகிறவனை நிறுத்தி நெஞ்சை நிமிர்த்தி மார்தட்டி, “டாய்! நான் யார்?” என்று கேட்டான்.

“பொறம்போக்கு நாய்!” அவன் கடந்து போனதைப் பார்த்து ஒருகணம் திகைத்தான்.

“அஹ்க்…” என்று அனுபவித்துச் சிரித்தான். நீதான், கேள்விக்குப் பதில் தெரியாத நீதான் பொறம்போக்கு. படித்துறைத் தண்ணீர் போல அவன் நெஞ்சில் சளப் சளப் சொகமாய் இருந்தது.

தானறியாமல் தெருவின் அந்தப் பக்கத்துக்கு வந்திருந்தான். தெரு இருட்டிக் கிடந்தது. தெருவில் மனுஷாள் நடமாட்டம் இல்லை. நான் நடமாடுகிறேனே. நடனமாடுகிறேனே. நான் ஆளில்லையா? அட, நான் மனுசனில்லையா… அக்ஹ்! குடி வேண்டித்தான் இருக்கிறது. தினசரி அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரவே அவனுக்குப் பிடிக்கவில்லை. அலுவலகமே பிடிக்கவில்லை. யாரும் அவனுக்கு யோசனை சொல்வது, அவனைத் தட்டிக் கேட்பது பிடிக்கவில்லை. வரவர எதுவுமே பிடிக்காமல் போய்விட்டது. எதிலும் ஒரு சலிப்பு. ஓர் அலுப்பு. நித்தியப்படி நியதிகள், அதன் கண்ணிகளில் மாட்டிக் கொள்ள வெறுப்பாய் இருந்தது. நியதிகளுக்கு அடிபணிய மறுத்தது மனம். நான் சுதந்திரப் பறவை. பறவையா? நானா? அப்போ சிறகுகள்? ஆ! அதுதான் விஷயம். குடிக்கும்போது திடீரென்று மனசுக்குச் சிறகுகள் முளைக்கின்றன. பட்டம்போல அப்போது மனம் படபடத்துப் பறக்கிற பரவசம். மிதக்கிற உல்லாசம். டப்பாலங்கடி கிரிகிரிகிரி. என்னா புலவன் இப்டி எளுதிப்பிட்டான்! குடிச்சிப்பிட்டு எளுதிப்பிட்டானா!

குடி மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. வயிற்றில் யாரோ பம்பரம் விடறாங்க டோய்! கோழி இறகால் காது குடைகிறாப்போல. மாப்ள… என அவன் உடம்பெங்கும் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.

அப்டித்தான் இருக்கணுங்கிறதும் இல்லை. சின்னாட்களில் குடி எத்தனை துயரத்தைக் கொண்டுவந்து விடுகிறது! தெருவில் போகும் சைக்கிளில் இருந்து சத்தம். படார்! யார் வண்டிடான்னு பாத்தா, நம்ம இதுதான். ட்யூப் வெடித்து மனசில் பஞ்ச்சர். உள்ளே கலவரங்கள். அப்போது உலகே சோகக்கோளமாக விடும். வண்டியை பாகம் பாகமாகப் பிரித்துக் கழற்றிப் போட்டாப்போல ஆகிவிடும். காயலான் கடைபோல ஆகிவிடும். உள்ளம் சாக்கடை பொங்கி சூழலே நாறி நாசமாகிப் போகும். வெளியேயும் இருட்டு. உள்ளேயும் இருட்டு. நடக்க ஏலாது. முன்னே கால் எடுத்து வைக்கவே கூசும். துழாவித் துழாவிப் போகவேண்டும். வண்டில கீர்-பிரேக் போடுகிறாப்போல.

இன்றைக்கு நிலைமை கொஞ்சம் எச்சக்கச்ச, எக்கச்சக்கமாகி விட்டது. போதை சற்று அதிகம்தான். சாமந்தி இறந்த நாள்.

