‘ஆச்சி’ மனோரமா நடித்த ‘ஆட்சி மாற்றம்’ – டிவிடி வெளியீட்டு விழா

பொதுவாக திரைப்படங்கள் அல்லது பிரபலமான மேடை நாடகங்கள் ஒளித்தகடுகளாக வெளிவரும் என்பதை நாம் அறிவோம். ஆனால் டிவிடிக்கென்றே தனியாக நாடகம் தயாரித்து வெளியிடும் பணியைச் செய்து வருகிறது சுபா கிரியேஷன்ஸ்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபத்ரா கண்ணன் ஏற்கெனவே ‘இரு வீடு ஒரு வாசல்’ மற்றும் பாக்கியம் ராமசாமியின் ‘அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும்’ (காத்தாடி ராமமூர்த்தி, மீரா கிருஷ்ணன் நடித்தது) டி.வி.டிக்களை வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிறார்.

இப்போது இந்த நிறுவனம் ‘தண்ணீர் தண்ணீர்’ புகழ் அமரர் கோமல் சுவாமிநாதன் எழுதி பத்மஸ்ரீ மனோரமா முக்கியப் பங்கேற்று நடித்துள்ள ‘ஆட்சி மாற்றம்’ என்ற நகைச்சுவை நாடகத்தை ஒளித்தகடாக வெளியிட்டிருக்கிறது. இதன் வெளியீட்டு விழா சமீபத்தில் மைலாப்பூரிலுள்ள சீனிவாச சாஸ்திரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் ஏ. நடராசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, எஸ்.வி சேகர், திரைப்பட இயக்குனர் வசந்த், நாடகத்தின் இயக்குனர் வாத்தியார் ராமன், அமீர்ஜான் மற்றும் பாக்கியம் ராமசாமி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பொதிகை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரும் கவிஞருமான விஜய்கிருஷ்ணன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

தலைமை ஏற்றுப்பேசிய நடராசன், தங்களது வானொலி நாடகத்தில் முதன்முதலாக எஸ்.வி சேகர், ஆச்சி மனோரமாவுடன் நடித்து பதினைந்து ரூபாய் காசோலை பெற்றதை நினைவு கூர்ந்தார். பின்னர் இந்திரா பார்த்தசாரதி ஒளித்தகட்டை வெளியிட எஸ்.வி.சேகர் பெற்றுக்கொண்டார்.
இந்திரா பார்த்தசாரதி பேசும்போது இலக்கியங்களைப் புத்தகமாகப் படிப்பதைவிட அவைகள் நாடகமாக்கப்படும்போது எப்படி மக்கள் மனதைக் கவர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டார். பிற்காலத்தில் படைப்பாளிகளின் படைப்புகள் பாதுகாக்கப்பட இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அடுத்து எஸ்.வி சேகர் , “எதையுமே முதன்முதலாகச் செய்யும்போது பலர் அதைச் செய்வதைத் தடுப்பார்கள். பாம்பே கண்ணனின் இந்த முயற்சி பாராட்டிற்குரியது. அவரது இந்த முயற்சியை நாம் ஆதரிக்க வேண்டும். இந்தக் காலத்தில் ஒரு பூச்செண்டு வாங்குவதென்றால் கூட 150ரூபாய் ஆகிறது. அதனால் பூச்செண்டுக்கு பதிலாக இது போன்ற டி.வி.டிக்களைப் பரிசளித்தால் சிறப்பாக இருக்கும். தொலைக்காட்சிகளுக்கு இதனை ஒளிபரப்பக் கொடுக்கலாம். நகைச்சுவை நாடகங்கள் என்று இல்லை; விவேகானந்தர் சரித்திரம் போன்றவற்றையும் இதுபோல் டிவிடிகளாகக் கொண்டுவரலாம்” என்று கூறினார்.

திரைப்பட இயக்குனர் வசந்த் பேசும்போது பாம்பே கண்ணனது முயற்சியைப் பெரிதும் பாராட்டினார். இலக்கியத் தரம் வாய்ந்த புத்தகங்களைத் திரைப்படமாக்குவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றை டி.வி.டிக்களாகக் கொண்டு வரலாம். அசோகமித்ரனின் தண்ணீர் கதையையும் டி.வி.டியாக வெளியிடவேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். தனது ‘நீ பாதி நான் பாதி’ படத்தில் ஆச்சி நடித்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகக் கூறினார்.

பின்னர் பேசிய மனோரமா தன் நினைவுகளை சுவையாகப் பகிர்ந்து கொண்டார். கோமல் ஸ்வாமிநாதனின் ‘என் வீடு, என் குடும்பம், என் குழந்தை’ நாடகம் தனது வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது என்றும் அவரை மறக்கவே முடியாது எனவும் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

நிர்வாகத் தயாரிப்பாளர் பாம்பே கண்ணன் அவர்கள் அமரர் தேவன் மற்றும் ஆர்.எஸ்.மனோகர் படைப்புகளை ஒளித்தகடாகக் கொண்டுவரும் எண்ணமிருப்பதாகக் கூறினார். அவரது நன்றி உரைக்குப் பின்னர் விழா முடிவிற்கு வந்தது.

About The Author