ஆதித்ய ஹ்ருதயமும், ராம ஹ்ருதயமும்! (2)

ராம ஹ்ருதயம்

இது இப்படி இருக்க, பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் உதிக்க, அதை பரமசிவனிடம் நேரடியாகவே கேட்டு விடுகிறார். ராமர் பரம புருஷன் என்றால் அவர் சீதைக்காக ஏன் வருந்திப் புலம்பினார்? அவருக்குத் தான் யார் என்பது உண்மையில் தெரியவில்லை என்றால் அவரும் மற்றவர்களைப் போலத் தானே! அப்படி இருக்கையில் எல்லோரும் அவரை வழிபடுவது ஏன்?”

தேவியின் இந்த அழகிய கேள்விக்கு விளக்கமாக அற்புதமான ராம ஹ்ருதய ரகசியத்தைப் பரமசிவன் பார்வதிக்கு விளக்குகிறார். அத்யாத்ம ராமாயணத்தில் முதல் ஸர்க்கத்தில் வரும் ராம ஹ்ருதயம் முக்கியமான பத்து சுலோகங்களைக் கொண்டது. ராமர் தனது ரகசியத்தை அனுமனுக்குத் தானே விளக்கியதைப் பரமசிவன் விரிவாக எடுத்துக் கூறும் பகுதி இது! அதன் சுருக்கம் இது தான்:-

காயத்தை மூன்று பார்வைகளால் பார்க்கலாம். 1) பரந்து திறந்திருக்கும் எல்லையற்ற காயம். 2) ஒரு ஏரியின் மேலே விளங்கி, அந்த ஏரியின் பரப்பளவால் அந்த ஏரியின் எல்லைக்குட்பட்டதாக ஆகி விடும் காயம் 3) ஏரி நீரில் பிரதிபலித்து, தண்ணீரின் எல்லைக்குட்பட்டதான காயம். இந்த மூன்று பகுதிகளாக ஒருவன் காயத்தைக் காணலாம்.

இது போலவே பிரக்ஞை என்பது மூன்று பிரிவுகளைக் கொண்டது. 1) எல்லையற்ற அனைத்து அறிவையும் உள்ளடக்கிய எல்லையற்ற பிரக்ஞை. 2) உயர் நில பிரக்ஞை 3) தனிப்பட்ட ஆத்மாவிற்குள் அடங்கியுள்ள பிரக்ஞை
அறிவு இரண்டு வகைப்படும். 1) குழப்பமும் தவிப்புமான அறிவு 2) உண்மை பிரக்ஞையால் வழிகாட்டப்படும் அறிவு. தனது எல்லைக்குட்பட்ட அறிவால் செல்வாக்குக்கு உட்படுத்தப்படும் அறிவு குழப்பமயமானது; தவறானது! இப்படிப்பட்ட அறிவுடையவன் தானே அனைத்தையும் செய்வதாக எண்ணிக்கொள்கிறான். பிரதிபலிக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட அறிவு ஆன்மீக உணர்வு அற்ற அல்லது மாயை என்று சொல்லப்படும் அறிவு, நமது தீர்மானங்களையும் முடிவுகளையும் பெருமளவில் பாதிக்கவே அது தவறாகப் போகிறது. தத்வமஸி என்ற மகாவாக்யம் ஜீவாத்மா பரமாத்வைச் சேரும் உண்மை அறிவைத் தருகிறது.

இப்போது நான் சொன்னபடி அனைத்தையும் இப்படித் தெளிவான அறிவை அடையும் போது என்னுடன் ஒன்றுகிறான். இதை அறியாமல் தன் வழியில் செல்லும் ஒருவனுக்கு இந்த உயர் ஞானம் கிட்டுவதில்லை. ஓ! ஹனுமானே! உன்னிடம் விளக்கிய இதுவே எனது உள்ளார்ந்த ரகசியம்! இந்திரனை விடச் செல்வத்தில் உயர்ந்தவனாக இருந்தாலும் என் பக்தனாக இல்லாத ஒருவனுக்கு இதை ஒருபோதும் சொல்லாதே!”

பார்வதியை நோக்கிய பரமசிவன், ராமரே விளக்கிய அவரது இந்த ரகசியத்தை ராம ஹ்ருதயத்தை எவன் ஒருவன் தினமும் பக்தியுடன் துதிக்கிறானோ அவன் பந்தங்களிலிருந்து விடுபடுவான். எந்தக் கொடிய பாவங்கள் செய்தாலும் (சிவனார் பாவங்களின் பட்டியலையும் சொல்கிறார்) அவை ராம ஹ்ருதயத்தைச் சொன்னால் அனைவராலும் போற்றப்பட்டு பிரம்மலோகத்தை அடைவது உறுதி!” என்கிறார்.

ராமனே எல்லையற்ற பரம்பொருள் என்பதை அத்யாத்ம ராமாயணம் முதல் ஸர்க்கத்தின் 59 சுலோகங்களில் விளக்கி முடித்து விடுகிறது. பரம்பொருள் தன்னை பூமியில் கட்டுப்படுத்திக் கொண்ட விதத்தையும் அது விளக்குகிறது! அவதார ரகசியத்தையும் புரிய வைக்கிறது!!

ஆதித்ய ஹ்ருதயத்தையும் ராம ஹ்ருதயத்தையும் பக்தியுடன் சொல்லுவோர் இக பர சௌபாக்யம் அடைவதை அகஸ்தியரும், ராமரும் பரமசிவனுமே விளக்கும்போது நமக்கு அதைப் பெறும் எளிய வழி தெரிந்து விடுகிறது. அவற்றைச் சொல்ல வேண்டுவது ஒன்று தான் நமது எளிய கடமையாகிறது!

***

About The Author

2 Comments

  1. Vidhya

    அற்புதம். இந்த நெப்ச்ய்டெஐ ரொம்ப மிஸ் பன்னிடென்.

Comments are closed.