சாமந்தி நல்ல அழகு! பேரே அழகு! அவனை மாப்ளை கேட்டுத் துப்பு வந்தது. பெண்டாட்டி பேர் சாமந்தி. பேரைக் கேட்டதுமே அவனுக்குப் பிடிச்சிப் போச்சு. உள்ளே வாசனை பரத்தியது பெயர்! இனிமே அவ பேர் சாமந்தி சிங்கராஜ்! வாய்க்கு வெளியே தெறிந்து விட்டது சிரிப்பு. குச்சி ஐஸ் சாப்பிடறாப்போல எச்சிலை உள்ளிழுத்துக்கிட்டே சுத்து முத்தும் பார்த்தான். இவனை யார் கவனிச்சா. அவனவனுக்கு ஆயிரஞ் சோலி. ஒவ்வொருத்தனையும் நிறுத்தி “உனக்குக் கல்யாணம் ஆயிட்டுதா?”ன்னு கேட்கலாமாய் இருந்தது. கல்யாணம்லா சும்மா ஆயிருமாடா வெண்ணே! அததுக்கு ஒரு யோக்யதாம்சம் வேணும்ல? நான் சாதா ஆளா? கவர்மெண்டு ஆபிசுல பியூன். ஆபீசர்மார்லாம் அங்க டம்மி. அவங்க வருமானமும் கம்மி. அங்க பியூனுங்க வெச்சதுதான் சட்டம். வருமானமும் சாஸ்தி. பல கிளார்க்குகளுக்கு பியூன்களே வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கிச் சமூகசேவை செய்கிறார்கள். என்னா பெரிய ஆபீசர்? வெள்ளையுஞ் சொள்ளையுமாப் போட்டுட்டு வந்தா ஆச்சா? ஒரு கிறுக்கல் கிறுக்கக் காலேஜ் படிப்பு வேற! கிறுக்குப் பயல்கள். அவங்க ஆபீசர் கையெழுத்தை அவனே போடுவான்!

சிரிப்பு வரவில்லை. மனம் கனத்துக் கிடந்தது. சாமந்தி.
உள்ளே பிள்ளையுடன் பிரசவத்துக்குப் போனவள். ஊர் போய்ச் சேரவேயில்லை. அவள் போன பஸ் விபத்துக்குள்ளாகி ஸ்பாட்லயே ஆள் அவ்ட். காலையில் தினத்தந்தி பார்த்தால் செய்தி. படம் வேறு. விபத்து நடந்த இடம் இதுதான்… என்று அம்புக்குறி. செய்தி சுவாரஸ்யமாய் இருந்தது.

வீட்டுக்குப் போலீஸ் வந்தது. மாப்ளைக்கு டர்ர்ராயிட்டது. எந்தப் பொறம்போக்கு நாயாவது அவன் லஞ்சம் வாங்கினதுக்குக் காட்டி வுட்ட்டானா? “வாங்க சார்!” என்று அசட்டுச் சிரிப்புடன் சலாம் வைத்தான். முள்ளை முள்ளால் எடுக்கணும். லஞ்சத்தை லஞ்சத்தாலே மறைக்கணும்.

“ஐயோ” என்றான் சாமந்தியின் புடவை பார்த்து.

பேப்பர்க்காரர்கள் வந்து சாமந்தியின் படம் கேட்டார்கள். தனிப்படம், அவனுடன் கல்யாணப் படம் என்று விதவிதமாய்க் கொடுத்தான். கல்யாணப் படத்தில் அவள் மூஞ்சி அத்தனை எடுப்பாய் இல்லை. காரணம், அவன் முன்பல்லே கொஞ்சம் எடுப்பு. அவனைக் கத்தரித்துவிட்டு வெளியிட்டார்கள்.

கொடியில் சாமந்தியின் புடவை. உள்ளாடைகள். கண்ணாடியில் ஸ்டிக்கர் பொட்டு. ஹேர்பின். பெண்ணுக்கே உரிய சமாச்சாரங்கள். ஆ! சீப்பில் கூட அவள் தலைமுடி!… எல்லாம் கையில் எடுத்துப் பார்த்துப் பார்த்து அழுதான். சினிமாக்களில் அப்படித்தான் அழுகிறார்கள். சுவரில் சிரித்தபடி சாமந்தி படம். இன்னுமாய் அழுகை.

ரெண்டு வருசம் ஆகிவிட்டது. வேற கல்யாணம் முடிக்கவேயில்லை. அதற்கே அழுகை வந்தது. சாடையாய் யாரிடமாவது பேசினால், அவன் முதுகுப்பக்கம், இந்தத் …க்கு மொதக் கல்யாணமே அதிகம்டா என்று கேலியடிக்கிறார்கள். பொறாமைச் சன்மங்கள்.

சாமந்தி இறந்த நாள்.

காலை தூங்கி முழிச்சதில் இருந்தே ஒரு எண்ணம். அட, இன்னிலேர்ந்து குடியை நிறுத்திட்டா என்ன? சாமந்தி இறந்த நாளன்று ஒரு நல்ல காரியம் செய்வம்! சூப்பர்.

குடியை நிறுத்துவது சுலபம். அவனே பலமுறை நிறுத்தியிருக்கிறான். ஆமாம். நிறுத்திறலாம். கண்டிப்பா. இப்பவே. ஓகே ஓகே! நான் தயார். நெஞ்சைத் தட்டிச் சொல்லிக் கொண்டான். எத்தனை மகத்தான நாள் இது! இன்று முதல் குடிக்க மாட்டேன். சத்தியமடி தங்கம்! குடி நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு. அதனால்தான் மதுக்கடைகளை அரசாங்கமே நடத்துகிறது. உள்ளே மகிழ்ச்சிப் பரபரப்பு. சாமந்தி மேல் சத்த்த்தியம். இன்னிக்கு என்னடா இன்னிக்கு, நான் இனி குடிக்கவே மாட்டவே மாட்டேன். போடு தம்பி சபாசு! குடி உயிருக்கு வீட்டுக்கு நாட்டுக்குக் கேடு. ஆகவே அவன்… அதை… விட்டுறப் போறான். சமூக சேவை ரெண்டு! அவனது முதல் சமூக சேவை முன் சொல்லியிருக்கிறது.

அலுவலகம் முடிந்து வெளியே வந்தான். தெரு பரபரப்பாய் இருந்தது. அலுவலகம் ஆரம்பிக்கும்போது வெற்றிலைப் பாக்கு சிகரெட் தாம்பூலம்… எல்லாம் முடித்து மெதுவாய் வருகிற ஜனங்கள் யாவரும், சரியாய் அஞ்சடிக்க வீட்டுக்குச் சுறுசுறுப்பாகி விடுகிறார்கள். அவனைத் தவிர. அவனை வரவேற்க வீட்டில் யார் இருக்கிறார்கள்? குப்பை சேர்ந்தால் அதைப் பெருக்கி வெளித்தள்ளக் கூட வீட்டில் ஆள் இல்லை. நுழைகையில் தானே தன்னையே குப்பையாய் உணர்வான். காத்திருந்தான். அவன் பஸ்ஸைத் தவிர இதர பஸ்கள் வந்தாப்போல இருந்தது. என்னாங்கடா இது… என எரிச்சலின் முதல் துளி அவனில் விழுந்தது.

சரி நடப்போம். நடையா? வீட்டு வரையிலா?

வேணாம்டா! நீ இப்பிடித்தான். நடந்தா தன்னைப் போல சாராயக்கடைக்குப் போயிருவே.

ஆ, அதெல்லாம் வேறாள்கிட்ட. நான் வண்ணாரப்பேட்டை சிங்கராஜ். மன உறுதி மிக்க சிங்கராஜ்.

மெல்ல நடக்க ஆரம்பித்தான். ஆமாம். வீட்டை நோக்கித்தான்.

அவனைப் பார்த்ததும் பழக்கமான ஒரு நாய் ஓடி வந்தது. வழக்கமாய்ச் சாராயக்கடை வரை அது கூட வரும். கடை வாசலில் உள்ள பெட்டிக்கடையில் பிஸ்கெட் வாங்கிப் போடுவான். “டைகர்!” என உருகிப் பெருகினான் அவன். அவனிடமும் பிரியம் செலுத்தும் ஒரு ஜீவன். நாய்கள் நன்றியுள்ளவை.

“டைகர் நான் முடிவு செய்துட்டேன். இனி நான் குடிக்கப் போவதில்லை.”

யாரைக் கேட்டு இப்படியொரு முடிவெடுத்தாய், என்கிறாப் போல அது நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தது. மனைவி இறந்த நாளன்றுகூடக் குடிக்காதவன் மனுசனா?

இல்லை. இது என் இறுதி முடிவு டைகர்.

நாய் அவனுடன் ஓடி வந்தது. நாய்கள்தான் எத்தனை அறிவுள்ளவை! யாரையாவது நாயே என்று திட்டினால் அவன் அறிவுள்ளவன் என்று அர்த்தம். தெருவில் வரும் யாரையோ இடித்து விட்டான். “நாயே பாத்துப் போடா!” என்றபடி அவர் தாண்டிப் போனார்.

சாராயக்கடைத் தெருவின் பக்கம் வந்ததும் கால்கள் தாமே நின்றன. ஒரு கணம் திகைப்பாய் இருந்தது. அறிவுள்ள நாய். அது இவனுக்கு முன் சாராயச் சந்தில் திரும்பி அவனுக்காகக் காத்திருந்தது. அந்தத் தெரு வழியே போனால்தான் என்ன? அவன் மனசு மாறி விடுவானாக்கும்? பாவம் நல்ல நாய்! ஜஸ்ட் வாசல். வாசல் கடை வரை போவது. கடையில் நாய்க்கு பிஸ்கெட் வாங்கிப் போடுவது. அவனை நம்பிக் காத்திருக்கிறது அது. நம்பிக்கைத் துரோகம் மகா பாவம்! அதைப் பற்றிப் பெரியவர்கள் பழமொழி மாதிரி எதாவது சொல்லி வைத்திருப்பார்கள். ஆமாம். நாய். பிஸ்கெட்… அத்தோடு நேரா வீடு! ரைட்!

எதிரே ஒருவன் வேட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு தள்ளாடி வந்தான். டைகர் சட்டென்று அவனைப் பார்க்க ஓடியது. அவன் கையில் வடை. ஆ! கட்சி மாறி விட்டது. ஒரே விநாடியில்!… துரோகி! தூத்தெறி! எனக்கு யாருமே இல்லை. இந்த உலகத்தில் ஒரு கேடுகெட்ட தெருநாய் என்னைப் புறக்கணிக்கிறது. என்ன உலகமடா!

நாய் அந்தக் குடிகாரன் முன் நின்று வாலை ஆட்டியது. அதைப் பார்க்கவே அவனுக்கு விக்கலாய் அழுகை. உலகம் வடையில் இருக்கிறது. ஆ… இப்போது தானறியாமல் இடப்பக்கம் வந்திருந்தான். சாராயக்கடைப் பக்கம். அதனாலென்ன, இந்த வழியா மனுச மக்கள் போகல்லியா? போற ஆள் எல்லாவனும் குடிக்கிறார்களா?

திடீரென அவன் காலோடு ஓர் உரசல். டைகர்.
அதானே… என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா? கண்ணே முடியுமா… அதற்கு வடையில் பங்கு கிடைத்ததா தெரியவில்லை. காக்கா நரி கதை போல, மாப்ள ஜோரா கைதட்டு என்று குடிகாரனை அது முயற்சி பண்ணிப் பார்த்திருக்கலாம். அவன் கை தட்டினால் வடை அல்ல, வேட்டி விழுந்துரும்! அவன் சட்டென்று நின்றான். மாப்ள! இது டேன்ஜர் ஸோன். இதுக்குமேல் போக வேணாம்! திரும்பி விடு என்றது உட்குரல். நாய் ஓரடி முன்னால் போய் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தது.

நாயா? மனசா?

அட போ! தைரியமாப் போ ராசா! பிஸ்கெட். அவ்வளவுதான். திரும்பி விடு. மனைவி தழுவித் தாங்க ஒருத்தன் சாராயக் கடையில் இருந்து வெளியே வந்தான். பாத்து ராசா… என அவனைக் கொஞ்சியபடி அழைத்து வந்தாள் அந்தப் பெரிய பொட்டுக்காரி.

எனக்கு யாரும் இல்லை. யாருமே இல்லை.

நாய் ஏமாந்தது.

சட்டென்று சாராயக் கடைக்குள் நுழைந்தான் வண்ணாரப்பேட்டை சிங்கராஜ்.

சாராயக் கடை காயம்பட்டவர்கள் முதலுதவி தேடும் இடம். உடல் காயம் அல்ல, மனக் காயம்.

மக்கள் திட்டுத் திட்டாய் உட்கார்ந்திருந்தார்கள். எழுந்தால் கூட அந்தச் சுமைகள் அவர்களை நடக்க விடவில்லை. வளாகமே மிரண்டு கிடந்தது. சுற்றிலுமானதோரு கருங்கோட்டை. வார்த்தைகள் விக்கித்த, சப்தங்கள் சுடப்பட்ட மௌனம். லேசான மழையிருட்டு. சற்று அழுத முகமான இருட்டு. புயலுக்கு முந்தியும் அமைதி. பிந்தியும் அமைதி… அங்கே வந்திருந்தவர்கள் வாழ்வில் புயல் அடித்து ஓய்ந்திருக்க வேண்டும். அல்லது புயல் வரும் அறிகுறிகளில் அவர்கள் மிரண்டிருக்க வேண்டும்.

நாடியில் அடிபட்டிருந்தது ஒருத்தனுக்கு. என்ன நடந்ததோ? நாடிச் சில்லில் இருந்து ஒழுகிக் காய்ந்த சிவப்பு அடையாளம். எங்கயாச்சும் குத்திக்கிட்டானோ? கீழே விழுந்துட்டாப்லியா? இல்லை, வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டு, யாருடனாவது மோதித் தோற்று வந்தானா? வலியின் தெறிப்பு தெரியாமல் போதையில் சரிந்து கிடந்தான். அருகே பாட்டில். அவனது உற்ற துணைபோல. குழந்தை போல… கல்லாவில் இருந்தவன் “அந்த நாயைத் தூக்கி ஓரமாப் போடு” என்கிறான்.

ரெண்டுபேர் அவனைத் தரதரவென்று இழுத்து ஓரமாய்த் தள்ளுகிறார்கள். நல்ல வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. கைமடிப்பு துறுத்தலாய் – உள்ளே பணம் இருக்கலாம். ஹ்ரும், என்று விநோத சப்தம் அவனில் இருந்து அவ்வப்போது எழுந்தது. வலியின் முனகலா, கனவுகளின் ஏமாற்றமா, அதிர்ச்சி தாளமுடியாத, நம்பிக்கை துரோகம் தாளாத துவண்ட மருட்சியா, ஹா ஹா என மூச்சுப் படபடப்பு. நெஞ்சு ஏறியேறி இறங்குகிறது.

பெஞ்ச்சில் உட்கார்ந்திருக்கிற மற்றொருவன் பாட்டிலையே உறுத்துப் பார்த்தபடி இருக்கிறான். அடிக்கடி உதட்டை உதட்டைப் பிதுக்குகிறான். கண்கள் தன்னைப்போல அழுகின்றன. பேச்சு இல்லை. அவன் மகன் செத்துப் போயிருக்கலாம். கோர்ட்டில் அவன் வழக்கு தோற்றுப் போய் நஷ்டப்பட்டு வந்திருக்கலாம். அவன் வியாபாரம் படுத்திருக்கலாம். போச்சே, எல்லாம் போச்சே… என்கிறாப் போலக் கையைக் கையை விரிக்கிறான்.

பக்கத்தில் இருக்கிறவனோ பெஞ்ச்சில் குனிந்த தலை நிமிரவேயில்லை. புதுச்சட்டை கிழிந்திருக்கிறது. சுத்தபத்தமாய்க் கிளம்பியிருப்பான் வீட்டைவிட்டு. இடையே அபத்தமாய் என்னவோ அசம்பாவிதம். சட்டைக் கிழிசல். யாரோ காலரைப் பற்றி இழுத்திருக்கிறாப் போலக் கசங்கல். காலர்ப்பட்டை பாதி தூக்கியிருக்கிறது. குட்டிக் கரணமடித்த மீனின் வால் வெளித் தெரிவது போல வாரியதலை கலைந்து கிடக்கிறது. எங்கோ ரகளையில் மாட்டிக் கொண்டு கைகலப்பாகியிருக்கலாம்.

ஏற்கெனவே குடித்திருந்த ஒருவன் உள்ளே நுழைந்தான். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக ஒரு நடை. வேட்டி தடுக்கத் தடுக்க ஒரு நடை. அவன் முட்டாழம் வரை வந்திருந்தது துயரம். வாய்க்கால் தண்ணி போல. சற்று நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். யாரைத் தேடுகிறான்? அவனுக்கே தெரியாத வெற்றுப் பார்வை. சிவந்த வெறியேறிய கண்கள். பெரிய தோள்துண்டு. மனசில் அரசியல்வாதியான தோரணையில் அவன் ஆவேசப்பட்டிருக்கலாம். மாறு வேசப் போட்டி என நினைத்து உள்ளே புகுந்துட்டானா!… அல்லது அவனே அரசியல்காரன்தானோ என்னவோ? ஒருவழியாய்ச் சாராயம் ஊற்றுகிற மேடையைக் கண்டுகொண்டாப் போலத் தெரிகிறது. மீண்டும் வாய்க்கால் கடந்து வந்து ஓரத்தில் அடுக்கியிருந்த கண்ணாடித் தம்ளர்களில் ஒன்றை எடுத்து ஆத்திரத்துடன் வைத்து “ஊத்து” என்கிறான்.

“துட்டு வெச்சிருக்கியா?” என்று கேட்கிறான் கடைப்பையன்.

“துட்டா?”

“ம்.”

“எதுக்கு துட்டு?”

“பின்ன சரக்குக்குத் துட்டு எவந் தருவான்? ஙொப்பனா தருவான்?” என்கிறான் கடைக்காரன். இப்போது பல்லக்கு அங்கேயிருந்தே ஆடியபடி கல்லாப் பக்கம் திரும்புகிறது. “ஏய்! காசுதானே வேணும்? நாளைக்கு வாங்கிக்க” மீண்டும் பல்லக்குச்சாமியின் தலை இந்தப் பக்கம் திரும்புகிறது. “நீ ஊத்துறா!” பையனிடம் இருந்து பதில் இல்லை. வந்தவனுக்கோ நிற்க முடியவில்லை. தள்ளாட்டம். மூச்சுத் திணறல். எருமைமூச்சு. திடீரென்று அழுதாப்போலப் பையனைப் பார்க்கிறான். “தம்பி! உன்னியக் கெஞ்சிக் கேட்டுக்கறேன். நான் ஏற்கனவே நொந்து நொம்பலமாய் வந்துருக்கிறேன்…” என்றவன் தள்ளாடி, அப்படியே நெஞ்சு துடிக்க “பூட்டா அவ… ஆரு?… என் சம்சாரம். அந்தத் தெருநாய்… கோவிந்து… நண்பனா அவன்… த்தூ! போ! போயிரு! நல்லாயிரு. வராதே…” என்று கையால் விரட்டி ஆசிர்வதித்தான். “தம்பி! புண்பட்ட மனசுக்குப் புனுகு தடவி ஆத்தணும்டா. என்னைக் கைவிட்றாதே! நீ ஊத்து…”

“துட்ட எடு!”

“ஆர்ட்ட இருக்கு தம்பி துட்டு?” என்றவன் கல்லாப்பெட்டியிடம் திரும்பி “என்ட்ட துட்டு இருந்தா அவ ஏன் ஐயா ஓடிப்போறா?” என்கிறான். “ஹா! துட்டு இருந்தா, ஒரு பொண்டாட்டி என்ன, ஆயிரங் கெட்டலாம்… நீ ஏண்டா பையா வேடிக்கை பார்க்கிறே? நீ ஊத்து!”

கொஞ்சநேரம் வெட்டியாய் நின்றபடி அவன் சாமியாடுகிறான். பெரிசு பெரிசான சீறல் மூச்சுகள். திரும்பி வாய்க்கால் நடையில் நடந்து ஏமாற்றமாய்ப் போனவன் பெஞ்ச்சில் கவிழ்ந்திருந்தவனைப் பார்க்கிறான். அவனை என்றால் அவனை அல்ல. அவன் அருகே தம்ளர். திரும்ப முடடாழத் தண்ணீரில் நடை. யாருமே எதிர்பாராமல் அந்தத் தம்ளரின் மிச்சச் சாராயத்தை அப்படியே எடுத்து உயரத் தூக்கிக் கவிழ்த்துக் கொள்கிறான். கடைக்காரச் சிப்பந்திகள் பாய்ந்து வந்து தம்ளரைப் பிடுங்கி வைக்கிறார்கள். அதில் ஒருவன் நாக்கைத் துருத்தி ஆத்திரத்துடன் அவனை ஓர் எத்து விடுகிறான். வாய்க்கால் தண்ணியில் பொத்தென விழுகிறான் வந்தவன்.

வண்ணை சிங்கராஜ் நுழைகையில் நிலைமை சிலாக்கியமாய் இல்லை. குடிக்கிற பரபரப்பில் நாயைக் கூடவும் மறந்து உள்ளே வந்து விட்டான். உள்ளே சாராயம் விற்றுத் தீர்ந்து விட்டால்?… என்று அவசரப்பட்டாப் போல.

நாய் உள்ளே எட்டிப் பார்த்தது. கூரைக்கு முட்டுக் கொடுத்து மூங்கில் கழியில் சாய்ந்தபடி மேலே பார்த்துக் கொண்டிருந்தான் ஒருத்தன். அருகே தட்டில் என்னவோ அசைவப் பதார்த்தம். சிவப்பாய் நெளிநெளியாய். வெளியே தயங்கி நின்ற நாய் ஒரு விநாடி சுற்று முற்றும் கவனித்துக் கொண்டது. சட்டென உள்ளே பாய்ந்து வந்து அந்தக் குடல்க்கறியை ஒரே கௌவலில் கௌவி – சீன மந்திரவாதியின் நீள மீசை தாடி போலத் தொங்கும் குடல் – வெளியே பாய்ந்தோடு முன்… எதிர்பாராமல் நாய் கடையாளுகளால் சுற்றி வளைக்கப்பட்டது. எங்கேயிருந்து கம்புடன் முளைத்தார்கள்! திணறி விட்டது. சரியான அடி! நச்சி எடுத்து விட்டார்கள். வாள் வாள் என்று கதறித் துடித்தது நாய்.

“ஐய்ய வாயில்லா சீவனுங்க!”

“திருடித் திங்கத் தெரியுதில்ல?…”

எப்பிடியோ யார் தொடையடியிலோ பாய்ந்து புகுந்து வெளியே அது ஓடினாலும்… வெளியே சக நாய்களுடன் இன்னொரு மோதல். கல்லெறிபட்டு ஓட்டம் எடுத்தன நாய்கள்.

அசைவக் குடல் கடை வாசலில் கிடப்பதைக் காகம் ஒன்று சாவகாசமாய் இறங்கி வந்து எடுத்துப் போனது. அதிர்ஷ்டக்காரக் காகம்! அதனால் உள்ளே புகுந்து குடலை எடுத்துப் போக முடியுமா?

ஏற்கெனவே போதை இல்லாமலே போதை மயக்கத்தில் இருந்தான் வண்ணை. இப்போது அழுகை முட்டியது. ஒரு அப்பாவி நாயை இப்படி அவன் கண்முன்னே ஆளாளுக்குப் போட்டு அடி நச்சிப்பிட்டார்கள். கோபமாய் எகிற… முடியவில்லை. ஒத்தொருத்தனும் கிங்கரனாட்டம் இருக்கிறான். மீசையும் கம்பும். வாயைத் திறந்தால் உன்னையும் உதைப்பான்கள்…
“டாய் ஊத்துறா” என்றான் மேடைக்குப் போய். “நல்ல சரக்கா உடை! போன தபா நீ குடுத்தது கிக்கே பத்தல…”

“அண்ணே வர்றப்பவே மப்பு போல்ருக்கு?”

வாயை மூடிக்கொள்ள வேண்டியதாயிற்று.

தலையைக் குனிந்தபடி அப்படி பெஞ்ச்சில் கிடந்தவனின் அருகில் போய் உட்கார்ந்த கணம் அவனிடம் திடீர் அசைவு. பூகம்பக் குலுக்கல். உவ்வே என்று எதிர்த்து வந்தது அவனுக்கு.

“வாந்தியெடுத்துத் தொலைக்கப் போறான்… அவனை எழுப்பு… எழுப்பு!” கடைப் பையன் ஓடிவந்து அவனைத் தூக்குமுன் ஓங்கரித்து அவன் வாந்தியெடுத்து விட்டான். சட்டையெங்கிலும் சிதறியது வாந்தி. கிழிந்த பகுதி வழியே உள்ளே உடம்பெங்கும் வழிந்து… பெஞ்ச்சில் வழிந்து… எதைத் தின்னு தொலைச்சானோ… கெட்ட நாற்றம்! இனி இதைச் சுத்தம் செய்யணும், எனப் பையனுக்கு எரிச்சல். தம்ளருடன் சடாரென்று எழுந்து கொண்டான் வண்ணை. சுற்று முற்றும் தேடினான். வேறிடம், பாதுகாப்பான இடம் எதுவும் இருக்கிறதா?… யாரையும் நம்புவதற்கில்லை. எப்போதும் எந்த அபாயமும் நிகழலாம் என்றான பூமி இது. எதற்கும் உத்திரவாதம் இல்லை.

போனமுறை சரக்கு வாங்கிக் கொண்டு வந்து உட்கார்ந்தான். திடீரென்று நாலுபேர் உள்ளே பாய்ந்து வந்தார்கள் இவனை நோக்கி. கையில் கம்பும் கத்தியும், கண்ணில் வெறியும் ஆத்திரமும்… நேரே இவனை நோக்கி ஓடி வரவும் பகீரென்றது. இவன் அருகே உட்கார்ந்திருந்தவனைப் பாய்ந்து சட்டையைப் பிடித்து இழுத்து அடி. அடியான அடி. கொட்டையைப் பிதுக்கிட்டாங்க! கடையாட்கள் சுதாரித்து அவர்களைப் பிரித்திழுத்து விலக்குவதற்குள் பெரும் ரகளையாகி விட்டது. சமாதானத்துக்குத்தான் என்று பார்த்தால், அடி பெற்றவனையும், அடி நன்கொடை வழங்கியவனையும் “வெளிய போங்க… வெளிய போங்க” என்று வெளியே தள்ளிக் கொண்டு போனார்கள். அவர்கள் அக்கறை அவ்வளவே. ரெண்டு பார்ட்டியுமே நாளை திரும்ப உள்ளே அவர்களின் வாடிக்கையாக வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு. யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற சாக்கிரதை. இந்த விவகாரத்தில் வண்ணை வாங்கிய சரக்கு முழுதும் தரையில் வீணாகி விட்டது. தம்ளர் உடைந்து அதற்கும் தண்டம் அழுக நேர்ந்தது. பெரிய மீசையைப் பார்த்தபடி எடுத்துக் கொடுத்தான்.

கூடம் முழுசும் விரக்தி கிடந்தது. பெண்டாட்டி செத்துப் பிணம் வந்து சேராத அந்த இரவின் வெறுமையை நினைவூட்டியது சூழல். என்ன மோசமான இரவு! பயம். திகைப்பு. அழுகை வராத உள்மூட்டம். பூகம்பம் வந்து உள்ளே எல்லாமே சிதறிக் கிடந்தது. எதுவுமே மிச்சமில்லை போல. சித்தெறும்பைக் கிண்ணத்துக்குள் கவிழ்த்து அடைத்தாற் போல. தாளவியலாத் தனிமை. எனக்கு யாருமே யாருமே இல்லவே இல்லை. கூடக் கட்டிக்கொண்டு அழ யாராவது தேவை தேவை என்கிறது மூளை அரித்தாற்போல. இந்த நாய்களில் யாரை நம்ப?

“ஏம்மா அழுவற?” என்று வந்தவன் “உம் பொண்டாட்டி அழகா?” என்கிறான். “எம் பொண்டாட்டியை விடவா?” இவன் பெண்டாட்டியை நான் எப்ப பார்த்தேன்… பார்க்க வேண்டும் போலிருந்தது. பின் ஏன் குடிக்க வந்தான் என்றிருந்தது. அடேய்! அது அவம் பிரச்சனை. நம்ம கதி இன்னா? அத்த யோசி…

பாட்டிலைப் பார்த்தான். தம்ளரைப் பார்த்தான். பசுவும் கன்றும், அந்தக் காலக் காங்கிரஸ் சின்னம். இப்ப இதையே சின்னமா வைக்கலாம். பாட்டிலும் தம்ளரும். சட்டென்று பாட்டிலை உடைத்து ஊற்றிக் கொண்டான். அப்படியே முழு ஆவேசமாய்க் கொட்டிக் கொண்டான். டங்கென்று தம்ளரை வைத்தான். உள்ளெல்லாம் எரிந்தது. தொண்டையெல்லாம் எரிந்தது. கடும் புளிப்பு. ஏவ்… என எக்களித்து வந்தது. நெஞ்சைத் தடவிக் கொண்டான். கூடம் ஈ மொய்த்துக் கிடந்தது. தரையில் ஒரு மிக்சர் பொட்டலம். ஒரு பாட்டில் உருண்டு கிடந்தது. சற்றுத் தள்ளி, சற்று நீள சைஸ் பாட்டிலைப் போலவே ஒரு இந்நாட்டு மன்னன். குழல் விளக்கு ஒன்று எரிந்தும் எரியாமலும் மக்கர் செய்கிறது. குடிகார மூளை போல.

அப்போதுதான் அந்தக் கிழவியைப் பார்த்தான்.

–தொடரும்…

About The Author